தொடு திரையை வருடியபோது, வயலின்
இசை மௌனமானது, அமைதியாய் வெளிப்பட்டது ஒரு குரல்.
300 ஆண்டுகளுக்கு முன்னரே
பிறந்து, தவழ்ந்து, மறைந்திருக்க வேண்டும் என்று எண்ணுபவர் இவர்.
நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
உங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான். உங்கள் நண்பர்தான். நமது நண்பர்தான்.
முகத்தில் மீசை வைத்திருப்பவரைப்
பார்த்திருப்போம். இவரோ மீசைக்குள் முகத்தை வைத்திருப்பவர்.
ஆம், அவரேதான்
தேவகோட்டை கில்லர்ஜி
விருப்பமே இல்லை
இந்த
சமூக மானிடனைக் காண
...
அந்தக் கோபத்தில்
என்னுள் எழுந்தவை
நான்
மண்ணுள் புதையுமுன்
இந்த விண்ணில்
விதைக்க
முயற்சிக்கிறேன்
என்று பறைசாற்றும் வலைப் பக்கம், இவரது வாழ்வியல் வேதனைகளை, இவர் சந்தித்த
சோதனைகளை, இவர் தகர்த்தெறிந்த தடைகளை, நமக்குச் சொல்லாமல் சொல்லும்.
இவர் சந்தித்த வேதனைகளும்,
சோதனைகளும் இவரை நன்கு பக்குவப் படுத்தியுள்ளன. பேசும் பொழுது ஒவ்வொரு சொல்லும்,
நின்று நிதானித்து, அமைதியாய் தெளிவாய் வெளி வருகின்றது.
தற்பொழுது தேவகோட்டைக்கு வந்திருக்கிறேன். புதுக்கோட்டைப் பதிவர்களையும்,
தஞ்சைப் பதிவர்களையும் சந்திக்க விரும்புகிறேன்.
நண்பர்களைச் சந்திப்பதையும், இனிமையாய் உரையாடி
மகிழ்வதையும் விட, மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயல், வேறு என்ன இருக்கிறது.
சந்திப்பிற்கு நாளும், இடமும் குறித்தோம்.
இடம் எது தெரியுமா?
ஒரு கவியின் இல்லம்.
நம் வலை பொழுது போக்க அல்ல
வாழ்வைப் பழுது பார்க்க
என்னும் உயர்ந்த, உன்னத குறிக்கோளுடன்
விண்ணிடை இரதம் ஊர்ந்து
மேதினி கலக்கு தற்கும்
பண்ணிடைத் தமிழைச் சேர்த்துப்
பாரினை மயக்கு தற்கும்
மண்ணிடை வாளை யேந்திப்
பகைப்புலம் மாய்ப்ப தற்கும்
எண்ணிலாத் தமிழர் உள்ளார்
எனும்நிலை காண்ப தென்றோ?
என்று ஏங்குவாரே பாவேந்தர் பாரதிதாசன், அப்பாவேந்தரின் ஏக்கத்தைப் போக்கும்
வகையில், விண்ணிடை இரதம் ஏறி, நாடுகள் பல சென்று, பண்ணிடைத் தமிழைச் சேர்த்து, தன்
பேச்சால், தன் பாட்டால், தன் எழுத்தால் பாரினை மயக்கி வருபவர் இவர்.
எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர்
கவிஞர் நா.முத்து நிலவன்
கடந்த 8.7.2015 புதன் கிழமை மாலை
4.00 மணியளவில், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும், நானும், தஞ்சையில் இருந்து
பேருந்தில் புறப்பட்டோம்.
புதுக்கோட்டை மச்சுவாடியில்
இறங்கினோம். கவிஞர் ஐயாவின் இல்லம் நோக்கி நடந்த பொழுது, எங்களைத் தாண்டி, சீறிக்
கொண்டு சென்றது ஒரு ஆட்டோ.
சிறிது தூரம் சென்று நின்ற,
ஆட்டோவில் இருந்து இறங்கிய மனிதரைக் கண்டவுடன், மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம்.
திருவிளையாடல் திரைப்படத்தில்
வரும் தருமியின் பேச்சினை அனைவரும் ரசித்து மகிழ்ந்திருப்போம்.
சேர்ந்தே இருப்பது
புலமையும், வறுமையும்
புகைப்படக் கருவி இவரின் மற்றொரு
கை போல், எப்பொழுதும் இவருடன் சேர்ந்தே வரும்.
வங்கிப் பணியினின்றும்
ஓய்வு பெற்ற பிறகும், எழுத்திலும், காணும் காட்சிகளைப் படம் பிடித்துக் கவிதைபோல்,
காண்பவர் கண்களுக்கு விருந்தளிப்பதிலும் வல்லவர் இவர்.
கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்,
திரு திண்டுக்கல் தனபாலன் – வலைச் சித்தர்
இவர் – படச் சித்தர்
படச் சித்தர்
திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள்தான்,
ஆட்டோவில் இருந்து இறங்கினார்.
தனது உடல் நிலையினைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது,
நண்பர்களைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற தணியாத தாகத்தோடு, திருச்சியில் இருந்து
வந்திருக்கும் தமிழ் இளங்கோ அவர்களைப் பாராட்டியே ஆக
வேண்டும்.
மூவருமாய் கவிஞர் ஐயா அவர்களின்
இல்லத்திற்குப் படியேறினோம். அங்கே எங்களுக்கு முன்னரே வந்து, காத்திருந்தார்
மீசைக்கார நண்பர்
தேவகோட்டை கில்லர்ஜி
கவிஞர் ஐயா அவர்களின் வீட்டினைப்
பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். எங்கு பார்த்தாலும் புத்தகங்கள், புத்தகங்கள்.
புத்தகங்களுடன் போட்டி போடும் வகையில், கவிஞருக்கு வழங்கப் பெற்ற பரிசுப்
பொருட்கள், நினைவுப் பரிசுகள், விருதுச் சான்றிதழ்கள் அனத்தும் வரிசை வரிசையாய்
அணிவகுத்து நின்றன
சகோதரிகள் கவிஞர் மு.கீதா, உதவித் தொடக்க்க் கல்வி அலுவலர் திருமதி ஜெயலட்சுமி, திருமதி மாலதி, திருமதி மீனா என்கிற மீனாட்சி சுந்தரம், கவிஞர் ஆர்.நீலா, நண்பர்கள் திரு மது, கவிஞர் மகா.சுந்தர், கவிஞர் செல்வா, கவிஞர் வைகறை, கவிஞர் சோலச்சி ஆகியோரின் மகிழ்ச்சி மிகு பேச்சுக்கள், சந்திப்பிற்கு இனிமை சேர்த்தன.
சகோதரி கவிஞர் மு.கீதா, உதவித்
தொடக்கக் கல்வி அலுவலர் சகோதரி திருமதி ஜெயலட்சுமி மற்றும் நண்பர் மது மூவரும்,
அருமையான நூல்களை வழங்கி எங்களை வரவேற்றது, என்றென்றும் நெஞ்சினில் நிலைத்து நிற்கும்.
கவிஞர் வைகறை அவர்களை முதன்
முதலாய் சந்தித்தேன் இனிமையான பேச்சுக்கும், இளகிய மனதிற்கும் சொந்தக்காரர் இவர்.
கவிஞர் சோலச்சி அவர்கள்,
எதிர்வரும் 19.7.2015 அன்று நடைபெற இருக்கும், தனது சிறுகதை நூல் வெளியீட்டு
விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
கவிஞர் சோலச்சி அவர்களுக்கு
வலையுலகின் சார்ப்பில் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்வோம்.
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களைப்
பாராட்டும் வகையில்,
கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள்
நூல் ஒன்றினை வழங்கி மகிழ்ந்தார்.
தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கும்
கவிஞர் அவர்கள்
தனது நூல்களை
வழங்கி மகிழ்ந்தார்.
திருச்சி தமிழ் இளங்கோ அவர்களோ, கவிஞர் அவர்களுக்கு ஓர்
நூலினை வழங்கி மகிழ்ந்தார்.
சற்றேரக்குறைய மூன்று மணி நேரம்
சென்றரே தெரியவில்லை. மூன்று மணி நேரமும், கவிஞர் இல்லத்தின், சமையல் அறையில்
இருந்து, வகை வகையாய் இனிப்புகள், பழங்கள் என வரிசையாய் வந்து கொண்டே இருந்தன.
தொலைத் தொடர்புத் துறையில்
மேலாளராகப் பணியாற்றும், கவிஞரின் துணைவியார் அவர்கள், அன்றைய கடும் பணியின்
களைப்பினைப் புறம் தள்ளி, இன் முகத்துடன், சமையல் அறையிலும் தன் பணியினைத்
தொடர்ந்தார்.
கவிஞரின் இளைய மகள், பொறியாளர் படிப்பு முடித்திருக்கும், செல்வி இலட்சியா, ஒளிப்பதிவாளராகவே மாறி, அங்கும் இங்கும் ஓடி, படமெடுத்துக் கொண்டே இருந்தார்.
கவிஞரின் மூத்த மகள்
அன்றுதான், தன் கணவருடனும், பிள்ளைகளுடனும், துபாயில் இருந்து வந்திருந்தார்.
அவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
நான் துபாயில், யாரிடம் என்
பெயரைக் கூறினாலும் அவர்கள் அனைவரும், தவறாமல் கேட்கும் முதல் கேள்வி, உங்கள்
தகப்பனார் யார்? என்பதே, என்று கூறியபோது, அவரின் முகத்தில் மகிழ்வும்,
பெருமையும் பொங்கி வழிந்ததைக் காண முடிந்தது.
கவிஞரின் மூத்த மகளின் பெயர் என்ன தெரியுமா?
வால்கா.
சந்திப்பு என்று
ஒன்றிருந்தால், பிரிவு என்று ஒன்று இருக்க வேண்டுமல்லவா. மீண்டும் சந்திப்பதற்காக,
பிரிய வேண்டிய நேரம் வந்தது.
கவிஞர் முத்து நிலவன் ஐயா,
நண்பர் மது, நண்பர் மகா.சுந்தர் மற்றும் ஆசிரியர் ஜலீல் நால்வரும், சாலை வரை
எங்களுடன் வந்து, பேருந்தில் எங்களை வழியனுப்பி வைத்த, அந்த அன்பிற்கு இணையேது,
ஈடு ஏது.