படிப்பு என்பதே வேலை வாய்ப்பிற்காகத்தான் என்று
எண்ணி, மதிப்பெண்களை மட்டுமே நாடிச் செல்லும் மாணவர்கள், தங்கள் வாழ்வியலை, வாழ்வின்
மேன்மையை உணராதவர்களாகவே மாறிப் போகிறார்கள்.
இதன் மற்றொரு
பக்க விளைவாய் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போய்விட்டன. தாத்தா, பாட்டிகள் எல்லாம்
இன்று தூரத்து உறவுகளாக மாறிப் போய்விட்டார்கள்.
கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவர்களாய்
இருப்பதால், தங்கள் பிள்ளைகளைக் கூட சரிவர கவனிக்காமல் ஊதியத்தைத்தேடி ஓடுவதிலேயே,
தங்களின் பொன்னான நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
பணம் பெருகிக் கொண்டிருக்கிறது.
குடும்ப உறவுகளோ குறைந்து கொண்டே இருக்கிறன. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள, நல்லவற்றைப்
போதிக்க, குட்டிக் குட்டிக் கதைகளைச் கூறி நல்வழிப்படுத்த வீட்டில் தாத்தாக்கள் இல்லை,
பாட்டிகள் இல்லை.
இதன் பயனாய் ஒன்றாம் வகுப்பிற்கு முன்பே, யு.கே.ஜி
வந்தது. பின் எல்.கே.ஜி., வந்தது. பின் தொடர்ந்தே பிரி கே.ஜி.,யும் வந்தது. இன்று டே
கேர் (Day Care) பள்ளிகளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன, பெருகிக் கொண்டே இருக்கின்றன.
இந்நிலை மாற வேண்டும், மாறியே
ஆக வேண்டும். இந்தியா வல்லரசாக மாறிப் பயனில்லை, இந்தியா நல்லரசாக மாற வேண்டும். இதற்கான
வித்து பள்ளிகளில்தான் விதைக்கப்பட வேண்டும்.
தரமான கல்வி. அனைவருக்கும் பொதுவானக் கல்வி.
மதிப்பெண்களை மட்டுமே துரத்தாத கல்வி, இதுவே இன்றைய தேவை.
புதிய கல்விக் கொள்கை 2016
பயனுள்ள கருத்துக்கள் பலவற்றை
உள்ளடக்கியதாக இருப்பினும், சில கருத்துக்களில், சில முடிவுகளில் மாற்றம் வேண்டும்
என்பதே என் போன்றோரின் விருப்பமாக, எதிர்பார்ப்பாக உள்ளது,
கொள்கை வடிவமைப்பின் தொடக்கமே, பள்ளிக்கு முந்தையக்
கல்வியில்தான் தொடங்குகின்றது.
கல்வித் துறையில் உலகிலேயே சிறந்து
விளங்கும் நாடான, பின்லாந்தில், ஆறு வயதில்தான் கிண்டர் கார்ட்டன் பள்ளிகளில் சேர்க்கவே
முடியும்.
ஆனால் நம் நாட்டில், ஓடி ஆடி மகிழ்ந்திருக்க
வேண்டிய மழலைகளை 4 வயதிலேயே பள்ளி என்னும் வேலிக்குள் அடைப்பது, சரியானச் செயலாகத்
தோன்றவில்லை.
படிக்கும் வயதில் வேலைக்குச் செல்லும், குழந்தைத்
தொழிலாளர்களை மீட்டெடுத்து கல்வி புகட்டுவது அரசின் கடமையல்லவா. அரசே குழந்தைத் தொழிலாளர்கள்
முறையினை ஊக்குவிக்கலாமா?
கல்வி என்பது வாழ்க்கையைக் கட்டியெழுப்புகிற,
மனிதரை உருவாக்குகிற, பண்பு நலன்களை உடையதாக இருக்க வேண்டும் என்ற விவேகானந்தரின் வரிகளை
மேற்கோள் காட்டுகிற அறிக்கை, ஒரு சில பக்கங்கள் கடந்த நிலையில்,
ஆசிரமப் பள்ளிகளுக்கும் அருகிலுள்ள
உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் ஆகியவற்றிற்கிடையே தொடர்புகளை எற்படுத்தி,
அதிகப் பயனைப் பெற இணைதிறம் உருவாக்கவும், இரண்டுக்கும் இடையே வழி நடத்துதலும் ஆலோசனைகளும்
பெறுவதற்கான வழிகளும் கண்டறியப்படும் ( 4.6(4) ) எனக் கூறுகிறது.
மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது
அறிவியலையும், வாழ்வியலையும் கற்பதற்கா அல்லது அறிவியலுக்கு நேர் எதிராய் விளங்கும்
ஆன்மீகக் கருத்துக்களைக் கற்பதற்கா என்னும் வினா, நெஞ்சில் முள்ளாய் குத்துகின்றது.
தொடக்கக்
கல்வி வரை மட்டுமே தாய் மொழியில் கல்வி என்று கூறுகின்ற அறிக்கை, இந்திய மொழிகளின்
வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் சமஸ்கிருத மொழியின் சிறப்பு முக்கியத்துவத்தையும்,
நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு அதன் தனித்துவமிக்க பங்களிப்பையும் கணக்கில் கொண்டு,
பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்க ஏதுவான வசதிகள் தங்கு
தடையின்றி வழங்கப்படும் (4.11(5) ) என்று அறிவிக்கின்றது.
அநேகமாக முழு அறிக்கையிலும் சமஸ்கிருதம்
பற்றிப் பேசும் இப்பகுதியில் மட்டுமே, தங்கு
தடையின்றி வழங்கப்படும் என்ற உறுதி மொழியும் சேர்ந்தே வருகிறது.
சமஸ்கிருதத்திற்கு மட்டும் தங்கு தடையின்றி
ஏதுவான வசதிகள். வேதனைதான் மிஞ்சுகிறது.
மேலும், ( 4.21(5) )பொருளாதாரத்தில்
பின் தங்கிய மாணவர்களுக்கான தற்போதுள்ள, கல்விக் கடன் திட்டத்தை மேலும் செம்மைப் படுத்த,
இத்திட்டத்தில் மாற்றம் செய்து, குறைந்த வட்டி, திரும்பிச் செலுத்த தற்போதுள்ள ஓராண்டிலிருந்து
இரண்டு ஆண்டு உயர் கால அவகாசம் போன்ற ஒத்திசைவான தளர்ச்சி மிக்க வசதிகள் செய்து தரப்படும்.
ஒரு அரசின் கடமை தன் மக்களுக்குக் கல்வியை,
தாராளமாய், இலவசமாய் வழங்குவதுதானே தவிர, தனியார் மயத்தை ஊக்குவிப்பது பெரிதும் பாதகமல்லவா.
படித்த பிறகும் உரிய வேலை வாய்ப்பின்றி, தகுந்த
ஊதியமும் இனறி அல்லல்படும் மாணவர்களை, படிக்கும் காலத்திலேயே கடனாளியாகவும் மாற்றுதல்
தகுமா.
வரைவு தேசியக் கல்விக் கொள்கை பாராட்டத் தகுந்த
பல செய்திகளை, நற் திட்டங்களை உள்ளடக்கியதாக இருப்பினும், ஆங்காங்கே சில திட்டங்கள்,
சில முன் வரைவுகள் மனதை வருத்தத்தான் செய்கின்றன.
--------------------
கல்வி டுடே
இருமொழி மாத இதழில் எனது கட்டுரை