நண்பர்களே, கடந்த 18.2.2015 புதன் கிழமையன்று, பள்ளியில், சக ஆசிரிய
நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது, பேச்சு சுற்றுலா பற்றி திரும்பியது.
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்
எந்நேரமும் படிப்பு, படிப்பு, தேர்வு, தேர்வு என படிப்பதும், சிறு, குறு தேர்வுகளை
எழுதுவதிலுமே, காலத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் நேரமிது.
கனவில் கூட, புத்தகங்களும்,
தேர்வு அறைகளும் தோன்றும், மன அழுத்தம் மிகுந்த காலம் இது.
அதனால், ஒரே ஒரு நாளேனும்,
புத்தக நினைவின்றி, ஆடிப் பாடி மகிழ வைத்து, ஓர் புத்துணர்ச்சியை, புது வலிமையை,
புத்தம்புது எழுச்சியை வழங்கினால் என்ன, என்று தோன்றியது.
மாணவர்களுக்கு மட்டுமல்ல,
ஆசிரியர்களாகிய எங்களுக்கும், ஓர் மாற்றம் தேவைப் பட்டது. காலை 8.00 மணிமுதல் மாலை
6.00 மணிவரை, பள்ளி, பள்ளி, சிறு சிறு தேர்வு நடத்துதல், திருத்துதல் என, ஒவ்வொரு
நாளும், பத்து மணிநேரம், குடும்பம் என்று ஒன்று இருப்பதே மறந்து, பள்ளியே எங்கள்
வாழ்விடமாகவும் மாறித்தான் போய்விட்டது.
உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின்
உதவித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு அ.சதாசிவம், உடற் கல்வி ஆசிரியர்
நண்பர் திரு துரை.நடராசன், ஓவிய ஆசிரியர் நண்பர் திரு எஸ்.கோவிந்தராசன்,
நெசவு ஆசிரியர் நண்பர் திரு டி.கோபால் ஆகியோரும், நானும் இணைந்து, கலந்து
பேசினோம்.
நண்பரும், பள்ளித் தலைமையாசிரியருமான
திரு வெ.சரவணன் அவர்களை அணுகினோம். ஒரு நிமிடம் கூடத் தயங்காது, மகிழ்வுடன்
போய் வாருங்கள் என்றார்.
இரண்டே நாள், கால
அவகாசத்தில், ஏற்பாடுகளைச் செய்து, விடுமுறை நாளான 21.2.2015 சனிக்கிழமையன்று,
காலை புறப்பட்டோம்.
22 மாணவர்கள், 49 மாணவிகள்.
காலை 8.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டோம். சுற்றுலா பேருந்தானது,
கும்பகோணம், திருநாகேசுவரம் வழியாக பேரளத்தை அடைந்தபோது 10.00 மணி.
கூத்தனூர் சரசுவதி
கோயில்
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்
தேர்வில், நல்ல மதிப்பெண்களைப் பெற, எங்களால் ஆன முயற்சிகளை மேற் கொண்டு
வருகிறோம், இறைவியே, கல்விக் கடவுளே, அருள் புரிவாயாக என்ற வேண்டுதலோடு,
மாணவ, மாணவியர், தாங்கள் கொண்டு வந்திருந்த, தங்களின் எழுது பொருட்களை, கல்விக்
கடவுளின், திருவடிகளில் சமர்ப்பித்து வணங்கினர்.
எனது வகுப்பு மாணவியர், தினமும்,
வகுப்பறையில் நடைபெறும், காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது, சரசுவதி சுலோகம்
ஒன்றினைப் பாடுவது வழக்கம்.
கல்விக் கடவுளின் முன், கண் மூடி, கரம் குவித்து
நின்ற, என் மாணவிகளை நோக்கி, தினமும் பாடுவீர்களே, சரசுவதி சுலோகம், அதை இன்று,
சரசுவதி தேவியின் முன் பாடலாமே என்றேன்.
அடுத்த நொடி, மாணவிகளின் குரல், கடவுளின்
கருவறைச் சுவர்களில் மோதி, ஆலயம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது.
சரசுவதி நமஸ்துப்பியம் வரதே
காமரூபினி
வித்தியாரம்பம் கரிஷாமி
ஸித்திர் பவதுர் மேசுதா
கல்விக் கடவுளின்
திருக்கோயிலில் இருந்து, வெளியில் வந்தபோது, காலை மணி 11.00.
காலை உணவினை அதுவரை, யாருமே
உண்ணவில்லை. பசி வயிற்றில், தாளம் போடத் தொடங்கியது.
பேரளம் தொடர் வண்டி நிலையத்திற்கு
எதிரில், பேருந்தை நிறுத்தி இறங்கினோம். வளர்ந்து படர்ந்து, பரவி நிற்கும் மரங்கள்
நிறைந்த வயல் வெளி.
மரங்களின் நிழலில், வயல்
வெளியில் அமர்ந்து, கொண்டு வந்திருந்த, காலை உணவினை உண்டோம்.
ட்ரான்கியூபார்
ட்ரான்கியூபார்
நண்பர்களே, புரியவில்லையா. 1620
முதல் 1845 வரை, இப்பகுதியை ஆண்ட, டேனிஸ்காரர்கள், இவ்வூரினை, இப்படித்தான்
அழைத்தார்கள், ஆவணங்களிலும் இப்படித்தான் பதிவு செய்தும் வைத்தார்கள்.அவ்வூரின்
இன்றைய பெயர் என்ன தெரியுமா?
தரங்கம்பாடி
தரங்கம்பாடி என்றால்,
இசைபாடும் அலைகளின் நகரம்
என்று பொருள்.
இந்தியாவில்
முதன் முதலில்
அச்சு இயந்திரம் நிறுவப் பெற்ற இடம்
தரங்கம்பாடி
இங்கு, இந்தியாவிலேயே, முதன் முதலாக
அச்சிடப் பெற்ற நூலின் மொழி என்ன தெரியுமா?
தமிழ்.
கடற்கரையில் கோட்டையினைக் கண்டதும், மாணவ,
மாணவியரிடம் ஓர் புது உற்சாகம் பிறந்தது.
தரங்கம்பாடி கோட்டையின்
கட்டுமானப் பணிகள் தொடங்கப் பெற்ற ஆண்டு 1620. இராணுவத்தினர் தங்கும் இடம்,
கிடங்கு, சமையலறை, சிறைச்சாலை, என அனைத்து வசதிகளையும் கொண்ட கோட்டை, தரங்கம்பாடி
கோட்டை.
இசைபாடும் அலைகள் அல்லவா.
அப்பொழுது, ஒரு மாணவி, என்னிடம்
வந்து, கடற்கரையில் நிற்கும் சிலரைச் சுட்டிக் காட்டி,
சார், அங்கிருந்து ஒருவன், என்னைப் பார்த்து, கையை காட்டுகிறான் சார். நான்
செருப்பைத் தூக்கிக் காட்டிய பிறகும்,
மீண்டும், மீண்டும் கை காட்டுகிறான் என்றார்.
கடற்கரையில், அம்மாணவி
காட்டிய திசையில், நான்கு பேர் நின்றிருந்தனர்.
கோட்டையின் மேலிருந்து
அவர்களைக் கவனிப்பதை உணர்ந்ததும், அவர்கள், கடலின் பக்கம் திரும்பி நின்று
கொண்டனர்.
சிறிது நேரத்தில், மாணவ,
மாணவியருடன், கோட்டையில் இருந்து கீழே இறங்கி, கடற்கரையை நோக்கி நடக்கத்
தொடங்கினோம்.
அப்பொழுதுதான், அந்த
நால்வரையும் அருகில் பார்த்தேன். நால்வருக்கும் வயது இருபது அல்லது இருபத்தி
ஒன்றுதான் இருக்கும். கல்லூரி மாணவர்களைப் போல் தெரிந்தார்கள். அவர்களில் இருவர்,
கடல் அலைகளில் நின்று கொண்டும், மற்ற இருவர் கரையில் நின்று கொண்டும், மணலினை வாரி
எடுத்து, ஒருவர் மற்றவர் மேல், வீசி விளையாடுவது போல், மாணவியரின் திசையில், வீச
கையை ஓங்கினர்.
தம்பி, கொஞ்சம், மணலை வீசாமல் நிறுத்துகிறாயா என்றேன்.
கையில் இருந்த மணலை, உதறிக் கொண்டே, ஒருவன் என்
அருகினில் வந்தான். அவனுக்கு முன்னதாக டாஸ்டாக் வாடை வந்தது.
தம்பி, நீ மகிழ்ச்சியாக விளையாடு, ஆனால் உன் விளையாட்டு, எங்கள் மாணவிகளுக்கு,
இடைஞ்சலாய் இருக்கக் கூடாது, புரிந்ததா.
சார், அந்தப் பொண்ணு என்னைப் பார்த்து செருப்பைத் தூக்கிக் காட்டினார்
தம்பி, உன்னைப் பார்த்தால், கல்லூரியில் படிக்கும் பையன் மாதிரி தெரிகிறது. நீ
ஒரு மாணவியைப் பார்த்துக் கை காட்டலாமா? தவறல்லவா? வெளியூரில் இருந்து,
மகிழ்ச்சியாக இருப்பதற்காக, தரம்கம்பாடிக்கு வந்து, தேவையில்லாமல், பிரச்சினை
செய்யக் கூடாது. நகரு இங்கிருந்து என்றேன்.
அம் மாணவனுக்குள் இருந்த, டாஸ்மாக் வேலை செய்ய,
சார், அந்தப் பொண்ணுதான் என மீண்டும் ஆரம்பித்தான்.
தம்பி, நீ எந்த ஊரு என்றேன்.
ஆடுதுறை என்றான்.
அப்பொழுது, ஆசிரியர் திரு
கோபால் அருகில் வந்தார். இவரும் ஆடுதுறையைச் சார்ந்தவர்தான்.
ஆடுதுறையில் எந்தத் தெரு? என அவர் விசாரனையைத் துவக்கினார்.
உடற்கல்வி ஆசிரியர் திரு நடராசன்
அவர்களும், வந்துவிடவே, மேலும் மேலும் பேசுவதற்கு வழியின்றி, நால்வரும்,
அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
மாணவர்கள் சிறிது நேரம் கழித்தே வந்து
சேர்ந்தனர்.
மாணவ, மாணவியர் அனைவரும், கடல் நீரில் இறங்கி, அலைகளின் தாலாட்டினை அனுபவித்து மகிழ்ந்தனர்.
சுமார் ஒரு மணிநேரம் கழித்து,
கடற்கரையில் இருந்து, புறப்படத் தயாராகும்போது, அந்நால்வரும் மீண்டும் வந்தனர்.
அந்தப் பொண்ணு
என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தட்டுத் தடுமாறி பேச
ஆரம்பித்தான். ஒரு மணி நேர இடைவெளியில், மீண்டும் ஒரு முறை, டாஸ்மாக் மருந்தை,
உள்ளே அனுப்பியிருக்கிறான்.
உடற்கல்வி ஆசிரியர் திரு நடராசன்
அவர்கள், எச்சரிக்கும் வகையில், உரத்த குரலில் பேசவே, எம் பள்ளி மாணவர்களும்,
சண்டைக்குத் தயாராவது போல், நால்வரையும் சூழ்ந்து கொண்டனர்.
மாணவர்களை அமைதி படுத்தி, ஆளுக்கு
ஆள் சத்தம் போட்டு, அவர்களைத் துரத்த வேண்டியதாகிவிட்டது.
தரங்கம்பாடியில்
இருந்து புறப்பட்டு பூம்புகார் வந்து சேர்ந்தோம். மாலை 4.00 மணி.
மதிய உணவினை அதுவரை, யாருமே
சாப்பிடாததால், முதல் வேளையாக, சாப்பிடுவதற்காக, பூங்காவினுள் நுழைந்தோம். நான்கு
புறமும் சுற்றுச் சுவருடன் கூடிய, பரந்து விரிந்த பூங்கா.
பூங்காவின் மையத்தில் கலை
நயம் மிகுந்த, சிறு வட்ட வடிவ மண்டபம். சிறுவர் சிறுமியர் விளையாட, ஊஞ்சல்கள்,
சறுக்கு மரங்கள் என பலவித விளையாட்டுச் சாதனங்கள்.
மாணவ, மாணவியர் பல
குழுக்களாக, வட்டம் வட்டமாக, அமர்ந்து, கொண்டு வந்திருந்த, மதிய உணவினை உண்ணத்
தொடங்கினர்.
எங்கிருந்து வந்தது என்றே
தெரியவில்லை, சில ஆடுகளும், மாடுகளும், மாணவியர் கூட்டத்தில் திடீரெனப் புகுந்து,
உணவுகளைக் கைப் பற்றின.
மாணவியர் நாற்புறமும் சிதறி
ஓடினர். ஆடுகளையும், மாடுகளையும் விரட்டுவதற்குள், பல மாணவியரது, உணவு, மண்ணில்
சிதறி, யாருக்கும் பயன்படாமல் போய்விட்டது.
பூங்காவின் நாற்புறமும் சுற்றுச் சுவர்
இருந்தும், ஆடுகளை, மாடுகளை உள்ளே நுழைய விடாமல் தடுப்பார் யாருமில்லை. ஏனெனில்.
இப்பூங்காவிற்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.
இப்பூங்காவிற்கு நேர்
எதிரே. அமைந்துள்ள. பூம்புகார் கலைக் கூடத்தைக் காண, பணம் செலுத்தி, நுழைவுச்
சீட்டுப் பெற்றாக வேண்டும். நுழைவு வாயிலிலேயே, பணியாளர்கள் ஒன்றுக்கும்
மேற்பட்டோர், கண்ணும் கருத்துமாய் பணியாற்றிக கொண்டிருந்தனர்.
ஆடு, மாடுகளை விரட்டிய சிறிது
நேரத்தில், திடீரென்று ஒரே கூச்சலும் குழப்பமும், அவ்விடத்தில் மையம் கொண்டது.
மாணவியர் சிலர், பாதி
உணவில் எழுந்து, மேலும் கீழும் குதித்து, நடனமாடத் தொடங்கினர். காரணம் கம்பளிப்
பூச்சுகள்.
மரங்களில் இருந்து, கொத்து
கொத்தாக, கம்பளிப் பூச்சுகள், மாணவியர் மேல் விழத் தொடங்கின.
பல மாணவிகள் கை, கால்களை
உதறி, கம்பளிப் பூச்சுகளைத் தட்டிவிட, ஒரு மாணவி மட்டும், மயங்கித் தரையில்
சரிந்தார். அம்மாணவியின் முகம், கை கால் எல்லாம் பட்டை, பட்டையாகத் தடிக்கத்
தொடங்கியது.
அம்மாணவியைத் தூக்கினோம்.
துவண்டு விழுந்தார். பலமுறை முயற்சித்தும் பலனில்லை.
மருத்துவ மனைக்குச் சென்றாக
வேண்டும். இதோ வருகிறோம் எனக் கூறிவிட்டு, நானும், திரு கோவிந்தராசன் அவர்களும்,
திரு கோபால் அவர்களும், ஆட்டோவினைத் தேடிப் புறப்பட்டோம்.
புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான
பூம்புகாரில், ஆட்டோவோ, வாடகைக் காரோ, கண்ணில் தென்படவேயில்லை.
அரை மணி நேரத் தேடலுக்குப்
பிறகு, ஒரு வழியாய், ஒரு ஆட்டோவைக் கண்டு பிடித்தோம். மயக்கமடைந்த மாணவியை ஏற்றிக்
கொண்டு, நானும், உடற் கல்வி ஆசிரியர் திரு நடராசனும் புறப்பட்டோம்.
அப்பொழுது, அம்மாணவியை
ஆட்டோவில் ஏற்றும்போது, ஒரு ஆசிரியை, சார், இந்த மாணவி, இதய நோயால் பாதிக்கப்
பட்டவர். ஏற்கனவே ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டவர் என்றார்.
எங்களது இதயம், சிறிது நேரம்
நின்று, மீண்டும் துடிக்கத் தொடங்கியது.
இன்பச் சுற்றுலா,
துன்பத்தின் திசையினை நோக்கிப் பயணித்து விடுமோ என்ற பதட்டம், உடனே, ஓடோடி வந்து,
விடாப் பிடியாய் பிடித்துக் கொண்டது.
அரசு மருத்துவமனைக்குச்
சென்றோம். பெண் மருத்துவர். முப்பது வயதிருக்கும். ஏழ்மையான குடும்பத்தில்
பிறந்து, தனது சுய முயற்சியால், கல்வியின் மேலுள்ள பற்றுதலால், அயரா முயற்சியால்,
படித்து, மருத்துவரானவர் என்பது, அவரது தோற்றத்திலேயே தெரிந்தது.
பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.
கவலைப் படாதீர்கள் என முதலில், எங்களுக்கு ஆறுதலைக கூறி, ஊசி மூலம் மருந்தினை,
செலுத்தினார்.
மாணவியைத் தட்டிக்
கொடுத்தார். உனது உடல் சரியாகிவிட்டது. பயப்படாதே என்றார். மாணவி மெதுவாய்
கண்களைத் திறந்தார். சிறிது நேரத்தில், தானே எழுந்தும் உட்கார்ந்தார்.
எங்களுக்குப் போன உயிர், மீண்டும்
திரும்பி வந்தது.
மீண்டும் அதே
ஆட்டோவில் திரும்பினோம். வரும் வழியில் ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டேன், அரை மணி
நேரத்திற்கும் மேலாக, ஆட்டோவினைத் தேடி அலைந்திருக்கிறோம். எத்தனை ஆட்டோக்கள்
இங்கு இயங்குகின்றன என்றேன்.
ஓட்டுநர் கூறிய பதில்,
அதிர்ச்சியினைத் தந்தது.
நான் மட்டுமே இங்கு ஆட்டோ
ஓட்டுகிறேன். மற்ற ஆட்டோக்கள் எல்லாம், ஊருக்குள்தான் ஓடுகின்றன.
நம்பவே முடியவில்லை, ஆனால்
அதுதான் உண்மை.
நண்பர்களே, யாரும் ஆட்டோவினை
நம்பி, பூம்புகாருக்குப் போய்விடாதீர்கள்.
மாணவ, மாணவியர்
எங்களுக்காக, கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தார்கள். உடல் நலம் குன்றிய
மாணவி, தானாகவே ஆட்டோவில் இருந்து, இறங்குவதைக் கண்டதும், மகிழ்ந்து உற்சாகக்
குரல் எழுப்பி, அவரை வரவேற்றனர்.
பூம்புகார் கலைக்
கூடத்தினைப் பார்த்துவிட்டு, கடற்கரை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
வரிசையாகச் செல்லும்
மாணவியரைக் கண்டதும். இரண்டு மூன்று இளைஞர்கள், வேறு எங்கோ பார்த்துக் கொண்டு
நடப்பது போல், பாவனை காட்டி, இடிப்பது போல் அருகில் வந்தனர்.
தம்பிகளா, கொஞ்சம்
நகர்கிறீர்களா என்று குரலை உயர்த்திக் கூறவும், விலகிச் சென்றனர்.
பள்ளி மாணவிகளும்,
குடும்பம் குடும்பமாக, ஆண்களும் பெண்களுமாக, சுற்றுலா பயணிகள், ஆயிரக் கணக்கில்,
நாள்தோறும் வருகை தரும், தரங்கம்பாடி கடற்கரையிலும், பூம்புகார் கடற்கரையிலும்,
மருந்துக்குக் கூட, காவலர்களைக் காண இயலவில்லை.
இவ்விரண்டு கடற்கரைகளிலும்,
குறைந்தது ஒன்றிரண்டு காவலர்களையாவது, தினம் தினம் பணியில் ஈடுபடுத்தினால்,
டாஸ்மாக் வாடையோடும், வக்கிர புத்தியோடும் சுற்றித் திரியும், இளைஞர்களை கட்டுக்குள்
வைக்க இயலும். சுற்றுலா பயணிகளுக்கும் சுற்றுலாவானது, இன்ப உலாவாக, நினைக்க
நினைக்க இனிக்கும் நினைவுகளை அள்ளித் தரும் மகிழ்ச்சி உலாவாக, என்றென்றும் மனதில்
நிலைத்திருக்கும்.
மாணவர்கள் கடலில் குளித்தே ஆகவேண்டும் என, தங்களின் கட்டுக்கடங்காத ஆவலை வெளிப்படுத்தினர்.
ஆபத்தான ஆசைதான். ஆசிரியர்களாகிய
நாங்கள், கடலில் இறங்கி, வரிசையாக, தடுப்புச் சுவர் போல் நின்று கொண்டு, குளிக்க
அனுமதித்தோம்.
மாணவர்களின் மகிழ்ச்சியைப்
பார்க்க வேண்டுமே. ஒரு மணிநேரம், உருண்டு, புரண்டு, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி,
கீழே தள்ளி விளையாடி, கடல் அலைகளின் அரவணைப்பில் குளித்து மகிழ்ந்தனர்.
சூரியனானது ஓய்வெடுக்க
சிறிது, சிறிதாய் மறையவே, மாணவர்களை அழைத்துக் கொண்டு கரை ஏறினோம்.
திங்கட்கிழமையன்று, ஆசிரியர்கள்
அனைவரும் அமர்ந்து, சுற்றுலா வரவு செலவுகளைக் கணக்கிட்டபோது, செலவுகள் போல ரூ.3000
மீதமிருந்தது.
நண்பர்களே, ஓரிரு
சங்கடங்கள் ஏற்பட்ட போதிலும், இந்த ஒரு நாள் சுற்றுலாவானது, மகிழ்ச்சி நிறைந்ததாக,
மாணவர்களின் ஆடல், பாடல், கொண்டாட்டங்களோடு, இனிய சுற்றுலாவாகவே அமைந்தது.
சுற்றுலா முடிந்து, பள்ளிக்குத்
திரும்பியபோது இரவு மணி 10.00 ஆகிவிட்டது. மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் பள்ளியில்
காத்திருந்து தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
மாணவ மாணவியர் ஒவ்வொருவராக
எங்களிடம் விடைபெற்று, பெற்றோருடன் புறப்பட்டபோது, ஒரு மாணவன், தயங்கித் தயங்கி
அருகில் வந்தான், பிறகு மெதுவாக ஒரு கேள்வியைக் கேட்டான்.
சார் அடுத்த டூர் எப்போது?