1902 ஆம் ஆண்டு. ஆஸ்திரேலியா. சிட்னி. தன்
பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த திருமதி இஸபெல், அம்
மனிதரைத் தற்செயலாகத்தான் பார்த்தார்.
அழுக்கேறிய கிழிந்த உடைகளுடன், முகத்தில்
நீண்டு வளர்ந்திருந்த தாடி, மீசையுடன், மதுவின் வாடையுடன் அவர் மெதுவாகத்
தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார்.
மன நிலை பிறழ்ந்தவராய், மது அருந்துவதையே,
தன் வாழ் நாள் கடமையாக கடைப்பிடிப்பவர் போல், மெதுவாக ஆடி, ஆடி வந்து
கொண்டிருந்தார்.
எதிரிலே தள்ளாடியபடி வந்த அந்த மனிதர்,
தன்மீது மோதிவிடுவாரோ என்று எண்ணி, விலகியபோதுதான், அம்மனிதரது முகத்தைப்
பார்த்தார்.
அடுத்த நொடி அதிர்ந்து போனார்.
உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் துடி துடித்துப்
போனார்.
அவரா இவர்?
இஸபெல்லால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
இரு கைகளாலும், அம்மனிதரை தடுத்தி நிறுத்தி,
முகத்தை உற்றுப் பார்த்தார்.
ஆம், அவரேதான்.
எப்பேர்ப்பட்ட மாபெரும் எழுத்தாளர், இப்படி
பைத்தியம் போல் அலைகிறாரே.
இவரது எழுத்தில் நாடே சொக்கித்தான் போனது.
இவரது எழுத்தை அச்சேற்றிய பதிப்பாளர்கள், கொழுத்துப் போய், விலை உயர்ந்த கார்களில்
பவனி வர, இவரோ, எழுதி எழுதிக் கொடுத்து, ஏமாந்து போய், வறுமையுடன் மல்யுத்தம்
செய்தார். கவலையைப் போக்க, மதுவை நாடினார்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மனைவியோ,
போதுமடா உன்னுடன் வாழ்ந்தது என்று கூறி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிரிந்து
போனார். இவரோ கவலையில் தேய்ந்து, மதுவில் தோய்ந்து, தோய்ந்து , இதோ வீதியில்.
இஸபெல் ஒரு நொடி யோசித்தார். ஒரே நொடிதான்,
அடுத்த நொடி, அவரது கரம் பற்றி அழைத்துச் சென்றார்.
மனநல மருத்துவ மனையில் சேர்த்தார்.
ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் இருபது
ஆண்டுகள், ஒரு ஒப்பற்ற சிநேகிதியாய், உடன் இருந்து காத்தார். மீண்டும் புது
மனிதராய் மாற்றி, எழுத்துலகில் இணைய வைத்தார்.
எந்த ஒரு தனி மனிதனுக்கும் இதுவரை
கிட்டாத, மரியாதை, இறுதி மரியாதை, அரசு மரியாதை இவருக்குக் கிட்டியது.
ஆஸ்திரேலியப் பிரதமரே இவரது இறுதிச்
சடங்கில் கலந்து கொண்டு, சோகமே உருவார் அமர்ந்திருந்தார். ஆயிரக் கணக்கான மக்கள்
திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
நண்பர்களே, ஆஸ்திரேலிய அரசு போற்றிய,
தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடிய, இம்மனிதர், இம்மாமனிதர், இந்த காடுறை
மனிதர்களின் எழுத்துலகச் சக்கரவர்த்தி யார் தெரியுமா?
இவர்தான்
ஹென்றி லாஸன்.
-----
மரக் கம்பளங்களாலும், பலகைகளாலும் கட்டப்
பட்டிருந்த அந்த வீட்டில், இரண்டு அறைகள் இருந்தன. வீட்டின் தரை பிளவுபட்ட
பலகைகளால ஆகியிருந்தது.
மரப் பட்டைகளால் கட்டப் பட்ட சமையலறை
வீட்டின் ஒரு கோடியில் அமைந்திருந்தது. அது வராந்தா உள்ளிட்ட வீட்டின் அளவை
விடவும் பெரியதாக இருந்தது.
தொடு வானத்தைக் காண இயலாதபடி, எங்கும்
புதர் சூழ்ந்திருந்த குறுங்காடு அது. மலைகளோ, குன்றுகளோ இல்லாத, எங்கும் சம
வெளியாய் காட்சி அளித்தது அப்பிரதேசம்.
எங்கெங்கும் சிறுத்து திரங்கிய சுதேசி
ஆப்பிள் மரங்கள் நிறைந்திருந்தன. அவற்றின் நிழலில், வேறெந்த தாவர வளர்ச்சியும்
இல்லை.
நீர் வறண்டு போன குறுகிய ஓடைப் பாதையோரம்,
கரும் பச்சை நிற சவுக்கு மரங்கள் சில தென்பட்டன. அக்கம் பக்கத்தில் வேறு வீடுகள்
இல்லை.
பக்கத்து வீடு, பத்தொன்பது மைலுக்கு அப்பால்,
பிரதான சாலையோரம் இருந்தது.
நண்பர்களே, படிக்கப் படிக்க, காட்சி கண் முன்னே
விரிகிறது அல்லவா? ஆள் அரவமற்ற காடு, மனக் கண் முன்னே காட்சி அளிக்கிறது அல்லவா?
உண்மையில் நமக்கும் அவர்களுக்கும்தான்
பெரிதாய் என்ன வித்தியாசம்? நான் ஒரு முட்டாளாக இருந்திருக்கிறேன். எனக்கே
தெரிகிறது. அதற்கான பலனைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது செய்வதற்கு
ஒன்றுமில்லை.
ஒரு வேளை உணவுக்காக, அங்கும் இங்கும் ஓடிக்
கொண்டிருக்கிறோம். வயதாகும் வரை ........ நம்மைப் பற்றிய சிரத்தைக் குறையும் வரை
..... உடல் அழுக்கடையும் வரை ...... இந்த ஓட்டம் தொடரும்.
இன்னும் வயதாகும் ...... இன்னும் சிரத்தை
குறையும் ..... இன்னும் அழுக்கடைவோம்.......
இப்படியே இந்த மண்ணுக்கும், புழுதிக்கும்,
வெக்கைக்கும், ஈக்களுக்கும், கொசுக்களுக்கும் பழகிப் போவோம்.
இலக்கைத் தொலைத்து, நம்பிக்கையைக் கைவிட்டு,
ஒரு மாடு மாதிரி, கால் நடை வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொள்கிறோம்.
ஒரு நாயைப் போல், போகுமிடமெல்லாம் நம்மோடு
வருகிறது, உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட இந்த முதுகுப் பை.
அது இல்லாவிடில், சுமையற்ற தோள்களும், எதையோ
இழந்தது போலான தவிப்பும், நம்மை இயல்பாயிருக்க விடுவதில்லை.
நண்பர்களே, காடுகளையும், காடுறை
மனிதர்களையும், காடுறை மனிதர்களின் வாழ்வியலையும், அவர்களின் இயலாமையினையும், எண்ண
ஓட்டங்களையும், தமிழ் எழுத்துக்களின் வழியாகக் காட்சியாக்கி கண் முன்னே ஓட
விடுகிறார் இவர்.
படிக்கப் படிக்க மொழி பெயர்ப்புக் கதைகள்
என்பதே மறந்து போய், அப்பக்கங்களில் மூழ்கி, மூச்சுத் திணறி, இவரின்
எழுத்தாக்கத்தில் ஒன்றி, நம்மையே மறந்து போய் விடுவோம்.
தமிழ் மக்களுக்குப் பரிச்சயமில்லாத,
மாறுபட்டதொரு, இலக்கியப் படைப்பான, ஆஸ்திரேலியக் காடுறை மாந்தர்களையும், அவர்தம்
வாழ்க்கைக் கதைகளையும், தமிழ்ப் படுத்துவதில் முழு வெற்றி பெற்றிருக்கிறார்.
சகோதரி கீதா மதிவாணன் அவர்கள்,
வலைத்
தளப் பதிவர்.
ஹென்றி
லாஸனின்
என்றாவது ஒரு நாள்
ஆஸ்திரேலியப்
புதர்காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதை.
-----
காடுகளில் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்த
முன்னாள் கைதிகளும், அடி மட்டத் தொழிலாளர்களும், சுரங்கக் குழிக்குள் தங்கள்
அதிஷ்டத்தைத் தேடிக் கொண்டிருந்தவர்களும்தான் ஹென்றி லாஸனின் கதை மாந்தர்களான
காடுறை மனிதர்கள்.
காடுறை வாழ்க்கையின் ஆபத்துகளும், அச்சந்தரும்
தனிமையும், தரிசு நிலங்களை விளைய வைக்க விவசாயிகள் பட்ட கஷ்டங்களையும், சுரங்கத்
தொழிலாளர்களின் பரிதாப வாழ்க்கையையும், சுரங்க நிலங்கள் கைவிடப் படும் பொழுது,
எழும் வெறுமையும், இயலாமையுமாய், அவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும், நம்மை முழுதாய் எழுத்துக்
சுழலுக்குள், இழுத்துக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவை.
மொத்தம் 22 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
ஒவ்வொரு சிறுகதையாய் படிக்கப் படிக்க,
மனதில் ஓர் இனம் புரியா வெறுமை. இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்களே,
இதுவரை அறிந்து கொள்ளலமல் இருந்திருக்கிறோமோ என்னும் ஓர் உணர்வு உறுத்தத்தான்
செய்கிறது.
இந்நூல் எனக்கு எப்படிக் கிடைத்த்து
தெரியுமா?
கடந்த 11.10.2015 அன்று வலைப் பதிவர்
சந்திப்பிற்காக, புதுகை வந்த போது கிடைத்தது.
வலைப்
பூவின் பதிவர்
சகோதரி
கலையரசி அவர்களைச்
சந்திக்கும்
ஓர் பொன்னான வாய்ப்பு.
என்னைப் பார்த்தவுடன், தனது பையில் இருந்து,
இந்நூலினை எடுத்து, திருமதி கீதா மதிவணன் அவர்கள் தங்களுக்குத் தரச் சொன்னார்
என்று கூறி கொடுத்தார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து நீண்ட, கடல்
தாண்டி, பறந்து, புதுகை வந்தடைந்த, சகோதரி
கீதா மதிவாணன் அவர்களின் பாசமிகு உள்ளம் கண்டு வியந்து போனேன்.
வலையுலக
உறவென்பது இதுதானோ?
நன்றி
சகோதரியாரே.
சகோதரி கீதா மதிவாணன் அவர்களின் எழுத்தில்,
காடுறை கதைகள், ஒரு புதிய வாழ்க்கை முறையின் துவக்கத்தைக் காட்டுவதோடு, அந்த
காலத்திற்கும், அக்காலச் சூழலுக்குமே நம்மை அழைத்துச் செல்கிறன.
வாழ்த்துக்கள்
சகோதரியாரே.
தங்களின்
எழுத்துலகப் பயணம்
தொடரவும்,
சிகரங்களைத்
தொடவும்