23 நவம்பர் 2016

வைத்தீசுவர பிரபு





தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
     சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு

என வாழும் எண்ணிலடங்கா மனிதர்களுக்கு இடையே, இவர் ஓர் உன்னத மனிதராக உயர்ந்து நிற்கிறார்.

    ஆசிரியர் பணி என்பது அறப் பணிதான். ஆனாலும் ஆசிரியர்கள் இன்று, சந்திக்கும் சவால்கள் ஏராளம் ஏராளம்.


     அதிலும் குறிப்பாக பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வகுப்பு ஆசிரியர்களின் மன அழுத்தமானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் காலம் இது.

     ஆண்டுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்தியாக வேண்டும். மாணவர்களை எப்பாடு பட்டாவது படிக்க வைத்தாக வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற வைத்தாக வேண்டும்.

      தீபாவளி, பொங்கல் என பண்டிகைகள் நெருங்கினால், மாணவர்கள் எவ்வளவு மகிழ்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு, ஆசிரியர்களின் தவிப்பு அதிகமாகிறது.

       ஐந்து, ஆறு நாள் தொடர் விடுமுறை வந்துவிட்டதே, மாணவர்கள் வீட்டில் படிப்பார்களா? இதுவரை படித்ததை நீனைவூட்டிப் பார்ப்பார்களா, நினைவில் நிறுத்தி வைப்பார்களா, படிப்பின்றிப் பல நாட்கள் வீணாகிறதே என்னும் கவலைதான் ஒவ்வொரு, ஆசிரிய, ஆசிரியைகளையும் வாட்டி வதைக்கிறது.

       பெரும்பாலும் ஆசிரியர்களின் முதல் இலட்சியம், தனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்பதுதான். அதன் பிறகுதான் பள்ளியின் தேர்ச்சி.

      இதுதான் இன்றைய யதார்த்த நிலை.

      இதுபோன்ற சூழ்நிலையில், தன் வகுப்பு மட்டும் பெரிதல்ல, தன் பள்ளி மட்டும் பெரிதல்ல, தமிழகத்து அனைத்து மாணவர்களுமே முன்னேற வேண்டும் என்பதனை இலட்சியமாகக் கொண்டு, வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, ஒரு ஆசிரியர் செயல்படுகிறார் என்றார், அவரைப் பாராட்டுவது, போற்றுவது நமது கடமையல்லவா.


திரு எஸ். வைத்தீசுவர பிரபு,
பட்டதாரி நிலை கணித ஆசிரியர்,
அரசு மேனிலைப் பள்ளி, வளப்பக்குடி, தஞ்சாவூர்

        கடந்த 21.11.2016 முதல் எதிர்வரும் 25.11.2016 வரையிலான ஐந்து நாட்களுக்கு, கணித ஆசிரியர்களுக்கானப் பணியிடைப் பயிற்சியானது, தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

      









  இப்பணியிடைப் பயிற்சியில்தான் திரு பிரபு அவர்களைச் சந்தித்தேன்.

      தஞ்சாவூர், அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற்று வரும், பணியிடைப் பயிற்சியில், எம் பள்ளியில் இருந்து நானும், நண்பர் திரு அ.சதாசிவம் அவர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறோம்.

       இப்பணியிடைப் பயிற்சியின்போது, எங்களுக்குப் பயிற்சி அளிக்க வந்தவர்தான் இந்த திரு எஸ்.வைத்தீசுவர பிரபு.


இவர்


மற்றும்



எனும் இரு வலைப் பூக்களை நடத்தி வருகிறார்.

      இவரது வலைப் பூவில், கல்வி தொடர்பான, அனைத்துத் தகவல்களும் நிரம்பி வழிகின்றன. தமிழ்நாடு பணியார் தேர்வாணையத் தேர்வா, நீட் தேர்வா, எந்த அரசுத் தேர்வாயினும், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய், வினா விடைகள் கொட்டிக் கிடக்கின்றன.

    


வலைப் பூ மட்டுமல்ல, அதையும் தாண்டி, யூ ட்யூப்பில் இவரது, நூற்றுக் கணக்கானக் காணொளிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.


     எளிமையாய் கணக்குகளைப் புரிந்து கொள்வது எப்படி, வாய்ப்பாடுகளை, சூத்திரங்களை, தேற்றங்களை அறிந்து கொள்வது எப்படி, என வகுப்பு மாணவ, மாணவியரைக் கொண்டே வெகு இயல்பாக, வெகு எளிமையாய், வெகு இனிமையாய் காட்சிப் படுத்தி, காணொளியில் விருந்து வைக்கிறார்.

     ஒவ்வொரு பள்ளியிலும் இவரது காணொளிகள் திரையிடப்படுமானால், மாணவர்களின் கல்வித் தரமும், உற்சாகமும் உயர்வது உறுதி.

சிறு வயதிலேயே
பெரும் செயல்களை
முன்னெடுத்துச் செயலாற்றிவரும்
திரு எஸ். வைத்தீசுவர பிரபு அவர்கள்
போற்றுதலுக்கு உரியவர், பாராட்டுதலுக்கு உரியவர்
போற்றுவோம்,   பாராட்டுவோம்.