சிவகங்கைக்கு அருகில் உள்ள, அடர்ந்த
காட்டுப் பகுதியில், வேலு நாச்சியாரின் படை முகாமிட்டது.
வீரர்களே, சிவகங்கை நகரமும், திருப்பத்தூர்
கோட்டையும் மட்டுமே, நம் எதிரிகளின் வசம் உள்ளன.
சின்ன மருது தலைமையில், சேதுபதியம்பலம்,
நன்னியம்பலம், வேல் முருகு ஆகியோருடன், மூவாயிரம் படை வீரர்கள், எட்டு
பீரங்கிகளுட்ன் திருப்பத்தூர் கோட்டையைக் கைப்பற்றச் செல்லட்டும்.
பெரிய மருது தலைமையில், வேங்கை உடையத்
தேவர், சீமைச் சாமித் தேவர் ஆகியோருடன் மீதியுள்ள வீரர்கள், சிவகங்கைத் தெப்பக்
குளத்தின் தென்கரை மாளிகையில் தங்கியிருக்கும், நவாபின் படைகளை முறியடிக்கட்டும்.
நானே, உடையாள் பெண்கள் படைக்குத்
தலைமையேற்றுச் சென்று, சிவகங்கை அரண்மனையில் இருக்கும், ஆங்கிலத் தளபதி பான் ஜோரை
நேருக்கு நேர் சந்திக்கிறேன்.
வேலு நாச்சியார் உரையாற்றிக் கொண்டிருக்கும்
போதே, வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி, தலையெல்லாம் நரைத்து, நடக்கக் கூட இயலாமல்,
கைத் தடியை ஊன்றியபடி, தட்டுத் தடுமாறி, வேலு நாச்சியாரின் அருகில் வந்தார்.
வேலு
நாச்சியாரை ஒரு கிழவி நெருங்குவதைக் கண்டதும், இடையில் புகுந்த சின்ன மருது, பாட்டியே,
யார் நீ? என்றார்.
சின்ன மருதுவிற்குப் பதில் கூறாமல், வேலு
நாச்சியாரைப் பார்த்த கிழவி,
தாயே, நாளை
மறுநாள் விஜய தசமி. சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும், இராஜராஜேசுவரி கோயிலை,
அன்று ஒரு நாள் மட்டும், வணங்குவதற்காக, கோட்டையின் கதவுகளை, பெண்களுக்கு மட்டும்,
திறந்து விட இருக்கிறார்கள்.
இந்த
வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, நாமெல்லாம், ஆயுதத்தை மறைத்து எடுத்துக்
கொண்டு, கோயிலுக்குள் சென்று விட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில், ஆயுதத்தை
வெளியே எடுத்துத் தாக்குதலைத் தொடங்கிவிட வேண்டும் தாயே, வெற்றி நமதே.
கிழவியின் அருகில் வந்த வேலு நாச்சியார்,
எங்களின்
வெற்றிக்கு, மகத்தான வழியினைக் காட்டியிருக்கும், தாங்கள் யார் என்பதை, நான் அறிந்து
கொள்ளலாமா?
கிழவி மெதுவாக, தன் வெளுத்தத் தலை முடியை
நீக்கினார். உள்ளே கரிய முடி எட்டிப் பார்த்தது. ஒப்பனைகளை ஒவ்வொன்றாக நீக்க,
கிழவி குமரியானாள்.
கண்ணெதிரிலே நின்றவர் குயிலி.
குயிலி என்று பாசத்தோடு அழைத்த, வேலு நாச்சியார்,
குயிலியை கட்டிப் பிடித்து உச்சி முகர்ந்தார்.
---
விஜயதசமி அன்று. சிவகங்கை அரண்மனையின் முன்
வாயில் திறக்கப் பட்டது.
இராஜராஜேசுரி அம்மனைத்
தரிசிக்கப் பெண்கள் கூட்டம் அலைமோதியது. அரண்மனையில் எங்கு பார்த்தாலும் ஆடல்,
பாடல்.
பெண்களோடு பெண்களாக, உடையாள் பெண்கள்
படையினரும் உள்ளே நுழைந்தனர். கூட்டத்தோடு கூட்டமாக, மாறு வேடத்தில், வேலு
நாச்சியார். சிறிது இடைவெளி விட்டு, குயிலி.
ஆண்கள் பலரும், தங்கள் மீசைகளை, மழித்து
எறிந்து விட்டு, பெண் வேடமிட்டு உள்ளே நுழைந்தனர்.
இராஜராஜேசுவரி அம்மன் ஆலயம் |
தாயே, தாயே என்று பெண்கள் இறைவியை
நோக்கிக் குரல் கொடுத்து வணங்கினர்.
வேலு நாச்சியாரின் அருகில் வந்தார் குயிலி,
திருப்பத்தூர்
கோட்டையை, சின்ன மருது படையும், உம்தத் உம்ரா படையை பெரிய மருதுவும் முறியடித்து
விட்டதாக செய்தி வந்துள்ளது தாயே.
வேலு நாச்சியார் ஒரு கணம் கண்மூடி,
இராஜராஜேசுவரி அம்மனை வணங்கினார். அடுத்த நொடி, மறைத்து வைத்திருந்த வாளை, வெளியே
உருவி எடுத்து, தலைக்கு மேல் உயர்த்தினார்.
கோயில் மணி ஓசையினையும் மீறி, வீரர்களின்,
வீர முழக்கம், எட்டுத் திசைகளிலும் பரவியது.
உடையாள் படை வெறியோடு எதிரிகளோடு மோதியது.
எதிர்பார்க்காத திடீர் தாக்குதலால், எதிரிப் படைகள் ஓலமிட்டு ஓடத் தொடங்கின.
காளையார் கோயிலில் தொடங்கிய போரை,
இராஜராஜேசுவரி அம்மன் ஆலயத்தில் முடித்து விட வேண்டும் என்ற முனைப்போடு, வேலு
நாச்சியார், இரண்டு கரங்களிலும் வாட்களை ஏந்தி, எதிர்பட்டவர்களின் தலைகளை எல்லாம்,
தரையில் உருண்டோட விட்டார்.
வீரர்களே,
ஆயுதக் கிடங்கில் இருக்கும் ஆயுதங்களை, வெடி மருந்துகளை எடுத்துத் தாக்குங்கள் எனக் கட்டளையிட்டான்.
பான் ஜோரின் உத்தரவு, குயிலியின்
செவிகளிலும் விழுந்தது. நாமோ வாளும், ஈட்டியும் ஏந்திப் போராடிக்
கொண்டிருக்கிறோம். வெடி குண்டுகள் நம் மீது வீசப் பட்டால், பெரும் பாதிப்பல்லவா
ஏற்படும், ஏதாகினும் செய்தே தீர வேண்டும். வெள்ளையரை விரட்டியே ஆக வேண்டும், வேலு
நாச்சியாருக்கு, வெற்றியைத் தந்தே ஆக வேண்டும், என்ன செய்வது என்று, ஒரு கணம்
யோசித்தார்.
ஒரே ஒரு கணம்தான். குயிலியின் மனதில் ஓர் எண்ணம், மின்னலாய்
பளிச்சிட்டது. ஆம், இதுதான் சரியான வழி.
வாளை தூக்கி எறிந்த குயிலி, வேகமாய்
கோயிலுக்குள் ஓடினார். கோயிலின் மடப் பள்ளியில், இறைவியின், நெய்வேத்தியத்திற்காக,
குடம் குடமாக வைக்கப் பட்டிருந்த, நெய்யினை எடுத்துத் தன் உடல் முழுவதும்
நனைத்தார். நெய்யிலேயே குளித்தார்.
கோயிலின் சுவற்றில் சொருகப் பட்டிருந்த,
தீபந்தம் ஒன்றினைக் கையில் எடுத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கை நோக்கி ஓடினார்.
வீரத்தாய் வேலு
நாச்சியார் வாழ்க
வீரத்தாய் வேலு
நாச்சியார் வாழ்
வீரத்தாய் வேலு
நாச்சியார் வாழ்க
வீரத்தாய் வேலு
நாச்சியார் வாழ்க
அடுத்த நொடி,
சிவகங்கைச் சீமையே கிடுகிடுக்கத் தொடங்கியது. வானத்தில் இருந்து இறங்கும் பெரு
இடியென, குண்டுகள், குவியல் குவியலாய் வெடித்துச் சிதறத் தொடங்கின.
குயிலி நார் நாராகப் பிய்த்து எறியப்
பட்டார்
தொடரும்