06 மார்ச் 2015

அறம் செய்

    

ஆண்டு 1941. கோவை வருமான வரித்துறை அலுவலகம். அனுமந்தராவ் மிகவும் கண்டிப்பானவர். நேர்மையானவர். நன்கு படித்து, பட்டம் பெற்று, வருமான வரித்துறை அலுவலராகப் பதவியேற்று, ஆங்கிலேயர்களே, பாராட்டும் வகையில் பணியாற்றி வருபவர்.

       தனக்கு முன்னாள் உள்ள கணக்குப் பதிவேடுகளை புரட்டிப் புரட்டிப் பார்க்கிறார். பக்கத்துக்குப் பக்கம், ஒவ்வொரு நாளும், தர்மம் செய்த வகையில் செலவு 500, தர்மம் செய்த வகையில் செலவு 700 என்று, செலவுக் கணக்கு, தர்மக் கணக்காகவே நீண்டு கொண்டே செல்கிறது.


      ஒவ்வொரு நாளாக, ஒரு வருடக் கணக்கு முழுவதையும் ஆராய்ந்தார். தர்மம், தர்மம், தர்மம். மற்ற செலவினங்களைவிட தர்மச் செலவுகளே அதிகமாய் இருந்தன.

            அனுமந்தராவ் அவர்களின் மனதில் ஓர் சந்தேகம், சம்மணமிட்டு அமர்ந்தது. வரி ஏய்ப்பு செய்ய இப்படியும் ஒரு வழியைக் கண்டு பிடித்திருக்கிறார்களோ, என்று எண்ணி வருந்தி, கணக்கினைச் சமர்ப்பித்துவிட்டு, பணிவுடன் எதிரில் நிற்கும் மனிதரைப் பார்த்தார்.

உங்கள் பெயர் என்ன?

ஐயா, என் பெயர் திருவேங்கடம்

மிகவும் மெதுவாகத்தான் பதில் வந்தது.

கணக்கினைச் சமர்ப்பித்துள்ளீர்களே, இந்த நிறுவனத்தில், உங்களின் பணி என்ன?

இந்த நிறுவனத்தின் கணக்காளரே நான்தான் ஐயா

அப்படியானால் இந்தக் கணக்கினை எழுதியதே நீங்கள்தானா?

ஆம் ஐயா. இந்த நிறுவனத்தின் வரவு செலவுகளை நான்தான் கவனித்து வருகிறேன். கணக்கினை எழுதியதும் நான்தான்.

கணக்கு சரியில்லையே. ஒவ்வொரு நாளும் தர்ம்ம், தர்ம்ம் என்று எழுதி, வரி ஏய்ப்பு செய்வதாக அல்லவா தெரிகிறது.

கணக்காளர் பதறித்தான் போனார்.

ஐயா, என் முதலாளி சொல்லச் சொல்ல, ஒவ்வொரு நாளும், பணத்தினை எண்ணி எண்ணிக் கொடுப்பவனே நான் தான் ஐயா. என் முதலாளிக்கு நேற்று எவ்வளவு கொடுத்தோம், இன்று எவ்வளவு கொடுத்திருக்கிறோம் என்பது கூடத் தெரியாது. நான்தான் ஒவ்வொரு முறையும், தவறாமல் குறித்து வைத்துக் கொண்டு, கணக்கில் சேர்த்துள்ளேன் ஐயா.

நம்ப முடியவில்லையே. நீங்கள் சொல்வது உண்மையானால், உங்கள் முதலாளி சம்பாதிப்பதே, தர்மம் செய்வதற்காகத்தானா?

ஆம் ஐயா. தாங்கள் சொல்வதுதான் உண்மை.

     அனுமந்த ராவ் திருவேங்கடத்தின் முகத்தினையே உற்று நோக்குகிறார். திருவேங்கடத்தின் கண்களில் எதையோ தேடுகிறார்.

ஐயா, நான் சொல்வதும், கணக்கில் எழுதியிருப்பதும் உண்மை. தாங்கள் இக் கணக்கினை நம்பாவிட்டால், ஒரு சாதாரண மனிதராக, ஏழையாக, என் முதலாளியைச் சென்று பாருங்கள். மிகவும் கஷ்டப் படுகிறேன் என்று கூறிப் பாருங்கள். பிறகு உண்மையை தாங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

     சிறிது நேரம் யோசித்த அலுவலர், ஒரு முடிவுக்கு வந்தவராக, இருக்கையில் இருந்து எழுந்தார்.

இங்கேயே காத்திருங்கள்.வருகிறேன்.

     வருமான வரித்துறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அனுமந்தராவ், ஒரு ஜட்கா வண்டியை வரவழைத்து, அதில் ஏறிப் புறப்பட்டார்.

     அசோகா பிலிம்ஸ்.

      அது ஒரு திரைத்துறை நிறுவனம். ஆட்கள் அங்கும் இங்கும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

       அனுமந்தராவ் உள்ளே நுழைந்தார்.

        உள்ளே, தனது அலுவலகத்தில், தனது இருக்கையில் அமர்ந்து, மேசையில் இருந்த வெற்றிலைப் பெட்டியில் இருந்து, வெற்றிலைகள் இரண்டினை எடுத்து, அதில் சுண்ணாம்பினைத் தடவிக் கொண்டிருந்த, முதலாளி, அனுமந்தராவைப் பார்த்தார்.

வாருங்கள், இதோ இந்த இருக்கையில் அமருங்கள்.

     இருக்கையில் அமர்ந்த அனுமந்தராவ், அந்த முதலாளியை உற்றுப் பார்த்தார். சிரித்த முகம். கருணை பொங்கும் கண்கள். மெதுவாகத் தயங்கித் தயங்கிப் பேசினார்.

எனது ஒரே மகளுக்கு திருமணம் செய்வதற்காக, எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். தங்கமான பையன். ஆனால் திருமணச் செலவினங்களுக்காக, உதவுவதான வாக்களித்தவர்கள், கடைசி நேரத்தில், கை விரித்து விட்டார்கள். பணப் பற்றாக்குறையால், எனது மகளின் திருமணமே நின்று விடும் போலிருக்கிறது. அதனால்தான் தங்களைப் பார்க்கலாமென்று .... ......

அடப் பாவமே. பணம் இல்லாததால் திருமணம் தடைபடுவதா, கூடாது ஐயா கூடாது. தங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப் படுகிறது

ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தால், திருமணத்தை நடத்தி விடுவேன் ஐயா

சற்று நேரம் கூட யோசிக்க வில்லை, அம் முதலாளி

ஒரு நல்ல காரியத்தை, சுப காரியத்தை, பணம் இல்லாத காரணத்தால் நிறுத்தி விடாதீர்கள். சற்று நேரம் காத்திருங்கள். என்னோட ஆளு, வரி கட்ட, இன்கம் டாக்ஸ் ஆபிஸ் வரைக்கும் போயிருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். வந்த்தும் பணம் தரச் சொல்லுகிறேன்.

     அனுமந்தராவ் தன்னையும் அறியாமல் இருக்கையில் இருந்து எழுகிறார். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா? உண்மையிலேயே அனுமந்தராவின் கண்கள் கலங்கத் தொடங்க்கின்றன. இரு கரங்களையும் குவித்து வணங்குகிறார்.

       ஐயா, உங்களுக்கு, உங்களுடைய பெற்றோர் கர்ணன் என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். தவறுதலாக கிருஷ்ணன் என்று வைத்துவிட்டார்கள்.


நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
கொடுத்துக் கொடுத்துக்
கரம் சிவந்தவர்
கலைவாணர்
என்.எஸ். கிருஷ்ணன்