10 ஏப்ரல் 2014

வகுப்பறை நினைவுகள்


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே.....

     நண்பர்களே, நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கடந்த 7.3.2014 வெள்ளிக் கிழமை, வருவாய் துறையினைச் சார்ந்த பணியாளர் ஒருவர், எங்கள் பள்ளிக்கு வருகை தந்து, நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிச் சென்றார்.

     நான் வாக்குச் சாவடி தலைமை அலுவலராக நியமிக்கப் பெற்றிருந்தேன். அடுத்த நாள் 8.3.2014 சனிக் கிழமை பயிற்சி வகுப்பு. இடம் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி.


     சரபோஜி கல்லூரி என்ற பெயரினைப் பார்த்ததுமே, நினைவலைகள் பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கின. நான் பயின்ற கல்லூரி அல்லவா? முப்பதாண்டுகளுக்கு முன்னர் நான் பி.எஸ்ஸி., கணிதம் பயின்ற கல்லூரி அல்லவா? நினைக்கவே நெஞ்சம் இனித்தது.

     நண்பர்களே, 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற, மேனிலைப் பள்ளி அரசுப் பொதுத் தேர்வில், நான் வெற்றி பெற்ற பொழுது, தஞ்சையில் இருந்த கல்லூரிகள் மூன்றே மூன்றுதான். ஒன்று மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி. இரண்டாவது மகளிருக்கான, குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி. மூன்றாவது பூண்டி புட்பம் கல்லூரி.

     மேற்படிப்பைப் பொறுத்தவரை எனது ஒரே விருப்பம், கணிதம் பயில வேண்டும் என்பதுதான். சரபோஜி கல்லூரியில் பி.எஸ்ஸி., கணிதம் சேர்ந்தேன். நண்பர்களே, இன்றும் நன்றாக நினைவிருக்கிறது, முதலாமாண்டுக் கட்டணமாக நான் கட்டிய தொகை ரூ.162 மட்டும்தான்.

     1981 முதல் 1984 வரை மூன்றாண்டுகள் சரபோஜி கல்லூரியில் பயின்றேன். கல்லூரியைச் சுற்றிலும், கண்ணிற்கு எட்டியவரை, எங்கெங்கும் முந்திரித் தோப்புகள்தான். இன்று ஒரு முந்திரி செடி கூட இல்லை. எங்கெங்கு பார்த்தாலும கட்டடங்கள், கட்டடங்கள், கட்டடங்கள் மட்டும்தான்.

     பல புதிய நண்பர்களை உருவாக்கித் தந்தது இக்கல்லூரிதான். உடன் பயின்றவர்கள் அனைவருமே இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    

மூன்றாமாண்டு இறுதியில், ஆசிரியர்கள் அனைவருக்கும், பிரியாணி விருந்து வழங்கி, குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டு, பிரியா விடைபெற்றது, இன்றும் பசுமையாய் நினைவில் தேங்கி இருக்கிறது.

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்தத் தோழர்களே
பறந்து செல்கின்றோம் – நாம்
பிரிந்து செல்கின்றோம்

      இயற்பியல் துறையில் பேராசிரியராக இருந்தவர் பேராசிரியர் சேகரன் அவர்கள். இன்றும் அவருடன் தொடர்பில் உள்ளேன். தஞ்சையில் லக்மி அச்சகம் என்னும் பெயரில் அச்சகம் ஒன்றினை இன்றும் நடத்தி வருகிறார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், மாதாந்திர இதழான தமிழ்ப் பொழில் இதழினை, கடந்த இருபது ஆண்டுகளாக, இவரது அச்சகத்தில்தான் அச்சிட்டேன்.

எனது புது இல்லத்தின், புதுமனைப் புகு விழாவின் போது
பேராசிரியர் சேகரன் அவர்கள், தனது துணைவியாருடன் வருகை தந்து
சிறப்பித்தார்
தமிழ்ப் பொழில் பதிப்பாசிரியர் குழுவில் நானும் ஒரு உறுப்பினர். தமிழ்ப் பொழில் இதழில், நானும் அவ்வப்பொழுது, கட்டுரைகள் எழுதுவதுண்டு. பேராசிரியர் சேகர் அவர்கள், எனது கட்டுரையினைப் படித்து மகிழ்வார். தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் எழுத்துக்களை வாசிக்க வாசகன் நானிருக்கிறேன் என்று கூறி உற்சாகப் படுத்துவார்.

     எனது வாழ்வில் நான் மறக்க முடியாத மற்றொரு பேராசிரியர் எனது கணிதப் பேராசிரியர். திரு எஸ்.வி.பலராமன் அவர்களாவார். தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை என்று அடிக்கடி கூறுகிறோமல்லவா, அந்த வார்த்தையின் முழு வடிவம் இவர்.

     நண்பர்களே, நாமெல்லாம், குழந்தையாய் பிறந்து, சில மாதங்கள் தவழ்ந்திருப்போம். கால்களோடு, கைகளையும் தரையில் ஊன்றி சில காலம் நடந்திருப்போம். பிறகு எழுந்து நின்று, கால்களால் நடை பயிலக் கற்றிருப்போம்.

     பேராசிரியர் எஸ்.வி.பலராமன் அவர்கள், பிறந்தது முதல் இன்று வரை, கைகளைத் தரையில் ஊன்றியே நடப்பவர். ஆம் நண்பர்களே, சூம்பிச் செயலிழந்தக் கால்களைத்தான், தன் பிறந்த நாள் பரிசாய்ப் பெற்றவர் இவர்.

     செயலிழந்தக் கால்களைப் பெற்றாலும், தளரா உறுதி படைத்த மனதினைப் பெற்றவர். மெல்ல, மெல்ல படித்து, விரிவுரையாளராய், பேராசிரியராய், ஓய்வுக்கு முன் கல்லூரி முதல்வராகவும் உயர்ந்தவர்.

      கைகளால் சுற்றிச் செலுத்தக் கூடிய, மூன்று சக்கர வாகனத்தில், தினமும் ஆறு கிலோ மீட்டர் தூரம் பயணித்து, கல்லூரிக்கு வருவார். கணித வகுப்புகளோ மாடியில். கைகளை ஊன்றியே படியேறி வருவார். வகுப்பிற்குள் வந்ததும், இடது கையை மேஜையில் ஊன்றி எழுந்து நிற்பார். இடது கையால் மேஜையினைப் பிடித்தவாரே, வலது கையால், கரும் பலகையில் கணிதப் பாடங்களை எழுதி நடத்துவார்.

      என்னையும் ஒரு நண்பராய் ஏற்றுக் கொண்ட மாமனிதர் இவர்.

     சரபோஜி கல்லூரிக்குப் பிறகு நான் பயின்றதெல்லாம் அஞ்சல் வழிக் கல்வியில்தான். எம்.எஸ்ஸி., கணிதம் பயின்றதும், பி.எட்., பயின்றதும் அஞ்சல் வழியில்தான். பின்னர் எம்.ஃபில்., பயின்றது பகுதி நேரப் படிப்பில்.

      இக் கால கட்டத்தில், அஞ்சல் வழியில் படித்துக் கொண்டே, வேலையும் பார்த்தேன். மருந்து உற்பத்தி நிறுவனத்தில் முகவராக ( Medical Representative)   மூன்று ஆண்டு பணி. இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தில், உதிரிப் பாகங்களின் பொறுப்பாளராக ஓராண்டுப் பணி. மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றில் ஆசிரியராக ஓராண்டுப் பணி, என ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் செலவிட்ட நிலையில், 1990 இல்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியில் சேர்ந்தேன்.

திரு த.ம.ஆறுமுகம் பிள்ளை
நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில், ஊதியம் என்று எதுவுமின்றியே, இரண்டாண்டுகள் எழுத்தராகப் பணியாற்றி இருக்கிறேன். திரு த.ம.ஆறுமுகம் பிள்ளை என்னும் ஓர் உயர்ந்த மனிதரின் தொடர்பு கிடைத்தது இச்சமயத்தில்தான். கரந்தைப் புலவர்க் கல்லூரியில் எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர்.

     கல்வி நிலையங்களின், கணக்கு வழக்குகளை எழுதுவது எப்படி என, எனக்குக் கற்றுக் கொடுத்த குரு, இந்த ஆறுமுகம் பிள்ளை ஐயாதான்.

      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், 1992 ஆம் ஆண்டில், தி.ச.பழனிச்சாமி பிள்ளை தொழிற் பயிற்சி மையம் தொடங்கப் பட்டபோது, அம் மையத்தின், எழுத்தராய் பணியமர்த்த பட்டேன். மாத ஊதியம் ரூ.300.

      நண்பர்களே, 1993 ஆம் ஆண்டில்தான், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், நிரந்தரப் பணி கிடைத்தது. அதுவும் ஆசிரியராக அல்ல, அலுவலக உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன். அடுத்த ஆண்டே, ஆசிரியராய் பதவி உயர்வு கிடைத்தது.

      உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், நிரந்தரப் பணி கிடைப்பதற்கு, மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் எனக்குத் திருமணம் நடந்தது.

      நண்பர்களே, என் திருமணம் எங்கு நடைபெற்றது தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனது பள்ளியிலேயே நடைபெற்றது. நான் படித்த பள்ளி வளாகத்திலேயே என் திருமணம்.

     பள்ளி வளாகத்தில், தமிழ்ப் பெருமன்றம் என்னும் பெயரில் விழா அரங்கு ஒன்று உள்ளது.

புண்ணிய நெடுவரைப் போகிற நெடுங்கழைக்
கண்ணிடை யொருசாண் வளர்ந்த்து கொண்டு
நூனெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலன விருபத்து நால்விரலாக்
எழுகோலகலத் தென்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினதாகி
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோலாக
ஏற்ற வாயிலிரண்டுடன் பொலியத்
தோன்றிய அரங்கு
என சிலப்பதிகாரத்தில், மாதவி நடனமாடிய அரங்கின் அமைப்பை, அளவை விவரிப்பார் இளங்கோவடிகள்

     சிலப்பதிகாரத்தில் அளவிலா ஈடுபாடு கொண்டிருந்த, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களால், மாதவி நடனமாடிய அரங்கின் அளவைப் பின்பற்றி, அதே அளவில், அதே அமைப்பில், சிலப்பதிகார அரங்கினைப் போலவே, 1929 ஆம் ஆண்டு கட்டப் பெற்றதுதான், இந்தத் தமிழ்ப் பெருமன்றம்.

      இத்தகு பெருமை வாய்ந்த தமிழ்ப் பெருமன்றத்தில்தான், எனது திருமணம் நடைபெற்றது. படித்த பள்ளியிலேயே பணி, அவ்விடத்திலேயே திருமணம். வேறு என்ன வேண்டும் எனக்கு. நினைக்கவே நெஞ்சம் மகிழ்ச்சியில் விம்முகிறது.

      நண்பர்களே,  சொல்ல வந்த செய்தியை, விட்டு விட்டு, நினைவலைகளின் போக்கிலேயே சிறிது தூரம் சென்று விட்டேன்.

எனது திருமணத்தின்போது, தன் மனைவியுடன் வருகை தந்து வாழ்த்திய
எனது பேராசிரியர் திரு எஸ்.வி.பலராமன்
எனது பேராசிரியர் திரு எஸ்.வி.பலராமன் அவர்களைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தேனல்லவா? கல்லூரிப் படிப்பு முடிந்து, ஒன்பதாண்டுகள் கடந்த நிலையில், நடைபெற்ற எனது திருமணத்திற்கு, மறக்காமல், மனைவியுடன் வருகை தந்து, என்னை வாழ்த்தியருளிய பெருமகனார் இவர்.

     பற்பல நினைவுகள் உள்ளத்தில், சுழன்றடிக்க. இதோ, பாராளுமன்றத் தேர்தல் பயிற்சி வகுப்பிற்காக, முப்பதாண்டுகளுக்குப் பிறகு, சரபோஜி கல்லூரி மண்ணை மிதிக்கின்றேன். உடலெல்லாம் சிலிர்க்கிறது.

     ஒவ்வொரு கட்டடமாக சுற்றிச் சுற்றி வருகிறேன். விளையாட்டு மைதானத்தை, மிதி வண்டி நிறுத்தத்தை, சிற்றுண்டியகத்தை என சுற்றி சுற்றி வருகிறேன். கவலையற்ற, அந்த மாணவப் பருவத்திற்குத் திரும்பிச் செல்ல, ஓர் வாய்ப்பு கிடைக்காதா என மனம் ஏங்குகிறது
    


வகுப்பறைப் படங்களை எடுத்து உதவியவர் நண்பரும்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளி ஆசிரியருமான
திரு வி. பாலசுப்பிரமணியன் அவர்கள்
இதோ, நான் பி.எஸ்ஸி., கணிதம் மூன்றாமாண்டு படித்த வகுப்பறை. முப்பதாண்டுகளுக்கு முன்னர், அமர்ந்திருந்த இடத்தில், சிறிது நேரம் அமைதியாய் அமர்கிறேன்.

      வகுப்பறையில் என்னைத் தவிர யாருமில்லை. ஆயினும் ஏதேதோ ஒலிகள் வந்து, என் செவிப்பறையில் மோதுகின்றன. நண்பர்களின் சிரிப்பொலிகள், கிண்டல் பேச்சுக்கள் கேட்கின்றன, கவனியுங்கள், கவனியுங்கள் என்னும் பேராசிரியர்களின் குரல்களும் இடையிடையேக் கேட்கின்றன.

     வகுப்பறையை விட்டு வெளியேற மனமின்றிக் கிளம்பி, தேர்தல் வகுப்பு நடைபெறும், விழா அரங்கிற்குச் சென்று அமர்ந்தேன்.

      நண்பர்களே, கல்லூரி கால நினைவலைகளில் மூழ்கித் திளைத்திருந்த என்னை, 26.3.2014 மாலை வந்த அலைபேசிச் செய்தி, பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது.

     கடந்த 26.3.2014 முதல் 9.4.2014 வரை பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகள் நடைபெற்றதைத் தாங்கள் நன்கறிவீர்கள். இத்தேர்வினைப் பொறுத்தவரை, நான் பறக்கும் படை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தேன். தினமும் ஒரு பள்ளிக்குச் சென்று, தேர்வினைக் கண்காணிக்க வேண்டும்.

     மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து, ஒவ்வொரு தேர்விற்கும், முந்தைய தினம் மாலை, அலைபேசி வழி,  நாளை நீங்கள் இந்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்னும் உத்தரவு வரும்.

     26.3.2014 புதன் கிழமை மாலை, அலைபேசி அழைப்பு வந்தது. நாளை நீங்கள், திருவையாறு புனித வளனார் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

     நண்பர்களே, பள்ளியின் பெயரினைக் கேட்டவுடன், மனம் ஆனந்தக் கூத்தாடத் தொடங்கியது. ஆமாம், நீங்கள் நினைப்பது சரிதான். நான் பயின்ற பள்ளிதான் அது. எத்தனையாவது வகுப்பு தெரியுமா? நண்பர்களே, நான் முதல் வகுப்பு பயின்ற பள்ளி இது. யாருக்குக் கிடைக்கும் இது போன்ற ஓர் வாய்ப்பு.

     எனது சொந்த ஊர் திருவையாறு. நான் முதல் வகுப்பு பயின்றது இங்குதான். தமிழ் எழுத்துக்களும், ஆங்கில எழுத்துக்களும் எனக்கு அறிமுகம் ஆனது இங்குதான். ஒவ்வொரு எழுத்தையும் முதன் முறையாய் உச்சரிக்கத் தொடங்கியதும் இங்குதான்.

     திருவையாற்று தூய வளனார் பள்ளியில், முதல் வகுப்பு பயின்ற மறு வருடமே, தஞ்சைக் கரந்தைக்கு வந்துவிட்டோம். இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, கரந்தையிலுள்ள ஜைன இலவச தொடக்கப் பள்ளி. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உமாமகேசுவர மேனிலைப் பள்ளி.

     திருவையாறு, தூய வளனார் தொடக்கப் பள்ளி. முதல் வகுப்பினை இங்கு படித்து, நாற்பத்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏதும் அறியா சிறு வயதில் பயின்ற பள்ளி.

     புகை மூட்டம் போல் சிற்சில நினைவுகள் மட்டுமே, மனத்திரையில் தோன்றி மறைகின்றன. ஒரே ஒரு காட்சி மட்டும், தெளிவாய் தெரிகிறது.

      பள்ளிக்குள் நுழைந்ததும், காட்சிதரும், இயேசுபிரானின் திருமுன், ஒவ்வொரு நாளும் மண்டியிட்டு, எழுந்து சென்றது மட்டும் தெளிவாய், மனதில் தேங்கியுள்ளது.

     நான் பயின்ற தூய வளனார் தொடக்கப் பள்ளி, இன்றும் தொடக்கப் பள்ளியாகத்தான் இருக்கிறது. நான் செல்ல வேண்டிய தூய வளனார் மேனிலைப் பள்ளி, இப்பள்ளிக்கு பின்புறம் உள்ளது.

    தூய வளனார் தொடக்கப் பள்ளிக்கு முன், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இறங்குகிறேன். பள்ளி வளாகத்தில், காலடி எடுத்து வைக்கிறேன். மனதில் ஓர் இனம் புரியா, இன்ப உணர்வு மெல்ல மெல்லப் பரவுகிறது.

     இயேசு பிரானின் திருஉரு என்னை வரவேற்கிறது. சில நிமிடங்கள், யேசுவையே உற்றுப் பார்க்கிறேன். உள்ளே நுழைந்து, வலது புறம் திரும்பியதும், இதோ நான் பயின்ற முதல் வகுப்பு.முதலாம் வகுப்பில் சில நிமிடங்கள், என்னை மறந்து நிற்கின்றேன். வகுப்பறையில் உட்காருவதற்கு, இன்றும் கூட இருக்கைகள் ஏதும் இல்லை. தரையில்தான் அமர வேண்டும். தரையில் சிறிது நேரம் அமர்ந்தேன்.

     தேர்வினை முன்னிட்டு, காலை 8.00 மணிக்கே சென்று விட்டதால், தூய வளனார் தொடக்கப் பள்ளியில், ஒரு சில குழந்தைகளைத் தவிர, யாரும் இல்லை.

     பள்ளியில் பணியாற்றும் ஆயாஅம்மா மட்டுமே இருந்தார். அம்மா, நாற்பத்து நான்கு வருடங்களுக்கு முன், நான் ஒன்றாம் வகுப்பு பயின்ற பள்ளி இது. நான் பயின்ற வகுப்பறை இது. இன்று நான் ஒரு ஆசிரியன். என் வகுப்பறையைக் காண வேண்டும் என்ற ஆவலில் வந்துள்ளேன் என்றேன்.

     ஆயாஅம்மா அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே. ஒரு நிமிடம் இருங்கள் எனக் கூறிச் சென்றார். திரும்பி வரும்போது, கையில் தேநீர் கோப்பையுடன் வந்தார்.

     சாப்பிடுங்கய்யா.

     அவர் குரலில்தான், எவ்வளவு அன்பு. எவ்வளவு பாசம். எவ்வளவு பெருமிதம்.

பெருமிதப் பட வேண்டியவன் நானல்லவா.

     


     

78 கருத்துகள்:

 1. உங்களது இப்பதிவு எனது கல்லூரி நாள்களையும், பள்ளி நாள்களையும் நினைவுபடுத்தியது. வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகளைத் தாங்கள் பகிர்ந்தது மனதுக்கு நிறைவைத் தருகிறது. வலையுலக நண்பர்களை பல பத்தாண்டுகளுக்குப் பின் அழைத்துச் செல்வதற்காக மனமார்ந்த நன்றிகள். பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே எனப் பலரையும் நினைவுகூர்ந்தவிதம் மிகவும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 2. உணர்வு பூர்வமான மலரும் நினைவுகள்! இன்றும் நம்மை ஏங்கவைக்கும் நாட்கள்தான் அவை! நான் படித்த பள்ளிகளைக் கடக்க நேர்கையில் இனம் புரியா ஒரு உணர்வு என்னுள் இன்றும் ஏற்படுகிறது!
  //நான் பி.எஸ்ஸி., கணிதம் மூன்றாமாண்டு படித்த வகுப்பறை. முப்பதாண்டுகளுக்கு முன்னர், அமர்ந்திருந்த இடத்தில், சிறிது நேரம் அமைதியாய் அமர்கிறேன்.


  வகுப்பறையில் என்னைத் தவிர யாருமில்லை. ஆயினும் ஏதேதோ ஒலிகள் வந்து, என் செவிப்பறையில் மோதுகின்றன. நண்பர்களின் சிரிப்பொலிகள், கிண்டல் பேச்சுக்கள் கேட்கின்றன, கவனியுங்கள், கவனியுங்கள் என்னும் பேராசிரியர்களின் குரல்களும் இடையிடையேக் கேட்கின்றன.
  // அருமை! அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்வில் என்றென்றும் யாராலும் மறக்க முடியாத நினைவுகள் வகுப்பறை நினைவுகளாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்
   நன்றி நண்பரே

   நீக்கு
 3. பசுமை நிறைந்த நினைவுகள் !
  உண்மையில் பலவான்தான் உங்கள் நண்பர் திரு .பலராமன் !
  கஷ்டப் பட்டு முன்னேறி உள்ளீர்கள் ,வாழ்த்துக்கள் !
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பசுமை நிறைந்த நினைவுகள்தான் நண்பரே
   இன்று நலமான வளமான வாழ்கை அமைந்திருருக்கிறது
   நன்றி நண்பரே

   நீக்கு
 4. //வகுப்பறையில் என்னைத் தவிர யாருமில்லை. ஆயினும் ஏதேதோ ஒலிகள் வந்து, என் செவிப்பறையில் மோதுகின்றன. நண்பர்களின் சிரிப்பொலிகள், கிண்டல் பேச்சுக்கள் கேட்கின்றன, கவனியுங்கள், கவனியுங்கள் என்னும் பேராசிரியர்களின் குரல்களும் இடையிடையேக் கேட்கின்றன.//

  தங்களுடைய கை வண்ணத்தில் கண்முன்னே வகுப்பறை!..

  நானும் படித்ததும் மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரியில் தான்.. நீங்கள் சொல்வது போல கல்லூரியிலிருந்து கண்களுக்கு எட்டிய தூரம் - டான்டெக்ஸ் வரை - முந்திரி மரங்களே.. ஆனால் - இன்றைக்கு ...?

  மலரும் நினைவுகள் என்றைக்கும் பசுமையானவை!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முந்திரி மரக்கிளைகளில் அமர்ந்து மகிழ்ச்சியாய் பேசிக் கழித்த காலம் ஐயா அது.
   மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 5. இனிய நினைவுகள் ஒவ்வொன்றும் இனிமையையும், (சிறிது ஏக்கத்தையும்) மகிழ்ச்சியையும் புரிந்து கொள்ள முடிகிறது... வாழ்த்துக்கள்...

  பேராசிரியர் எஸ்.வி.பலராமன் ஐயா அவர்களின் தகவல்கள் அசர வைத்தது ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே பேராசிரியர் எஸ்.வி.பலராமன் ஐயா அவர்களின் மன உறுதி , மற்றவர்களால் பின்பற்றத்தக்கது ஐயா

   நீக்கு
 6. இனிய நினைவலைகளைப் படிக்கும் போது எனது பள்ளி, கல்லூரிகளுக்குள் சென்று வந்த சந்தோஷம் மனதை நிறைத்தது ஐயா...

  பதிலளிநீக்கு
 7. மறக்க முடியாத அதே சமயம் இப்போது நினைத்தாலும் நெஞ்சில் ஓர்
  ஏக்கத்தையும் பரபரப்பையும் கொடுக்கும் பசுமையான அந்த நினைவலைகளில்இன்று நீங்கள் மட்டும் அல்ல தங்களால் நாங்களும் கவர்ந்து இழுக்கப் பட்டோம் அருமையான நினைவலைகள் .வாழ்த்துக்கள் சகோதரா மீண்டும் மீண்டும் மகிழ்வு தரக் கூடிய நினைவலைகள் தொடரட்டும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைவலைகள் என்றுமே இனிமையானவைதானே
   மிக்க நன்றி சகோதரியாரே

   நீக்கு

 8. வணக்கம்!

  பள்ளி படித்த பசுமை நினைவுகளை
  அள்ளி அளித்தீா் அமுதாக! - துள்ளியே
  நெஞ்சம் நடமாடும்! கொஞ்சிக் கவிபாடும்!
  விஞ்சும் இனிமை விளைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 9. அன்பின் ஜெயக்குமார்

  மலரும் நினைவுகள் - வாய்ப்புக் கிடைக்கும் போது அங்கு சென்று மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து நினைவுகளை மனம் முழுவதும் நிறுத்தி - திரும்பத் திரும்ப அசை போட்டு - ........ அட்டா அடடா - இவ்வாய்ப்பு எலோருக்கும் கிடைக்காது - எத்தனை எத்தனை ஆண்டுகள் - இத்தனை ஆண்டுகள் கழிந்தும் - நாம் முதல் வகுப்பு படித்த பள்ளியினில் காலடி எடுத்து வைத்து - உள்ளே நுழைந்ததும் மெய்மறந்து நின்று நமது பால்ய வயதில் பயின்ற பள்ளியினை நினைவில் நிறுத்தி ............... சொல்வதற்கு சொற்களே இல்லை .

  அருமையான பதிவு - புகைப் படங்கள் அத்த்னையும் அருமை - இரசித்துப் படித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா நினைவலைகளைச் உள்ளவாரே சொல்வதற்கு வார்த்தைகள் இல்லவே இல்லைதான்.
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

   நீக்கு

 10. மிக அருமையானா பதிவு.கல்லூரிப்பருவம் நினைவளைகலை ,மறக்க முடியாத நாட்களை வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்லும் மயிலாசனம்.நான் பயின்ற கல்லூரியும் சரபோசி என்பதால் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தேன். நினைவலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கட்டும்.நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி நண்பரே. தாங்களும் சரபோஜி என்பது மகிழ்வினை அளிக்கின்றது.

   நீக்கு
 11. ஆம் .பழைய நினைவுகள் என்றும் இனிமையானவையே !
  பள்ளிப் பருவத்திற்கே திரும்பச் சென்ற உணர்வு!

  பதிலளிநீக்கு
 12. உங்கள் நினைவலைகள் அருமையாய் எங்களையும் உள்ளே இழுத்துவிட்டன. உங்கள் உணர்வுகளை - மகிழ்ச்சியையும் ஏக்கத்தையும் பெருமிதத்தையும் நன்றாக உணர முடிந்தது..படித்த பள்ளியில் வேலை செய்ததும், படித்த பள்ளிக்குப் பறக்கும் படையில் போனதும், படித்தக் கல்லூரியில் இன்னுமொரு பயிற்சி வகுப்பும்..அடடா..மிக மகிழ்வானவை.
  ஆசிரியர் திரு.எஸ்.வி.பலராமன் அவர்களுக்கு வணக்கங்கள்..பெரிய மனிதர்!
  உங்கள் புகைப்படங்களும் அருமை..பகிர்விற்கு நன்றி சகோதரரே!

  பதிலளிநீக்கு
 13. தங்களது மலரும் நினைவுகள், உங்கள் மனதின் நீங்காத அதிர்வுகள் என்பதைப் படம் பிடித்துக் காட்டினீர்கள்! ஆசிரியர்களுக்கு என்று சமுதாயத்தில் எப்போதும் ஓர் உயரிய இடம் உண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசிரியர் பணி என்பது அறப்பணி என்று கூறுவார்கள் ஐயா.
   எனக்கும் அத்தகைய ஓர் வாய்ப்பு கிட்டியுள்ளது.
   மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 14. தங்களின் மலரும் நினைவுகள், என்னுடைய மலரும் நினைவுகளை மீட்டு விட்டது. பரவாயில்லை வகுப்பறையில் எல்லாம் உட்கார்ந்து விட்டு வந்திருக்கிறீர்கள். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. படித்த பள்ளிக்கு செல்லும் போது ஓர் இனம் புரியா உணர்வு உதிக்கும்! உங்கள் உணர்வுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! சிறப்பான பகிர்வு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. உணர்வுபூர்வமான பதிவு. அனுபவித்து எழுதியது சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. மலை போல் பணிகள் இருந்தாலும், தாங்கள் வலைக்கும் நேரம் ஒதுக்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது
   மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 17. மிகவும் சிறப்பான பகிர்வு. சமீபத்தில் எனது கல்லூரி முதல்வரைச் சந்தித்து பேசியபோது எனக்கும் இதே உணர்வுகள்.

  எனக்கும் பள்ளிக்குச் சென்று பார்த்து வர வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டது.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் தாங்கள் படித்தப் பள்ளிக்குச் சென்று வாருஙகள் ஐயா.
   குழந்தையாய் மாற ஒரு வாய்ப்பு கிடைக்கும்
   நன்றி ஐயா

   நீக்கு
 18. அருமை.
  மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 19. அருமையான பதிவு! என் பழைய நினைவுகளை மீட்டுச் சென்றது. என் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று வர வேண்டும் என்று தோன்றி விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று வாருங்கள் சகோதரியாரே
   உங்களை நீங்களே புதிதாய் உணர்வீர்கள்

   நீக்கு
 20. கடந்த காலங்களை மீட்டிப் பார்ப்பது ஆனந்தம் தான் அதை பகிர்ந்து எம்மையும் பரவசப் படுத்தி விட்டீர்கள். நன்றி !மிக்க மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 21. Yester years memories are really interesting.You are a gifted person.Not only you get such experiences but you are able to enjoy and share with others.Like a magnet magnetises the iron rod close to that,you inspire all those who come close to you .well done Mr.Jayakumar.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா
   தங்களின் வார்த்தைகள் மிகுந்த உற்சாகத்தினை அளிக்கின்றன
   மீண்டும் நன்றி ஐயா

   நீக்கு
 22. பெயரில்லா12 ஏப்ரல், 2014

  தங்கள் ஆனந்தம், உணர்வை என்னால் உணர முடிகிறது.
  கொடுத்து வைத்தவர்.
  பதிவு முழுத் தகவல்களுடன் இனிமையாக இருந்தது.
  இனியவாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோதரியாரே நான் கொடுத்து வைத்தவன்தான்.
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

   நீக்கு
 23. நாஸ்டால்ஜியா வாவ் ...
  நல்லதோர் பதிவு...

  பதிலளிநீக்கு
 24. அற்புதம். எனக்கும் இதே போல ஒரு பதிவு எழுத வேண்டும் என்று தூண்டிய உங்கள் ஆக்கத்திற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா
   தங்களின் பள்ளிப் பருவ நிலைவலைகளை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்

   நீக்கு
 25. தங்கள் கடந்த கால நட்பை சொல்லி , எங்களுக்கும் மலரும் நினைவுகளுக்கு கடத்திவிட்டீர்கள் அண்ணா! உணர்வயுப்[உணர்வுபூர்வமான பதிவு!

  பதிலளிநீக்கு
 26. எங்கள் கைப்பிடித்து அழைத்துச்சென்று படித்த கல்லூரிக்காலத்துக்கும் கல்லூரிக்கும், வகுப்பறைக்கும், பள்ளிக்கூடத்திற்கும், கல்யாணத்திற்கும், பேராசிரியர்களை அறிமுகப்படுத்தியும், அவர்களைப்பற்றிய நினைவலையில் மூழ்கி எங்களுடன் பகிர்ந்ததும் நேரில் நின்று எங்களுடன் கைக்குலுக்கி பேசியது போலவே இருந்தது சார் உங்க பகிர்வு..

  நினைவலையில் எங்களையும் அமிழ்த்தினீர்கள்... மனம் நெகிழவைத்தீர்கள்.

  அன்பு நன்றிகள் சார்...

  த.ம 11

  பதிலளிநீக்கு
 27. ஐயா மலரும் நினைவுகள் இனிமை.ஒரே ஊரில் பிறந்து படித்து வளர்ந்து மண முடித்துப் பணியில் அமர்வது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூனூரில் இருக்கும் தூய அந்தோணியார் உயர் நிலைப் பள்ளிக்குச் சென்றிருந்தேன் . நான் பள்ளி இறுதி தேறியது அங்கிருந்துதான். நான் அங்கு சென்று அங்கிருந்த தலைமை ஆசிரியரிடம் என் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டபோது அவர் சொன்னார் “ அப்போது நான் பிறந்தே இருக்கவில்லை”......!ஆசிரியர் பலராமன் பற்றிய செய்தி நெகிழ வைக்கிறது. என் கணித ஆசிரியர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது ( கணிதம் தவிர ) THE SOLE JUSTIFICATION FOR EXISTENCE IS THE SEARCH FOR TRUTH. ( காந்தியின் பொன்மொழி )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரே ஊரில் பிறந்து படித்து வளர்ந்து மண முடித்துப் பணியில் அமர்வது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, உண்மைதான் ஐயா.
   கொடுத்து வைத்தவன்தான் நான்.
   மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 28. அருமையான பதிவு! பழைய நினைவுகள், அதுவும் பள்ளி நினைவுகள், உலகின் துன்பங்கள் தெரியாத, மகிழ்ச்சியான தருண‌ங்கள் மட்டுமே நிறைந்த பள்ளி வாழ்க்கை என்றுமே இனிய நினைவுகள் நிறைந்தது தான்! அவற்றை மிக அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள்! இனிய தமிழில் மூழ்கி நினைவலைகளில் மிதந்து அனைவருக்கும் தமிழ் விருந்தளித்திருக்கும் உங்களைப் பாராட்ட வார்த்தைகளில்லை!

  திரு. பலராமன் அவர்களைப்பற்றி படிக்கையில் பிரமிப்பும் நன்மதிப்பும் ஏற்படுகின்றன்! அவருக்கு ஒரு சல்யூட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோதரியாரே திரு பலராமன் போன்றவர்கள் என்றுமே போற்றப்பட வேண்டியவர்கள்
   மிக்க நன்றி சகோதரியாரே

   நீக்கு
 29. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே இனிமையான நிறைந்த பகிர்வுகள்..

  தங்கள் திருமணமும் பள்ளியில் என்னும் போது எண்ணிப்பார்க்கவே இனிமையாக இருக்கிறது.. இன்ய வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 30. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். தாங்கள் அனைவருக்கும் கிடைத்திடாத வாய்ப்புகளை பெற்று பழைய நினைவுகளை மீட்டெடுத்து உங்களை புதுப்பித்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது கண்டு எனக்கு மிகவும் நெகிழ்வாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு

 31. வணக்கம்!

  நல்லதோர் ஆட்சியை நல்குவாய் சித்திரையே
  வல்லதோர் வாழ்வை வகுத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா
   உளங்கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

   நீக்கு
 32. சகோதரர் ஆசிரியர் அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா
   உளங் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

   நீக்கு
 33. இனிக்கும் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரியாரே
   உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

   நீக்கு
 34. இனிக்கும் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!மலரும் நினைவுகள் மனதை இன்னும் மீண்டும் பள்ளி போக தூண்டுகின்றது.

  பதிலளிநீக்கு
 35. பசுமை நிறைந்த நினைவுகள் எங்களையும் பின்னோக்கி இழுத்துச் சென்றன. பகிர்வுக்கு நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 36. நான் படித்ததும் அதே திருவையாற்றில் உள்ள அரசர் தமிழ்க்கல்லூரிதான் அய்யா எனக்கும் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள்... அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே நொந்ததே நண்பரே நண்பரே நண்பரே! அதுவும் நீங்கள் நண்பர்களே நண்பர்களே என்று அருகழைத்துச் சொல்லும் சொல் ஒவ்வொன்றும் அன்பைச் சொட்ட இதயம் ஈரமாகிக் கண்வழியே படிக்க முடியாமல்...தங்கள் பேராசிரியப் பெருமகனாரை நேரில் பார்க்க ஆவல். நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெருமகிழ்வினை அளிக்கின்றன ஐயா மிக்க நன்றி

   நீக்கு
 37. மிகச் சிறந்த நினைவலைகள். சரபோஜி கல்லூரிக்கு நாங்கள் குடியிருந்த (ஓல்ட்) ஹவுசிங் யூனிட் தாண்டித்தான் செல்ல வேண்டும்! அப்போது 7ம் நம்பர் பஸ்தான் சரபோஜி கல்லூரிக்கு! சரபோஜி கல்லூரியின் 'ஜிம்' உடற்பயிற்சிகள் செய்யும் இடத்தில் பலமுறை சுற்றியிருக்கிறேன். நான் தஞ்சை தூய அந்தோணியார் பள்ளி மாணவன். சென்ற மாதம்தான் 38 வருடங்களுக்குப் பிறகு நான் தஞ்சையில் வசித்த இடங்களையும் நான் படித்த பள்ளியையும் நெகிழ்வுடன் சுற்றிப் பார்த்து வந்தேன்.

  பதிலளிநீக்கு
 38. பெயரில்லா18 ஏப்ரல், 2014

  வணக்கம்
  ஐயா.
  நினைவலைகள் நெஞ்சை அள்ளிச்சென்றது... ஒவ்வொரு படி முறையாக சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்..படிக்க படிக்கபடிக்கத்தான் சொல்லுது
  .ஐயா...வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 39. அருமையான பதிவு; எங்களின் மலரும் நினைவுகளையும் இதுபோன்று பதிவிட தூண்டும் பதிவு. வார்த்தை அலங்காரங்கள் ஏதுமில்லாத எதார்த்தமான நடை பாராட்டுக்குரியது. பதிவிட்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 40. மிக அருமையான பதிவு. நினைவுகள் எங்களையும் பின்னோக்கி இழுத்துச்செல்கின்ரன.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு