16 மே 2019

மகாமகோபாத்யாய




     ஆனந்த ஆண்டு

     இன்றைக்கு 164 ஆண்டுகளுக்கும் முன்

     1855

     ஆனந்த ஆண்டு

     ஒரு நாள், அந்த ஊருக்கு வந்த, சோதிடக்காரன் கூறினான்,

     இந்த ஆனந்த ஆண்டில் அதிசயங்கள் பல நடக்கும்.


     இவ்வாண்டில்தான், தமிழ் நாட்டிற்குள் முதன் முதலாகத் தொடர் வண்டி  நுழைந்தது.

     இவ்வாண்டில்தான், தமிழ் நாட்டில், முதன் முதலாக அஞ்சல் துறை, தன் சேவையைத் தொடங்கியது.

     ஆனாலும், அவ்வூர் சரசுவதி அம்மாள் கூறினார், உறுதியாய் கூறினார்.

     இவ்வாண்டில், எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்.

     அவன்தான் அதிசயம்.

     சரசுவதி அம்மையரின் வாக்கு பலித்தது.

     அதிசய மகனால், தமிழ் பிழைத்தது.

---

     ஆண்டு 1885.

     அதிசயக் குழந்தை, தவழ்ந்து, படித்துப் படித்து, தமிழ் படித்துப் படித்து, வளர்ந்து கல்லூரிப் பேராசிரியராய் உயர்ந்தது.

     ஒரு நாள் வகுப்பிலே பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

     சிற்றிலக்கியம்

     கார்போக சுந்தரவதனி

     தெளிந்த நீரோடைபோல், பாடம் நடத்தி வந்தவர், திடீரென்று பாடத்தை நிறுத்தினார்.

     காரணம் ஒரு பாடல்

     பாடல் வரிகளில், ஆபாசம் இருந்ததால், மாணவர்களிடம் எப்படிச் சொல்வது என்ற தயக்கம்.

     இப்பாடலில் ஆபாசம் கலந்திருக்கிறது, எனவே அடுத்தப் பாடலைப் பார்ப்போம், இப்பாடலையெல்லாம் தேர்வில் கேட்கமாட்டார்கள் என அடுத்தடுத்தப் பாடல்களை நோக்கி நகர்ந்துவிட்டார்.

     தேர்வும் வந்தது

      இக்காலம்போல், படிக்கும் கல்லூரியிலேயே தேர்வெழுதும் வசதி அப்பொழுது கிடையாது.

     சென்னைக்குத்தான் சென்றாக வேண்டும்

     சென்னைப் பல்லைக் கழகத்தில்தான் தேர்வெழுதியாக வேண்டும்

     மாணவர்கள் சென்னை சென்றனர்

     தேர்வு முடிய, முடிய, அன்றன்றைய வினாத்தாட்களைத் தங்களின் பேராசிரியருக்கு, நாள்தோறும் அஞ்சலில் அனுப்பினர்.

     ஒரு வினாத்தாளைக் கண்ட பேராசிரியர் திடுக்கிட்டார்.

     எந்தப் பாடல் ஆபாசம் என்று கருதி நடத்தாமல் விட்டாரோ, அந்தப் பாடல், கேள்வித்தாளை உருவாக்கியவருக்கு, முக்கியமானப் பாடலாய் தோன்றி இருக்கிறது.

     விளைவு. அதே பாடல் கேள்வித்தாளில், கேள்வியாய் முளைத்திருந்தது.

     மனிதர் ஆடிப் போய்விட்டார்.

     நாம் நடத்தாமல் விட்ட பாடல் கேள்வியாய் வந்துவிட்டதே, மாணவர்கள் வந்து கேட்டால் என்ன சொல்லுவது?

     குழம்பித்தான் போனார்

     இது என் தவறு

     பாடப் பகுதியில் இடம் பெற்றிருந்தும், நடத்தாமல் விட்டது என் தவறு.

     பலவாறு புலம்பினார்.

     ஒரு வாரம் கடந்தது,

     தேர்வுகள் அனைத்தும், முடிந்த நிலையில், சென்னை சென்ற மாணவர்கள், ஊர் திரும்பினர்.

     ஐயா, தேர்வுகளை அருமையாக எழுதியுள்ளோம்

     மாணவர்கள் மகிழ்ந்தனர்

     ஆனால் இவரோ, மன்னிக்கவும், அந்தப் பாடலை நடத்தாதது என் தவறு, என்னை மன்னியுங்கள் எனத் தட்டுத்தடுமாறினார்.

     ஐயா அந்தப் பாடலையும் எழுதிவிட்டோம் என்றனர் உற்சாகமாய்.

     என்ன அந்தப் பாடலையும் எழுதினீர்களா? எப்படி?

     பாடலில் ஆபாச வரிகள் இருப்பதாகக் கூறித் தாங்கள் நடத்தாமல் விட்டீர்களா? உடனே எங்களுக்கு அதனைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது, சமஸ்கிருத ஆசிரியரை நாடினோம். அவர் சொல்லிக் கொடுத்தார்.

---

     சேலம் ராமசாமி உடையார் என்று ஒருவர்

     இவர் ஒரு நாள், ஓர் ஓலைச் சுவடிக் கட்டினை எடுத்துக் கொண்டு, இப்பேராசிரியரிடம் வந்தார்.

     ஐயா, இச்சுவடியில் உள்ளப் பாடல்களை எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார்.

     இது என்ன?

     இதுதான் சீவக சிந்தாமணி

     நாளை வாருங்கள், படித்து வைக்கிறேன்.

     இரவு கண் விழித்துப் படித்தார்

     சரிவர புரிபடவில்லை

     அடுத்த நாளே, அவ்வூரில் உள்ள சமணர்களை நாடினார்

     சமண மதம், அவற்றின் கோட்பாடுகள், நடைமுறைப் பழக்க வழக்கங்களை அறிய அறிய, சீவக சிந்தாமணி பிடிபட்டது.

      சேலம் ராமசாமி உடையார்தான் கூறினார்

      ஓலைச் சுவடியாய் இருக்கும், இந்தச் சீவக சிந்தாமணியை, நீங்களே, பதிப்பித்து, அச்சு நூலாக்கினால் என்ன?

       அன்றிலிருந்து இவர் வாழ்வு திசைமாறியது

       பல்வேறு சுவடிகளை ஒப்பிட்டு, ஒப்பிட்டு, தவறுகளை, எழுத்துப் பிழைகளை நீக்கி, கடுமையாய் உழைத்து, சீவச சிந்தாமணியைப் பதிப்பித்து அச்சு வாகனத்தில் எற்றினார்.

       சீவகசிந்தாமணி காப்பாற்றப்பட்டது

       நண்பர்களே, இவர் யார் என்று தெரிந்துவிட்டதல்லவா


மகாமகோபாத்யாய
டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்

     சங்க இலக்கியங்களான பத்துப் பாட்டு, எட்டுத் தொகையில், மூன்று நூல்களைத் தவிர்த்து, மீதமுள்ள பதினைந்து நூல்களையும் பதிப்பித்தார்.

     இவரது புறநானூறு பதிப்பிற்குப் பிறகுதான், சோழ, சேரர்களைப் பற்றியப் பாட நூல்களே வெளிவரத் தொடங்கின.

     ஓலைச் சுவடிகளுக்குள் மறைந்து கிடந்த தமிழுக்குப் புத்துயிர் ஊட்டியவர் இவர்.

     தமிழ் இலக்கியங்கள் இவரால்தான், அழிவினின்றுக் காப்பாற்றப்பட்டன.

     தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகளை நூல்களைப் பதிப்பிப்பதற்காக மட்டுமே செலவிட்டவர்.

     சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, அழகர் கிள்ளை விடு தூது, தமிழ் விடுதூது, பத்துப் பாட்டு, பரிபாடல், பதிற்றுப்பத்து என இவர் பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

     மிகச் சரியாக நூறு நூல்கள்.

     ஐம்பது ஆண்டுகளில் நூறு நூல்கள்

     தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும், கையெடுத்து வணங்கதற்குரிய மாமனிதர்.

மகாமகோபாத்யாய
டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்

     இவரது இறுதி ஆசை, விருப்பம் என்ன தெரியுமா?

மறுபிறப்பு என்று ஒன்று உண்டேல், மீண்டும் தமிழகத்திலேயே பிறக்க ஆசைப்படுகிறேன். இப்பிறப்பில், பதிப்பிக்காத தமிழ் நூல்களையெல்லாம், மறு பிறப்பிலாவது பதிப்பிக்க வேண்டும் என்பதே என் பேராசையாகும்.

---

தமிழ்த் தாத்தாவின் தமிழ் தொண்டு
என்னும் தலைப்பில்,
ஏடகம்
ஞாயிறு முற்றம் சொற்பொழிவில்,
கடந்த 12.5.2019 ஞாயிறு மாலை,


தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைப் பதிவாளர் (ஓய்வு)
தமிழறிஞர் இரா.சுப்பராயலு அவர்கள்
பேசப் பேச, அரங்கே நெகிழ்ந்துபோய் அமைதியில் உறைந்துதான் போனது.


ஏடகம் அமைப்பின் புரவலர், ஞாயிறு முற்றப் பொறுப்பாளர்
திரு பி.கணேசன் அவர்கள்
பொழிவிற்குத் தலைமையேற்றார்.


சுவடியியல் மாணவி
செல்வி நெ.ஜோஸ்பின் ஜெனிபர் அவர்கள்
நன்றிகூற, விழா இனிது நிறைவுற்றது.


முன்னதாக, விழாவிற்கு வந்திருந்தோரை
ஏடகம் அமைப்பின் புரவலர், ஞாயிறு முற்றப் பொறுப்பாளர்
கல்வியாளர் திரு எம்.வேம்பையன் அவர்கள்
வரவேற்றார்.


ஏடகம் அமைப்பின் செயலாளர்
திருமதி பா.விஜி அவர்கள்
விழா நிகழ்வுகளைத் திறம்படத் தொகுத்து வழங்கினார்.

திங்கள்தோறும் பொழிவு
பொழிவு ஒவ்வொன்றும்
தித்திக்கும் தேன் கரும்பு
என வழங்கிவரும்
ஏடகம் அமைப்பின்
நிறுவுநர்


திரு மணி.மாறன் அவர்களின்
அயரா முயற்சி
போற்றுதலுக்கு உரியது.

போற்றுவோம், வாழ்த்துவோம்


15 கருத்துகள்:

  1. அருமை ஆனால் இவருக்கான அங்கீகாரம் தமிழகத்தில் இவருக்கு கிடைத்துள்ளதா என்ப்து கேள்விக் குறி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தில் கடைசி வரை அங்கீகாரம் என்பதனை ஒரு துளி கூட எதிர்பார்க்கக்கூடாது என்று வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் எழுத்துத் துறையில் உள்ளவர்கள். இது இன்று மட்டுமல்ல. தொடக்கம் முதல் இப்படித்தான் இங்குள்ள மக்களின் அணுகுமுறை உள்ளது. காரணம் இயல்பாகவே தமிழர்கள் உணர்ச்சி மயமானவர்கள். அவர்களை உணர்ச்சிவசப்படுத்தினால் மட்டுமே கொஞ்சம் அசைந்து கொடுப்பார்கள். இப்படித்தான் நடிகர்கள் நாடாள முடிந்தது. நல்லவர்கள் வெளியேற வேண்டியதாக இருந்தது.

      நீக்கு
  2. அட அருமையான நிகழ்வு... ஆமா நடத்தாம விட்ட அந்த பாட்டு என்னவாயிருக்கும் ???

    பதிலளிநீக்கு
  3. போற்றுதலுக்கு உரிய மனிதர்.

    பதிலளிநீக்கு
  4. உவேச முதலில் சமஸ்கிருத மொழியில் தான் ஆர்வமாக இருந்தார். தமிழ் வேறொரு விசயத்திற்காக கற்றுக் கொள்ள முயன்ற போது அது இயல்பாகவே இவரை ஈர்த்து விட்டது. வெறி கொண்ட வேங்கை போல தமிழ் பின்னால் செல்லத் துவங்கி படிப்படியாக ஒவ்வொரு இடமாகச் சென்று ஓலைச் சுவடிகளை சேகரிக்கத் துவங்கினார். இவர் ஒவ்வொரு இடமாக ஊராகச் சென்று ஓலைச் சுவடிகள் சேகரித்தது, ஓலைச்சுவடிகள் வைத்திருந்தவர்கள்உடன் போராடியது ( மாலை ஆறு மணிக்கு மேல் சென்றால் கொடுக்க மாட்டார்கள். அந்த ஊரில் தங்கி விடுவார்) இப்படி ஏராளமான விசயங்கள் கடந்து தான் இவர் இந்த சாதனைகளைத் சாதித்துள்ளார்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு. போற்றப்பட வேண்டிய மாமனிதர்.

    தமிழ்த்தாத்தாவைப் பற்றி அவரது நாளில் நினைவு கூறும்விதத்தில் கீதா சாம்பசிவம் அக்காவும் தாத்தா தன் அனுபவங்களை எழுதியதைப் பதிவாக வெளியிட்டு வருகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நல்ல தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  7. அறுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரி மாணவனாக தமிழ்ப்பாடத்தைப் பயின்ற போது, மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் விடயங்கள் சிலவற்றைப் படித்துள்ளேன். ஆனால் படித்தவற்றை மீட்டுத்தரும் வகையிலும் ஏனையவற்றைத் தேடிப்படிக்கத்தூண்டும் வகையிலும் தங்கள் ஆக்கம் அமைந்துள்ளது.பாராட்டுக்கள்..இலங்கையில் சில வித்துவான்கள் பண்டிதர்கள் இலக்கியப்பாடங்களைப் படிப்பிக்கும் போது பெண்கள் விடயம் வந்தால் அவற்றை எப்படி மாணவர்களுக்கு (சில கல்லூரிகளில் ஆண் மாணவரோடு பெண் மாணவிகளும் சமூகளிக்கும் வகுப்புகளில்) படிப்பிக்கத் தயங்குவார்கள். அநத வேளையில் வித்துவான் கனகசபை என ஆசிரியர் இலக்கியத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் எல்லாவிடயங்களையும் அறிந்து கொள்ளவேண்டும்ஃஃஃஆனால் நல்ல விடயங்களை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையுடன் பாடங்களைப்படிபித்தமையும் நினைவுக்கு வந்தது..மிக்க நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  8. அரிய தகவல்கள் தந்தீர்கள் நண்பரே.
    வாழ்க தமிழ்!

    பதிலளிநீக்கு
  9. அருமை ஐயா...

    நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விதம், மனதிற்கு அளவற்ற உற்சாகம்....

    பதிலளிநீக்கு
  10. பொழிவிற்கு வராத குறையை தீர்த்தது உங்கள் பதிவு. உங்களின் நடையில் அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. எது கூடாது என்று நினைக்க வைக்கிறார்களோ அதை நாடி படிப்பதுதானே இயல்பு

    பதிலளிநீக்கு
  12. அய்யரை தெரியும் நான் படிக்கும் காலத்திலிருந்து... அவரின் எழுத்துக்களை படித்தறிய வாய்ப்பில்லை... தமிழில் ண..ன.. எங்கு எப்படி எழுதவது என்று இன்றும் தடுமாறிக் கொண்டு இருக்கும் நிலையில் அய்யர் நூலை படித்தறிவது தங்களை ப்போன்ற ஆசிரியர்களால்தான் முடியும்...

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு