19 மார்ச் 2015

எழுத்துக்களைப் பொதுவில் வைப்போம்


நண்பர்களே, நலம்தானே.

யாதும் ஊரே, யாவரும் கேளீர்

என்றார் கனியன் பூங்குன்றனார். இப்பெருமகனாரின் வாக்கு, இணையத்தால், வலைப் பூவால் இன்று உண்மையாகி இருக்கிறது.

     வலைப் பூ நமக்கு, உலகெங்கினும் உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. முகமறியா நம் நட்பு, எல்லைகளற்று, பரந்து பரட்ட இவ்வுலகு முழுவதும் பரவியிருக்கிறது.

     நம் அனைவரையும் இணைப்பது, நமது தொப்புள் கொடி உறவான தமிழ் அல்லவா.


     தமிழால் இணைந்த நாம், இவ்வுலகில் நாமும் வாழ்ந்தோம், என்பதற்கு அடையாளமாக, எதையாவது விட்டுச் செல்ல வேண்டாமா.

     வாழ்நாள் முழுதும் அலைந்து, அலைந்து, உழைத்து, உழைத்து சேமித்த செல்வத்தையோ அல்லது வறுமையின் பிடியில் சிக்கி உழன்று, மீள வழி தெரியாது, வாங்கி, வாங்கிச் சேர்த்த கடன் சுமையினையோ, நம் வாரிசுகளுக்கு விட்டுச் செல்லத்தான் போகிறோம்.

     ஆனால், வலையுலக உறவுகளான, சகோதர, சகோதரிகளுக்கு விட்டுச் செல்ல, நமது நினைவாய் பகிர்ந்து மகிழ, நம்மிடம் என்ன இருக்கிறது.

      நண்பர்களே, யோசித்துப் பார்த்தால், ஒன்றே ஒன்று மட்டும் மிஞ்சியிருக்கிறது. அதுதான் நமது எண்ணங்கள், நமது எழுத்துக்கள்.

       நம்முடனேயே, நமது எண்ணங்களையும், உயர் சிந்தனைகளையும், சிந்தனையின் விளைவாய் தோன்றிய எழுத்துக்களையும், குழி தோண்டிப் புதைக்கத்தான் போகிறோமா அல்லது தீ மூட்டி எரிக்கத்தான் போகிறோமா.

      நம் காலத்திற்குப் பிறகும், நமது எண்ணங்களை, நமது எழுத்துக்களை, நீரூற்றி வளர்க்க, ஓர் வழியிருக்கிறது.

      அவ்வழியினை நமக்குக் காட்ட, தயாராய் இருக்கிறார் ஒரு அற்புத மனிதர். அவருடைய பெயரே சொல்லும் அவரின் பெருமையை, அருமையை.

தகவல் உழவன்

      என்னவொரு பெயரினைத் தேர்ந்தெடுத்தருக்கிறார் பார்த்தீர்களா. இவரின் அறிமுகத்திற்கு இப்பெயர் ஒன்றே போதும். இவர் காட்டிய வழிதான்,

கிரியேட்டிவ் காமன்ஸ்
படைப்பாக்கப் பொதுமங்கள்.

     தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள், அலையாய் அலைந்து, பாதம் தேயத் தேய நடையாய் நடந்து, ஓலைச் சுவடிகளைக் கண்டு பிடித்து, அச்சிலேற்றி, நமது முன்னோரின் சீரிய சிந்தனைகளை, வாழ்வியல் நெறிகளை எல்லாம் நூலாக்கி, இறந்து படாமல் காத்தார்.

     இன்று மின்னூல் வந்துவிட்டது. இணையத்தில், தமிழ் அரியணை ஏறிவிட்டது. உலகைச் சுற்றி வலம் வரத் தொடங்கிவிட்டது.

     நண்பர்களே, நாம் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நமது எழுத்துக்கள் அத்தனையும், நூல் வடிவம் பெறுகின்றனவா?

     நூல் வடிவம் பெறும் எழுத்துக்கள் கூட, எத்தனைப் பேரைச் சென்றடைகின்றன. சில நூறு பேர்களைச் சென்றடையலாம்.

      சில நூறு பேர்கள் மட்டும் நமக்குப் போதுமா?

      நமது எழுத்துக்கள் நூல் வடிவம் பெறும் பொழுது, பதிப்புரிமை நம் வசமாகிறது என்பதும் உண்மைதான்.

       பதிப்புரிமையால் நமக்குக் கிடைப்பது என்ன? பொருளாதார ரீதியிலான பயன் மட்டுமே.

     பதிப்புரிமையின் காரணமாக, இலாபம் கிடைத்தாலும், அறிவு விருத்தியும், அறிவு பரவலும் பெருமளவில் தடைபடுகின்றன என்பதே உண்மை.

    சமூக நலம் கருதிய படைப்புகள் கூட, அவை சென்றடைய வேண்டிய மக்களைச் சென்றடையாமல் பாதி வழியிலேயே, திசை மாறிச் சென்று விடுகின்றன.

     நமது எழுத்துக்களும், நமது சிந்தனைகளும், பெருவாரியான மக்களைச் சென்றடைய ஒரே வழி,

கிரியேட்டிவ் காமன்ஸ்
படைப்பாக்கப் பொதுமங்கள்.

     இது படைப்பாளர்களுக்கும், பயனாளர்களுக்கும் இடையேயான, ஒரு பாலமாகச் செயல்பட்டு வருகின்றது.

     நமது எழுத்துக்களைச் சட்டப்படி, மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதையும், ஊக்குவிப்பதையும், விரிவு படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 2001 ஆம் ஆண்டில் லோறன்ஸ் லெசிக் என்பவரால் தொடங்கப் பெற்ற அமைப்பு இது.

     இந்நிறுவனமானது, இதற்காக ஆறு வகையான காப்புரிமை உரிம ஒப்பந்தங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

      இந்த ஒப்பந்தத்தின் மூலம், படைப்பாளனின் படைப்பை, வாசகர் அனைவருக்கும் பகிரும் உரிமை உள்ளதால், உலகெங்கும் உள்ள வாசகர்களை, நம் எழுத்துக்கள் சென்றடையும்.

     ஒவ்வொரு முறை பகிரப்படும் பொழுதும், நமது பெயரும் சேர்ந்தே உச்சரிக்கப்படும். இது நம்முடைய எழுத்து, நம்முடைய எண்ணம் என்பதையும் உலகு அறியும்.

     வாசகர்கள் தாம் படிக்கும் நூல்களை, தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், தங்களது வலைப் பூவிலும் வெளியிடலாம். ஆனாலும் நமது பெயரினைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

     பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பர் நம் முன்னோர்.

     பகிர்தல் என்பது மனித குலத்தின் அடிப்படைப் பண்புகளுள் ஒன்றல்லவா. நாம் விரும்பும் எதையும், எவர் எழுத்தையும், இதன் மூலம் பகிரலாமே.

     உங்களுக்கு ஒரு படம் தேவையா, கூகுள் தேடுபொறியில் தேடி, உங்களுக்கு உரிமை இல்லாத படத்தினைப் பயன்படுத்துவதைவிட,
என்னும் வலையில் தேடிப் பகிரலாம். இங்குள்ளவை அனைத்தும், அனைவருக்கும் சொந்தம். நமது சொத்தல்லவா.

     நண்பர்களே, இதற்காக நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

என்னும் வலையில் நுழையுங்கள்

01.   Creative Commons Attribution By ( CC – BY)
02.   Creative Commons Attribution – Share Alike ( CC – BY – SA )
03.   Creative Commons Attribution – No Derivs ( CC – BY – ND )
04.   Creative Commons Attribution- Non Commercial ( CC – BY – NC )
05.   Creative Commons Attribution – Non Commercial – Share Alike ( CC – BY – NC – SA )
06.   Creative Commons Attribution – Non Commercial – No Derivs ( CC – BY – NC – ND )

 என ஆறு உயரிய ஒப்பந்தங்களைக் காணலாம். நீங்கள் விரும்பும் ஒப்பந்தத்திற்கு எதிரே, ஒரு நிரலி இருக்கும்.

<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/4.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="https://i.creativecommons.org/l/by/4.0/88x31.png" /></a><br />This work is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/4.0/">Creative Commons Attribution 4.0 International License</a>

     இந்நிரலியை copy  செய்து கொள்ளுங்கள்.
     

தங்களது வலைப் பூவிற்குச் செல்லுங்கள். Sign in செய்து, Dash Boardன் வழியாக, Lay Out ற்குச் செல்லுங்கள்.
    

  Lay Out ல் Add a Gadget ஐக் கிளிக்குங்கள். ஒரு ஜன்னல் திறக்கும்.
             

இந்த ஜன்னலில், Basic Gadget  ஐ கிளிக்குங்கள். வரிசையாய், ஒன்றின் கீழ் ஒன்றாக Gadget விரிவடையும்.
     

அவ்வரிசையில்,  HTML / Java Script என்று ஒரு Gadget இருக்கும். நமக்குத் தேவையானது இதுதான்.

      HTML / Java Script என்பதற்குப் பக்கத்தில், வலது புறமாக இருக்கும் + குறியை கிளிக்குங்கள்.

      மீண்டும் ஒரு ஜன்னல் திறக்கும்.
     

இந்த ஜன்னலில் Title மற்றும் Content என இரு கட்டங்கள் இருக்கும். தலைப்பிற்கு ஒரு பெயர் கொடுங்கள்.

      Content   பெட்டியில், தாங்கள் ஏற்கனவே Copy  செய்து வைத்திருக்கும் நிரலியை Paste செய்யுங்கள். பின் Save பட்டனை அழுத்துங்கள்

         அவ்வளவுதான். லே அவுட்டில் இருந்து வெளியேறி, உங்களின் வலைப் பூவைப் பாருங்கள்.
   

தமிழ் மணம் வாக்குப் பட்டையைப் போலவே, கிரியேட்டிவ் காமன்ஸ்க்கும் ஒரு பட்டை, வலைப் பூவில், மகிழ்வுடன் கண் சிமிட்டும் காட்சியைக் காணலம்.

     நண்பர்களே, கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், உங்கள் படைப்புகளை வெளியிட்டு, உங்கள் வாசகர்களுக்கும் பகிரும் உரிமையைக் கொடுத்துத்தான் பாருங்களேன்.

     வாசகர்கள் உங்களை வாழ்த்திக் கொண்டே படிப்பார்கள். பகிர்வார்கள். உங்கள் படைப்புகள் சாகா வரம் பெறும்.

எதைக் கொண்டு வந்தோம்
அதைக் கொண்டு செல்ல.

தொடர்படைய இணைய தளங்கள்


மெலும் விவரம் அறிய
திருமிகு தகவலுழவன்
90 95 34 33 42
மின்னஞ்சல்
tha.uzhavan@gmail.com