18 ஜூன் 2015

தஞ்சைக்கு வந்த புதுக்கோட்டை


வாசிக்காத நாட்கள் எல்லாம்
சுவாசிக்காத நாட்கள்
என்பர் நம் முன்னோர். புத்தகங்களை வாசிப்பது ஒரு சுகானுபவம்தான். புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்திருப்பது கூட, மனதில் ஓர் அமைதியை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

     நெஞ்சை அள்ளும் தஞ்சைக்குப் பெருமைகள் பல இருப்பினும், புதிதாய் ஓர் சிறப்பு சேர்ந்திருக்கிறது.

புத்தகத் திருவிழா

     கடந்த ஆறு ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், பத்து நாட்களுக்கு, ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் கிங்ஸ்-ன் பெரு முயற்சியால் நடைபெறும் புத்தகத் திருவிழா, தஞ்சைக்கு ஒரு புதுப் பொலிவை வழங்கி வருகிறது.


     தஞ்சை மாவட்ட நிர்வாகமும், இவ்வாண்டு களம் இறங்கி, முதன் முதலாக, ஓர் புத்தகத் திருவிழாவினைப் பெருவிழாவாக அரங்கேற்றி இருக்கிறது.



தஞ்சை மாவட்ட ஆட்சியர்
பெருமைமிகு திரு சுப்பையன் அவர்களின்
அயரா ஆர்வமும், தளரா உழைப்பும்
புத்தகத் திருவிழாவிற்குப் புது மெருகூட்டி
காண்போரை வியக்க வைக்கிறது.


102 புத்தக அரங்குகள்
நாள்தோறும்
பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்
தமிழறிஞர்களின் சீரிய சொற்பொழிவுகள்
என அரண்மனை வளாகமே, திருவிழாக் கோலமாய் காட்சி அளிக்கிறது.

     அரங்கில் நுழைந்து விட்டால், கண்களுக்கு விருந்தளிக்கும் இலட்சக் கணக்கானப் புத்தகங்களின் அணி வகுப்பு, அரங்கிற்கு வெளியிலோ, செவிக்குப் பெரு விருந்தாய் திகட்டத் திகட்டச் சொற்பொழிவுகள்.

கடந்த 15.6.2015 திங்கட் கிழமை காலை 8.00 மணியளவில், சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின், அமைதியான குரல், என் அலைபேசி வழி வெளிப்பட்டது.


இன்று மாலை
கவிஞர் முத்து நிலவன் அவர்கள்
புத்தகத் திருவிழாவிற்கு வருகிறார்.

      மனமெங்கும் ஓர் மகிழ்ச்சி அலை பரவத் தொடங்கியது. புத்தகத் திருவிழாவினைக் காண, நடமாடும் நூலகத்தின் வருகை.

     மாலை 7.00 மணியளவில், அரண்மனை வளாகத்திற்குச் சென்றேன். முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும் வந்திருந்தார்.

     எனது வலையுலக ஆசான், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு எனது மகிழ்வினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்ந்தேன்.


நண்பர்களே, முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாக ஓர் சாதனையினை நிகழ்த்தியிருக்கிறார். என்ன சாதனை தெரியுமா?

தமிழ் விக்கிபீடியாவில்
முழுதாய் 200 பதிவுகளை
பதிவேற்றிச்
சாதனை படைத்திருக்கிறார்.

     வலைப் பூவைப் பொறுத்தவரை நமக்கு நாமே முதலாளி. நம் மனம் போனபடி எழுதலாம்.

     ஆனால் விக்கிப் பீடியாவிலோ, தணிக்கைக் குழு ஒன்று, பெரிய்ய்யக் கத்திரிக்கோலுடன், எப்பொழுதும் தயாராய்க் காத்திருக்கும்.

      விக்கிப்பீடியாவில் எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆதாரத்தைக் காட்டியாக வேண்டும், அடிக்குறிப்பு அவசியம் சேர்த்தே ஆக வேண்டும்.
      ஆதாரம் காட்டி, அடிக்குறிப்பைப் பதிவேற்றினாலும், பதிவு காணாமல் போகும் வாய்ப்பும் உண்டு. ஆதாரம் சரியில்லை, இது செல்லாது, செல்லாது என விக்கிக் குழுவால் பதிவு, நீக்கம் செய்யப் படுவது ஒரு தொடர்கதை என்கிறார்கள்.

     எத்தனை, எத்தனை தடைகள் வந்தால் என்ன, இதோ அசைக்க முடியாத ஆதாரம். இதோ புறந்தள்ள இயலாத அடிக்குறிப்புகள் என பார்த்துப் பார்த்து எழுதி, 200 பதிவுகளை நிறைவு செய்திருக்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம்
அவர்களைப் பாராட்டித்தானே ஆக வேண்டும்.
நாம் சேர்ந்தே பாராட்டுவோமா.

     மணி இரவு 8.00 கடந்த நிலையில், வீதி இலக்கிய அமைப்பு என்னும் பதாகையுடன் கூடிய, வேன் ஒன்று அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்தது.

     வேனில் இருந்து, மொத்த புதுக்கோட்டையின் வலை உலகும் இறங்கி வந்தது.

    





கவிஞர் முத்து நிலவன் ஐயா, உதவித் தொடக்க்க் கல்வி அலுவலர் சகோதரி திருமதி ஜெயலட்சுமி அவர்கள், நண்பர்கள் திரு மகா சுந்தர், திரு குருநாத சுந்தரம், சகோதரி கீதா என பன்னிரெண்டு பேர் வந்திருந்தனர்.

     

புத்தகத் திருவிழா அரங்கிற்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்த கூட்டத்தில் கரைந்து போனார்கள். புத்தக்க் கடைகள் மூடிய பிறகுதான் வேறு வழியின்றி வெளியே வந்தனர்.

      ஆயிரக் கணக்கான மக்களால், நிறைந்திருந்த வளாகம், சில நொடிகளில், ஆளரவமின்றி வெறிச்சோடிப் போனது.

      நாங்கள் மட்டுமே தனித்து நின்றிருந்தோம். எனது பள்ளித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ. சரவணன் அவர்களும், உடற் கல்வி இயக்குநர் நண்பர் திரு திவாகர் அவர்களும், எங்களுடன் இணைந்து கொள்ள, ஒரு சிறு பதிவர் சந்திப்பு அரங்கேறியது.

      நண்பர்கள் திரு கஸ்தூரி ரங்கன், திரு பிஜு போன்றோரால் வர இயலாத நிலை. இவ்விருவரையும் சந்திக்க இயலா வருத்தம் மனதில் இருந்தாலும், கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் தலைமையில், மற்ற அனைவரையும் சந்தித்ததில், மனமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடத்தான் செய்தது.

தஞ்சைப் புத்தகத் திருவிழா
வருக வருக வருக
எனத் தங்களை அன்போடு அழைக்கிறது

வாருங்கள் நண்பர்களே.