கலையான முகம். ஆனாலும் குழி விழுந்த
கண்கள். உணவினையே மறந்து போன வயிறு. இன்று எப்படியும் உணவு கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கை, அச்சிறுவனின் முகத்தில் தெரிகிறது.
காரணம். மேடையில்
பாடிக்கொண்டிருப்பது அவனது தாய். நிச்சயம் நிகழ்ச்சி முடிந்ததும் ஏதேனும் சன்மானம்
கிடைக்கும். அதைக் கொண்டு எப்படியும் இன்று உணவு உண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில்
அச்சிறுவன் அமர்ந்திருக்கிறான். அவனது தந்தையும் மேடை இசைக் கலைஞர்தான்.ஆனாலும்
குடிப்பது என்பதே, அவரது முழுநேர அலுவலாகி பல மாதங்கள் ஆகிவிட்டது.
மேடையில் பாடிப் பாடிச் சம்பாதிப்பது
தாய், குடித்துக் குடித்தச் செலவழிப்பது தந்தை.
சிறுவன், மேடையில் படிக்
கொண்டிருக்கும் தன் தாயைப் பார்க்கிறான். மலர்ந்த முகம். கண்களில்தான் எவ்வளவு
சோகம். ஆனாலும் குரலில் இனிமை வழிந்தோடுகிறது. அரங்கே, பாடலினை வாய் பிளந்து
ரசித்துக் கொண்டிருக்கிறது.
தன் தாயையே உற்றுக்
கவனித்துக் கொண்டிருந்த சிறுவன், தன் தாயின் முகத்தில், திடீரென ஒரு வேதனை, ஒரு
வலி பரவுவதை உணர்கிறான். அடுத்த சில நொடிகளில், குரலில் ஒரு வித நடுக்கம் ஊடுருவி
பாட இயலாமல், தன் தாய் தவிப்பதைக் காண்கிறான்.
சாப்பிட்டுத்தான் பல நாட்கள் ஆகிவிட்டதே.
பாடுவதற்கு உடலில் ஏது வலிமை. பாட இயலாமல் தவிக்கிறார் அவர். கண்களில் கண்ணீர்
வழிகிறது.
அரங்கு முழுதும் நிரம்பியிருந்த
கூட்டமோ, நிலைமை உணராது, கூச்சலிடத் தொடங்குகிறது. ஏன் நிறுத்தி விட்டாய்?
பாடு, பாடு என வெறிக் கூச்சலிடுகிறது. பாட இயலாமல் அழுது கொண்டே மேடையை விட்டு
ஓடுகிறார், அச்சிறுவனின் தாய்.
சுவரோரத்தில் சுவரோடு சுவராக
ஒண்டி ஒடுங்கி உட்கார்ந்திருந்த, அந்த ஆறு வயதுச் சிறுவனின் மனதில், அவனையும்
அறியாமல் ஓர் கோபம், ஓர் ஆற்றாமை, ஓர் ஆத்திரம், தன் வாழ்வின் மேல், தன் தந்தையின்
மேல், மெதுவாய் மிக மெதுவாய், சிறு பொறியாய் தோன்றி, பெரு நெருப்பாய் கொழுந்து
விட்டு எரியத் தொடங்குகிறது.
தளர்ந்திருந்த அச்சிறுவனின் உடல்,
மெல்ல மெல்ல இறுகுகிறது. மெதுவாய் எழுந்தவன், அடுத்த நொடி வேகமாய், மிக வேகமாய், மேடையை
நோக்கி ஓடுகிறான்.
இரண்டிரண்டாய் படிகளைத் தாவி ஏறி,
மூச்சிறைக்க ஒலிப் பெருக்கியின் முன் நின்றான்.
கூச்சலிட்ட கூட்டம்,
சிறுவனை வியப்போடு பார்க்கிறது. யார் இந்த சிறுவன்? ஒலிப் பெருக்கியின் உயரம் கூட
இல்லாத, இச்சிறுவனுக்கு மேடையில் என்ன வேலை?
சிறிது சிறிதாய் கூச்சல்
குறைகிறது. சிறுவன் மெதுவாய், மிக மெதுவாய், இனிமையாய், மிக இனிமையாய் பாடத்
தொடங்குகிறான். நினைவு தெரிந்த நாள் முதல், தன் தாய் கற்றுக் கொடுத்தப் பாடலைப்
பாடத் தொடங்குகிறான்.
தன் பிஞ்சுக் கைகளை, தன் மழலைக்
கால்களை ஆட்டியவாரே, நடனமாடிக் கொண்டே சிறுவன் பாடுகிறான். சிறுவன் பாடப் பாட,
சிறுவன் ஆட ஆட, அரங்கே வியந்து போனது. அனைவரும் மலைத்துத்தான் போனார்கள்.
சிறு பொடியன் என்ன ஆட்டம்
ஆடுகிறான், என்ன பாட்டு பாடுகிறான்.
இதுவரை கேட்டறியாத ஓர் குரல்,
இதுவரை பார்த்தறியாத ஓர் நடனம்.
சிறிது நேரத்திற்கு முன்
கூச்சலிட்டவர்கள், மகிழ்ச்சியில் கை தட்டத் தொடங்குகிறார்கள். தங்களையும்
அறியாமல், தங்கள் பைகளில் இருந்த சில்லறைக் காசுகளை மேடையை நோக்கி வீசி பரவசமடைகிறார்கள்.
மேடையில் ஆடிப் பாடிக்
கொண்டிருந்த சிறுவனின் மேல் காசு மழை.
அடுத்த நொடி, அச்சிறுவன்
பாடலை நிறுத்தி விட்டு, மேடை முழுவதும் ஓடி ஓடி சில்லறைக் காசுகளைப் பொறுக்கத் தொடங்குகிறான்.
இரு கைகள் போதவில்லை. நமக்கு முன் வேறு யாராவது காசுகளை எடுத்து விட்டால் என்ன
செய்வது?
மிகுந்த பரபரப்புடன்
காசுகளைப் பொறுக்கி, தன் சட்டைப் பையிலும், கால் சட்டைப் பையிலும் நிரப்பத் தொடங்கினான்.
இன்று வயிறு முட்ட முட்ட சாப்பிட்டுவிட வேண்டும்.
அரங்கில் நிரம்பியிருந்த
கூட்டம், மீண்டும் கூச்சலிடத் தொடங்குகிறது. ஆடு, ஆடு, பாடு, பாடு என கூச்சலிடத்
தொடங்குகிறது.
காசுகளைப் பொறுக்கிக்
கொண்டிருந்த சிறுவன், ஒலிப் பெருக்கியின் முன் வந்து நின்று, அமைதியாகக் கூறினான்.
கொஞ்சம் பொறுங்கள்.
சில்லறைகளைப் பொறுக்கிய பின் பாடுகிறேன். என்னால் ஒரே நேரத்தில், இரண்டு வேலைகளைச்
செய்ய முடியாது.
கூட்டமே வாய் விட்டு சிரித்தது.
நண்பர்களே, இச்சிறுவன் யார்
தெரியுமா?
இவர்தான், பின்நாளில், உலக மக்களை
எல்லாம் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த மகா கலைஞன்.
ஊமைப் படங்கள் மட்டுமே,
வெளி வந்த அக்கால கட்டத்தில், தன் உடல் அசைவுகளால், செய்கைகளால், உலகையே வயிறு
வலிக்கச் சிரிக்க வைத்தவர்.
சார்ளி சாப்ளின்