தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர், இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர், இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர், இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால், இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான், இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள், இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய், இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
நண்பர்களே, தமிழ் மொழியின் அருமையை,
இனிமையை இவ்வளவு எளிமையாக, அதே சமயம் வலிமையாக பாவேந்தரைத் தவிர, வேறு யாரால்
சொல்ல முடியும்.
பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இனம் மறந்துவிட
முடியாத, என்றென்றும் மறக்கக் கூடாதவர். தமிழ் இனத்தின் தன்மானத்தைத் தட்டி
எழுப்பியவர். மூட நம்பிக்கைகளை அடியோடு வேரறுக்கப் போராடியவர். சாதியப்
பாகுபாடுகளைக் கடுமையாகச் சாடியவர். பெண் கல்விக்கு, பெண் விடுதலைக்கு உரக்கக்
குரல் கொடுத்தவர்.
வல்லமை
பேசி வீட்டில் – பெண்
வாங்கவே
வந்திடு வார்கள்சில பேர்கள்
நல்ல
விலை பேசுவர் – உன்னை
நாளும்
நலிந்து சுமந்து பெற்றோர்கள்
கல்லென
உன்னை மதிப்பர் – கண்ணில்
கல்யாண
மாப்பிள்ளை தன்னையுங் கண்டார்
வல்லி
உனக்கொரு நீதி – இந்த
வஞ்சகத்
தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்.
உங்களுக்கு ஒரு
இலட்ச ரூபா கிடைக்கப் போகிறது தெரியுமா? என செல்லப்பன் கேட்டார்.
ஒரு இலட்சம்
ரூபாயா? எங்கே இருந்து கிடைக்குதாம்? இது பாவேந்தர்.
வடக்கே ஞான
பீடம் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. அது தென்னாட்டில் இருந்து ஒரு சிறந்தக்
கவிஞரைத் தேர்ந்து, பரிசு தர முடிவு செய்திருக்கிறது. அப்பரிசுக்குத் தாங்கள்
தேர்வு செய்யப்ப பட்டிருக்கிறீர்கள்.
சங்க விழா ஒன்றில் ஈரோடு தமிழன்பனுடன் நான். நடுவில் இருப்பவர் பாடலாசிரியர் கவிஞர் கபிலன் |
அந்தச்
செல்லப்பன் என்ன சொன்னான்?
உங்களுக்கு ஒரு
இலட்ச ரூபாய் பரிசாக வருவதாகச் சொன்னார்.
வரட்டும்,
வரட்டும். வீட்டுக்கு அரைப்படி பருப்பு வாங்கிப் போடுவேன்னு நினைக்கிறாயா?
அதெல்லாம் ஒன்றும் நடக்காது. ஒரு பெரிய அச்சு இயந்திரம் வாங்கிப் போட்டு, உன்
கவிதை, உன்னைப் போல் எழுதுகிற அவன் கவிதை, இவன் கவிதை எல்லாம் புத்தகங்களாகச்
சுடச்சுட அச்சிட்டுப் போட்டால், தமிழ்ப் பகை தன்னாலே ஒழிஞ்சு போகும். ஆமா,
அதைத்தான் செய்யப் போகிறேன்.
பாவேந்தர் பிறகு அந்தப் பரிசு பற்றி மறந்தே
போனார். நண்பர்களே, இதில் கொடுமை என்ன தெரியுமா? ஞான பீட அறிவிப்பு வருவதற்குள்,
பாவேந்தர் 1964 இல் இறந்து விடவே, உயிரோடு இருப்பவர்களுக்குத்தான் ஞான பீட பரிசு
என்ற விதி இருக்கிறது, என்று கூறி, மலையாளக் கவிஞர் சங்கர குரூப்பிற்குத் தான்
அந்தப் பரிசை வழங்கினார்கள்.
சலுகை
போனால் போகட்டும் என்
அலுவல்
போனால் போகட்டும்
தலைமுறை
ஒரு கோடி கண்ட என்
தமிழ்
விடுதலை ஆகட்டும்,
பிள்ளை
பிறந்தேன் யாருக்காக?
பெற்ற
தமிழ் மொழிப் பேருக்காக
உள்ளம்
இருப்பதும் தோள் இருப்பதும்
உயிர்
நிகர் தமிழ்ச் சீருக்காக ...
போனால்
என்னுயிர் போகட்டும் என்
புகழ்
உடல் நிலை ஆகட்டும்
தேனால்
செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே
தொழ நிற்கட்டுமே
நண்பர்களே, யானை மேல் அரசர்கள் வலம் வந்த
காலம் ஒன்று உண்டு. ஆனால் கவிக்கு அரசராம், பா வேந்தர், யானை மீது அமர்ந்து, ஓர்
நாள், நகரை வலம் வந்தாரே தெரியுமா?
கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியில் புலவர் உள்ளம் நாடகக் குழுவினருடன் பாவேந்தர் |
தமிழகப் புலவர் குழுக் கூட்டத்தின் சிறப்பு
நிகழ்வாக, புலவர் பெருமக்களின் ஊர்வலம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்
பெற்றிருந்தது.
தஞ்சையின் அரசர் கால, அகலத் தெருக்களான,
மேல வீதி, கீழ வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி நான்கும் அழகு படுத்தப்
பட்டிருந்தன. வழியெங்கும் வரவேற்பு வளைவுகள், தென்னங் குருத்தோலைத் தோரணங்கள்,
வண்ணக் கொடிகள், வாழையும் கமுழும் கட்டப் பெற்ற அழகுப் பந்தல்கள்.
முரசு முழங்க, சங்கு ஊத, துந்துபி இன்னிசை
எழுப்ப, எக்காளம் பேரோசை எழுப்ப, புலவர் பெருமக்களின் ஊர்வலம் புறப்பட்டது.
நாற்பத்தெட்டுப் புலவர்கள், ஊர்திகளில் ஏறி பின்னால் வர, முன்னால், யானையின் மீது
அமர்ந்து, கம்பீரமாய் புரட்சிக் கவி பாவேந்தர் பாரதிதாசன்.
தமிழன்னை கரவொலி எழுப்பி, உளமார மகிழ்ந்து,
திளைத்த நான்னாள் அது.
அறிவை
விரிவுசெய், அகண்ட மாக்கு
விசாலப்
பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்துகொள்,
உன்னைச் சங்கம மாக்கு
மானிட
சமுத்திரம் நானென்று கூவு
அறிவை விரிவு செய்யச் சொன்ன பாவேந்தர்,
கொடுமை கண்டு பொங்கி எழுந்ததும் உண்டு.
வலியோர்சிலர்
எளியோர்தமை
வதையே
புரிகுவதா?
மகராசர்கள்
உலகாளுதல்
நிலையாம்
எனும் நினைவா?
உலகாள
உனதுதாய் மிக
உயிர்வதை
யடைகிறாள்
உதவாதினி
ஒரு தாமதம்
உடனே
விழி தமிழா
..................................
.................................
கொலை
வாளினை எடடாமிகு
கொடியோர்செயல்
அறவே
குகைவாழ்
ஒரு புலியே உயர்
குணமேவிய
தமிழா
நண்பர்களே, நிதியினைப் பெற்றுக் கொண்ட
பாவேந்தர் பேசுவதைக் கேளுங்கள்.
இளைய நண்பர்களுக்கு நான் கூற விரும்புவது
இதுதான். தமிழைப் படி. தமிழை எழுது. கொடுமை கண்ட இடத்து எதிர்த்துப் போராடு.
எவரேனும் தமிழைப் பழித்தால், அவரை எளிதில் விடாதே. அடிமைத் தனம் கொள்ளாதே.
அநீதிகளுக்குத் தலை வணங்காதே. அச்சமின்மையை வளர். அறிவைப் பெருக்கு. ஆற்றலைப்
பெறு. உண்மையை பேசு. ஊருக்காகவே உழை.
29.04.2014
புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின்
124 வது பிறந்த நாள்.
பாவேந்தரைப் போற்றுவோம்
பாவேந்தர் வழி நடப்போம்.
.......................................
தமிழ்
எங்கள் பிறவிக்குத் தாய், இன்பத்
தமிழ்
எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
.........................................