16 மே 2019

மகாமகோபாத்யாய




     ஆனந்த ஆண்டு

     இன்றைக்கு 164 ஆண்டுகளுக்கும் முன்

     1855

     ஆனந்த ஆண்டு

     ஒரு நாள், அந்த ஊருக்கு வந்த, சோதிடக்காரன் கூறினான்,

     இந்த ஆனந்த ஆண்டில் அதிசயங்கள் பல நடக்கும்.


     இவ்வாண்டில்தான், தமிழ் நாட்டிற்குள் முதன் முதலாகத் தொடர் வண்டி  நுழைந்தது.

     இவ்வாண்டில்தான், தமிழ் நாட்டில், முதன் முதலாக அஞ்சல் துறை, தன் சேவையைத் தொடங்கியது.

     ஆனாலும், அவ்வூர் சரசுவதி அம்மாள் கூறினார், உறுதியாய் கூறினார்.

     இவ்வாண்டில், எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்.

     அவன்தான் அதிசயம்.

     சரசுவதி அம்மையரின் வாக்கு பலித்தது.

     அதிசய மகனால், தமிழ் பிழைத்தது.

---

     ஆண்டு 1885.

     அதிசயக் குழந்தை, தவழ்ந்து, படித்துப் படித்து, தமிழ் படித்துப் படித்து, வளர்ந்து கல்லூரிப் பேராசிரியராய் உயர்ந்தது.

     ஒரு நாள் வகுப்பிலே பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

     சிற்றிலக்கியம்

     கார்போக சுந்தரவதனி

     தெளிந்த நீரோடைபோல், பாடம் நடத்தி வந்தவர், திடீரென்று பாடத்தை நிறுத்தினார்.

     காரணம் ஒரு பாடல்

     பாடல் வரிகளில், ஆபாசம் இருந்ததால், மாணவர்களிடம் எப்படிச் சொல்வது என்ற தயக்கம்.

     இப்பாடலில் ஆபாசம் கலந்திருக்கிறது, எனவே அடுத்தப் பாடலைப் பார்ப்போம், இப்பாடலையெல்லாம் தேர்வில் கேட்கமாட்டார்கள் என அடுத்தடுத்தப் பாடல்களை நோக்கி நகர்ந்துவிட்டார்.

     தேர்வும் வந்தது

      இக்காலம்போல், படிக்கும் கல்லூரியிலேயே தேர்வெழுதும் வசதி அப்பொழுது கிடையாது.

     சென்னைக்குத்தான் சென்றாக வேண்டும்

     சென்னைப் பல்லைக் கழகத்தில்தான் தேர்வெழுதியாக வேண்டும்

     மாணவர்கள் சென்னை சென்றனர்

     தேர்வு முடிய, முடிய, அன்றன்றைய வினாத்தாட்களைத் தங்களின் பேராசிரியருக்கு, நாள்தோறும் அஞ்சலில் அனுப்பினர்.

     ஒரு வினாத்தாளைக் கண்ட பேராசிரியர் திடுக்கிட்டார்.

     எந்தப் பாடல் ஆபாசம் என்று கருதி நடத்தாமல் விட்டாரோ, அந்தப் பாடல், கேள்வித்தாளை உருவாக்கியவருக்கு, முக்கியமானப் பாடலாய் தோன்றி இருக்கிறது.

     விளைவு. அதே பாடல் கேள்வித்தாளில், கேள்வியாய் முளைத்திருந்தது.

     மனிதர் ஆடிப் போய்விட்டார்.

     நாம் நடத்தாமல் விட்ட பாடல் கேள்வியாய் வந்துவிட்டதே, மாணவர்கள் வந்து கேட்டால் என்ன சொல்லுவது?

     குழம்பித்தான் போனார்

     இது என் தவறு

     பாடப் பகுதியில் இடம் பெற்றிருந்தும், நடத்தாமல் விட்டது என் தவறு.

     பலவாறு புலம்பினார்.

     ஒரு வாரம் கடந்தது,

     தேர்வுகள் அனைத்தும், முடிந்த நிலையில், சென்னை சென்ற மாணவர்கள், ஊர் திரும்பினர்.

     ஐயா, தேர்வுகளை அருமையாக எழுதியுள்ளோம்

     மாணவர்கள் மகிழ்ந்தனர்

     ஆனால் இவரோ, மன்னிக்கவும், அந்தப் பாடலை நடத்தாதது என் தவறு, என்னை மன்னியுங்கள் எனத் தட்டுத்தடுமாறினார்.

     ஐயா அந்தப் பாடலையும் எழுதிவிட்டோம் என்றனர் உற்சாகமாய்.

     என்ன அந்தப் பாடலையும் எழுதினீர்களா? எப்படி?

     பாடலில் ஆபாச வரிகள் இருப்பதாகக் கூறித் தாங்கள் நடத்தாமல் விட்டீர்களா? உடனே எங்களுக்கு அதனைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது, சமஸ்கிருத ஆசிரியரை நாடினோம். அவர் சொல்லிக் கொடுத்தார்.

---

     சேலம் ராமசாமி உடையார் என்று ஒருவர்

     இவர் ஒரு நாள், ஓர் ஓலைச் சுவடிக் கட்டினை எடுத்துக் கொண்டு, இப்பேராசிரியரிடம் வந்தார்.

     ஐயா, இச்சுவடியில் உள்ளப் பாடல்களை எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார்.

     இது என்ன?

     இதுதான் சீவக சிந்தாமணி

     நாளை வாருங்கள், படித்து வைக்கிறேன்.

     இரவு கண் விழித்துப் படித்தார்

     சரிவர புரிபடவில்லை

     அடுத்த நாளே, அவ்வூரில் உள்ள சமணர்களை நாடினார்

     சமண மதம், அவற்றின் கோட்பாடுகள், நடைமுறைப் பழக்க வழக்கங்களை அறிய அறிய, சீவக சிந்தாமணி பிடிபட்டது.

      சேலம் ராமசாமி உடையார்தான் கூறினார்

      ஓலைச் சுவடியாய் இருக்கும், இந்தச் சீவக சிந்தாமணியை, நீங்களே, பதிப்பித்து, அச்சு நூலாக்கினால் என்ன?

       அன்றிலிருந்து இவர் வாழ்வு திசைமாறியது

       பல்வேறு சுவடிகளை ஒப்பிட்டு, ஒப்பிட்டு, தவறுகளை, எழுத்துப் பிழைகளை நீக்கி, கடுமையாய் உழைத்து, சீவச சிந்தாமணியைப் பதிப்பித்து அச்சு வாகனத்தில் எற்றினார்.

       சீவகசிந்தாமணி காப்பாற்றப்பட்டது

       நண்பர்களே, இவர் யார் என்று தெரிந்துவிட்டதல்லவா


மகாமகோபாத்யாய
டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்

     சங்க இலக்கியங்களான பத்துப் பாட்டு, எட்டுத் தொகையில், மூன்று நூல்களைத் தவிர்த்து, மீதமுள்ள பதினைந்து நூல்களையும் பதிப்பித்தார்.

     இவரது புறநானூறு பதிப்பிற்குப் பிறகுதான், சோழ, சேரர்களைப் பற்றியப் பாட நூல்களே வெளிவரத் தொடங்கின.

     ஓலைச் சுவடிகளுக்குள் மறைந்து கிடந்த தமிழுக்குப் புத்துயிர் ஊட்டியவர் இவர்.

     தமிழ் இலக்கியங்கள் இவரால்தான், அழிவினின்றுக் காப்பாற்றப்பட்டன.

     தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகளை நூல்களைப் பதிப்பிப்பதற்காக மட்டுமே செலவிட்டவர்.

     சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, அழகர் கிள்ளை விடு தூது, தமிழ் விடுதூது, பத்துப் பாட்டு, பரிபாடல், பதிற்றுப்பத்து என இவர் பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

     மிகச் சரியாக நூறு நூல்கள்.

     ஐம்பது ஆண்டுகளில் நூறு நூல்கள்

     தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும், கையெடுத்து வணங்கதற்குரிய மாமனிதர்.

மகாமகோபாத்யாய
டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்

     இவரது இறுதி ஆசை, விருப்பம் என்ன தெரியுமா?

மறுபிறப்பு என்று ஒன்று உண்டேல், மீண்டும் தமிழகத்திலேயே பிறக்க ஆசைப்படுகிறேன். இப்பிறப்பில், பதிப்பிக்காத தமிழ் நூல்களையெல்லாம், மறு பிறப்பிலாவது பதிப்பிக்க வேண்டும் என்பதே என் பேராசையாகும்.

---

தமிழ்த் தாத்தாவின் தமிழ் தொண்டு
என்னும் தலைப்பில்,
ஏடகம்
ஞாயிறு முற்றம் சொற்பொழிவில்,
கடந்த 12.5.2019 ஞாயிறு மாலை,


தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைப் பதிவாளர் (ஓய்வு)
தமிழறிஞர் இரா.சுப்பராயலு அவர்கள்
பேசப் பேச, அரங்கே நெகிழ்ந்துபோய் அமைதியில் உறைந்துதான் போனது.


ஏடகம் அமைப்பின் புரவலர், ஞாயிறு முற்றப் பொறுப்பாளர்
திரு பி.கணேசன் அவர்கள்
பொழிவிற்குத் தலைமையேற்றார்.


சுவடியியல் மாணவி
செல்வி நெ.ஜோஸ்பின் ஜெனிபர் அவர்கள்
நன்றிகூற, விழா இனிது நிறைவுற்றது.


முன்னதாக, விழாவிற்கு வந்திருந்தோரை
ஏடகம் அமைப்பின் புரவலர், ஞாயிறு முற்றப் பொறுப்பாளர்
கல்வியாளர் திரு எம்.வேம்பையன் அவர்கள்
வரவேற்றார்.


ஏடகம் அமைப்பின் செயலாளர்
திருமதி பா.விஜி அவர்கள்
விழா நிகழ்வுகளைத் திறம்படத் தொகுத்து வழங்கினார்.

திங்கள்தோறும் பொழிவு
பொழிவு ஒவ்வொன்றும்
தித்திக்கும் தேன் கரும்பு
என வழங்கிவரும்
ஏடகம் அமைப்பின்
நிறுவுநர்


திரு மணி.மாறன் அவர்களின்
அயரா முயற்சி
போற்றுதலுக்கு உரியது.

போற்றுவோம், வாழ்த்துவோம்