10 டிசம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 16



தங்களைப் பணியில் சேர்க்க இயலாத நிலையில் இருக்கிறோம்.

    பல நாட்கள், இதே வார்த்தைகள், என் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன. பல இரவுகள் உறங்கா இரவுகளாகவே கழிந்தன.

    உடற்குறைபாடு உடையவன் என்ற ஒரே காரணத்திற்காக, எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.


    அமெரிக்க அரசின் சட்டப்படி, உடற்குறையினை, நாமாக விரும்பினால் அன்றி, தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. மேலும் துறைத் தலைவர் என்னிடம் கேட்ட கேள்விகளும் சட்டப்படி தவறானவை.

     எனவே யோசித்தேன்.

     பின் துணிந்து செயலில் இறங்கினேன்.

     நியூயார்க் நகர தொழில் துறை அலுவலகத்தை நாடி, புகார் செய்தேன்.

     இதுமட்டுமல்ல, நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தின் பகுதி நேரப் பேராசிரியர்கள் சங்கத்தின் கவனத்திற்கும், நான் புறக்கணிக்கப் பட்ட செய்தியினை கொண்டு சென்றேன்.

      அவர்களும் என் சார்பில் கல்லூரி நிர்வாகத்துடன் போராடத் தொடங்கினர்.

     இதனால், குயின்ஸ் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான என் புகாருக்குப் பலன் கிடைத்தது. சனவரி 5 ஆம் தேதி, குயின்ஸ் கல்லூரியில் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.

     சனவரி 10 ஆம் தேதி, அக்கல்லூரியின் தொழிலாளர் நலத்துறை அலுவலருக்கும், எனக்கும் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அவரைச் சந்திக்கும்படியும் கடிதம் அறிவுறுத்தியது.

     நான், பகுதி நேரப் பேராசிரியர்கள் சங்கத்தின் சட்ட ஒருங்கிணைப்பாளரை உடன் அழைத்துக் கொண்டு, குறிப்பிட்ட தேதியில் கல்லூரிக்குச் சென்றேன்.

     தொழிலாளர் நலத்துறை அலுவலரைச் சந்தித்து எங்களது நிலையினைத் தெளிவு படுத்தினோம்.

     மூன்று வாரங்கள் கடந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்திடமிருந்து, மீண்டும் ஒரு கடிதம் வந்தது.

    குயின்ஸ் கல்லூரியில் பணியேற்றிருந்தால், எனக்கு அந்த ஆண்டிற்குக் கிடைத்திருக்கக் கூடிய ஊதியம் 3500 டாலரும், எனது மன உலைச்சலுக்காக 3000 டாலரும், காசோலை வடிவில், அடுத்த இரு மாதங்களுக்குள் எனக்கு வழங்கப்படும் என்ற தகவலைத் தெரிவித்தது.

      மேலும் நான் விரும்பினால், குயின்ஸ் கல்லூரியில் பணியாற்றலாம் என்ற அழைப்பும் அக்கடிதத்தில் இருந்தது.

       என்னை மதிக்காத கல்லூரியில் பணியாற்ற விருப்பம் இல்லை எனவும், எனக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக் காட்டுவதே என் நோக்கம் என்றும் தெரிவித்து பதில் எழுதினேன்.

      இது ஒரு வகையில் எனக்கு மட்டுமல்ல, அமெரிக்கப் பார்வையற்றோருக்கே கிடைத்த வெற்றியாகும். இது போன்ற அநீதிகள் நடைபெறும் பொழுது, அதனைத் தட்டிக் கேட்பவர்கள் வெகு சிலரே என்பதையும் அறிந்து கொண்டேன்.
   

நண்பர்களே, இவ்விடத்தில், அமெரிக்கப் பார்வையற்றோர் குறித்த, சில செய்திகளை, உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

    அமெரிக்காவில் உள்ள பார்வையற்றோரில், சுமார் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை இல்லாதவர்கள். அதுமட்டுமல்ல, அமெரிக்கப் பார்வையற்றோருள், சுமார் 95 சதவிகிதத்தினருக்கு பிரையில் முறையில் எழுதவோ படிக்கவோ தெரியாது.

     பிறகு எப்படி இவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள், வாழ்வை ஓட்டுகிறார்கள் என்ற எண்ணம் எழுகிறதல்லவா.

     அமெரிக்க நாடானது, உடல் ஊனமுற்றோருக்கு, மாதந்தோறும் ஆயிரம் டாலர்களை உதவித் தொகையாக வழங்குகிறது. அதிலும் பார்வையற்றோரை ஒருவர் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், இத்தொகை இரட்டிப்பாகும்.

    அதுமட்டுமல்ல, ஒரு குழந்தை பிறந்த உடனேயே, பார்வையற்ற குழந்தை என கண்டறியப்படுமானால், அக்குழந்தைக்குத் தேவையான பயிற்சி மற்றும் உபகரணங்கள் வரை அனைத்தையும் அரசு இலவசமாகவே வழங்குகிறது.

       அப்படி இருந்தும், அவைகளைப் பயன்படுத்தி, முன்னேறாத அமெரிக்கப் பார்வையற்றோரின் சூழ்நிலையை என்னவென்று சொல்ல?

       அவர்களுடன் ஒப்பிடும்பொழுது, எந்தவொரு வசதியுமின்றி, முட்டி மோதி, முன்னேறி நமது நாட்டைச் சார்ந்த பர்வையற்றோர் செய்துள்ள சாதனைகள் ஏராளம் ஏராளம்.

---
      குயின்ஸ் கல்லூரியின் பணியை ஏற்க மறுத்த நிலையில், ஒரு கல்லூரியில் மாணவர், இரு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் என்னும் நிலையில் எனது நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

     2009 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் தேதி 1.30 மணியளவில், அதாவது, இந்திய நேரப்படி, பிப்ரவரி முதல் தேதி, காலை 12.00 மணி அளவில், எனது வீட்டில் இருந்து, தொலைபேசி அழைப்பு வந்தது.

     தொலைபேசி அழைப்பின் வழி வந்த செய்தி, இடிபோல் நெஞ்சில் இறங்கியது.

      எனது தங்கை, வீட்டில் எவருக்கும் சொல்லாமல், வீட்டில் யாருக்கும் தெரிவிக்காமல், அவளுக்குப் பிடித்தவரைத் திருமணம் செய்து கொண்டார். வேறொரு காரணம் சொல்லி, வீட்டை விட்டுச் சென்றவர், வீடு திரும்பவில்லை.

                                                  தொடர்ந்து பேசுவேன்