பள்ளியில்
பதற்றத்தில்
அருவருப்பின்
உச்சத்தில் செல்ல ….
பணியிடத்தில்
வழியின்றி
மறைவிடங்கள்
நாடி….
பயணத்திலோ
பரிதவித்து
அடக்கிக் கொண்டே …
நகரங்கள்
கிராமங்கள்
ஒரே
நிலைதான்.
சந்ததிக்கும்
மாறவில்லை
அலைச்சலில்
மாதவம்
செய்தவர்கள் …..
சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளாகிப்
பயனென்ன, வழுக்கும் சாலைகள் வந்துவிட்டன, சொகுசுப் பேருந்துகள் வந்துவிட்டன, குளிரூட்டப்பட்ட,
பேருந்திற்கானக் காத்திருப்பு மையங்கள் கூட வந்துவிட்டன, ஆனால், இயற்கை அழைக்கும் பொழுது,
இன்றும் மரத்தடிதானே நம்மைக் காக்கிறது. வேதனையல்லவா
மனக்
குகையில்
பயப்
பறவைகளின் சிறகசைப்புகள்
நிர்பயாக்களையும்
வினோதாக்களையும்
நினைவுறுத்தி
– முற்றுபெறாதென
ஸ்வாதியும்
தொடர்கதையாகுமென
சத்தமிடுகின்றன ….
ஒளிந்து
கொள்ளத் தோணுகிறது
ஒழியாத
வன்முறையால் ….
எங்கோ
நடக்கிறது
எவருக்கோ
என
சும்மாயிருக்க
முடியவில்லை
பிறத்தலை
விட, இறத்தல் எளிதாயுள்ளது
கூலிகளால்
வாழ்வு
அச்சங்களால்
நகர்த்தப்படுகிறது
…
இதைவிட, இன்றைய நிலையினை, பெண்களின் உண்மை நிலையினை,
யாரால் சொல்ல முடியும்.
காந்தி கண்ட கனவு முழுமையாய் பொய்த்துப் போய்விட்டதை,
பொங்கி எழும் உணர்வுகளால் எடுத்துரைக்கும், இக்கவிஞர், காந்தியின் கனவு பலித்துவிட்ட
வேறொரு நிகழ்வினை எடுத்து வைக்கும பாங்கினைப் பாருங்கள்.
நட்டநடு
இரவு
பன்னிரெண்டு
மணி
உடல்
நிறைய நகைகளுடன்
ஒற்றைப்
பெண் ஊர்வலமாய்
ஆண்கள்
புடைசூழ ….
இந்தியாவா
இது…. ?
ஓ
மாரியம்மன்
…..
தெய்வத்திற்குப் பாதுகாப்பு தந்து, உயிருள்ள
பெண்களைப் பாடாய் படுத்தும், இச்சமூகத்தின் அவலத்தினை இதைவிட வலிமையாய் எடுத்துச் சொல்ல
யாரால் இயலும்.
அவசரமாய்
பல்லு தேய்க்காம
அவதியா
குளிக்காம
ஆற அமர
சாப்பிட்டு
அம்மா
கலைக் கட்டிக்கிட்டு
அப்பா
கையப் பிடிச்சிக்கிட்டு
கடைக்குப்
போகலாமினி
இடிச்சி
பிடிச்சி வண்டில பிதுங்கி
இயங்க
மறுக்கும் பகல் சிறையில்லை
இன்னுமொரு
திங்களுக்கு …
ஆத்தா
மடியில புதைஞ்சுக்கலாம்
தாத்தாவோடு
விளையாடலாம்
வீட்டுப்
பாடம் எழுதச் சொல்லி
அம்மா
கொட்டு வைக்கலயே
அடுத்தவீட்டுப்
பசங்களோடு
நாள்
முழுதும் விளையாடலாம்னு
கனவுடனே
எந்திரிச்சேன்
இந்தி
வகுப்பு
கம்ப்யூட்டர்
வகுப்பு
சம்மர்
கிளாஸ்னு கொல்லுறாங்கள்
கேட்க
யாரும் மாட்டீங்களா?
நாங்களா
வாழ்வது எப்போது?
படிக்கப் படிக்க, இன்றைய மாணவர்களின்
நிலை, மனதை வாட்டத்தான் செய்கிறது.
இந்நிலை என்று மாறுமோ என்னும் ஏக்கம் நெஞ்சில்
எழத்தான் செய்கிறது.
இவரது கவிதையின் வரிகள் மட்டுமல்ல, கவி வரிகளின்
ஒவ்வொரு எழுத்தும் கூட, வலிமைமிகு துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட, தோட்டாக்களாய்,
நம் மனதைப் பதம் பார்க்கத்தான் செய்கின்றன.
சமூக அவலங்களைக் கண்டு, எரிமலையாய் குமுறும்
இவரது எழுத்துக்கள், தோட்டாக்களாய்ச் சுடத்தான் செய்கின்றன.
மனம் சுடும் தோட்டாக்கள்
எழுதுகோலில், ஈர மையை நிரப்புவதற்குப் பதிலாக,
ஈயத் தோட்டாக்களை நிரப்பி, நம் மனங்களைச் சுட்டு, இரணப் படுத்தியக் கவிஞர்
தேவதா தமிழ்
கவிஞர் மு.கீதா
வாழ்த்துகள்
சகோதரியாரே