குருதியின் நதி
வெளிபரக்கவே
குடை இனம் நுரை என மிதக்கவே
கரி துணி படும்
உடல் அடுக்கியே
கரை எனஇரு புடை கிடக்கவே
கலிங்கத்துப் பரணி
இந்திய
எல்லைப் புறங்கள்,
5
செப்டம்பர் 1965
அன்புள்ள
அண்ணன் அவர்களுக்கு,
பதான்கோட் இராணுவ மருத்துவ மனையில்
இருந்துதான், இக்கடிதத்தை எழுதுகிறேன். போரின் தீவிரத்தால் மருத்துவ மனையே
அதிர்ந்து கொண்டிருக்கிறது.
இந்திய விமானப் படையின் விமானத் தளம்,
மருத்துவ மனைக்கு அருகில்தான் உள்ளது. இதனால் இந்திய வான் படை விமானங்களைத் தாக்கவரும்,
பாகிஸ்தானிய விமானங்களின் குண்டு ஓரிரு முறை மருத்துவ மனைக்குள்ளேயே விழுந்து
வெடித்தது.
இராணுவ வாழ்வில் ஒரு வருடம் மட்டுமே பணி
அனுபவம் பெற்ற நான், ஒரு போர்க்களத்தைப் பார்த்து விட்டேன்.
இந்தப் போர் எத்தனை நாட்களுக்குத் தொடரும்
என்று தெரியவில்லை.
என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை. எனது
அடுத்த கடிதத்தை, எந்த இடத்தில் இருந்து, எந்த சூழ்நிலையில் உங்களுக்கு எழுதுவேனோ
தெரியாது.
வீட்டில் யாருக்கும் நான் அடிபட்டது பற்றிச்
சொல்ல வேண்டாம். அனாவசியமாகக் கவலைப் படுவார்கள்.
சூழ்நிலை சற்று தெளிவாகட்டும்.
மீண்டும் எழுதுவேன், எழுதுவேன் என
நினைக்கிறேன்.
அன்புடன்,
பா.கணேசன்
இராணுவ
மருத்துவமனை,
13.9.1965
அன்புடன்
அண்ணன் அவர்களுக்கு,
நேரடியாகப் போரில் பங்குகொள்ள முடியா
விட்டாலும், மிகக் கொடுமையான முதல் நாலைந்து நாட்கள், நான் போர் முனைப்
பயங்கரத்தைக் கண்டு விட்டேன்.
உண்மையில் பேர்க்களத்தின் ஆரம்ப நாட்கள்தான்
கொடுமையானவை. அதன்பின் போர் என்பது எதிரிகளைக் கொல்லும், ஒரு பழகிய வேலை
போலாகிவிடும்.
செப்டம்பர் 9, ஒரு தனி தொடர் வண்டியை
ஏற்பாடு செய்து, அதில் பயணத்தைத் தாங்கக் கூடிய நிலையில் இருப்பவர்களை எல்லாம்
அனுப்பி வைத்தார்கள்.
தில்லி வந்து சேர்ந்துவிட்டேன். கடந்த 10 நாட்களாக
மருத்துவ மனையில் அனாதைபோல் கிடக்கிறேன். எனது படைப் பிரிவினர் போர்க் களத்தில் இருக்கிறார்கள். இனி எப்பொழுது
அவர்களைக் காண்பேன் என தெரியவில்லை.
சென்னைக்குச் செல்ல உத்தரவு
கொடுத்திருக்கிறார்கள். நான்கு வாரம் கழித்து, சென்னை இராணுவ மருத்துவ மனையில்
ஆஜராக வேண்டும்.
போர்க் களத்தில் காயம் பட்டதற்காக நான்
பெருமைப் படுகின்றேன். நான்கு வாரம் சென்று, மீண்டும், என் படைப் பிரிவு செல்வேன்.
அதற்குள் போர் முடிந்து விடுமோ என்னவோ?
அன்புடன்
பா.கணேசன்
நான்கு வாரங்கள் கடந்த நிலையில் சென்னை
இராணுவ மருத்துவ மனையில், உடல் தகுதித் தேர்வில், தகுதியானவ்ர் எனச்
சான்றளிக்கப்பெற்று, மீண்டும் தனது படைப் பிரிவினருடன் இணைந்தார் திரு கணேசன்.
இந்திய எல்லைப் புறங்கள்,
சார்வா
– பாகிஸ்தான்
31.10.1965
அன்பு
அண்ணன் அவர்களுக்கு,
எனது படைப் பிரிவினர், இந்திய இராணுவத்தின் சேமப்
படையாகச் செயல்பட்டு வருகின்றனர்.
போரில் இரு படைப் பிரிவுகள், பல இடங்களில்
ஒன்றுடன் ஒன்று மோதும்போது, சில இடங்களில் பின்னடைவும், சில இடங்களில் வெற்றியும்
பெறலாம்.
எந்த இடம் நமது இராணுவத்திற்கு முக்கியம்
என்று கருதப்படுகிறதோ, அந்த இடத்தில், தாக்குதலை மேலும் விரிவு படுத்த, சேமப் படை
உடனடியாகப் போரில் ஈடுபடும்.
அதன்படி பதான் கோட்டிற்கும், ஜம்முவிற்கும்
நடுவில் ஒரு இடத்தில், மேற்கு நோக்கிய எல்லைப் புறத்தில், நமது படை பெரும் வெற்றி
அடைந்தது.
அந்த வெற்றியை மேலும் பலப்படுத்த எனது படைப்
பிரிவினர் இங்கு நுழைந்தார்கள்.
மகராஜ்கே, சார்வா, பில்லோரா, சோவின்டா என்ற
பாகிஸ்தானிய நகரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்தன.
எனது படைப் பிரிவில் பாகிஸ்தானிய வான்
படைத் தாக்குதலில் 7 பேர் இறந்து விட்டார்கள்.
இவர்களது தியாகம் தன்னிகரற்ற்து. உண்மையில்
எங்களது படைப் பிரிவில் வீராவேசமான போர் முறைகளைப் பார்க்க முடியாது. ஏனெனில்
போரிடுவது எங்களது முக்கிய பணி அல்ல.
படைப் பிரிவினருக்கு உதவ வேண்டியதுதான்
எங்களது வேலை.
உதாரணமாக, எதிரி ஆற்றின் ஒரு கரையில் இருந்து
கொண்டு, நம் மீது குண்டுமழை பொழிகின்றான் என்றால், அந்த குண்டு மழையினைப்
பொருட்படுத்தாமல் நாங்கள் பாலம் அமைப்போம்.
அல்லது மிதவைகளை இயக்கி நமது வீரர்களை
அக்கரை சேர்ப்போம்.
பாகிஸ்தானிய கிராமங்களில் உள்ள கிணறுகளைப்
பரிசோதித்து, தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றவைதானா என்று பார்த்து, அதை மோட்டார்
வைத்து வெளியில் தொட்டிகளில் நிரப்புகிறோம்.
படைப் பிரிவினர் அவர்களுக்கு ஒதுக்கிய
நேரப்படி, வந்து தண்ணீர் எடுத்துச் செல்கிறார்கள்.
மேலதிகாரிகளின் போர் அலுவலகம், மருத்துவமனை
போன்ற இடங்களுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்குகின்றோம்.
இதுபோன்ற பலவிதமான பொறியியல் சம்பந்தப்பட்ட
வேலைகள்தான் எங்களுடையது.
இன்னும் பல நாட்களுக்குப் போர் முடியும்வரை
பகைவர்கள் நாட்டில்தான் எங்களது பாசறைப் பயணம்.
மீண்டும் எழுதுவேன்.
அன்புடன்,
பா.கணேசன்
பல மாதங்கள் கடந்த நிலையில், ஓர் கடிதம்,
கடிதமல்ல ஆணை, திரு கணேசன் அவர்களைத் தேடி வந்தது.
1966ஆம்
ஆண்டு சனவரி 9 ஆம் நாள் முதல் உத்திரப் பிரதேசம், ரூர்க்கியில் அமைந்துள்ள
பொறியியல் பல்கலைக் கழகத்தில் மூன்று மாதப் பயிற்சி.
திரு கணேசன் ரூர்க்கி சென்றார்.
இரண்டு மாதங்கள் பயிற்சியில் கடந்த
நிலையில், அடுத்த உத்தரவு வந்தது.
பயிற்சி
முடிந்தவுடன் அஸ்ஸாம் மாநிலம் செல்லவும்
1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 12, அஸ்ஸாம் மண்ணில்
காலடி எடுத்து வைத்தார் திரு கணேசன்.
அஸ்ஸாமில் மூன்றாண்டுகள் கடந்த நிலையில்,
திரு கணேசன் அவர்களை மேகாலயாவின் ஷில்லாங் அழைத்தது.
1969
ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள்,
திரு
கணேசன் இராணுவத்தின்
நிரந்தர
அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதன் காரணமாக, Emergency Commission 56749 என்றிருந்த, இவரது இராணுவப் பதிவு எண்
Indian
Commission
21773
என மாற்றப் பட்டது.
1969 நவம்பர் 12 அன்று அடுத்த மகிழ்வான
செய்தி வந்தது.
இராணுவப்
பொறியியல் கல்லூரியில், அடுத்த ஆண்டு மே மாதம் முதல் மூன்றாண்டு பி.டெக்., பட்டப்
படிப்புப் பயில திரு கணேசன் தேர்வு செய்யப் பெற்றுள்ளார்.
இது மட்டுமல்ல பதவி உயர்வும் தேடி வந்தது.
1970 பிப்ரவரி 23. சன்னா நல்லூரில் இருந்து
கொடுக்கப் பெற்ற தந்தி, மேகாலயாவில், திரு கணேசன் அவர்களின் அலுவலகக் கதவைத்
தட்டியது.
அம்மாவின்
உடல் நிலை கவலைக்கிடம். உடனே புறப்பட்டு வரவும்
கடிதங்கள்
தொடரும்