எருமை மாடுகள், பசு மாடுகளை மேய்க்கும் வேலை
எனக்கும், உழவு, வண்டி மாடுகளை பராமரிப்பது, மாடுகளுக்குத் தீவனம் வைப்பது போன்ற வேலைகள்
அண்ணனுக்கும் வழங்கப் பட்டது.
தினமும் பள்ளி விட்டு வந்தவுடன், மாலை சிற்றுண்டி
சாப்பிட்டுவிட்டு, மாடுகளை மேய்த்து வர வேண்டும்.
ஒரு நாள் வகுப்பில், சுப்பிரமணியன் சார், ஆதி திராவிட காலனியைச் சேர்ந்த என் நண்பன், கண்ணனுக்கு, கூட்டல் கணக்கு பல முறை சொல்லிக்
கொடுத்தும், தப்பகவே விடை சொன்னான்.
கோபத்தின் உச்சிக்கு சென்ற சுப்பிரமணியன் சார்,
எருமை
மாடு மேய்க்கிறவனுக்கும் …… மாட்டுக் கறி திங்கிறவனுக்கும் படிப்பு வராது,
என்று திட்டி, மூங்கில் கம்பால் அடித்தார்.
எனக்கோ திக்கென்றது … நானும் தினமும்
மாடுகளை மேய்க்கிறேன். எனவே எனக்கும் படிப்பு ஏறாதா?
அன்று மாலை வீட்டிற்குச் சென்றவுடன், எடுமை
மாடுகளை மேய்த்தால், படிப்பு ஏறாதுன்னு சுப்பிரமணியன் சார் சொன்னாரு, இனிமே நான் மாடு
மேய்க்க மாட்டேன் என்று பெரியம்மா மற்றும் அம்மாவிடம் சொன்னேன்.
ஆனால் ……
தொடர்ந்து அடுத்த சில நாட்கள் நான், மாடு மேய்க்க மாட்டேன் என்று அழுது அடம்
பிடித்தவுடன், விசயம் அப்பாவின் கவனத்திற்குச் சென்றது.
சுப்பிரமணியன் வாத்தியார் என்ன சொன்னாருன்னு நான்
வாத்தியாருக்கிட்ட கேட்கிறேன் என்று அப்பா சொல்லிவிட்டார்.
ஆனால் அடுத்த நாள், வயலில் வேலை
பார்த்தவர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்துவிட்டு, வீட்டிற்குத் திரும்பி வந்த அம்மா,
வரும் வழியிலிருக்கும் பள்ளிக் கூடத்திற்கு வந்துவிட்டார்.
வாத்தியாரே ……. மாடு மேய்ச்சா படிப்பு வராதுன்னு
சொன்னீங்கன்னு …… இந்த ரவி பய, மாடு மேய்க்க மாட்டேங்கிறான் …. ஊரு புள்ளைங்க எல்லாம்
மாடு மேய்க்குது ….. இவன் மட்டும் இப்படி சொல்றான் என்று
சுப்பிரமணியன் சாரிடம் சொன்னார்.
அம்மாவின் வருகையை நான் சற்றும்
எதிர்பார்க்கவில்லை.
சுப்பிரமணியன் சாருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
பிறகு அம்மா மற்றும் என்னிடம் கேட்டு நிலைமையைப் புரிந்து கொண்டார்.
கண்ணன் கணக்கு தாப்பா போட்டான்னு
கோபத்தில் சொன்னேன்டா … அவன் மக்கு பய…. நீ நல்லா படிக்கிறவன். உனக்கு படிப்பு நல்லா
வரும்டா ….. அம்மா சொல்றபடி கேளு என்று என்னிடம் கூறினார்.
சுப்பிரமணியன் சார் சொல்லிவிட்டதால், தினமும்
மீண்டும் மாடு மேய்க்கத் தொடங்கினேன்.
---
சிறு வயது முதலே என் மகளுக்கு, அவள் தூங்கும்
முன் நான் போர்த்திவிட்டு, குட் நைட் சொல்ல வேண்டும்.
அடுப்படி வேலையை எப்படா முடித்துவிட்டு, நாமும்
படுப்பது என்று இருக்கும் எனக்கு.
சமயத்தில் அவளின் அழைப்பு எரிச்சலை
ஏற்படுத்தும்.
நீயே போர்த்திக் கொண்டு தூங்கு. நான் வேலையாக இருக்கிறேன்.
இந்த வயசிலும் உன்னால் தனியாக போர்த்திக் கொள்ள முடியாதா? என்று கத்துவேன்.
அவளும் முணுமுணுத்துக் கொண்டே தூங்கிவிடுவாள்.
தூங்கும் அவள் முகத்தில் ஓர் அதிருப்தி நிழலாடும்.
நிதானமாக யோசித்தால், அவளை திருப்திபடுத்த இரண்டு
நிமிடங்கள்தான் ஆகும். என் வேலையை பாதியில் நிறுத்த மனமில்லாமல்தான், நான் அதை செய்ய
மறுக்கிறேன்.
நான் அலுப்பு பாராமல் செய்யும் நாட்களில் அவள்,
நான் தூங்கும்போது கூட, என் தாய் என்னை பார்த்துக் கொள்வாள், என்ற நம்பிக்கையுடன் ஆனந்தமாகவும்,
அமைதியாகவும் தூங்கச் செல்கிறாள்.
என்னைப் பொருத்த மட்டில் போர்வையைப் போர்த்துவது
ஒரு செயல். ஆனால் அவளைப் பொருத்தமட்டில், ஒவ்வொரு இரவும், அம்மாவின் அன்பும், பாசமும்
தன்னை போர்த்துவதாக கருதுகிறாள்.
---
வை.சி.சோமு ஆலம்பிரியர், வெட்டிக்காடு
என்னும் ஒரு சிறிய கிராமத்தில், 1919 ஆம் ஆண்டு பிறந்து, வாழ்ந்து 1989 ஆம் ஆண்டு மறைந்த
ஓர் மாமனிதர்.
ரெண்டு பசங்கள படிக்க வைச்சிட்ட ……… வயசான காலத்தில
ஒனக்கு விவசாய வேலையில, ஒத்தாச செய்ய கடைசி பயல ( என்
தம்பி ) படிக்க வைக்க வேண்டாம்யா என்று படிக்காத அம்மா அடிக்கடி சத்தம் போடுவார்.
ஏன்டி ….. படிப்ப …… பத்தி ஒனக்கு என்னடி …. தெரியும்? ஒப்பன்
ஒன்ன ரெண்டு எழுத்து படிக்க வைச்சிருந்தாதானே? என்று
அம்மாவைத் திட்டுவார்.
யாவாரி என்ற
பட்டப் பெயருடன், ஊரில் செல்வாக்காக வாழ்ந்த மனிதர், தன் கடைசி ஐந்து ஆண்டுகள், வாழ்க்கையில்
பட்ட இன்னல்கள்தான் எத்தனை? எத்தனை?
அண்ணனின் காவல் துறை உதவி ஆய்வாளர்
வேலைக்காக கொடுத்த ஐம்பது ஆயிரம் ரூபாய் பணம் (1985 ஆம் ஆண்டு இது பெரிய தொகை) மற்றும்
என்னை, சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்க செலவு போன்ற பணத் தேவைகளுக்காக
அம்மாக்களின் நகைகளை விற்றார்.
அவருடைய சக்திக்கு மீறிய கடன் வாங்க வேண்டிய
கட்டாயம்.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும், என்
பூமியை விலை பேச மாட்டேன் என்ற வைராக்கியத்துடன், நானும் அண்ணனும், எவ்வளவோ சொல்லியும்
நிலங்களை விற்க மறுத்துவிட்டார்.
நான் ஒவ்வொரு காசாக சேர்த்து வாங்கிய, உழைத்த
பூமி …. என் பூமியை விலை பேச மாட்டேன்…… இன்னும் கொஞ்ச நாள் தம் புடிச்சிட்டன்னா போதும்
----- அப்புறம் நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு
போயிடுவீங்க என்பார்.
அப்பா மன்னார்குடி மற்றும் அடுத்த
கிராமங்களுக்குச் செல்லும் போது, சலவை மடியாத வெள்ளை கதர் சட்டைகளை மட்டுமே போடும்
பழக்கம் உள்ளவர்.
அப்படிப்பட்டவர் ஒரு முறை, மன்னார்குடிக்கு
கசங்கிய நிலையில், ஓட்டைகளுடன் உள்ள கதர் சட்டையில் கிளம்பிச் சென்றபோது, என் மனம்
அடைந்த வேதனைகளை சொல்ல முடியாது.
---
தினமும் காலை சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது
என் வழக்கம்.
இப்படி உடற் பயிற்சி செய்யும் பொழுது டிவி பார்த்துக்
கொண்டே செய்வது பழக்கமாகிப் போனது.
அந்நேரங்களில் மழலைக் குரல் கேட்பதற்காகவே குட்டீஸ்
சுட்டீஸ் பார்ப்பேன்.
அந்த நிகழ்ச்சியை வழி நடத்தும் அண்ணாச்சி குழந்தைகளை
பல கேள்விகள் கேட்பார். அன்று குழந்தைகளிடம் உங்கள் வீட்டில் எப்படிம்மா செல்லமாக கூப்பிடுவார்கள்?
என்று கேட்டார்.
சரிம்மா,
உங்க அம்மா உன்ன என்னன்னு கூப்பிடுவாங்க?
அதற்கு மனம் முழுதும் சந்தோஷத்துடன்
கண்கள் சுருங்க சிரித்துக் கொண்டே அக்குழந்தை, என்ன எங்க அம்மா வரப்பிரசாதோ …… வரப்பிரசாதோனு
கூப்பிடுவாங்க என்று அழுத்தமாகக் கூறியது.
அந்த பதிலைக் கேட்ட உடனேயே நான்
அசந்து போனேன் …… ஆச்சரியப்பட்டு போனேன்.
கேட்ட மாத்திரத்தில் நான் என் உடற்பயிற்சியை
நிறுத்திவிட்டு, ஒரு நிமிடம் கண் கொடாமல் டிவி யையே உற்றுப் பார்த்தேன்.
அக்குழந்தையின் அம்மாவைக் காண்பிப்பார்களா என்று
பார்க்க ஆசையாக இருந்தது. அந்த தாயை ஃபோகஸ் செய்து காண்பித்தார்கள்.
அவர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.
அண்ணாச்சி உடனே, வரப்பிரசாதம் என்றால் என்ன அர்த்தம்?
என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் Precious (பிரீஷியஸ்)
என்ற ஆங்கில வார்த்தையைக் கூறினார்கள்.
வரப்பிரசாதம் என்ற தமிழ் வார்த்தையில் புதைந்து
இருந்த அழகு, கவிதை, இசை, இன்பம் யாவும் பிரீஷியஸ் என்ற ஆங்கில வார்த்தையில் கிடைக்கவில்லை.
இதுவரை நான் யாரும் இப்படிக் கூப்பிட்டுக் கேட்டதில்லை
பெண் பிள்ளைகள் என்றாலே கருவிலேயே கல்லறைக்கு
அனுப்பும் சமூகத்தில், தனக்குப் பிறந்த பெண் பிள்ளையை, அப்பா ராசாத்தி என்றும், அம்மா
காணக்கிடைக்காத, தவம் இருந்து வரம் கேட்டுக் கிடைக்கப் பெற்ற பிரசாதமாக, வரப்பிரசாதம்
என்று கொஞ்சுவதை கேட்டது மனதுக்குள் நெகிழ்வை ஏற்படுத்தியது.
நானே பலமுறை வரப்பிரசாதம், வரப்பிரசாதம் என்று
கூப்பிட்டுப் பார்த்தேன்.
ஒவ்வொரு முறை உச்சரித்தபோதும் மனதில் ஒரு பரவசம்
---- தாய்மையின் வெளிப்பாடு இதுதானோ.
இரண்டும் பெண் பிள்ளைகளாக பிறந்து
விட்டது என்று, என் தந்தையை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள என் பாட்டி, தாத்தா எவ்வளவோ
கட்டாயப் படுத்தியும், என் தந்தை அதற்கு சம்மதிக்கவில்லை.
ஆனால் அவரின் மனதில் ஓர் ஆண் மகனுக்கான ஏக்கம்
இருக்கத்தான் செய்தது.
இரண்டு பெண் பிள்ளைகளுக்குப் பின் ஓர் ஆண் பிள்ளை
பிறக்குமோ என்று மூன்றாவதாகவும் பெண் பிள்ளை பெற்ற சிலர் என் உறவிலேயே உண்டு.
அப்படி எதுவும் செய்யாமல், என் தந்தை நாம் இருவர்
நமக்கிருவர் என்று முடிவெடுத்துவிட்டார்.
-----
நண்பர்களே, படிக்கப் படிக்க நெஞ்சம் நெகிழ்கிறதல்லவா.
ஒரு எழுத்தைக் கூட, கற்பனையாய் கலக்காமல், உண்மையை
மட்டுமே ஒவ்வொரு எழுத்திலும், நேர்மையாய் சுமந்துவரும், நூலினை, ஒரு நூலினை அல்ல, இரண்டு
நூல்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
குளிருட்டப்பட்ட அரங்கு மக்களாலும், மகிழ்ச்சியலைகளாலும்
நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
ஒரு இருக்கையில் அமைதியே உருவாய், தேவியர் இல்லம் வலைப்பூவின் திரு ஜோதிஜி அவர்கள்.
என்னைக் கண்டவுடன், முகம் மலர, கரம் தூக்கி
அழைத்தார்.
அருகே சென்று அவர்தம் கரம் பற்றி
மகிழ்ந்து அமர்ந்தேன்.
சுரேகா
சுந்தர், ஈரோடு கதிர், கேபிள் சங்கர், ஐக்கி சேகர் என அங்கு
இங்கு என எங்கு நோக்கினும் வலையுலகப் பதிவர்கள்.
இவர்கள் அனைவருமே எனக்குத் தெரிந்த முகங்கள்தான்,
ஆனால் இவர்களுக்கோ, நான் அறியாத முகம்.
பரபரப்பான விழா நிகழ்வுகளுக்கு இடையில், அறிமுகப்
படுத்திக் கொள்வதற்குக் கூட வாய்ப்பு இல்லை. எனவே அமைதியாய் அமர்ந்து நிகழ்வுகளை கவனிக்கத்
தொடங்கினேன்.
இரு நூல்களின் வெளியீட்டு விழா.
வெட்டிக்காடு
கீதா கஃபே
என்ன, ஒரு நூலின் பெயரினை மட்டும் சொல்கிறேனே
என்று பார்க்கிறீர்களா?
மற்றொரு நூல்
கீதா கஃபே
ஒரே மேடையில்
இரு நூல்கள்
வெளியிடப்படுவதில் வியப்பேதுமில்லைதான்.
இருவர்
எழுதிய இரு நூல்கள்
ஒரே மேடையில்
வெளியிடப்படுவதிலும் வியப்பேதுமில்லைதான்.
ஆனால்,
இந்த இரு நூல்களையும்
எழுதியவர்கள்
வாழ்க்கை இணையர்கள்
அன்பதை அறியும்போதுதான்
வியப்பும் மகிழ்வும் மேலிடுகிறது.
கணவர் எழுதிய நூலும், மனைவி எழுதிய நூலும்
ஒருங்கே மேடையேறி, அரங்கேறிய
அற்புதக் காட்சியைக் கண்ணாரக் கண்டேன்.
என்னுடைய எண்ணங்களை, சிந்தனைகளை
பிறரிடம், பேச்சு மூலம் சேர்ப்பதைவிட, எழுத்து மூலம் சேர்ப்பது எனக்கு எளிதாகப் பட்டது.
பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால்,
அவர்களின் வாழ்வில் என் பங்கு குறைய ஆரம்பித்த பொழுது, என் எண்ணப் பரிமாற்றங்களுக்கு,
எனக்கு ஒரு வழி தேவைப்பட்டது.
அதற்கு நான் தேர்ந்தெடுத்ததுதான்
இந்த எழுத்து வடிவம்.
நான் அனுபவித்து உணர்ந்ததை, பிறரிடம்
பரிமாறிக்கொள்ள இதுவே எனக்கு உற்ற துணையாய் இருக்கிறது என்கிறார்
இவர்.
திருமதி கீதா ரவிச்சந்திரன்
இவரது நூல்தான்
கீதா கஃபே.
குடும்பத்தின் பொறுப்புகளைச் சுமந்தபடி,
அன்றாட வாழ்வில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும், இவர் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.
படித்துத்தான்
பாருங்களேன்.
மனித சங்தோஷங்களிலேயே இணையற்ற சந்தோஷம்
…… அவரவர் நெஞ்சுக்குள் பதியம் போட்டு வைத்திருக்கும்
பால்ய காலத்தை நினைவு கூர்வது.
எல்லோரும எழுத விரும்பி இயலாமல் போகும், பால்ய
கால பசுமை நினைவுகளை செழிக்க செழிக்க எழுதி, பதிய இலக்கியம் படைத்திருக்கிறார் இவர்.
உழுது, ஆறப் போட்டு, தழையத் தழைய நீர் பெருக்கிய
ஈர வயல்களில், நெல் மணிகளை விதைத்துப் போவது போல், அவர் உதிர்த்துப் போகும் ஒவ்வொரு
வார்த்தையிலும் வாசகனை ஆரத் தழுவுகிறது மானுட அன்பு …. அன்பு ….. அன்பு…. என நெகிழ்ந்து,
மனம் மகிழ்ந்து, போற்றுகிறார், எழுத்தாளரும்,
திரைப்பட நடிகருமான வேல. ராமமுர்த்தி
வெ ட் டி க் கா டு
பல ஆயிரம் மைல்கள் கடந்து, கடந்த இருபது வருடங்களுக்கும்
மேலாக, அமெரிக்கா, சிங்கப்பூர் நாடுகளில் வாழ்ந்து கொண்டு, பல்வேறு நாடுகளுக்கும் ஒவ்வொரு
நாளும் பறந்து கொண்டே இருக்கிறார் இவர்.
வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்தாலும், சிறுவனாக புழுதியில்
புரண்டு விளையாடிய, சொந்த கிராமத்து மண்ணின் வாசம் கொடுக்கும் மகிழ்ச்சியை, சிறு வயது
அனுபவங்களை, உண்மை நிகழ்வுகளின் தொகுப்பை நூலாக்கி இருக்கிறார் இவர்.
தஞ்சைத்தரணியில் மண்ணார்குடிக்கு அருகில் உள்ள,
வெட்டிக்காடு என்னும் சிறிய கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
உலக அளவில் பல முன்னோடி தொலைத் தொடர்பு கட்டமைப்பு
திட்டங்களில் பணியாற்றிவரும் தொலைத் தொடர்புப் பொறியாளர்.
C –
DOT ( Centre for Development of Telematics ) என்று அழைக்கப்படும் இந்திய
அரசாங்கத்தின் தொலைத் தொடர்பு ஆராய்ச்சிக் கூடத்திலும், அமெரிக்காவில், விஞ்ஞானி அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் அவர்கள் நிறுவிய
பெல் ஆராய்ச்சிக் கூடத்திலும் பணியாற்றியவர்.
தொலைத் தொடர்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றியதற்காகப்
பல விருதுகளைப் பெற்றவர்.
Ixia Communications என்ற
அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனத்தில், ஆசிய பசுபிக் வட்டார தலைமைப் பெறுப்பில், சிங்கப்பூரில்
தற்பொழுது பணியாற்றி வருகிறார்.
வெட்டிக்காடு ரவிச்சந்திரன்
இவரது
மண்வாசம் மிளிறும் நூல்தான்
வெட்டிக்காடு
வெட்டிக்காடு கீதா கஃபே
இணைந்திருக்கும்
தம்பதியினர்
இருவரையும் போற்றுவோம்.
பெரும்புகழ் பெற்றுநீ டூழி
இருநிலத்து வாழ்க இனிது