எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்கும்
என்றால்
செத்தொழியும் நாளெனுக்குத் திருநாளாகும்.
பாவேந்தர்
பாரதிதாசன்
இராணுவ
மருத்துவமனை,
பெங்களூர்,
23.8.1963
தேவரீர்
அப்பா அவர்களுக்கு,
தங்களது மகன் கணேசன் தாழ்மையுடன் எழுதிக்
கொண்டது. சீனாக்காரனின் அநியாய ஆக்கிரமிப்பிலிருந்து, அன்னை பாரத பூமியைக்
காப்பாற்ற வீட்டுக்கொரு ஆள் ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள் என்ற நம் ஜனாதிபதியின்
அபயக் குரலை நீங்கள் ரேடியோ மூலம் கேட்டிருப்பீர்கள்.
ஐந்து ஆண் மக்களைப் பெற்ற நாம், ஒருவரையும்
அனுப்ப முடியவில்லையே, என்று வருந்தவும் செய்திருப்பீர்கள்.
தங்கள்
வருத்தத்தைப் போக்க, நம் குடும்பத்தின், என் அருமை சகோதரர்கள் சார்பில்,
என்னுயிரை, இந்த நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டி நான் புறப்பட்டு விட்டேன்.
இதற்கான ஆயத்தங்கள் தொடங்கி, சுமார் மூன்று
மாதங்களாகியும், தங்களிடமோ, அண்ணனிடமோ, நான் இதைப் பற்றி சொல்லாததற்கு
மன்னியுங்கள்.
பட்டாளம் என்றதும், ஐயோ, துப்பாக்கிக்
குண்டுக்கு முன் என் மகன் விழுந்து மடிவானே என்று கலங்காதீர்கள். அந்த பாக்கியம்
எல்லாம் எனக்குக் கிடைக்காது.
கூடிய சீக்கிரம் வீட்டிற்கு வருகிறேன். என்னை
வாழ்த்தி அனுப்பத் தயாராகுங்கள்.
தங்கள்
மகன்,
பா.கணேசன்
நண்பர்களே, படிக்கப் படிக்க உடலெல்லாம் சிலிர்க்கிறது அல்லவா, நாடி
நரம்புகள் எல்லாம் முறுக்கேறுகிறது அல்லவா. உள்ளமெங்கும் ஓர் உணர்ச்சி அலை,
வீரமெனும் ஓர் உணர்வு அலை மெல்ல மெல்லப் பரவுகிறது அல்லவா.
கடித இலக்கியம் ஓர் அற்புதமான இலக்கியம்.
தொலை பேசி, மற்றும் அலைபேசியின் வரவால், நாம் முற்றாய் மறந்து போன ஓர் உன்னத
இலக்கியம்.
ஒவ்வொரு எழுத்தையும் அன்பில் தோய்த்து
எடுத்து, பாசமென்னும் வார்த்தைகளால் கோர்த்து, உறவுகளுக்குக் கடிதம் எழுதி எழுதி, உறவினை உயர்ந்த நிலைக்குக் கொண்டு
சென்று, நேசம் போற்றியவர்கள் நம் முன்னோர்.
பண்டித ஜவகர்லால் நேரு, சிறையில் வாடிய போதும்,
அயராமல் தளராமல், குறிப்புகள் கூட ஏதுமில்லாமல், தன் அன்பு மகளுக்கு, உலக வரலாற்றையே
கடிதங்கள் வழி வாரி வழங்கி, ஓர் மாபெரும் இலக்கியத்தைப் படைத்தவர் அல்லவா.
பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள், தமிழகத்தின்
மூலை முடுக்கெல்லாம் பரவி, புத்துணர்ச்சியை, புத்தம் புது எழுச்சியை உருவாக்க
வில்லையா.
எத்துனை எத்துனை அறிஞர்கள் கடிதங்கள் மூலம்
விழிப்புணர்வை, நாட்டுப் பற்றை, கடமை உணர்வை நமக்கு ஊட்டியிருப்பார்கள்.
இவர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார் ஒரு
இராணுவ வீரர்.
கர்னல்
பா.கணேசன்
அவர்களின்
எல்லைப்
புறத்தில் ஓர் இதயத்தின் குரல்
கடிதங்களால்
மட்டுமே கட்டமைக்கப் பெற்ற அற்புத நூல்.
அன்புத் தந்தைக்கும், பாசமிகு
அண்ணனுக்கும், நேசமிகு நண்பனுக்கும் எழுதியக் கடிதங்கள், நூலின் பக்கத்துக்குப்
பக்கம் பரவி இருக்கின்றன.
கடிதங்களைப் படிக்கப் படிக்க ஓர் சந்தேகம், மனதில்
எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. இவர் இராணுவ வீரரா அல்லது சங்க இலக்கியங்களைக்
கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டத் தமிழ்ப் பேராசிரியரா என்னும் ஓர் ஐயம்.
இரண்டும்தான் என நிரூபிக்கிறது இவரது செயலும், எழுத்தும்.
வாருங்கள் நண்பர்களே, இவர் எழுதிய
கடிதங்களில் நுழைந்து, எழுத்துக்களின் அருகாமையில் அமர்ந்து, சொற்கள் என்னும்
வாகனத்தில் ஏறி, இந்திய எல்லைப் புறங்களைக் கண்டு வருவோம்.
இராணுவம் என்னும் மகத்தான கட்டமைப்பை உளமார
உணர்ந்து வருவோம். வாருஙகள்.
கர்னல் பா.கணேசன்
படிப்பு மூளையில் ஏறாமல், உடலை மட்டும்
வளர்த்துக் கொண்டு இராணுவத்தில் சேர்ந்தவரல்ல.
பொறியாளர் பட்டம் பயின்றவர்.
பொதுப் பணித் துறையில், பொறியாளராய் நிரந்தரப்
பணியிடத்தில், பணியாற்றியவர்.
அரசின் பொறியாளர் பணியினை துச்சமாய்
மதித்து, தூக்கி தூர எறிந்துவிட்டு, நாட்டைக் காக்க இராணுவத்தில் இணைந்தவர்.
இவர் இராணுவத்தில் சேர்ந்தது, இவரது
வீட்டில் யாருக்கும் தெரியாது.
இராணுவத்திற்குத் தேர்வான பிறகு, இறுதி
கட்ட, மருத்துவ சோதனைகளுக்காக, பெங்களூர் இராணுவ மருத்துவ மனைக்குச் சென்ற பொழுது,
கிடைத்த ஓய்வு நேரத்தில்தான், தன் தந்தைக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார்.
தந்தைக்கு மட்டுமல்ல, தனது அன்புத் தோழன், ஆரூயிர்
நண்பன் அருணாசலத்திற்கும் ஓர் கடிதம் எழுதினார்.
அருமை
நண்ப,
நான் உன்னைப் பிரிகிறேன். என்னைப்
பாலூட்டிச் சீராட்டி வளர்த்தப் பெற்றோரைப் பிரிகிறேன். உற்றார் உறவினரைப்
பிரிகிறேன். இந்தப் பொன்னானத் தமிழ் நாட்டைப் பிரிகிறேன்.
ஆனால் இவை எல்லாம் இந்தியாவின் மானம் காக்க,
தமிழகம் ஈன்றெடுத்த தங்க மகன் என்று ஒரு காலத்தில் என் பெயர் அறியப்படலாம்.
அக்டோபர் 9 ஆம் தேதி அதிகாரிகள் பயிற்சிப்
பள்ளியில் சேர வேண்டும் என்பது உத்தரவு. பொதுப் பணித் துறையைப் பிரியப் போகிறேன்.
மீண்டும் தமிழகம் வரும் பொழுது, உன்னைச்
சந்திப்பேன்.
நட்புடன்,
பா.கணேசன்
கடிதங்கள்
தொடரும்