05 செப்டம்பர் 2016

தியாகத் திருநாள்


    

ஆண்டு 1936, நவம்பர் மாதம் 18 ஆம் நாள்.

     இரவு மணி 11.15

     தூத்துக்குடி காங்கிரஸ் அலுவலகம்.

     இரவு நேரத்திலும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பரபரப்புடன் காணப்படுகிறது.

      அலுவலகத்தின் மைய அறையில் அம் மனிதர் ஓர் கட்டிலில் கண்மூடிப் படுத்திருக்கிறார். கட்டிலைச் சுற்றிலும் கவலை தோய்ந்த முகங்கள்.

     அம் மனிதர் உறுதியாகக் கூறிவிட்டார். என்னால் வீட்டில் படுத்திருக்க முடியாது. என் இறுதி மூச்சு, காங்கிரஸ் அலுவலகத்தில்தான் பிரிய வேண்டும். தூக்கிச் செல்லுங்கள் என்னை அலுவலகத்திற்கு. உறுதியாகக் கூறிவிட்டார்.


     இதோ கட்டிலில். மெதுவாக, மிக மெதுவாக சற்றுக் கடினப் பட்டுத்தான் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்.

     இன்னும் சற்று நேரம்தான்.

     அம்மனிதருக்குப் புரிந்து விட்டது.

     சுதந்திரக் காற்றைச் சுவாசிக்காமலே, தன் மூச்சு முடியப் போகிறது என்பது அம் மனிதருக்குப் புரிந்து விட்டது.

     மெல்லக் கண் திறக்கிறார்.

     கண்கள் யாரையோ தேடுகின்றன.

    கட்டிலைச் சுற்றி வட்டமிட்டக் கண்கள், ஒருவரிடம் வந்ததும் நிற்கின்றன. அந்நபரைக் அருகே வருமாறு கண்களாலேயே அழைக்கிறார்.

      காங்கிரஸ் இயக்கத் தொண்டர் திரு சிவகுருநாதன் என்பார், தம்மை அழைப்பதை உணர்ந்து, கட்டிலை நெருங்கித் தலை குனிகிறார்.

      கட்டிலில் படுத்திருக்கும் மனிதர், அம்மாமனிதர் மெதுவாய், மிக மெதுவாய் சொற்களை உதிர்த்தார்.

பாடு, பாரதியின் அந்தப் பாடலைப் பாடு.

  அடுத்த நொடி, சிவகுருநாதனின் கம்பீரக்குரலில், பாரதியின் பாடல், அறை முழுவதும் ஓங்கி ஒலிக்கத் தொடங்குகிறது.

என்று தணியும் இந்த சுதந்திரதாகம்?
   என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைக்கை விலங்குகள் போகும்?
   என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?

என்று தணியும் இந்த சுதந்திரதாகம்?
   என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

    பாடல் முடிவுற்ற போது. அம்மாமனிதரின் மூச்சு அடங்கியிருந்தது. இறுதி மூச்சு பிரிந்திருந்தது.
சுதந்திர தேசத்தைக் காணாமல் போகிறோமே
என்ற ஒரே ஏக்கத்துடன்
கண்மூடிய அம்மனிதர், அம் மாமனிதர்.
அடிமை இந்தியாவில்,
தாயின் கருவறையில் இருந்து வெளிவந்து
முதன் முதலாய் சுவாசிக்கத் தொடங்கிய நாள்
5.9.1872.
ஆம்
இன்று செப்டம்பர் 5
தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும்
இத்தேசத்திற்கு ஈந்த, அம்மனிதர், அம் மாமனிதர்


கப்பல் ஓட்டியத் தமிழர்
செக்கிழுத்தச் செம்மல்

வ.உ..சிதம்பரனார் அவர்களின்
பிறந்த நாள், பிறந்த நன்நாள் இன்று

செக்கிழுத்தச் செம்மலின்
நினைவினைப் போற்றுவோம்.
----
ஆசிரியர் தினமும் இன்றுதான்
ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.