தாமே தமக்குச்
சுற்றமும், தாமே தமக்கு விதிவகையும்
யாம் ஆர் எமது
பாசம் ஆர் என்ன மாயம்
இவைபோக்க
கோமான் பண்டைத் தொண்டரோடும்
அவன் தன்
குறிப்பே துணைக்கொண்டு போம் ஆறு அமைமின்
பொய் நீக்கிப்
புயங்கன் ஆள் வான் பொன் அடிக்கே
திருவாசகம்
மகராஷ்டிரா மாநிலம் பூனேயில் ஆரம்ப காலப்
பயிற்சி.
இரண்டு மாதப் பயிற்சியிலேயே, கார்ப்பொரல்
என்னும் அணித் தலைவர் தகுதி திரு கணேசன் அவர்களை நாடி வந்தது.
இரண்டு வருடப் பயிற்சியானது, நாட்டின் அவசரத் தேவையினைக் கருதி ஆறு
மாதங்களாகக் குறைக்கப் பட்டது.
1964 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள்.
பயிற்சி முடிந்து இராணுவம் என்ற அற்புத
அமைப்பில் திரு கணேசன் இணைந்த நாள், இரண்டறக் கலந்த நாள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, திரு கணேசன் அவர்களின் குடும்பத்தினரால்
இயலவில்லை. ஆயினும் குடும்ப நண்பர்களான திரு ராஜாராமன் என்பாரும், திரு சீனிவாசன்
என்பாரும் வந்திருந்தனர்.
திரு கணேசன் அவர்களின் சீருடையின் தோள்களில்
2/LT என்ற தகுதியினைக் குறிக்கும் இரு நட்சத்திர
குறியீடுகள், தனி உறையில் மூடப் பட்டிருந்தன.
இசைக் கருவிகள் இன்னிசை முழங்க திரு
சீனிவாசனும் திரு இராஜாராமனும் திரு கணேசனின் இருபுறமும் நின்று, தோள்களில் மூடியிருந்த துணியினை நீக்கினர்.
2/LT கணேசன் முறைப் படி இராணுவத்தில் இணைந்தார்.
இந்திய இராணுவத்தின் பொறியாளர் பிரிவில்
அவசரக்கால கமிஷன் .56749 என்ற எண் திரு கணேசனுக்கு வழங்கப் பட்டது.
நண்பர்களே, இராணுவம் என்றாலே துப்பாக்கி
ஏந்திப் போரிடும் அமைப்பு என்றுதான், நம்மில்
பலர் நினைத்திருப்போம்.
போரிடுபவர்கள் மட்டுமே இராணுவத்தினர் அல்ல.
அதையும் தாண்டி பரந்து விரிந்தது இராணுவம்.
ஓரிரு நிமிடங்கள் இராணுவத்தின் அமைப்பினைப்
பற்றி, ஒரு பருந்துப் பார்வைப் பார்ப்போமா? வாருங்கள் நண்பர்களே.
இராணுவத்தின் உட்பிரிவுகள் அனைத்தையுமே, Arms மற்றும் Services என்னும் இரு பிரிவுகளில் அடக்கலாம்.
நேரடியாகப் போரில் பங்கு பெறுபவர்கள் ஒரு
பிரிவு. போரிடுபவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவுபவர்கள் மற்றொரு பிரிவு.
இராணுவத்தின் Arms பிரிவை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்
1.
டாங்குப் படை (Armored
Corps)
2.
பீரங்கிப் படை (Artillery)
3.
பொறியாளர் படை (Engineers)
4.
தொலைத் தொடர்பு (Signals)
5.
காலாட் படை (Infantry)
இதில் பொறியாளர் படையில் அதிகாரியானார் திரு கணேசன்.
ஒவ்வொரு படைப் பிரிவினருக்கும்
அவ்வமைப்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் ஒரு சொல் பயன்படுத்தப்படும்.
FORWARD
பொறியாளர்
பிரிவின் வார்த்தை
FORWARD
இவ்வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்தும்
பொறியாளர் பிரிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் எழுத்துக்களாகும்.
படைகளில் முன்னனிப் படைப் பிரிவே பொறியாளர்
பிரிவுதான்.
FORWARD
F – Fortification
போர் முனையில் பதுங்கு குழிகள் அமைப்பது
என்பது ஒரு அற்புதக் கலை.
ஒவ்வொரு படைப் பிரிவும் அவர்களுக்குத்
தேவையான பதுங்கு குழிகளை, அவர்களே அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் மலைப் பாங்கான பகுதிகளில், மலைகளை உடைத்து
பதுங்கு குழிகளை அமைத்துத் தருவது பொறியாளர் பிரிவே ஆகும்.
O
–Obstacle
போர்ச் சூழலில் எதிரிகள் ஏற்படுத்தி இருக்கும்
தடைகளைத் தகர்த்து, படையினருக்கு வழிகளை ஏற்படுத்தித் தருதல்.
நூற்றுக் கணக்கான சதுர கிலோ மீட்டர்
பரப்பிற்கு, எதிரிகள் நுழையாமல் கண்ணி வெடிகளைப் புதைத்து வைப்பதும், பெரிய பெரிய
ஆறுகளின் குறுக்கே, குறுகிய காலத்தில் பாலம் அமைத்துக் கொடுப்பதும் பொறியாளர்
பிரிவே ஆகும்.
R_ Roads and
Communication
ஒரே இரவுக்குள் 100 கிமீ தூரம் வரை சாலைகள் அமைத்து
அசத்துவதும் பொறியாளர் பிரிவே ஆகும்.
W- Water
Supply
இராணுவப் பிரிவு முழுமைக்கும் குடி தண்ணீர்
வசதி செய்ய வேண்டியது பொறியாளர் பணியாகும்.
அழ் குழாய் கிணறுகள் அமைப்பது, பாலை வனப்
பகுதியில் நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் தூரம் வரை குழாய் பதித்து தண்ணீர்
வழங்குவதும் பொறியாளர் பிரிவே ஆகும்.
A-Airfield
போர்க் காலங்களில், ஹெலிகாப்டர்களும், சிறிய
ரக விமானங்களும் இறங்குவதற்கு, துரிதகதியில் சம தளங்கள் அமைப்பதும் போர் முடியும்
வரை, இறங்கு தளங்களைப் பராமரிப்பதும் பொறியாளர் பிரிவே ஆகும்.
R –
Railways
போர்க் காலங்களில் உயிருக்குப் பயந்து ரயில்வே
தொழிலாளர்கள், பெரும் எண்ணிக்கையில், பணிக்கு வராமலேயே இருந்து விடுவர். அதுபோன்ற
சூழ்நிலைகளில் ரயில்வே துறையினைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு இயக்குவதும்
பொறியாளர் பிரிவே ஆகும்.
D- Demolition
வெடிப் பொருட்களைக் கையாலுவதில் தனிப்
பயிற்சி பெற்றவர்கள் பொறியாளர்கள். குறுகிய கால அவகாசத்தில், ஓரிடத்தில் பெரும்
சேதத்தை உண்டாக்குதல், ஒரு இயந்திரத்தின் முக்கிய பாகம் எது என்று கண்டுபிடித்து,
வெடி வைத்து அவ்வியந்திரத்தை செயலிழக்கச் செய்தல்
படைகள் பின் வாங்க வேண்டிய நிலை
ஏற்படுமானால், எதிரிப் படைகள் தொடராத வண்ணம், பாதைகளை, பாலங்களை வெடி வைத்துத்
தகர்த்தெறிவதும் பொறியாளர் பிரிவின் பணியே ஆகும்.
இத்தகு பொறுப்பு வாய்ந்த பொறியாளர்
பிரிவில், இளம் அதிகாரியாய் பொறுப்பேற்றார் திரு கணேசன்.
இவரது
முதல் பணி எங்கு தெரியுமா?
இந்திய
எல்லைப் புறங்கள்,
20.10.1964
அன்புடன்
அண்ணன் அவர்களுக்கு,
இமய மலையின் ஒரு பகுதியான கார்வார் மலை
மற்றும் குமவோன் மலைப் பகுதியில், சுமார் 12,000 அடி உயரத்தில் எங்களது படைப்
பிரிவு உள்ளது.
07 செப்டம்பர் 1964. எனது வாழ்வின் எல்லைப் புற
வாழ்க்கை ஆரம்பமான நாள். இரண்டு மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.
கடிதத் தொடர்பு ஒன்றுதான், நமது
எண்ணங்களின் பரிமாற்றங்களுக்கு வழி.
மீண்டும் எழுதுவேன்.
அன்புடன்,
பா.கணேசன்
கடிதங்கள்
தொடரும்