28 டிசம்பர் 2015

விக்ரமம்



     நண்பர்களே, கடந்த 4.1.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 7.00 மணியளவில், என் அலைபேசி அழைத்தது. மறுமுனையில் சோழ நாட்டில் பௌத்தம் முனைவர் பா.ஜம்புலிங்கம்.

     இருபதாண்டுகால நண்பர். உழைப்பின் உறைவிடம். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தட்டச்சராய் நுழைந்து, பணியோடு கல்வியிலும் உயர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, இன்று கண்காணிப்பாளராய் பணியாற்றி வருபவர்.


     ஆறு நூல்களின் ஆசிரியர். தமிழ்ப் புலமை மிக்கவர். தமிழ்ப் புலமைக்கு நிகராக ஆங்கிலப் புலமையினையும் வளர்த்துக் கொண்டவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நற்புலமை பெற்றவர்கள், அருகி வரும் இக்காலத்தில், இரு மொழிகளிலும் உயர்ந்து நிற்பவர்.

      கடின உழைப்பு என்றால் என்ன என்பதை, இவரிடம் நாம் கற்றுக் கொள்ளலாம்.

      சோழ நாட்டில் பௌத்தத்தின் அடிச்சுவடுகளைத் தேடித் தேடி, அயராது பயணித்துக் கொண்டே இருப்பவர்.

     இவரால் உலகின் பார்வைக்கும், கவனத்திற்கும் வந்த பௌத்தச் சிற்பங்கள் ஏராளம், ஏராளம்.

      நண்பர்களே, இவரை அலைபேசியில் அழைத்து, பேருந்தே சென்றறியாத ஓர் ஊரில், ஓர் இடத்தில், ஒரு சிலையினைக் கண்டேன், அது புத்தர் சிலை போலத்தான் தெரிகிறது என்று சொல்வீர்களேயானால், அடுத்த  நாள் அவ்விடத்தில் இருப்பார்.

      பேருந்து இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, மிதிவண்டியில் செல்வார். அதுவுமில்லாவிட்டால், நடந்தும் செல்வார். அச்சிலையினைக் காணாமல் வீடு திரும்பமாட்டார்.

      இன்று ஏதேனும் அலுவல் இருக்கிறதா, இல்லையெனில் பட்டுக்கோட்டை வரை சென்று வருவோமா என்றார்.

      எதற்கு என்று கூட கேட்கவில்லை. வருகிறேன் என்றேன்.

      காலை 8.30 மணியளவில் வாடகைக் காரில் இருவரும் புறப்பட்டோம்.எனது முன்னாள் மாணவர் தினேஷ் அவர்களின் வாடகைக் கார். தினேஷ் வண்டி ஓட்டி வந்தார்.

       தமிழ்ப் பல்கலைக் கழகப் புல விருத்தகத்திற்குச் சென்றோம்.

       தஞ்சையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பொருட்டு, தஞ்சைக்கு வந்திருந்த, முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் நண்பர் காத்திருந்தார்.

       நண்பர்களே, தமிழ் மொழிக்கு அளப்பரிய தொண்டுகள் பலவற்றைச் செய்தவர், செய்து வருபவர் இவர்.

       மின்சாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிபுரியும் காலத்திலும், ஓய்வு பெற்ற பிறகும், ஓயாமல் அலைந்து கொண்டே இருப்பவர். தேடிக் கொண்டே இருப்பவர்.

        கோயில், குளம், பாழடைந்த அரன்மணை, மலைக் குகைகள், காடுகள் என அலைந்து கொண்டே இருப்பவர். கல்வெட்டுக்களைத் தேடித் தேடி அயராது பயணித்துக் கொண்டே இருப்பவர்.

        சொந்த செலவில் கள ஆய்வு செய்து, 50 க்கும் மேற்பட்ட சோழர் கால மற்றும் பல்லவர் கால கல்வெட்டுக்களையும், 100 ற்கும் மேற்பட்ட சோழர் கால மற்றும் பல்லவர்கள் காலச் சிலைகளையும் கண்டு பிடித்தவர்.

        பௌத்தம் மற்றும் சமணம் தொடர்பான ஆய்வுகளில் பேரார்வம் காட்டி வருபவர்.

       கல்வராயன் மலை மக்கள், வழக்கிழந்த தமிழ்ச் சொற்கள், வரலாற்றில் திருப்பாதிரிக் கோயில், செஞ்சிப் பகுதியில் சமணம், காளி வழிபாடு, தமிழர் வழிபாட்டில் சங்கு முதலான பல நூல்களின் ஆசிரியர்.

அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி

      சிரித்த முகம். பல்லாண்டுகள் நெருங்கிப் பழகியவரைப் போன்ற ஓர் உணர்வினை சில நொடிகளில் ஏற்படுத்திவிட்டார்.

      தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இருந்து மூவருமாகப் புறப்பட்டோம்.

      தஞ்சாவூர், கும்பகோணம் சாலையில் பயணித்து, பசுபதி கோயிலில் இடது புறம் திரும்பினோம்.



புள்ள மங்கை பசுபதீஸ்வரர் கோயில்.

     பண்டைக்காலத்தில் திருவாலந்துறை மகாதேவர் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலாம் பராந்தகசோழன் (கி.பி.907-955) காலத்தைச் சேர்ந்ததாகும்.  ஒரு சிறு கிராமத்தில், ஒரு சிறிய குறுகலான தெருவின் முனையில் அமைந்திருந்தது.

       உள்ளே நுழைந்தோம். பழமையினை, தொன்மையினை கோயிலின் ஒவ்வொரு பகுதியும் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

      கோயிலின் கருவறையின் பின்பக்க, வெளிச் சுவற்றில் ஓர் சிற்பத்தைச் சுட்டிக் காட்டினார்.

     
  சிவபெருமானின் இடது புறமும் வலது புறமும், பிரம்மன் மற்றும் விஷ்ணுவின் சிற்பங்கள். வேறு எந்த கோயிலிலும் காணக் கிடைக்காத காட்சி இது என்றார்.

     பாற்கடலில் படுத்த சிலையில் உள்ள, விஷ்ணுவைத்தான் சிற்பங்களில் கண்டிருப்போம். ஆனால் இக்கோயிலிலோ, அமர்ந்த நிலையில் விஷ்ணு.

      அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொண்டே இருந்தார்.. வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

     அடுத்து பட்டுக் கோட்டை நோக்கிப் பயணித்தோம். பட்டுக் கோட்டைக்கு முன்பே, பாப்பா நாட்டிற்கும் சிறிது முன்னர், இடது புறம் திரும்பினோம். மதுக்கூர் செல்லும் வழி இது. மதுக்கூர் சென்று, விக்ரமம் சென்றோம்.

      விக்ரமம் ஓர் அழகிய சிற்றூர்.

      விக்ரமத்தின் மையப் பகுதியில் வண்டியை நிறுத்தி கீழிறங்கினோம். ஜம்புலிங்கம் அவர்கள் ஒரு தோட்டத்தைச் சுட்டிக் காட்டினார்.
    

தோட்டத்தின் ஒரு மூலையில் அமர்ந்த நிலையில ஒரு புத்தர்.

      முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களால் கண்டுபிடிக்கப் பெற்று, உலகிற்கு அறிவிக்கப் பெற்ற புத்தர் சிலை.

      ஊருக்கு வெளியில் இருந்த இந்த புத்தர் சிலை, இன்று, ஊரின் மையப் பகுதியில். சிலையைச் சுற்றிலும் செடி கொடிகள் மண்டிக் கிடந்தன.

    

ஊரின் புழுதியெல்லாம் புத்தரின் மேல் படிந்து, புத்தர் வெண்மையாகக் காட்சியளித்தார்.

    முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், பையில் இருந்து, தையல் கலைஞர்கள் பயன்படுத்தும், டேப் ஒன்றை வெளியில் எடுத்து, தீபாவளித் திருநாளுக்காக, புது உடையினைத் தைக்கக் கொடுக்கும் பொழுது, தையற்காரர்,  நம்மை அளவெடுப்பார் அல்லவா, அதுபோல புத்தரை அளவெடுக்கத் தொடங்கினார்.

     






அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள், குறிப்பேடு ஒன்றில், அளவுகளைக் குறித்துக் கொள்ளத் தொடங்கினார்.

        வியந்து போய் இருவரையும் மற்றும் புத்தரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே நின்றேன்.

பின்னர் அருகில் உள்ள வீட்டில், ஒரு வாளியில் தண்ணீர் வாங்கி வந்து, புத்தர் சிலையினைக் குளிப்பாட்டி சுத்தம் செய்தனர். புத்தர் பளிச் சென்று காட்சியளித்தார். புத்தரின் முகத்தில் கூடுதலாய் ஒரு சிறு புன்னகை.

      


புத்தரின் தலையில் உள்ள, முடி பின்னல்களின் எண்ணிக்கையினை எண்ணினர். புத்தரின் கரங்களில் உள்ளங்கையில் பொறிக்கப் பெற்றிருந்த, டைமண்ட் வடிவ உருவத்தைக் கண்டு பதிவு செய்தனர்.

       ஆய்வாளர்கள் இருவரோடும் இணைந்து மேற்கொண்ட இப்பயணம், எனக்கு புதியதொரு பாதையினைக் காட்டியது.

      வரலாற்றினை நாம் மறந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை உணர்த்தியது.

       நண்பர்களே, நாமெல்லாம் கோயிலுக்குச் செல்கிறோம். ஆனால் கோயிலில் நுழைந்ததும், நாம் என்ன செய்கிறோம். நமது கவலைகளை, பிரச்சினைகள் இறைவனிடத்துக் கூறிப் புலம்பி, காப்பாற்று காப்பாற்று என புலம்புகிறோம்.

       கோயிலுக்குச் செல்வதில் கூட நம் சுயநலமல்லவா வெளிப்படுகிறது.

        நாம் என்றாவது கோயிலைக் கூர்ந்து கவனித்திருக்கிறோமா. கோயில் சிலைகள் கூறும் வரலாற்று உண்மைகளை செவி மடுத்துக் கேட்டிருக்கிறோமா.

       கோயிலின் ஒவ்வொரு கல்லும், ஆயிரமாயிரம் வரலாற்றுச் செய்திகளை, மண்ணில் மூடி மறைந்த நிகழ்வுகளை, நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் வல்லமை படைத்தது அல்லவா?

      விடுமுறை நாளினை பயனுள்ளதாக மாற்றிய, தமிழகத்தின் இருபெரும் ஆய்வாளர்களுக்கும் நன்றிகூறிய படியே வீடு திரும்பினேன்.