மைக்கேல் ஆரிஸ் உள்ளத்தில் ஓர் ஆசை, கடைசி
ஆசை. அந்த ஆசைதான் உயிரை இன்னும் உடலில் ஒட்ட வைத்திருக்கிறது. தன் காதல்
மனைவியை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும்,
ஒரு சில வார்த்தைகளேனும் பேச வேண்டும்.
எண்ணிப் பார்த்து பெருமூச்சு விடுகிறார்.
தன் காதல் மனைவியைச் சந்தித்து, நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. என்ன செய்வது?
தான் இருப்பது இலண்டனில். மனைவி இருப்பதோ பர்மாவில். ரஞ்கூனில்.
பர்மிய அரசுக்கு ஒரு கடிதம்
எழுதியிருந்தார். நான் இறக்கும் முன், என் மனைவியை, ஒரு முறையேனும் சந்திக்க
ஆசைப் படுகிறேன். பர்மிய மண்ணில் காலடி பதிப்பதற்கு அனுமதி கொடுங்கள்.
இதோ, பர்மிய அரசிடமிருந்து ஓர் கடிதம்,
ஆசையுடன் பிரித்துப் படிக்கிறார்.
தாங்கள்
பர்மா வருவதற்கு அனுமதி மறுக்கப் படுகிறது.
தளர்ந்துபோய் படுக்கையில் சாய்ந்தவர்தான்.
மீண்டும் எழவேயில்லை. 1999 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 27 ஆம் நாள், மைக்கேல்
ஆரிஸின் உயிர், உடலை விட்டுப் பிரிந்து பர்மாவை நோக்கிப் பறந்தது.
பர்மா. ரங்கூன். ஏரிக்கரையில் அமைந்த அழகிய
பெரிய கட்டிடம்தான் அது. பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் , சோகமாய்,
இருப்பினும், கம்பீரமாய் காட்சியளிக்கிறது.
வீட்டினுள் தொலைக் காட்சிப் பெட்டியோ, ஏன்
தொலைபேசி கூட கிடையாது. ஒரே ஒரு பழைய வானொலிப் பெட்டி மட்டுமே, அவ்வப்பொழுது,
வாய்திறந்து உலகச் செய்திகளை கூறும்.
காலை நேரம். தோட்டத்தில் நாற்காலியில்
கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார் அவர். உள்ளம் குமுறிக் கொண்டிருக்கிறது.
தனது காதல் கணவர் மரணமடைந்து விட்டார். நேரில் பார்த்துப் பேசி , நான்கு
ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இலண்டனில் இறுதிச் சடங்கு முடிந்து, உடலானது
பெட்டியில் வைக்கப்பட்டு, பூமியில் இரண்டறக் கலப்பதற்குள், ஒரு முறையேனும், அந்த
அன்பு முகத்தை, ஆசை முகத்தைக் கண்ணாரக் காண உள்ளம் துடித்துக் கொண்டிருக்கிறது.
தனது வழக்கறிஞர் மூலம், அரசாங்கத்திற்கு ஒரு
வேண்டுகோளினை அனுப்பி வைத்துவிட்டு, பதிலுக்காகக் காத்திருக்கிறார்.
என் கணவரைத்தான் இந்நாட்டிற்குள் காலடி
எடுத்து வைக்க அனுமதிக்கவில்லை. அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு
மட்டுமாவது எனக்கு அனுமதி கொடுங்கள்.
அரசாங்கம் அனுமதி அளித்தது. தாங்கள்
தாராளமாக, இலண்டன் சென்று, தங்கள் கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளலாம். ஒரே
ஒரு நிபந்தனை, எக்காரணத்தைக் கொண்டும், மீண்டும் பார்மாவிற்குத் திரும்பி வரக்
கூடாது.
சூ கி பாஸ்போர்ட் |
என் துயரம் எனக்குள்ளேயே இருக்கட்டும்.
நான் இலண்டன் செல்வதால், என் கணவர் எழுந்து வரப் போவதில்லை. இலண்டனில் நான்
மட்டும் விடுதலையைச் சுவாசிக்க, இங்கு என் மக்கள் மட்டும், அடிமைக் காற்றைச்
சுவாசிப்பதா. நான் எங்கும் போகப் போவதில்லை. இங்கேயே இருக்கிறேன். என் துயரம்
எனக்குள்ளேயே அடங்கட்டும்.
நண்பர்களே, இவர், இவர்தான் ஆங் சாங் சூ
கி. பர்மிய விடுதலை வீராங்கனை.
ஜெனரல் ஆங் சாங் |
1948 ஆம் ஆண்டு சனவரி 4 ஆம் நாள் பர்மாவில்
சுதந்திரம் மலர்ந்தது. 1960 ஆம் ஆண்டு ஆங் சாங் சூ கியின் தாயார், டா கின் கி,
இந்தியாவிற்கான, பர்மாவின் தூதுவராக நியமிக்கப் பட்டார்.
சூ கி குழந்தையாய் தாய் தந்தையுடன் |
தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில்
கல்வி. இங்குதான், இலண்டனில் முதன் முதலாய் மைக்கேல் ஆரிஸைச் சந்தித்தார்.
காதல் வலையில் வீழ்ந்தார். மைக்கேல் ஆரிஸ் திபேத் நாடு பற்றிய ஆய்வாளர். கியூபாவின் தலைநகரான ஹவானாவில் பிறந்தவர்.
சூ கி மகன்களுடன் |
நண்பர்களே, ஆங் சாங் சூ கியிக்கு ஓர் ஆசை.
தனது தந்தையாரைப் பற்றி ஓர் நூல் எழுத வேண்டும் என்ற ஆசை. இதற்காக பர்மிய வரலாற்றுச்
செய்திகளைத் திரட்டத் தொடங்கினார்.
1988 ஆம் ஆண்டு சூ கி பர்மா திரும்பினார். மிகவும்
உடல் நலம் குன்றியிருந்தத் தனது தாயைக் காணத்தான் வந்தார். ஆனால் தன்னையும், தன்
தாய் தந்தையரையும் ஈன்றத் தன் தாய் நாடு, பர்மா, பெரும் கொந்தளிப்பில், இராணுவத்தினரின்
கோரப் பிடியில் சிக்கித் தவிப்பதைக் கண்டார்.
அதுநாள் வரை பர்மாவின் சர்வாதிகாரியாக
விளங்கிய யு நி வின், பர்மாவின் பெயரை மியான்மர் என மாற்றியதோடு, தனது
பதவியை, சூ கி நாடு திரும்பிய, அதே 1988 ஆம் ஆண்டில், ராஜினாமா செய்வதாக நடித்து,
நாட்டினை இராணுவ ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தார். இராணுவத்தின் பின்னனியில் இருந்து
இயக்கும் சூத்திரதாரியாய் மாறிப் போனார்.
மியான்மர் நாட்டினை ஆட்சி செய்யும் இராணுவ அமைப்பின் பெயர் SLORC (State
Law and Order Restoration council). பின்னர் இப்பெயர் கூட மாற்றம்
கண்டது. SPDC (State Peace and Development Council). ஆனால் மக்களுக்கு அமைதி மட்டும்
கிடைக்கவில்லை.
நாடு திரும்பிய சூ கி, மிகப் பெரிய பேரணி
ஒன்றினை நடத்தி, இராணுவத்தினரை அதிர வைத்தார்.
1988 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாள் சூ
கியின் தாயார் இயற்கை எய்தினார்.
எனது
தந்தையைப் போல, எனது தாயைப் போல,
நானும்
நமது நாட்டிற்காக
இறுதி
வரை, இறக்கும் வரை போராடுவேன்.
தேசிய ஜனநாயக அமைப்பினைத் தோற்றுவித்தார்.
நம்மை அழிப்பது அதிகாரம் அல்ல, பயம்தான்.
அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில்
கலக்கமடைகிறார்கள். அதே சமயம், அதிகாரத்தின் வலிமை குறித்த பயம், அதற்கு கீழே
உள்ளவர்களை கலக்கமடையச் செய்கிறது.
மக்களே, ஒன்று திரண்டு வாருங்கள்.
ஜனநாயகத்திற்காகப் போராடுங்கள், வெற்றி கிட்டும் வரை நிற்காதீர்கள்.
1989 ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 20 ஆம் நாள்,
ஆங் சாங் சூ கி கைது செய்யப் பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு,
இரண்டு நிபந்தனைகளை விதித்தனர். ஒன்று சிறை தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது.
இரண்டு அயல் நாட்டினரை மணந்தவராக இருக்கக் கூடாது.
ஆங் சாங் சூ கியை மனதில் கொண்டு விதிக்கப்
பட்ட நிபந்தனைகள்தான் இவை. இருந்தும், ஆங் சாங் சூ கியின் தேசிய ஜனநாயக
அமைப்பானது, சட்ட சபையின் 485 இடங்களில், 392 இடங்களில் வெற்றி வாகை சூடியது.
வெற்றி பெற்றும் பயன்தான் இல்லை. இத்தகைய
பெரு வெற்றியை எதிர்பார்க்காத, இராணுவ ஆட்சியினர், தேர்தலே செல்லாது என அறிவித்து,
தங்கள் ஆட்சியினைத் தொடர்ந்தனர். ஆங் சாங் சூ கியோ, வீட்டுக் காவலிலேயே, தன்
போராட்டத்தைத் தொடர்ந்தார்.
ஆங் சாங் சூ கி என்று ஒருவர் இருப்பதோ.
வீட்டுச் சிறையில் ஆறு ஆண்டுகளாக, வாழ்வைக் கழிப்பதோ, 1991 வரை, வெளி உலகிற்கேத்
தெரியாமல்தான் இருந்தது. அப்பொழுது வந்தது ஓர் அறிவிப்பு.
மியான்மர்
நாட்டின்,
ஆங்
சாங் சூ கி அவர்கள்,
அமைதிக்கான
நோபல்
பரிசினைப் பெறுவதற்குத்
தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
1991 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள்,
நார்வேயின், ஓஸ்லோ நகரில் இருந்து வந்த, இந்த அறிவிப்பானது, உலகத்தின் கண்களைத்
திறந்தது. இப்படியும் ஒரு இரும்புப் பெண்ணா என உலகே வியந்த்து.
உலக நாடுகள் அனைத்தும் சூ கியின்
விடுதலையைக் கோரியது. இருந்தும் இராணுவ ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை.
அரசியலைத் துறப்பதாகவும், மியான்மரை விட்டு
வெளியேறுவதாகவும் உறுதியளித்தால், விடுதலை செய்கிறோம் என்றனர். சூ கியும் அசைந்து
கொடுக்கவில்லை.
1991 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள், ஓஸ்லோ
நகரில் நடைபெற்ற விழாவில், சூ கியின் மகன்கள் அலெக்சாண்டரும், கிம்மும், தங்கள்
தாயின் சார்பாக, நோபல் பரிசினைப் பெற்றுக் கொண்டனர். இக்காட்சியினை அருகில்
நின்று, பெருமை பொங்கக் கண்டு களித்தார் மைக்கேல் ஆரிஸ்.
எனது தாயின் சார்பாக உங்கள் முன்னால்
நிற்கிறேன். இப்பெருமை மிகு பரிசினை, நேரடியாகப் பெற, சூழ்நிலைகள், என் தாயாரை
அனுமதிக்கவில்லை.
எனது தாயார், சூ கி அவர்கள், இப்பரிசினை
நேரடியாகப் பெற்றிருந்தால், உங்கள் முன்னால் நின்று, எதைப் பேசுவாரோ, அதனைப்
பேசவே, என்னால் இயன்றவரை, நான் முயற்சி செய்கிறேன்.
எனக்குத் தெரியும், இப்பரிசினை என் தாய்,
தன் பெயரில் பெற்றிருக்க மாட்டர். அனைத்து பர்மிய மக்களின் சார்பாகத்தான்
பெற்றிருப்பார். அவர் நிச்சயம் கூறியிருப்பார், இந்த நோபல் பரிசு என்னைச் சார்ந்தது
அல்ல, பேசிக்கொண்டிருக்கின்ற இந்த நிமிடத்தில், இந்த நொடியில், நாட்டின்
நன்மைக்காகவும், விடுதலைக்காகவும், எண்ணற்ற தியாகங்களைச் செய்து கொண்டிருக்கிறார்களே,
எனது பர்மிய நாட்டு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், அவர்களைச் சார்ந்தது
இப்பரிசு.
இது அவர்களுடைய பரிசு. நீண்ட நெடிய
அமைதியான, ஜனநாயகப் போராட்டத்திற்குக் கிடைத்த பரிசு இது.
நமது வேதனைகளும், துயரங்களும், இன்று இப்
பூமி பந்தின் அனைத்து திசைகளிலும் வாழும் மக்களின் செவிகளைச் சென்றடைந்திருக்கிறது,
அவர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. இதற்காகவே பர்மிய மக்கள் நெஞ்சம்
நிமிர்த்தி, தலை நிமிர்ந்து நிற்கலாம்.
நண்பர்களே, உலக நாடுகளின் கண்டனங்களுக்கு
பர்மா செவி சாய்க்கவேயில்லை. 1989 முதல் வீட்டுச் சிறையில் இருந்தவாரே போராடியவர்,
ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் 1995 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் நாள் விடுதலை
செய்யப்பட்டார்.
2000 வது
ஆண்டில் மீண்டும் வீட்டுச் சிறை. 2002 இல் விடுதலை. மீண்டும் 2003 இல்
கைது.
ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், சூ கி யின்
விடுதலைக்கு சில நாட்களுக்கு முன்னர், 2009 ஆம் ஆண்டில் ஓர் நாள், வீட்டின் பின்
புறம் உள்ள ஏரியை நீச்சலடித்துக் கடந்து, வீட்டினுள் புகுந்தார் ஒரு அமெரிக்கர்.
பெயர் ஜான் எட்டாவ் (John Yettaw ).
சூ கியிக்கு ஆபத்து என கனவில் கண்டேன். எனவே
எச்சரிக்கவே வந்தேன் என்றார் அவர்.
அரசுக்கு கிடைத்த்து ஒரு காரணம். எப்படி,
வெளியாளை, அதுவும் வெளி நாட்டினரை வீட்டிற்குள் விடலாம். வீட்டுக் காவல்
நீட்டிக்கப் பட்டது. 2010 ஆம் ஆண்டுதான் சூ கி விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 25 ஆண்டுகளில், சற்றேறக்குறைய 15
ஆண்டுகளை, வீட்டுச் சிறையிலேயே கழித்திருக்கிறார் ஆங் சாங் சூ கி.
2012 ஏப்ரல் முதல் நாள் நடைபெற்ற பர்மிய
தேர்தலில், பெரு வெற்றியினை ஈட்டியவராக, 2012 மே இரண்டாம் நாள், பர்மாவின் சட்ட
சபையில் கால் பதித்துள்ளார் சூ கி.
மியான்மரில்
ஜன நாயகம் மலர,
சூ
கி யின் போராட்டம் வெல்ல
வாழ்த்துவோமா
நண்பர்களே.