20 டிசம்பர் 2019

தமிழ் மரபுத் திருமணம்






     இன்றைக்கு முப்பது வருடங்களுக்கும் முன்.

     அவருடைய வயது 62.

     கண் மருத்துவரைப் பார்க்கச் சென்றார்.

     இவரது கண்களை நன்கு பரிசோதித்த மருத்துவரின் முகத்தில் கவலையின் ரேகைகள் பரவத் தொடங்கின.


     ஐயா, தங்கள் கண்களின் நரம்புகள் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கின்றன. அதிக பட்சம் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில், தங்களின் முழுப் பார்வையும் பறிபோய்விடும். இதனைக் குணப்படுத்த மருந்தோ, மருத்துவமோ இல்லை. மன்னிக்கவும்.

     பெரியவரின் முகத்தில் சிந்தனையின் ரேகைகள்.

     மருத்துவருக்கு நன்றி கூறிவிட்டு, வீட்டிற்குத் திரும்பியவர், யோசிக்கத் தொடங்கினார்.

     கண் பார்வை போகப் போகிறதே என்பதற்காகக் கவலைப் படவில்லை.

     எழுத முடியாமல் போய்விடுமே என்பதற்காகக் கவலைப் பட்டார்.

     என்ன செய்வது?

     இவர் தமிழை நேசிப்பவர் அல்ல, தமிழையே தன் மூச்சாய் சுவாசிப்பவர்.

     எண்ணம், எழுத்து, சொல், செயல் அனைத்தும் தமிழ், தமிழ், தமிழ்.

     நாமெல்லாம் வீட்டில் வசிக்கிறோம்

     இவரோ நூலகத்தில் வசிப்பவர்

     இவரது வீடே ஒரு நூலகம்தான்.

     இவர் வீட்டில் எப்பக்கம் பார்த்தாலும், சுவர்களே தெரியாது, புத்தகங்கள் மட்டும்தான் தெரியும்.

     இருபத்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள்தான் இவரது வாழ்நாள் சேமிப்பு.

     திருக்குறளுக்குத் தன் சொந்த செலவில் கோயில் கட்டியவர்.

     முப்பாலே தெய்வம்

     அறத்துப் பால், பொருட் பால், இன்பத்துப் பால் என மூன்று சிறு குன்றுகள் தெய்வங்களாய் காட்சியளிக்கும் கோயிலை எழுப்பியவர்.

     ஒன்றல்ல, இரண்டல்ல, ஐநூறுக்கும் அதிகமான நூல்களை எழுதியவர்.

     ஓய்வு என்பதை அறியாதவர்

     இவர் ஏடெடுத்து எழுதாத நாளில்லை

     இப்படிப்பட்டவருக்கு, ஒன்றிரண்டு ஆண்டுகளில் கண்களில் இருந்து காட்சிகள் மறைந்துவிடும் என்றால் என்ன செய்வது?.

     எப்படி எழுதுவது?

     யோசித்தார்

     ஒரு முடிவிற்கு வந்தார்

     அன்று இரவு எழுத அமர்வதற்கும் முன், வீட்டின் அனைத்து விளக்குகளையும் அனைத்தார்.

     வீடு இருளில் மூழ்கியது

     மடியில் ஒரு அட்டை

     அட்டையில் வெள்ளைத் தாட்கள்

     இருளிலேயே எழுத ஆரம்பித்தார்

     எழுத்துக்கள் ஒன்றின் மீது ஒன்று ஏறி அமர்ந்தன.

     முதல் வரி கடைசி வரியில் போய் முட்டியது

     மனம் தளர்ந்தாரில்லை

     நாள்தோறும். இரவின் மடியில் அமர்ந்து இருளில் எழுதினார்.

     எழுதினார்

     எழுதினார்

     முயன்றார்

     முயன்றார்

     தொடர்ந்து முயன்றார்

     நாட்கள் செல்லச் செல்ல எழுத்துக்கள் வரிசை வரிசையாய் அணிவகுத்து நிற்கத் தொடங்கின.

     இரவு எழுத்து, பகல் எழுத்தைப் போலவே உருவெடுத்தது.

     இன்று இவரின் அகவை 92.

     இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

     முப்பதாண்டுகளைக் கடந்தும், இவரது கண்கள் ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கின்றன.

     மருத்துவரின் கணிப்பு, இவரது தமிழ் முன் பொய்த்துப் போய்விட்டது.

     தன் தள்ளாத வயதிலும், ஊர் ஊராய்ப் பயணித்துத் தமிழ் மரபுத் திருமணங்களை நடத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்.

     திருமணங்கள் மட்டுமல்ல, பூப்பு நீராட்டு விழா, பெயர் சூட்டு விழா, மணி விழா, வைர விழா, பவள விழா, படத் திறப்பு என அனைத்து நிகழ்வுகளையும், தமிழில் தூய தமிழ் வழியில் நடத்தி வருகிறார்.

     இவர் இதுநாள் வரை 4644 திருமணங்களை, தமிழ் மரபுத் திருமணங்களாய் நடத்தி வைத்திருக்கிறார்.

     இவர் உள்ளத்தில் ஒரு பேராசை

     தமிழ் மரபுத் திருமணங்கள், தன் காலத்திற்குப் பிறகும் தொடர வேண்டும். பல்கிப் பெருக வேண்டும், என்னும் கட்டுக்கடங்கா ஆவல்.

     இதற்காக, மாவட்டம் தோறும், தக்கவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளித்து வருகிறார்.

இவர்தான்,
தமிழ்க் கடல்
செந்தமிழ் அந்தணர்

புலவர் இரா.இளங்குமரனார்.

இவர் கடந்த 1.12.2019 அன்று
நெய்வேலி, உலகத் தமிழ்க் கழகத்தில்,
தமிழ் மரபுத் திருமணங்களை நடத்துவது எப்படி?
என்ற பொருண்மையில் ஆற்றியப்
பொழிவின்
காணொலியினைத்
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்கின்றேன்.

     தொல்காப்பியம், சங்கப் பனுவல்கள், திருக்குறள், பிற்கால இலக்கியங்கள், மற்றும் நாட்டு நடப்புகளில் இருந்து அரிய மேற்கோள்களை, வரலாறுகளை நினைவு கூறும், இந்த அற்புதக் காணொலியினை,
தனது
வயல் வெளித் திரைக் களத்தின் மூலம்
வெளியிட்டுள்ளார்

குடியரசுத் தலைவரின் திருக்கரங்களால்
இளந் தமிழறிஞர் விருதுபெற்ற
புதுச்சேரி


முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்.

பார்த்து, கேட்டு, ரசித்து மகிழுங்கள்.