01 ஜூலை 2015

வெட்டுடைய காளி

     

ஆண்டு 1772. அது ஒரு அடர்ந்த காட்டுப் பகுதி. காட்டுப் பகுதியில், மரங்களுக்கு இடையே புகுந்து, மேடு பள்ளங்களை, ஒரே பாய்ச்சலில் தாண்டித் தாண்டி, அக் குதிரை வேகமாய், வெகு வேகமாய் பறந்து கொண்டிருக்கிறது.

         தாயே, சிவகங்கைச் சீமை வெள்ளையர் வசமாகிவிட்டது. நமக்கு விருப்பாட்சிதான் பாதுகாப்பான இடம். அங்கு செல்லுங்கள்.வெள்ளையர்கள் தங்களைத் தேடிக் கண்டுபிடித்து, தீர்த்துக் கண்ட பல குழுக்களை, பல்வேறு இடங்களுக்கும் அனுப்பியுள்ளனர். உடனே புறப்படுங்கள்.

     அமைச்சரின் குரல் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

     எனது கணவரை, இந்த வெள்ளைக் காரப் பாவிகள், நய வஞ்சகமாக, மறைந்து நின்று சுட்டுக் கொன்று விட்டனர். என்னையும் கொல்லத் துடிக்கின்றனர். பழி வாங்கியாக வேண்டும், படை திரட்டியாக வேண்டும், இழந்த மண்ணை மீட்டாக வேண்டும். அதுவரை பதுங்கித்தான் ஆக வேண்டும்.


    குதிரையின் மேல் வேலு நாச்சியார். கோபம் கொப்பளிக்கும் கண்களுடன், எரிமலையாய் குமுறும் மனதுடன், காட்டுப் பகுதியில், தனித்துப் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

      அரியாக் குறிச்சி ஐயனார் கோயிலைக் கடக்கும் போதுதான் கோயில் தூணில் சாய்ந்தபடி, அழுது வீங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த அந்த உருவத்தை வேலு நாச்சியார் கவனித்தார்.

    உடையாள் அல்லவா? இங்கே ஏன் அமர்ந்திருக்கிறார் என எண்ணியபடியே குதிரையை நிறுத்தினார்.

     குதிரையின் குளம்படி ஓசை கேட்டு, சுய நினைவிற்கு வந்த உடையாள், வேலு நாச்சியாரைக் கண்டதும் பதறி எழுந்தார்.

தாயே, உங்களுக்கா இந்த நிலை எனக் கதறியவர்

தாயே, அந்தப் பக்கம் போகாதீர்கள், அங்கே வெள்ளையர்கள் பலர், தங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இதோ இந்தப் பக்கம் செல்லுங்கள் என்றார்.

     உடையாள் காட்டிய திசையில், வேலு நாச்சியாரின் குதிரை பறந்து சென்று மறைந்த, சில நிமிடங்களில், ஏழெட்டுக் குதிரைகள் அவ்விடம் வந்தன, ஒரு வெள்ளைக் காரனும் சில அடியாட்களும்.

பெண்ணே, இந்தப் பக்கம் வேலு நாச்சியாரைப் பார்த்தாயா?

பார்த்தேன்

என்ன, என்ன பார்த்தாயா? அவர் எந்தப் பக்கம் சென்றார். சீக்கிரம் சொல்.

சொல்ல முடியாது

அடுத்த நொடி, உடையாளின் கன்னத்தில், இடியென ஓர் அடி விழுந்தது. மறு நொடி கன்னம் வீங்கத் தொடங்கியது.

ஒழுங்காகச் சொல்லிவிடு, மறுத்தால், உன் உடலில் உயிர் இருக்காது.

சொல்ல முடியாது

இருவர் குதிரையில் இருந்து கீழே குதித்தனர். ஒருவன் உடையாளின் முடியைப் பிடித்து தர தரவென இழுத்துக் கீழே தள்ளினான். மற்றொருவன் ஓங்கி உடையாளின் வயிற்றில் மிதித்தான்.

சொல்ல முடியாது

மீண்டும் பலம் கொண்ட மட்டும், வயிற்றில் உதைத்தான். உடையாள் தரையில் விழுந்த மீனாய் துடித்தாள்.

சொல்ல முடியாது

ஒருவன் வாளை உருவினான், ஓங்கினான், அவனைப் பார்த்து, அந்த வேதனையிலும் உடையாள் சிரித்தாள்

சொல்ல முடியாது

வேகமாய் வாள் கீழே இறங்கியது. ஒரே நொடி, ஒரே வெட்டு உடையாளின் தலை, உடலை விட்டுத் தனியே மண்ணில் உருண்டோடியது.


     உடையாளின் குருதி, அரியாக் குறிச்சி மண்ணில் வெள்ளமாய் ஓடி, பின் வேகம் குறைந்து, பூமிக்குள் விதையாய், வீரத்தின் வித்தாய், தியாகத்தின் திருவுருவாய் மெல்ல மெல்ல இறங்கியது.

     சரியாக எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், பெரும் படை திரட்டிப் போரிட்டு, இழந்த சிவகங்கைச் சீமையினை மீட்டெடுத்த வீர மங்கை வேலு நாச்சியார், உடையாளின் குருதி வழிந்த இடத்தில், உடையாளுக்கு ஓர் ஆலயம் எழுப்பி, தன் வைரத் தாலியை முதல் காணிக்கையாக்கினார்.

    

ஒப்பற்ற ஓர் உயர்ந்த, உன்னத தியாகத்தின் நினைவுச் சின்னம் அரியாக் குறிச்சி கோயில்.

வெட்டுடையார் காளியம்மன் கோயில்

     கடந்த மே மாதம் 6 ஆம் நாள். உடையாளின் குருதி படிந்த மண்ணில், ஈடில்லா தியாகச் சிகரத்தின், தலை உருண்ட மண்ணில், என் காலடியை எடுத்து வைத்த போது, உடலும் உள்ளமும் ஒரு சேர சிலிர்த்தது.

     ஓர் உயிரைக் காக்கத், தன் உயிரையே காணிக்கையாக்க எவ்வளவு மனத் துணிச்சல் வேண்டும். இத்தகைய மனத் துணிச்சலைப் பெற, எத்தகைய எல்லையற்ற அன்பு உடையவராய் இருத்தல் வேண்டும்.
    

இவை எல்லாமும் உடையவராய் இருந்த, உடையாளின் கோயில் இதோ, கண்முன்னே கம்பீரமாய் காட்சி தருகிறது. இரு கரம் நீட்டி, அன்போடு வா வா என்று அழைக்கின்றது.

     காலடி எடுத்து வைத்து, உள்ளே நுழைகின்றேன். மனதில் ஓர் இனம் புரியாத உணர்ச்சி பரவுகிறது.

     கோயிலின் கருவறையில் சிலையாய், வெட்டுடைய காளியாய் உடையாள். கண்கள் கலங்க இரு கரம் கூப்புகின்றேன்.

தாயே, நின்னைச் சரணடைந்தேன்.

     உடையாளுக்குக் கோயில் எழுப்பி, காணிக்கையாய், வேலு நாச்சியார் வழங்கிய, அவரது வைரத் தாலி, இன்றும், இக்கோயிலில் போற்றிப் பாதுகாக்கப் பெற்று வருகிறது.

     வெள்ளையரின் வாளுக்கு இறையாகும் முன், உடையாள் அமர்ந்திருந்த அய்யனார் கோயிலும், உடையாளின் கோயிலும், ஒன்றை ஒன்று பார்த்தபடி, எதிரெதிராய், ஒரே இடத்தில், ஒரே சுற்றுச் சுவருக்குள்.

      மெதுவாய் சுய நினைவு பெற்று, கோயிலுக்குள் வலம் வந்த பொழுதுதான், உடையாள் கோயிலின் பின்புறத்தில், அக் காட்சியைக் கண்டு திடுக்கிட்டேன்.

     இரண்டு சுத்தியல்கள், இரண்டிற்கும் மேற்பட்ட கூர்மையான உளிகள், உணவுத் தட்டினும் சிறிய, வட்ட வடிவிலான, இரும்பினால் ஆன, இரண்டு பலி பீடங்கள். இவற்றைச் சுற்றிலும், குவியல் குவியலாய், இரண்டு இரண்டாய் வெட்டப் பெற்ற, ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்கள்.

    ஒன்றுமே புரியவில்லை எனக்கு.

    அருகில் இருந்த உள்ளூர் பெரியவர் ஒருவரிடம், எதற்காகக் காசுகளை வெட்டிப் போட்டிருக்கிறார்கள் எனக் கேட்டேன்.

    பெரியவர் சொன்ன பதிலைக் கேட்டவுடன், அடேய், பாவிகளா என்று கத்த வேண்டும் போல் இருந்தது.

யாரேனும் நமக்கு வேண்டாதவர்கள், நமக்குப் பிடிக்காதவர்கள் இருந்தால், அவர்கள் அழிய வேண்டும், அவர்கள் குடும்பமே மண்ணோடு மண்ணாக மக்கி நசிந்து போக வேண்டும் என்று இறைவியிடம் வேண்டிக் காசுகளை வெட்டிப் போடுவார்கள் என்றார்.

     குவியல் குவியலாய் வெட்டிப் போடப் பட்டிருந்த காசுகளைப் பார்த்தேன். ஒவ்வொரு காசும், மனிதர்களின் விகார மனத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

     உடையாளின் ஒப்பற்ற, உன்னத, உயரிய தியாகத்தைப் போற்றும் வகையில் எழுப்பப்பெற்ற கோயிலானது, இன்று வஞ்சக மனதும், அடுத்தவர் மகிழ்வுடன் வாழ்வதைக் காண சகிக்காத பொறாமை உள்ளமும் படைத்த, விலங்கினும் கீழான மனிதர்களின் வழிபாட்டுத் தளமாக உருமாற்றம் பெற்றிருப்பது, மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

     மீண்டும் குவியல் குவியலாய் வெட்டி வீசப் பட்டிருந்த காசுகளைப் பார்த்தேன். வெட்டப் பட்ட காசுகளுக்கு இடையில், வெட்டுண்ட இதயத்துடன், கலங்கிய கண்களுடனும் உடையாளின் முகம் தெரிந்தது.

ஓர்  உயிரைக் காக்க,
என் உயிரையே கொடுத்தவள் நான் 
இன்று
என்னிடமே,
அடுத்தவர் வாழ்வை அழிக்க வேண்டுகிறீர்களே,
இது நியாயமா?