புதுக்கோட்டை, இனி புதுக் கோட்டையல்ல
புத்தகக் கோட்டை
ஆம் புதுக்கோட்டையினை, இனி புத்தகக் கோட்டை என
அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல், திசம்பர்
4 ஆம் தேதி வரை, ஒன்பது நாட்கள், நடந்த நிகழ்வால் புதுக்கோட்டையே, புதுப்பொலிவு பெற்று,
மெருகு கூடி, புத்துணர்வு பெற்றிருக்கிறது.
காரணம்,
ஓர் விழா
ஓர் திருவிழா
புத்தகத் திருவிழா.
இலட்சக் கணக்கானோரின் வருகை.
பணமெல்லாம், வங்கிக் கணக்கில் முடங்கி, வெளி வர
மறுக்கும், இச்சூழலிலும், ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கும் மேல் விற்பனை.
புதுகைப் புத்தகத் திருவிழா
ஒரு வெற்றி விழாதான்.
----
வெப்பம் இல்லா குளிர்ப்பேச்சும்
– நிலா
வெளிச்சம் தெறிக்கும் பார்வையதும்
ஒப்பனை இல்லாத பூஞ்சிரிப்பும்
– தமிழ்
ஊறித் ததும்பும் கவித்துவமும்
செப்பம் நிறைந்த சிந்தனையும்
– உளி
செதுக்கிய சிற்பச் சொல்லமைப்பும்
முப்பழம் தோற்கும் கற்பனையும்
– தங்கம்
மூர்த்திக்கு வாய்த்த நேர்த்திகளாம்
என
கவிதைப் பித்தன் முழங்குவாரல்லவா, அந்த
ஒப்பனை இல்லாதப் பூஞ்சிரிப்புக்குச் சொந்தக்காரர்
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களும்,
செல்லவந்த தூரமென்ன? சேர்ந்த தடைகளென்ன
நில்லாமல் முத்துநிலவனிவர் – எல்லைப்படி
கண்டுவந்தார் பாட்டுக் களமேற்றி
நூல்தந்தார்
அண்ணாந்து பார்த்தோம் அழகு
என
அண்ணாந்து பார்த்து, நெகிழ்ந்து போய், செந்தலை ந.கவுதமன் அவர்கள் வியந்து போவாரே, அந்த
அழகுக்கு, கவி அழகுக்குச் சொந்தக்காரர்
கவிஞர் முத்து நிலவன் அவர்களும்
இணைந்தால், நடக்காத செயல் என்று ஒன்று இருக்கிறதா, என்ன?
இதோ,
புத்தகத் திருவிழா.
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் விழாக்குழுத்
தலைவராய் பொறுப்பேற்று, சூறாவளியாய் சுழன்று செயலாற்ற,
தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின், மாநிலச் செயலாளர்
திரு எஸ்.டி.பாலகிருட்டினன் அவர்களின்
முழு முயற்சியின் பயனாய்
இதோ
புத்தகத் திருவிழா
புதுகைப்
புத்தகத் திருவிழா.
---
புத்தகத் திருவிழாவினை மேலும் இரு நாட்களுக்கு
நீட்டிப்புச் செய்யுங்கள், என புதுகையே ஒத்த குரலெடுத்து ஓங்கி முழங்கிய போதும், தவிர்க்க
இயலா காரணங்களால், ஞாயிறன்றே நிறைவு செய்ய வேண்டிய சூழல்.
கடைசி நாளில், நடுப் பகல் 12.00 மணியளவில்,
புதுகை நகர் மன்றத்தின் நுழைவு வாயிலில், வியந்தபடியே நுழைகின்றேன்.
எண்ணற்ற நாணயங்கள், பல்வேறு நாடுகளின் ரூபாய்
நோட்டுகள் அணிவகுத்து நின்றன.
பணப் பற்றாக் குறையால், சட்டைப் பையில் இருக்கும்,
வங்கி அட்டை கூடச் செல்லா அட்டையாய், மெல்ல எட்டிப் பார்த்து, நம்மை கேலி செய்யும்,
இக்காலத்தில், வரிசை வரிசையாய் ரூபாய் நோட்டுக்கள்.
ஏக்கத்தோடு பார்த்தபடியே நடந்தேன்.
வலப் பக்கம் விழா அரங்கு,
ஒரு நிமிடம், ஓர் இருக்கையில் அமர்ந்து, மாலை
நிகழ்வுகளை மனத்திரையில் திரைப்படமாய் ஓட்டிப் பார்த்தேன். நேரில் கண்டுகளிக்கத்தான்
வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
எழுந்து மெல்ல நடந்தேன்.
இடது புறம் ஓர் பெரும் பதாகை.
புதுக்கோட்டை
மாவட்ட எழுத்தாளர்களுக்கு எனத் தனியொரு அரங்கு.
இந்தியாவின் எந்தவொரு நூலகத் திருவிழாவிலும்,
காண இயலாத அற்புதக் காட்சி.
புதுக்கோட்டையை
புத்தகக் கோட்டை என்று மட்டுமல்ல,
எழுத்துக் கோட்டை
எழுத்தாளர்களின் எழில் கோட்டை என்றும் அழைக்கலாம்.
சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை உருவாக்கிய கோட்டையாக, புதுக்கோட்டை தலை நிமிர்ந்து, நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறது.
இதனால்தான் புதுக்கோட்டை, நூறு சதவீத எழுத்தறிவு
பெற்ற மாவட்டமாய், தமிழகத்து மாவட்டங்களில் முன்னிலையில் நிற்கிறது.
நாற்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிக்
கொண்டே இருக்கிறார்கள்.
புதுகை வாசித்துக் கொண்டே இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்களுக்கான
அரங்கில், இருக்கையில் அமர்ந்து, தீவிரமாய் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார் நம்
கவிஞர்.
கவிஞர்
முத்து நிலவன் ஐயா அவர்கள்.
அரங்கப் பொறுப்பாளராய் ஓர் இளைஞர்.
திரு எம்கே.நாகநாதன்.
வணக்கம்
ஐயா என்றேன்.
தலை நிமிர்ந்து பார்த்த கவிஞர் ஐயா அவர்கள், முகம்
மலர, கரம் பற்றி வரவேற்றார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, கவிஞர் ஐயா அவர்களைச்
சந்திக்கும் வாய்ப்பு.
கவிஞருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, புதுகையின்
தங்கக் கவிஞரும் வந்தார்.
கவிஞர்
தங்கம் மூர்த்தி.
முக நூலில், புத்தகத் திருவிழாவிற்கு
அவசியம் வருகிறேன் என்று எழுதியிருந்தீரே, ஆனால் வரவில்லையே என்று நினைத்தேன், வந்து
விட்டீர்கள், வாருங்கள் என தனக்கே உரிய, ஒப்பனை இல்லாத பூஞ்சிரிப்புடன்
வரவேற்றார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேல், ஒவ்வொரு அரங்காக,
நுழைந்து, நுழைந்து, புத்தகக் குவியல்களுக்கு இடையே தவழ்ந்து மகிழ்ந்தேன்.
நூல்களைப் பார்ப்பதோடு மனநிறைவு பெற்றுத் திரும்பிவிட
வேண்டும் என்ற உறுதியோடுதான், விழா அரங்கிற்குள்ளேயே நுழைந்தேன்.
மாத ஊதியத்தில், மீதமிருக்கின்ற
ஒன்றிரண்டு ஆயிரங்களையும், வங்கியில் இருந்து, மீட்டு எடுக்க முடியுமா, முடியாதா என்று
தெரியாத சூழல், மணிக் கணக்கில் தானியங்கிப் பணம் வழங்கும் இயந்திரங்களின் முன் நின்றாலும்,
இயந்திரம் பணம் தருமா அல்லது அருகில் சென்றதும், கை விரித்து கேலி செய்யுமா என்பதும்
புரியாத இக்கட்டான நிலை. இந்நிலையில் மீதமிருக்கின்ற, இம் மாதத்தின் நாட்களை ஓட்டியாக
வேண்டும், எனவே பார்வையாலே பார்த்து ரசிப்போம் என்ற முடிவோடுதான் தஞ்சையில் இருந்து
கிளம்பினேன்.
புதுக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்களுக்கானத்
தனி அரங்கில், கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள், தேநீர் விருந்தோடு, நூல்களுக்குக்
கூடுதல் கழிவும் வழங்கி, அன்போடு வழியனுப்ப, விழா அரங்க வாயிலிலேயே, தஞ்சைப் பேரூந்தில்
ஏறினேன்.
தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும்
நானும்
சையோகம் புரிந்ததொரு வேளை தன்னில்
இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம்
கண்டேன்
இசைகேட்டேன், மணம்மோந்தேன், சுவைகள் உண்டேன்
மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர்
நெஞ்சின்
மகாசோதி யிற்கலந்த தெனது நெஞ்சும்
சனித்ததங்கே புத்துணர்வு, புத்த
கங்கள்
தருமுதவி பெரிது,மிகப் பெரிது காண்பீர்
பாவேந்தர் பாரதிதாசன்