ஆண்டு 1968
அவர் ஒரு கவிஞர்
சாதாரணக் கவிஞரல்ல, பாவலர்
அன்று காலை உணவை உட்கொண்டபின், ஆற்றங்கரையோரம்,
மெல்லிய தென்றல் காற்றை அனுபவித்தபடி நடந்து செல்கிறார்.
ஆற்றின் ஒரு கரையில், துணிகளை வெளுப்பதையே தங்கள்
தொழிலாகக் கொண்ட சிலர், துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கின்றனர்.
துணிகளைச் சுமந்து வந்தக் கழுதைகள், ஆற்றங்கரைதனில்,
வரிசையாய் வளர்ந்திருந்த மரங்களின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன.
திடீரென்று ஒரு கழுதையும், அதன் குட்டியும் பெருங்குரலெடுத்துக்
கூச்சலிடத் தொடங்குகின்றது.
எதற்காகக் கழுதைகள் இவ்வாறு கூச்சலிடுகின்றன
என எண்ணியவாரே, வீட்டிற்குத் திரும்பிய பாவலர், படுத்து சிறிது கண் அயற்கிறார்.
கனவில் கழுதைகள்
விழித்தெழுந்த பாவலர், கனவில், தான் கண்ட காட்சிகளைத்
தொகுத்து, ஒரு பாவியத்தையேப் படைக்கிறார்.
கழுதை
இதுநாள் வரை, சில குறியீடுகள், சில விலங்குகள்,
கீழ் நிலையை உணர்த்துவதற்காகவே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
அவற்றுள் கழுதையும் ஒன்று
கழுதை என்னும் நாட்டு விலங்கின் இழி நிலையைப்
போக்கும் வகையில், இவர் கழுதையைத் தலைமைப் பாத்திரமாய் உயர்த்தி, மையப்படுத்திப் பாவியத்தைப்
படைத்தார்.
இப்பாவியத்தில், கழுதையின் உருவத்தை, அணு அணுவாய்
ரசித்து, ஆராய்ந்து, இவர் விவரிக்கும் விதமே அலாதியானது.
ஈரம்
பிசுபிசுத்த தோலும் திரிதிரியாய்
நாரத்தங்
காயின் நடுநார்போல் மேனியெங்கும்
தொங்கும்
பகுத்த மயிர்திரளும் தொய்முதுகும்
தங்கும்
அடிபெருத்த தாழி என வயிறும்
முட்டியிடு
காலும் முழம் நீண்ட காதுகளும்
குட்டைக்
கழுத்தும் குறுஉடலும் வெள்மூக்கும்
இதுமட்டுமல்ல, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களின்
வளர்ப்பு முறையை, ஏக்கத்தோடு கவனிக்கும் கழுதைகளின்
உள்ள வெளிப்பாட்டை இவர் வெளிப்படுத்தும் அழகே அழகு.
பட்டுமயிர்
தொங்கிப்
பளபளக்கும்
மேனிக்குக்
குட்டிச்
சவர்க்காரம்
மூக்கு
கமகமக்கப்
போட்டுக
குளிப்பாட்டிப்
பூங்கழுத்துப்
பட்டியிட்டு,
சேட்டுக்
குழந்தைபோல்
சீராட்டிப்
பாராட்டிக்
கொஞ்சி
வளர்க்கப்
படுவதும்
கூறுவதோ?
இதோடு விட்டாரா, இல்லை, மனிதர்களின் ஒழுக்கக்
கேடுகளையும், கழுதையின் பார்வையிலேயே இடித்துரைக்கிறார்.
பொல்லா
அறக்கொடியோர்
பொய்யுரைத்து
வாழ்ந்திடுவோர்
இல்லாத
ஏழையரை
ஏத்திப்
பிழைத்திடுவோர்
கன்னியரைக்
கற்பழிப்போர்
கையூட்டு
வாங்கிடுவோர்
துன்னக்
கொலைவிளைப்போர்
போலித்
துறவியர்கள்
கல்லாதமூடர்
கயவர், பெருங்களியர்
எல்லாரும
நாம்உண்ணற் கேற்ற விலங்குகளாம்.
மேலும், இப்பாவியத்தின் வழி சிறுவர் முதல் பெரியவர்கள்
வரை, யாவரும் பின்பற்ற வேண்டிய, உயர் நற்குணங்களை, கழுதையின் வாயிலாகவே உணர்த்துகிறார்.
ஒப்பற்ற
கொள்கை உழைத்துண் பதுவே
தப்பலுண்டோ
அக்கொள்கை நம் வாழ்வில்? தாழ்தலுண்டோ?
கொள்ளை
படித்துக் குவிக்கின்ற வன்செயல்மேல்
வெள்ளை
யடித்தே அறமென்று வீம்புகின்ற
மொள்ளைப்பேச்
செங்களிடை முள்ளின் நனியுண்டா?
நொள்ளை
வழக்கத்தை மாந்தரைப்போல் யார் தொடர்வார்?
உழைத்து உண்பதுவே உயர்வான ஒப்பற்றக் கொள்கை என்பதை
கழுதையின் வழி எடுத்துரைக்கின்றார்.
30 இயல்கள்
1862 அடிகள்
முழுக்க முழுக்க இன்னிசைக் கலி வெண்பா
இதுவரை எழுதப்பட்ட பாவினத்திலேயே இதுவே பெரியது
ஆகும்.
கழுதை
அழுத கதை
இப்பாவியத்தை இயற்றியப் பாவலர் யார் தெரியுமா?
எதுவரை
எம்மூச்சு இயங்கு கின்றதோ
எதுவரை
எம்உடல் இம்மண் தோயுமோ
எதுவரை
எம்மனம் நினைவலை எழுப்புமோ
அதுவரை
மொழி, இனஆர்ப்பு அடங்காது
என
முழங்கி, அவ்வாறே தன் இறுதி மூச்சு உள்ளவரை வாழ்ந்தவர்.
பாவலரேறு
பெருஞ்சித்திரனார்.