09 செப்டம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 7



பல்கலைக் கழக நிர்வாகமானது, பல்கலைக் கழக வளாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே உதவியாளரை வழங்கி உதவும்

    படித்தவுடனேயே எனக்குப் புரிந்துவிட்டது. நான் தங்கியிருந்த விடுதியின் உதவியாளர், என்னைப் பல்கலைக் கழகத்திற்கு அழைத்துச் செல்வது, அருகிலுள்ள தெருக்களைச் சுற்றிக் காட்டுவது போன்ற செயல்களில் எனக்கு உதவியாக இருந்ததார். அது பல்கலைக் கழக நிர்வாகத்திற்குப் பிடிக்கவில்லை என்பது புரிந்தது.


     பார்க்கும் திறன் இல்லாவிட்டாலும், நான் தனியாக எல்லா இடங்களுக்கும் பயணம் செய்யக்கூடிய திறமை படைத்தவன்தான். ஆனாலும் நியூயார்க் மண்ணை மிதித்து ஓரிரு நாட்களே ஆன நிலையில், அங்குள்ள சாலைகள் பற்றியோ, போக்குவரத்து வழி காட்டி விளக்குகள் பற்றியோ தெரியாதவனாக இருந்தேன்.

     இந்நிலையில்தான் பல்கலைக் கழகம் என்னை நடுக்காட்டில் விடுவதைப் போல் விட்டுவிட்டது.

     ஒரு நிமிடம் யோசித்தேன். அடுத்த நொடி அந்த அலுவலகத்தின் தொலைபேசி மூலமாக, IIE (Institute of International Education ) நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, எனது நிலையினைத் தெரிவித்தேன்.

     தொலைபேசியின் மறு முனையில் பேசிய திரு கிரகரி மரினோ என்பவர், எனக்குத் திங்கட்கிழமையன்று அமெரிக்கச் சாலைகள் பற்றி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

     திங்கட் கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. இவரோ திங்கட் கிழமைதான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதாக கூறுகிறார். வேறு வழி.

    

இதற்கிடையே லைட் ஹவுஸ் இண்டர்நேசனல் நிறுவனத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் ஒருவர், திங்கட் கிழமை காலையே என்னைச் சந்தித்து, சாலைகள் மற்றும் சாலைகளின் வழிகாட்டி விளக்குகள் பற்றி, செய்முறை விளக்கத்தின் மூலமாக பயிற்சி அளித்தார்.

     அவர் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி, அன்று தன்னந்தனியாகவே, பல்கலைக் கழகத்திற்கும் சென்று விட்டேன்.
   

சில நாட்களிலேயே அமெரிக்கச் சாலைகள் எனக்குப் பழகிவிட்டன. பல்கலைக் கழகம் நோக்கிய எனது தினசரி நடைப் பயணத்தை யாருடைய உதவியும் இன்றி தொடர்ந்தேன்.

      ஆனாலும் தங்கியிருந்த இடம்தான் எனக்கு வசதியாய் அமையவில்லை,

      நண்பர்களே, நான் தங்கியிருந்த இடத்தைப் பார்ப்தற்கு முன், அமெரிக்க  வீடுகளைப் பற்றி ஒரு பருந்துப பார்வைப் பார்ப்போமா.

     அமெரிக்க வீடுகளை டார்மெண்ட்டரி, அப்பார்ட்மெண்ட், ஸ்வீட் மற்றும் காண்டிமோனியம் என வகைப் படுத்தலாம்.

      அப்பார்ட்மெண்ட் என்பது ஒன்று அல்லது இரண்டு படுக்கை அறைகள் கொண்டதாகும். இது தவிர ஒரு சமையலறை, ஒரு குளியல் அறை, மற்றும் ஒரு பொது ஹால் இருக்கும்.

      டார்மெண்ட்டரி என்பது பல அறைகளைக் கொண்ட ஒரு பெரிய கட்டிடம் ஆகும். ஒவ்வொரு  அறையிலும் ஒரு குளியல் அறை மற்றும் உடைமாற்றிக் கொள்ள ஒரு அறை இருக்கும்.

    டார்மெண்டரியில் சமையலறை இருக்காது. நான் கேட்டதோ சமையல் அறையுடன் கூடிய விடுதி. அவர்கள் கொடுத்ததோ சமையல் செய்ய வசதி இல்லாத டார்மெண்ட்டரி.

     இவனுக்கு எதற்கு சமையலறையுடன் கூடிய விடுதி? என நீங்கள் யோசிப்பது எனக்குப் புரிகிறது நண்பர்களே.

      உங்களுக்கு ஒரு செய்தி சொல்லட்டுமா? எனக்குச் சமைக்கத் தெரியும்.

      பார்வையில்லாவிட்டால் என்ன? எனக்குச் சமைக்கத் தெரியும்.

      அமெரிக்கா செல்வது என்று முடிவெடுத்த உடனேயே எனக்குத் தெரிந்து விட்டது. உதவித் தொகையினை மட்டும் வைத்துக் கொண்டு, மூன்று வேளையும் உணவு விடுதியிலேயே சாப்பிட்டுக் காலம் கழிப்பது என்பது இயலாதது என்பது புரிந்து விட்டது.

     எனவே அமெரிக்கா புறப்படும் முன்பே, வீட்டிலேயே சமைக்கக் கற்றுக் கொண்டேன். அது மட்டுமல்ல, விமானம் ஏறும்போதே, சமையல் பாத்திரங்களையும், மளிகைப் பொருட்களையும் எடுத்துக் கொண்டுதான் கிளம்பினேன்.

      விடுதிக்குச் சென்ற பிறகுதான் அதில் சமையலறை இல்லை என்பது தெரிந்தது.

      விடுதி காப்பாளரிடம் முறையிட்டேன். சமையலறை இல்லாவிட்டாலும் மைக்ரா வேவ் வைத்துக் கொள்ளலாம் என்றார்.

     அடுத்த நாளே மைக்ரோ வேவ் அடுப்பு வாங்கி, சமையல் செய்ய முற்பட்டேன்.

     ஆனால் அடுப்பு பாதியிலேயே நின்று விட்டது. காரணம் புரியவில்லை. விடுதிக் காவலரை அழைத்தேன்.

      இவர் சமைக்கத் தெரிந்தவர். அடுப்பைப் பார்த்தவுடனேயே கூறினார். இந்த அடுப்பிலா சமைத்தீர்கள், இவ்வளவு நேரம் இது வெடிக்காமல் இருந்ததே உங்கள் அதிர்ஷ்ட்டம்தான் என்றார்.

      விவரம் புரியாமல் ஏன் என்று கேட்டேன்.

     மைக்ரோ வேவ் அடுப்பில் நெகிழி மற்றும் கண்ணாடிகளால் ஆன பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், அதுவும் சமைத்த உணவுகளைச் சூடு படுத்த மட்டுமே பயன்படுத்தலாம், சமையல் செய்ய முடியாது என்றார்.

       சமையல் பிரச்சினை மட்டுமல்ல, விடுதி வாடகை பிரச்சினையும் புதிதாய் முளைத்தது.

     விடுதியின் மாதாந்திர வாடகை 950 டாலர். ஆனால் ஒரு வருட வாடகையை ஒன்பது மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்றனர்.

      அதாவது ஒவ்வொரு மாதமும் 1050 டாலர் வாடகை செலுத்தியாக வேண்டும். ஃபோர்டு நிறுவனத்தின் மாத உதவித் தொகையே 1530 டாலர்தான். அதில் வாடகைக்கே 1050 டாலர் செலுத்திவிட்டால், மற்ற செலவுகளுக்கு என்ன செய்வது? எங்கே போவது?

      எனவே வேறு வீடு பார்ப்பது என்று முடிவு செய்தேன்.

      ஒரு நாள், எனது வகுப்பு முடிந்த நிலையில், எனது வகுப்புத் தோழி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் பெயர் வெண்டி வாஷிங்டன்.

    அவருடைய தந்தை இந்தியாவில் பல ஆண்டுகள் பணி புரிந்தவர் என்பதால், இந்தியர்கள் மீது அவருக்குத் தனிப் பாசம் உண்டு.

      புரூக்லீன் பரோ என்னும் இடத்தில், வெண்டி வீட்டிற்கு அருகிலேயே ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியேறினேன். இதனால் அறை வாடகை பிரச்சினைத் தீர்ந்தது. நானே சமையல் செய்யவும் தொடங்கினேன். சாப்பாட்டுச் செலவும் குறைந்தது.

        ஒவ்வொரு வாரமும் எனது குடும்பத்தினரிடம் அலைபேசி மூலம் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தேன். ஒவ்வொரு முறை பேசும் பொழுதும் குடும்பத்தினர் அனைவரிடமும் பேசுவேன்.

      செப்டம்பர் மாதக் கடைசியில் இருந்து, தாத்தா என்னுடன் பேசவே இல்லை. ஒவ்வொரு முறை பேசும் பொழுதும், அவருக்கு உடல் நலமில்லை, அது, இது என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லத் தொடங்கினார்கள்.

    எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இறுதியாக நவம்பர் 28ஆம் தேதி பேசும் பொழுது, தாத்தாவுடன் பேசியே ஆக வேண்டும் என வற்புறுத்தத் தொடங்கினேன். அப்பொழுதுதான் எனது அம்மா, அந்த உண்மையைப் போட்டு உடைத்தார்.

தாத்தா இறந்து விட்டார்.

                                                     தொடர்ந்து பேசுவேன்