22 பிப்ரவரி 2015

விளையும் பயிர்

   

 ஆண்டு 1921. பசுமலை. அந்தச் சிறுவனுக்கு வயது பதிமூன்றுதான் இருக்கும். நெற்றி முழுவதும் திருநீரு பூசியிருந்தான். புத்தகப் பையினைத் தோளில் தொங்கவிட்டபடி பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

     வழியில், ஒரு தெரு முனையில், பெருங் கூட்டம் ஒன்று கூடியிருந்தது. கூட்டத்தின் நடுவில் நின்று கொண்டு, மத போதகர் ஒருவர், உரத்த குரலில், தனது மதத்தின் பெருமைகளை முழங்கிக் கொண்டிருக்கிறார்.

     நெற்றி முழுவதும் திருநீரு அணிந்திருந்த, அச்சிறுவன், கூட்டத்தைப் பிளந்து கொண்டு, முன் வரிசைக்குச் சென்று, அம் மத போதகர் பேசுவதை, ஆர்வமுடன் கேட்கத் தொடங்குகிறான்.

எனது ஆண்டவரே உண்மையானவர். அவரே உங்களின் பாவத்தை போக்கும் வல்லமை படைத்தவர், உங்களுக்கு மோட்சத்திற்கான வழியினைக் காட்டி அருளும் அன்பு மனம் படைத்தவர்.


     அப்படியா? அம்மாணவனின் முகத்தில் வியப்பு பெருகுகிறது, கூடுதல் ஆர்வத்துடன், கூர்ந்து கவனிக்கின்றான். மத போதகர் பேசிக் கொண்டே இருக்கிறார். சிறுவன் கேட்டுக் கொண்டே நிற்கிறான்.

இதோ, இந்தக் கல்லைப் பாருங்கள். இந்தக் கல்லினைக் கடவுளாக எண்ணி வழிபடுகிறீர்களே, இது நியாயமா?

     அதுவரை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்த, அச்சிறுவனின் முகம் மெல்ல, மெல்ல சிவக்கத் தொடங்குகிறது. உள்ளத்தில் கோபம் எரிமலையாய் கொந்தளிக்கத் தொடங்குகிறது.

      ஆனாலும், அச்சிறுவனின் உதடுகளில் இருந்து, வார்த்தைகள், நிதானமாக வெளி வருகின்றன. மத போதகரை நோக்கி ஒரு கேள்வி கேட்டான்.

ஐயா, எனக்கு ஒரு சந்தேகம், கேட்கலாமா?

தாராளமாக கேள்வியைக் கேள் தம்பி. அறியாமை என்னும் இருளில் இருந்து, உன்னை மீட்கவே வந்துள்ளேன், கேள்.

ஐயா, உங்களுக்கு அம்மா இருக்கிறார்களா?

அம்மனிதருக்கு, ஒரு நிமிடம், ஒன்றும் விளங்கவில்லை. என்ன கேட்கிறான் இச்சிறுவன்.

தம்பி, என்ன கேட்டாய்?

உங்களுக்கு அம்மா இருக்கிறார்களா என்று கேட்டேன்.

எதற்காக, சிறுவன் இக் கேள்வியைக் கேட்கிறான் என்பது புரியவில்லை. இருப்பினும் அது பற்றி யோசிக்காமல், பதில் கூறுகிறார்.

இருக்கிறார்கள்.

மனைவி இருக்கிறாரா?

இருக்கிறார்.

விடவில்லை அம்மாணவன்.

சகோதரிகள் இருக்கிறார்களா?

இருக்கிறார்கள்.

மகள் இருக்கிறாரா?

சுத்தமாக அவர், குழம்பித்தான் போனார்.

ஒரு மகள் இருக்கிறார்.

ஐயா, அவர்கள் அனைவருமே பெண்கள்தானே? இவர்கள் அனைவரிடமும், நீங்கள், ஒரே மாதிரியாகத்தான் நடந்து கொள்வீர்களா?

அடுத்த நொடி, அம்மனிதர் வாயடைத்துப் போனார். ஒரு பொடியன், நம்மைப் பார்த்து என்ன கேள்வி கேட்டுவிட்டான்.

சொல்லுங்கள் ஐயா, உங்கள் தாயையும், உங்கள் மனைவியையும், உங்கள் மகளையும், ஒரே மாதிரியாகப் பாவித்து, மூவரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வீர்களா? அப்படி நடந்து கொண்டால், இவ்வுலகம் உங்களைப் பற்றி என்ன சொல்லும்?

அம்மனிதருக்குப் பேச்சே வரவில்லை. உடல் முழுவதும் வேர்க்கத் தொடங்குகிறது. என்ன செய்வது, என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்துப் போய், கல்லாய் நிற்கிறார்.

சிறுவன் தொடர்ந்து பேசுகிறான்.

ஐயா, இவர்களைப் போலத்தான் கடவுளும். நாங்கள் ஒரு கல்லை, சிலையாக, தெய்வமாகப் பார்க்கிறோம், வணங்குகிறோம். இன்னொரு கல்லை, கல்லாக மட்டுமே பார்க்கிறோம், அதனால் வீடு கட்டவும், சாலை போடவும் பயன் படுத்துகிறோம்.

நீங்கள் உங்கள் மதத்தைப் பற்றி, உயர்வாகப் பேசுங்கள், தவறில்லை. அதற்காகப் பிற மதங்களை இழிவாகப் பேசாதீர்கள், மற்ற மதத்தினரின், மனதினை, நம்பிக்கையினைப் புண்படுத்தாதீர்கள்.

நண்பர்களே, இச்சிறுவன் யார் தெரியுமா?

வாழும் போதும், அமரத்துவம் அடைந்த பிறகும்
தமிழ் நாட்டு அரசியலில்
தனக்கென்று
நிரந்தரமாகத் தனியிடம் பிடித்தவர்.

ஆளுங்கட்சி, எதிர் கட்சி, சிறிய கட்சி, பெரிய கட்சி,
மாநில கட்சி, தேசிய கட்சி
என எக்கட்சியாக இருந்தாலும்,
என்றென்றும் கருத்து மாறுபாடின்றி,
மாலை அணிவித்துப் போற்றும்
வல்லமை படைத்தவர்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் சரி,
ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பும் சரி,
இவர் போன்று,
சுத்த வீரத் தலைவர் பிறந்ததும் இல்லை,
இனி பிறக்கப் போவதும் இல்லை.

நினைக்கும்போதே, வணங்கத் தூண்டும் மாமனிதர்


பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர்.


தேவரின் நினைவினைப் போற்றுவோம்