ஃ பிலடெல்பியா விளையாட்டு மைதானத்தில், பார்வையாளர்கள் அமரக் கூடிய வரிசையில், எங்களுக்கான இருக்கைகளைக் கண்டு பிடித்து அமர்ந்தோம்.
விளையாட்டுத் திடல், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
போட்டி தொடங்க ஒரு சில நிமிடங்களே இருக்கும் நிலையில், விளையாட்டு அரங்கின் அதிகாரி ஒருவர், என்னிடம் வந்து ஒரு ஹெட் போனைக் கொடுத்தார்.
எதற்கு என்றேன்
அணிந்துதான் பாருங்களேன் என்றார்
இந்த ஹெட்போனை அணிந்து கொள்வதன் மூலமாக, விளையாட்டு அரங்கில் ஒலிபரப்பாகும், இரண்டு பன்பலை ஒலி பரப்புகளைக் கேட்க முடியும் என்றார்.
ஹெட்போனை அணிந்து கொண்டேன்.
போட்டி தொடங்கியவுடன், பன்பலை நிகழ்வுகளும் தொடங்கின. விளையாட்டு மைதான நிகழ்வுகளை, பார்வையற்றோரும் அறிந்து கொள்வதற்கான சிறப்பு வர்னணை அளிப்பதற்கான, பன்பலைகள் இவை என்பது புரிந்தது.
கால்பந்தாட்டம் முழுவதையும், பன்பலை மூலம் கேட்டு ரசித்தேன்.
---
சில நாட்கள் கடந்த நிலையில், என் செலவினங்களைக் குறைக்கும் வகையில், மீண்டும் ஒரு முறை வீடு மாறினேன்.
மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட வீடு அது.
ஒரு அறையில், டொமினிக் குடியரசில் இருந்து குடிபெயர்ந்த 79 வயதான மரியாள் என்பவர் வசித்து வந்தார்.
மற்றொரு அறையில் செந்தா கோலன் என்ற ஒரு இளம் பெண் வசித்து வந்தார்.
மூன்றாவது அறையில் நான் குடியேறினேன்.
செந்தா நகர வங்கி ஒன்றில், வீட்டுக் கடன் பிரிவில் பணியாற்றி வருபவர். சில நாட்களிலேயே இருவரும் நண்பர்களானோம்.
இந்நிலையில், இந்திய இராணுவத்தில் பணியாற்றி, தனது ஐம்பத்து ஐந்தாவது வயதில், பார்வையினை இழந்த திரு பாலகிருட்டினன் என்பவருடைய நட்பினைப் பெற்றேன்.
இந்தியாவில் இருக்கும் பொழுதே திரு பாலகிருட்டினன் அவர்களுக்கு, தன் ஐம்பத்து ஐந்தாவது வயதில், திடீரென்று கண் பார்வை குறையத் தொடங்கியது.
மிக மிக மெதுவாக அல்ல, மிக மிக வேகமாக.
திரு பாலகிருட்டினன் அவர்கள், மூன்றே நாட்களில் முழுவதுமாய் தன் கண் பார்வையினை இழந்தார்.
மற்றவர்களை விட, அவர் சிறிதளவு மெதுவான நடையினையேக் கொண்டிருந்தாலும், மற்றவர்களுடைய உதவியின்றி, தன்னுடைய வேலைகளைத் தானே பார்த்துக் கொள்ளும் அளவிற்குத் தேறிவிட்டார்.
அவருடைய இரண்டு மகன்களும், அமெரிக்காவில் நல்ல பணியில் இருந்ததால், இவருக்கு வேண்டிய கருவிகளை எல்லாம் வாங்கிக் கொடுத்து, இவரது வாழ்வினை எளிமையாக்கி இருந்தனர்.
எந்த வயதில் பார்வையினை இழந்தாலும், நம்பிக்கை இருந்தால், நம் சொந்தக் காலில், நாம் நிற்க முடியும் என்ற பாடத்தை, இவரது வாழ்வு எனக்குக் கற்றுக் கொடுத்தது.
திரு பாலகிருட்டினன் அவர்களை எதிர்பாராத விதமாக நியூயார்க்கில் சந்தித்தேன். அப்பொழுது ஏற்பட்ட தொடர்பு, தொடர்ந்தது.
திரு பாலகிருட்டினன் அவர்கள் பலமுறை என்னுடன் தொடர்பு கொண்டு, தன்னுடன், ஓரிரு நாட்கள் தங்குவதற்காக, வாஷிங்டனுக்கு வருமாறு, அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார்.
எனவே வாஷிங்டன் புறப்பட்டேன்.
வெண்டி, செந்தா இருவரும் சைனா டவுன் பேருந்து நிலையம் வரை வந்து என்னை வழியனுப்பினர்.
மூன்று நாட்களை வாஷிங்டனில் திரு பாலகிருட்டினன் அவர்களுடன் செலவிட்டேன்.
திரு பாலகிருட்டினன் அவர்களின் அன்பான கவனிப்பில், மூன்று நாட்கள், மூன்று நொடிகளைப் போல் கரைந்தன.
மீண்டும் நியூயார்க் புறப்பட்டேன்.
மாலை 5 மணிக்குப் புறப்பட வேண்டிய சைனா டவுன் பேருந்து ரத்து செய்யப்பட்டதால், இரவு 8 மணி வரை பேருந்து நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை.
ஒரு வழியாக 8 மணிப் பேருந்தில் ஏறினேன்.
செந்தாவை கைபேசி வழி அழைத்தேன்.
எப்படியும் நியூயார்க் வந்தடைய, இரவு பன்னிரெண்டு மணி ஆகிவிடும் என்பதால், என்னை அழைக்கப் பேருந்து நிலையத்திற்கு வரவேண்டாம் என்றும், வீட்டின் கதனைப் பூட்டாமல் வைத்திருக்குமாறும் கூறினேன்.
பேருந்து, நியூயார்க்கை வந்தடைந்த பொழுது இரவு மணி 12.45,
ஒரு மகிழ்வுந்தினைப் பிடித்து ஒரு மணியளவில் வீட்டை அடைந்தேன்.
வீடு பூட்டப் படாமல் இருந்தது.
வீட்டிற்குள் நுழைந்து, செந்தாவிற்கு நன்றி கூற, அவரது அறைக் கதவைத் தொட்டேன்.
அவரது அறைக் கதவும் திறந்தே இருந்தது.
செந்தா, வந்து விட்டேன். வீட்டின் கதவை எனக்காகத் திறந்து வைத்திருந்ததற்கு நன்றி என்றேன்.
அடுத்த நொடி, செந்தா ஓடி வந்து, என்னைக் கட்டிப் பிடித்து, இறுக அணைத்து, பிரஞ்சு முத்தம் கொடுக்க முயன்றார்.
தொடர்ந்து பேசுவேன்.