13 மார்ச் 2015

சுவடிகளைத் தேடி

   

 தமிழ் நாடெங்கும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார், பாதம் தேயத் தேய, நடையாய் நடந்து கொண்டிருக்கிறார். சுவடிகளைத் தேடித்தான் இந்த அலைச்சலும், நடையும்.

      அன்னைத் தமிழைக் காக்க வேண்டும், ஓலைச் சுவடிகளில் பொதிந்துள்ள, அருந்தமிழை அச்சேற்றி, நூலாக்கி, இறந்துபடாமல் காக்க வேண்டுமே என்ற கவலை.

     திருநெல்வேலியில், வக்கீல் சுப்பையா பிள்ளை என்பாரிடம், ஏடுகள் பல இருப்பதாக அறிந்த நாளில் இருந்தே, இருப்பு கொள்ளவில்லை. திருநெல்வேலிக்குச் சென்றாக வேண்டுமே என்ற எண்ணம், இடைவிடாமல், மனதை வற்புறுத்திக் கொண்டே இருந்தது.

     இதோ, பெரியவர் கிளம்பி விட்டார்.


     திருநெல்வேலி சென்ற அப்பெரியவர், முதலில், குற்றாலக் குறவஞ்சி என்னும் கவின்மிகு கவிதை நூலை இயற்றித் தமிழன்னைக்கு அமுது படைத்த, திரிகூட ராசப்பக் காவிராயரைச் சந்தித்தார்.

    இருவரும் சேர்ந்து சென்று, வக்கீல் சுப்பையா பிள்ளையைச் சந்தித்தனர்.

     எங்கள் வீட்டில் ஊர்க் காட்டு வாத்தியார் ஓலைச்சுவடிகள் வண்டிக் கணக்காக இருந்தன. எல்லாம் பழுது பட்டு, ஒடிந்து உபயோகமில்லாமல் போய்விட்டன. இடத்தை அடைத்துக் கொண்டு யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் இருந்த அவற்றை என்ன செய்வது என்று யோசித்தேன்.
       அவற்றில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கோ எனக்குத் திறமை இல்லை. அழகாக அச்சுப் புத்தகங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில், இந்தக் குப்பையைச் சுமந்து கொண்டிருப்பதில் என்ன பயனென்று எண்ணினேன்.
        ஆற்றிலே போட்டுவிடலாமென்றும், ஆடிப் பதினெட்டில் சுவடிகளைத் தேர் போல் கட்டி விடுவது சம்பிரதாயமென்றும் சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அப்படியே எல்லா ஏடுகளையும், ஓர் ஆடி மாதம் பதினெட்டாம் தேதி வாய்க்காலில் விட்டு விட்டேன் என்றார் சுப்பையா பிள்ளை.

     தண்ணீரில் விட்டுவிட்டார்கள் என்பதை அறிந்ததும், பெரியவருக்கு மூச்சுத் திணறத் தொடங்கியது. தானே தண்ணீரில் வீழ்ந்து மூழ்கிவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு.
     அடே பாவிகளா என்று மனதிற்குள் புலம்பியவாரே, தள்ளாடித் தள்ளாடி அங்கிருந்து புறப்பட்டார்.

      தாயே, தமிழே, என் செய்வேன், உனக்கா இந்நிலை.

      சில மாதங்கள் கடந்த நிலையில், கரிவலம் வந்த நல்லூரில், சில சிலப்பதிகாரச் சுவடிகள் இருப்பதாக ஓர் செய்தி, அப்பெரியவரை நாடி வந்தது. உடனே புறப்பட்டார்.

     கரிவலம் வந்த நல்லூர்.

     அவ்வூரில் உள்ள, ஓர் ஆலயத்தில், வரகுண பாண்டியனுடைய ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப் பட்டு வருவதாக அறிந்து, பால் வண்ண நாதர் கோயிலுக்குச் சென்றார். கோயிலின் தருமகர்த்தா அலுவலகத்தில் இருந்த, அலுவலர் ஒருவரைச் சந்தித்தார்.

வரகுண பாண்டியர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகள் எல்லாம்                 ஆலயத்தில் இருக்கின்றனவாமே? அதை நான் பார்க்கலாமா?

அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னவோ வைக்கோற் கூளம் மாதிரி, கணக்குச் சுருணையோடு எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன.

அப்படியா? அவை எங்கே இருக்கின்றன. தயை செய்து அந்த இடத்திற்கு அழைத்துப் போவீர்களா?

அதற்குள் அவசரப் படுகிறீர்களே. வரகுண பாண்டியர் இறந்த பிறகு, அவர் சொத்தெல்லாம் கோயிலைச் சேர்ந்து விட்டதால், அவர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம் அப்போதுதான் கோயிலுக்கு வந்தனவாம்.

அதுதான் தெரியுமே. இப்போது அவை எங்கே இருக்கின்றன? அவ்விடத்திற்கு என்னை அழைத்தச் செல்லுங்களேன்

ரொம்பத்தான் அவசரப் படுகிறீர்கள் பெரியவரே. குப்பைக் கூளமாக கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கின்றேன். எந்தக் காலத்து கணக்குச் சுருணைகளோ

அப்படியா, வேறே ஏடுகள் அதில் இல்லையா?

எல்லாம் கலந்துதான் கிடந்தன

அலுவலரின் அலட்சியப் பேச்சினைக் கேட்கக் கேட்க, பெரியவருக்குக் கோபம் தலைக்கு ஏறியது

வாருங்கள் போகலாம்

என்னை ஏன் கூப்பிடுகிறீர்கள்? அந்தக் கூளங்களை எல்லாம் என்ன செய்வது என்று யோசித்தார்கள். ஆகம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி செய்து விட்டார்கள்.

பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு வித பதற்றம் அவரைத் தொற்றிக் கொள்கிறது

ஆகமங்களில் சொல்லிய படியா? அப்படி என்ன செய்தார்கள்?

பழைய ஏடுகளை கண்ட கண்ட இடத்தில் போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்து விட வேண்டுமாம். இங்கே அப்படித்தான் செய்தார்கள்.

ஹா

பெரியவர், தன்னையும் மறந்து வேதனையில் ஓலக் குரல் எழுப்பினார்

குழி வெட்டி, அக்கினி வளர்த்து, நெய்யில் தோய்த்து, பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்துவிட்டார்கள்.

அடுத்த நொடி, அப்பெரியவர் பொங்கி எழுந்தார்.

இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா?  அப்படிச் சொல்லியிருந்தால், அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்

அப்பெரியவரின் கோபம் குறையவில்லை

தமிழின் பெருமையைச் சொல்லிய பெரியோர் பலர்,

நீரிலே ஆழாமல் மிதந்ததென்றும்
நெருப்பிலே எரியாமல் நின்றதென்றும்
பாராட்டியிருக்கிறார்களே.

ஆனால் இன்று அதே தமிழ், நீரில் மூழ்கியும், நெருப்பில் எரிந்தும், அழிவதைக் காணாமல் போய்விட்டார்களே. இன்று நான் அல்லவா, இக் கொடுமையான காட்சிகளைக் கண்டு கொண்டிருக்கிறேன்.
என் உயிரனைத் தமிழே, உனக்கா இந்நிலை
எனக் கதறினார்.

நண்பர்களே இவர்தான்,

ஆழிப் பேரலைகள் அடுக்கடுக்காய் எழுந்து, கடல் கோளாய் விசுவரூபமெடுத்து, ஒரு முறை அல்ல இரு முறை, தமிழர்தம் இலக்கியங்களை, அகண்ட தன் வாய் கொண்டு விழுங்கிய போதும்,

இன்று நம்மிடையே உலாவுகின்ற, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, புறநானூறு உள்ளிட்ட ஒப்புயர்வற்ற இலக்கியங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து, அச்சேற்றி, நூல்களாய் பதிப்பித்து அழிந்து படாமல் காத்த பெருந்தகையாளர்,

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்கு வாயே

என பாரதியால் போற்றப்பெற்ற

தமிழ்த் தாத்தா
உ.வே. சாமிநாத ஐயர்