03 மே 2019

மரணக் கிணறு
     நண்பர்களே, வணக்கம்.

     நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும்.

     கோடை காலம் என்றாலே, மாணவர்களுக்குக் கொண்டாட்டம்.

     ஆனால் ஆசிரியர்களுக்கோ, திண்டாட்டம்.


     ஆசிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள், சம்பளத்துடன் கூடிய அதிக விடுமுறை நாட்களை அனுபவிப்பவர்கள் என்று, பொது வெளியில் ஒரு கருத்து நிலவுகிறது.

     ஆனால் உண்மை, வேறுமாதிரியாகத்தான் இருக்கிறது

     சனிக்கிழமைகளில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள்

     காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள்

     முழு ஆண்டு விடுமுறையில், தேர்வுத்தாள் திருத்தும் பணி, தேர்தல் பணி, பத்து, பதினொன்று மற்றம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கல், மாற்றுச் சான்றிதழ் வழங்கல், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல், மாணவர் சேர்க்கை, மாணவர் சேர்க்கைக்கானக் களப்பணி என விடுமுறையெல்லாம் வியர்வையில் நனைந்தே கரைகிறது.

     மாணவர் சேர்க்கைக்காக, ஒவ்வொரு கிராமம், கிராமமாகப் படையெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

     கடந்த 24.4.2019 புதன் கிழமையன்று காலையிலேயே, பள்ளித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ.சரவணன் அவர்கள் தலைமையில், ஒரு குழுவாய் புறப்பட்டோம்.

     பள்ளியக்கிரகாரத்தின் வெண்ணாற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளச் சிற்றூர்களை நோக்கிப் பயணித்தோம்.

     ஒரு சிறு கிராமம்.

     ஊரின் முகப்பிலேயே சிறு கடை.

     திண்பண்டங்கள் கிடைக்கும்

     மளிகைப் பொருட்கள் கிடைக்கும்

     தேநீரும் கிடைக்கும்

     கடை உரிமையாளரின், இரு மகள்களும், எங்கள் பள்ளியில் படித்தவர்கள்.

     எனவே நல்ல வரவேற்பு

    


எங்கள் இரு சக்கர வாகனங்களைக் கடையின் எதிரில் நிறுத்திவிட்டு, ஊருக்குள் நுழைந்தோம்.

     தெருத் தெருவாய், வீடு வீடாய், பள்ளிப் பருவ மாணவர்களைச் சந்தித்தோம்.

     அந்த கிராமத்தின் அத்துணை வீடுகளையும் பார்த்துவிட்டு, இரு சக்கர வாகனங்களை எடுக்க வந்தபொழுது, எங்களுக்காகத் தேநீர் காத்திருந்தது.

      கடையின் உரிமையாளர், எங்கள் அனைவருக்கும் தேநீர் கொடுத்துவிட்டு, காசு வாங்க முடியவே முடியாது என மறுத்துவிட்டார்.

     தேநீர் குடித்தபடியே பேசிக்கொண்டிருந்தோம்

     கடையை ஒட்டி ஒரு கிணறு

     விறகுகளாலும், குப்பை மூட்டைகளாலும் மூடப்பட்டக் கிணறு

     கிணற்றை மூடிவிட்டார்களே என்னும் வருத்தம் உள்ளத்தில் குடியேறியது

    ஏன் கிணற்றை மூடிவிட்டீர்கள்?

     கிராமப்புறங்களிலேயே கிணற்றை மூடுகிறீர்களே? தண்ணீர் இல்லையா? என்றோம்.

     இக்கேள்விக்குத் திரும்பி வந்த பதிலைக் கேட்டு, அனைவருமே அதிர்ந்துதான் போனோம்.

     கிணற்றில் நீர் இருந்தது.

     எங்கள் ஊரில், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பெற்ற மிகவும் வயதானப் பெற்றோர்கள் பலர், குச்சு ஊன்றி நடந்து வந்து, குச்சியை கிணற்றின் சுவற்றில் வைத்துவிட்டு, கிணற்றுக்கள் விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

     தொடர்ந்து, பலர் இதுபோல், தற்கொலை செய்து கொள்ளவே, கிணற்றையை மூடிவிட்டேன் என்றார்.

     எங்களுக்குப் பேச்சே வரவில்லை

     என்ன கொடுமை இது?

     நகர்புறங்களில், மெத்தப் படித்தவர்கள், மலைமலையாய்ச் சம்பாதிக்கும் பலருக்குத்தான், பெற்றோரைக் கவனிக்க நேரமில்லாமல், முதியோர் இல்லங்களில் தள்ளிவிடுகிறார்கள் என்றால், கிராமப் புறங்களில், கிணற்றுக்குள் பாய்கிறார்களே

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

என்னும் நம் முன்னோர் உரைத்த வரிகள், வலுவிலந்து, பொருளிழந்து விட்டனவே.

     இவர்களெல்லாம் என்ன பிள்ளைகள்

     வயிற்றிற்குக் கஞ்சி

     மனதிற்கு இதமாய் சில வார்த்தைகள்

     இவற்றைக்கூடத் தர இயலா பிள்ளைகள் என்ன பிள்ளைகள்.

     கால் வயிற்றிற்றுக் கஞ்சி கொடுக்க மறுக்கின்ற மனம் என்ன மனம்.

     பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிவிட்ட, கைதூக்கி விட்ட தந்தையிடம், அன்பாய் நாலு வார்த்தை பேச மறுக்கின்ற மனம் கொடூரம் அல்லவா?

     இவர்கள் மனிதர்களே அல்ல

     வேதனையோடு வீடு திரும்பினோம்.

25 கருத்துகள்:

 1. ஆசிரியர் பாடு மிகவும் கஷ்டமாய் தான் இருக்கிறது.

  படிக்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது.
  கிணற்றின் உயரத்தை அதிக படுத்தி இருந்தால் வயதானவர்களால் ஏற முடியாதே! உயரம் குறைச்சலாக இருப்பதால் உள்ளே எளிதாக விழுந்து விடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 2. மிகவும் வேதனையான செய்தி நண்பரே. தலைப்பும் மிக பொருத்தம்

  பதிலளிநீக்கு
 3. "வயிற்றிற்குக் கஞ்சி, மனதிற்கு இதமாய் சில வார்த்தைகள், இவற்றைக்கூடத் தர இயலா பிள்ளைகள் என்ன பிள்ளைகள். கால் வயிற்றிற்றுக் கஞ்சி கொடுக்க மறுக்கின்ற மனம் என்ன மனம்." என்ற அருமையான கேள்விகள் இந்தக்காலப் பிள்ளைகளின் உள்ளத்தைத் துளைக்குமா?

  பதிலளிநீக்கு
 4. ஆம் சிவகங்கை மாவட்டத்திலும் இதே நிலை தான்.

  பதிலளிநீக்கு
 5. பலர் வேறு வேறு வழிகளைக் கையாண்டு தற்கொலை செய்துகொள்கிறார்கள். குடும்பத்தாராலேயே கொலை செய்யப்படுவதும் உண்டு. கணிசமான எண்ணிக்கையினர்
  காணாமல் போகிறார்கள்.

  பல நிகழ்வுகள் பிறர் அறியாமல் மறைக்கப்படுகின்றன.

  பெரியவர்கள் மதிக்கப்படுவது வெறும் பேச்சளவிலும் ஏட்டளவிலும்தான்.

  பதிலளிநீக்கு
 6. புதைக்குழியைவிட கொடுமையானது மரணக்கிணறு...

  என் பெரியப்பா, மற்றும் இன்னொரு உறவினர் இருவருக்குமே மனைவி இல்ல. இரண்டு பெரியப்பாக்களும் அவங்களே சமைச்சு சாப்பிடுறாங்க இத்தனைக்கும் அந்த வீட்டிலேயே அவங்க மருமகள்கள் இருந்தும் இந்நிலை....

  நல்ல உடல்நிலையில் இருப்பதால் சமைச்சு சாப்பிட்டுக்கிறாங்க. முடியாமல் போனப்பின்?! அவங்க ஊரிலும் இதுமாதிரி கிணறு இருக்காந்னு தேடனும்..

  பதிலளிநீக்கு
 7. ஒரு பக்கம் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க விடியற்காலையிலேயே பள்ளியில் வரிசையில் நிற்பார்கள் என்று கேட்டிருக்கிறேன் ஆனால் பள்ளிஆசிரியர்கள்தேடிச் சென்று பிள்ளைகளப் பள்ளியில் சேர்க்க முயற்சிக்கின்றனர் என்று பதிவு சொல்கிறது இதுமுரணாகத் தெரிகிறதே

  பதிலளிநீக்கு
 8. ஆசிரியர் பணி இப்போது மிகவும் சிரமமான பணியாகத்தான் மாறி இருக்கிறது! அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைந்து கொண்டிருக்கிறது.சேருகின்ற மாணவர்களின் தரமும் சரியில்லை! பெரும் போராட்டம்தான்! பெற்றவர்களை தற்கொலை செய்து கொள்ள வைக்கும் பிள்ளைகள் கிராமங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குத்தெரிந்து ஒரு கிராமத்தில் குளத்தில் விழுந்து ஒரு மூதாட்டி இறந்து போனார். கிணற்றை மூடியது நல்லதற்கே! ஆனால் வருத்தமான ஒன்றுதான்!

  பதிலளிநீக்கு
 9. மிகவும் வேதனை தரும் தகவல்...

  பதிலளிநீக்கு
 10. இன்றைய அரசு ஆசிரியர்கள் விடுமுறை நாட்களிலும் படுகின்ற அவஸ்தைகள் எனக்கும் முழுமையாகத் தெரியும். என் சகோதரி மருமகள் அர‌சுப்பள்ளி ஆசிரியை. தேர்தலுக்கு முன் பயிற்சிக்காக புதுக்கோட்டை அருகிலுள்ள கிராமத்தில் போட்டார்கள். அப்புறம் தேர்த்தல் டியூட்டி. இப்போது கோச்சிங் கிளாஸ் என்று பள்ளிக்கு மீண்டும் சென்று கொண்டிருக்கிறார். காலை ஐந்து மணிக்கு எழுந்து வீட்டிலிருக்கும் வயதானவர்களுக்கு சமைத்து வைத்து விட்டுத்தான் பள்ளிக்கும் போக வேண்டும்.

  இன்றைக்கு அன்புக்கும் மரியாதைக்கும் தானே பஞ்சமாக இருக்கிறது! பொங்கி வரும் கண்ணீரை விழிகளுக்கு வராமல் தொண்டையிலேயே நிறுத்தி குமைந்து கொன்டிருக்கும் ப‌ல வயதான‌வர்களைப்பார்த்து பார்த்து மனம் க‌சந்து விட்டது.

  பதிலளிநீக்கு
 11. வயதான பெரியவர்கள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்கிறார்கள் என்பதை இப்போதுதான் கேள்விபடுகிறேன்.....வேதனையான விஷயம்...

  பதிலளிநீக்கு
 12. எஸ் ரா வின் கங்கை பயண அனுபவம் ஒன்று நினைவில் வந்தது.
  ஒவ்வொரு ஊரிலும் இப்படி ஒரு அதிர்ச்சி இருக்கும்.
  மிக நேர்த்தியாக அதை பதிவு செய்திருகிறீர்.

  இதை தழுவி ஒரு சிறுகதையை எழுதலாம்.

  பதிலளிநீக்கு
 13. நம் முன்னோர் உரைத்த வரிகள், வலுவிலந்து, பொருளிழக்க வைத்துவிட்டாரகள்...டிஜிட்டல் உலகத்தார்கள்தான் முதல்காரணம்..
  ஒரு பிள்ள சிறப்பாக வளர மாதா பிதா குரு காரணம் என்ற போது..அந்த ஒரு பிள்ளை கெட்டு போக..மாதா பிதா..குரு..தானே காரணம்..

  பதிலளிநீக்கு
 14. வேதனையான விடயம் நண்பரே.
  சற்றே அவரவர் குடும்பத்தை சற்றே உற்று நோக்குங்கள் வீட்டுக்கு வீடு வாசப்படி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜி... நான் மனப்பூர்வமா நல்ல பின்னூட்டம் என்று நினைத்தது உங்களின் பின்னூட்டம்..

   நீக்கு
 15. வேதனையைத் தருகின்ற பதிவு. மனம் கனத்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 16. வேதனை மிகுந்த கிணறு.... கிராமத்திலேதானே பெற்றோரை அதிகம் பேணுவார்கள்... இது வித்தியாசமாக இருக்கே...

  பதிலளிநீக்கு
 17. மனம் கனக்கும் பதிவு .

  பதிலளிநீக்கு
 18. மனத்தைக் கலங்கடிக்கும் பதிவு.

  1. பொதுப் புத்தி, (பெரும்பான்மை) ஆசிரியர்கள் ஜாலியா வேலை எதுவுமில்லாமல் வருடத்துக்கு இரண்டு மாத விடுமுறையோடு நல்ல சம்பளத்தில் இருக்காங்க என்று இருப்பதுதான். (நானும் அப்படிப்பட்ட மனநிலையில்தான் இருந்தேன், என் அப்பா ஆசிரியப்பணி செய்திருந்தபோதும்). சில மாதங்களுக்கு முன்பு, உறவினர் வீட்டில் கணவன் மனைவி இருவரும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியப்பணி, இப்போதைய ஆசிரியப்பணியின் பிரச்சனைகளெல்லாம் விரிவாகப் பேசினார்கள். அப்புறம்தான் தெரிந்தது, வெளியில் இருந்துகொண்டு ஒரு துறையைத் தவறாக நினைக்கக்கூடாது என்று.

  2. வயதானவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருந்தது மனவேதனையைத் தந்தது. ஆனால் இந்த மாதிரி நிலையில் பலப்பல குடும்பங்களைக் காண்கிறேன். முன்னைப்போல் கூட்டுக் குடும்பம் என்று ஒன்று இல்லாதிருப்பது, முன்னைப்போல் சாதாரண வாழ்க்கையை பெரும்பாலானோர் வாழாதது (டிவி, சினிமா, வெளியிடங்களில் சாப்பாடு, வித வித துணி என்று வாழ்க்கை முறை மாற்றம்), பெற்றோரை கூட இருந்து கவனித்துக்கொள்ளமுடியாத நிலைமை (ஆரம்பகாலத்தில் மாமியார், மருமகளை நன்றாக நடத்தியிருக்கமாட்டார்... பிறகு மருமகள் மாமியார் உறவு சரிப்படுத்த முடியாத அளவு சேதமடைவது போன்று பல காரணங்கள்)

  பதிலளிநீக்கு
 19. ஐயா...தங்கள் பதிவான மரணக்கிணறு படித்து மனம் நொந்தேன். இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன் ஏறக்குறைய எல்லா ஆசிரியர்களும் வேதனத்தையோ வேறு சலுகைகளையோ கவனத்தில் கொள்ளாது திறமையான ஒழுக்கமான சமூகத்துக்குத் தேவையான மாணவர்களை உருவாக்கினாா்கள். இன்றும் சில ஆசிரியர்கள் அப்படி நேர்மையாகக் கடமையாற்றுகின்றார்கள். இன்னும் சிலர் கல்லூரிகளில் கடமையாற்ற சம்பளம் வாங்கிக்கொண்டு அதிக பணத்தை சம்பாதிப்பதைக்குறிக்கோளாகக் கொண்டு தனிப்பட்ட ரியுசன் வகுப்புகளை நடாத்துகின்றாா்கள். முன்பு சினிமாப்பட விளம்பரங்களில் கதாநாயகா்களின் படங்களைச் சேர்த்துக்கொள்வது போல இப்போது முக்கியமான இடங்களில் தனியார் வகுப்புகளை நடாத்தும் ஆசிரியா்களின் படங்களை (சில இடங்களில் சற்று கவா்ச்சிகரமாக) இணைத்து விளம்பரம் செய்து மாணவர்களையும் பெற்றோா்களையும் மயக்குகின்றாா்கள். இது ஒருபுறம் இருக்க இலங்கையில் எண்பதுகளுக்கு பின் இடம் பெற்ற விரும்பத்தகாத விளைவுகளால் பல் வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த்தோா் ஏதோ சில காரணங்களுக்காக பெற்றோா்களை தாங்கள் வாழும் நாட்டுக்கு அழைத்துச் சென்றாலும் அங்கே வாழமுடியாமல் பலர் சிரமப்படுகின்றாா்கள். இன்னும் சிலா் பெற்றோரை முதியோா் இல்லங்களில் சோ்த்து அவ்வப்போது பணம் செலுத்தினாலும் வயதான காலத்தில் பிள்ளைகளிடமிருந்து எதிா்பாா்க்கும் அன்பும் ஆதரவும் இன்றி இன்றி அனாதைகளாக அவதிப்படுவதை அவதானித்து ஆதங்கப்படுகின்றேன்.

  பதிலளிநீக்கு
 20. my mother spent 20 years after my father's end until her end with so much of attention.

  பதிலளிநீக்கு
 21. Great job for publishing such a beneficial article. Your blog information isn’t only useful but it is additionally creative with high content too. Thanks..
  kalviseithi

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு