ஹோமோ சப்பியன்ஸ்
இன்று உலகில் வாழும், ஒரே மனித இனத்திற்கு வழங்கப்பட்டுள்ள
அறிவியல் பெயர்.
ஹோமோ பேரினத்திற்குள் இருந்தப் பல இனங்கள், இன்று
இல்லாமலேயே போய்விட்டன.
ஹோமோ பேரினத்தில், இன்று வரை தப்பிப் பிழைத்திருக்கும்
ஒரே இனம் ஹோமோ சப்பியன்ஸ்.
மனித இனத்தின் தோற்றத்தை, பரவலை ஆய்வு செய்துவரும்
ஆய்வாளர்களான, மாந்தவியலாளர்கள், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பழங்கால மண்டை
ஓட்டின் வயது, இரண்டு இலட்சம் வருடங்களை விடவும் அதிகமானது என்று கணித்துள்ளார்கள்.
இரண்டு இலட்சம் வருடங்களுக்கும் மேற்பட்ட அகவை
வாய்ந்த, அம் மண்டை ஓட்டில், ஒட்டியிருந்த, முழுமையான உறுப்பு பற்கள் மட்டும்தான்.
பற்கள்
வருடங்கள் இரண்டு இலட்சம் ஆனாலும், மூன்று இலட்சம்
ஆனாலும், எப்பேர்ப்பட்ட சூழலியலையும் எதிர்கொண்டு வாழும் வலிமை படைத்தவை பற்கள் மட்டும்தான்.
ஆனால், இன்று இரண்டே இரண்டு வயது குழந்தைக்குக்
கூடப் பற்கள் அரித்துப் போய்விடுகின்றன.
நாற்பது வயதிலேயே, உடலின் எலும்புகள் தேய்ந்து
போய்விடுகின்றன, வலிமை இழந்து போய்விடுகின்றன.
காரணம், இன்றைய நம் வாழ்க்கை முறை.
நாம் இரவில், ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை
உறங்குகிறோம்.
இந்த உறக்க நேரத்தில், நாம் தண்ணீர் அருந்துவதே
இல்லை.
அதுவும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையிலோ,
அல்லது நமக்கு மேல் மின் விசிறியினைச் சூழலவிட்டோ, இயற்கையான தட்ப வெப்ப நிலையில் இருந்து,
செயற்கையாய், குறைக்கப்பட்ட தட்ப வெப்ப நிலையில் உறங்குகிறோம்.
இதனால் உடலில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாகிறது.
வாயெல்லாம் வறண்டு போய்விடுகிறது.
உங்களுக்குத் தெரியுமா, உடலிலேயே மென்மையானது
வாய்தான்.
அதேபோல், உடலிலேயே அதிக இரத்த ஓட்டம் உள்ள திசுவும்,
வாயில் உள்ள திசுதான்.
காலையில் கண் விழித்ததும், முதல் வேலையாக, நாம்
என்ன செய்கிறோம்.
ஒரு பிரஸ்ஸை எடுத்து, அதன் முழுவதும் பற்பசையை
நிரப்பி, பற்களைத் துலக்குகிறோம்.
நமது உடம்போ, ஏற்கனவே, தண்ணீர் பற்றாக்குறையால்
தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பற்பசையை வாயில் வைத்ததும், உடல்
தன் தண்ணீர் பற்றாக்குறையைச் சரிகட்ட, பற்பசையை, உள் இழுக்கத் தொடங்கும்.
பற்பசையில் என்ன இருக்கிறது?
ப்ளூரைடு, டிடர்ஜென்ட் என வெளுக்கும் தூள்கள்தான்
இருக்கின்றன.
இந்த
வெளுக்கும் தூள்களை உடல் மெல்ல மெல்ல, நாள்தோறும் உள்ளே இழுக்கிறது.
இத்துகள்களில் உள்ள இரசாயணம் எலும்பின் திண்மையை,
வலிமையைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்து, எலும்புகளை வலுவிலக்கச் செய்கிறது.
விளைவு எலும்புத் தேய்மானம், பற் சிதைவு.
பற் சிதைவு
மேலும் நாம் உண்ணும் உணவுகளும், பற்சிதைவிற்கு
ஒரு காரணமாய் மாறிவிடுகின்றது.
ஒட்டும் தன்மையுள்ள உணவை, உட்கொண்டால் பல் கெடும்.
பற்சிதைவு ஏற்பட்டால், மெல்லும் தன்மை குறையும்.
வளர்ச்சி தடைபடும்.
வாய்ப் பகுதியில் நன்கு மெல்லப்பட்டு, அரைக்கப்பட்ட,
செரிக்கப்பட்ட உணவின் சத்துக்களை, உறிஞ்சக்கூடிய வேலையைத்தான் வயிறு செய்கிறது.
உணவை மெல்லும்போது, ஏற்படும் அழுத்தமானது, மேல்
தாடை எலும்பையும், முக எலும்புகளையும் வலுப்படுத்துகிறது.
உடல் வளச்சிக்கு உடற் பயிற்சி
முகம் வளர்வதற்கோ மெல்லுதலே பயிற்சி.
மெல்லுதல் குறைந்தால், தாடை எலும்பின் வளர்ச்சி
குறையும், தலை எலும்பின் வளர்ச்சியும் குறையும்.
தலையின் வளர்ச்சி குறைந்தால், மூளை வளர, வளர,
அதற்குப் போதிய இடம் இல்லாமல், மூளை மண்டை ஓட்டை அழுத்தும்.
இதனால் மூளையும் வளர்ச்சியும் குறையும்.
மேல் தாடையின் வளர்ச்சி குறைந்தால், சுவாசப்
பாதையின் வளர்ச்சி தடைபடும்.
போதுமான பிரான வாயுவிற்குப் பற்றாக்குறை ஏற்படும்.
எனவே குழந்தைகள் வாயைத் திறந்தே தூங்கும்.
இள வயதில் பற்கள் சீராக இல்லை எனில், மெல்லும்போது,
ஏற்படும் அழுத்தம் சீரானதாக இருக்காது.
பற்களின் அழுத்தம் சீரானதாக இல்லை எனில், உடல்
நலனில் பாதிப்பு ஏற்படும்.
விளைவு
கழுத்து வலி
தோல் பட்டை வலி
தலை வலி
நன்கு மெல்லப்பட்ட உணவு, வயிற்றிற்குச் செல்லவில்லை
எனில், வயிறும் பாதிக்கும்.
வயிற்றில் பாதிப்பு ஏற்பட்டால், இதயமும் பாதிக்கப்படும்.
பற்களை இழந்தாலோ, பற்களின் வரிசை அமைப்பு சரியில்லை
என்றாலோ, உடனே சரி செய்து கொள்ள வேண்டும்.
இல்லையேல் தொல்லைதான்.
---
பற்கள் பாதிக்கப்படுவதால், ஏற்படும் சங்கிலித்
தொடர் போன்ற பாதிப்புகளை, இவர் அடுக்கிக் கொண்டே செல்லச் செல்ல, அனைவரும் வியந்துபோய்
அமர்ந்திருந்தோம்.
இன்று நம் உடல் நலம் மட்டுமா கெட்டுப் போய்விட்டது
இன்று நம் மண் கெட்டுப் போய்விட்டது
இன்று நம் நீர் கெட்டுப் போய்விட்டது
இன்று நம் காற்று கெட்டுப் போய்விட்டது
இன்று நம்
ஒலி கெட்டுப் போய்விட்டது.
இந்நிலை மாறவேண்டும்.
என்ன செய்யப் போகிறோம் நாம்? என இவர் கேள்வி
எழுப்பிய போது, கனத்த அமைதி.
வள்ளுவரும்
வள்ளலாரும்
ஆம் நண்பர்களே, வள்ளுவரும் வள்ளலாரும் என்ற தலைப்பிலான,
இலக்கியச் சொற்பொழிவில்தான், நம் பற்கள் பற்றி, இதுநாள் வரை, நான் அறியாத, பல செய்திகளை
அறிந்து கொண்டேன்.
வள்ளுவரும்
வள்ளலாரும்
வள்ளுவருக்கும், வள்ளலாருக்கும், பற்கள் பற்றிய
இச் செய்திகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் வியப்பது புரிகிறது.
வள்ளுவரும், வள்ளலாரும் நம் உடல் குறித்து, உடல்
நலன் பேணுதல் குறித்துப் பலப்பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள்.
அவற்றுள் வள்ளுவரின் குறள் ஒன்றினைவும், வள்ளலாரின்
போதனைகள் சிலவற்றையும், அழகாய் இணைத்து, கச்சிதமாய் செய்திகளைத் தொகுத்து வழங்கினார்.
திருவள்ளுவர்
திருக்குறள்
சிறியவர் முதல் பெரியவர் வரை, ஆண்டி முதல் அரசர்கள்
வரை, பின்பற்றி, ஒழுக வேண்டிய, வாழ்வில் நெறிமுறைகளை, எடுத்துறைக்கும் அற்புத நூல்
திருக்குறள்.
பசிக்குத்தானே உணவு
நோய்க்குத்தானே மருந்து
தேவைப்படும் காலத்திற்குத்தானே அறிவுரைகள்
நோய்நாடி
நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி
வாய்ப்பச் செயல்
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து,
அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, மருத்துவர் செயல்பட வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
இன்று முப்பது வயது கூட நிரம்பாத வாலிபருக்கு,
இரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் சர்வசாதாரணமாய் வருகிறது.
இதற்கு வாழ் நாள் முழுதும் மருந்து சாப்பிடுவதா?
எப்பொழுதாவது சாப்பிட்டால் மருந்து
எப்பொழுதுமே சாப்பிட்டால் உணவல்லவா.
மருந்தே உணவா?
இரத்த அழுத்தம் என்பது சூழலியல் சார்ந்தது
மனம் சார்ந்தது
வேலை சார்ந்தது
சூழலை சரி செய்யாமல், மருந்தால் பயனென்ன?
உடல் ஆரோக்கியம் என்பது மருத்துவரிடம் அடகு வைக்க
வேண்டியப் பொருளல்ல.
நாம் கையிலெடுக்க வேண்டிய செயல்.
நோய் நாடி, நோய் முதல் நாடி என்று இதைத்தானே
வள்ளுவர் அன்றே சொன்னார்.
நாம் கற்றறிந்த விசயங்களை மறந்து விட்டோம்
வாழ்வில் கடை பிடிக்கத் தவறிவிட்டோம்
வள்ளலார்
வள்ளுவர் வடிவில் வாழ்ந்தவர் வள்ளலார்.
19 ஆம் நூற்றாண்டின் தேவை, வள்ளுவரை, வடலூர்
வள்ளலாராக காலம் கற்பித்தது.
வள்ளலார் தேசிய ஒருமைப் பாட்டை, அடித்தளமாக வைத்து,
அதன் மேல், மனித சமுதாய ஒருமைப்பாடு என்னும் கட்டடத்தை எழுப்பி, அதன் மேல் உயிர் குலத்தின்
ஒருமைப்பாட்டை வலியுறுத்தும், ஆண்ம நேய ஒருமைப்பாடு என்னும் சமரச சன்மார்க்கக் கொடியைப்
பறக்க விட்டார்.
மனித உடல் ஆரோக்கியம் பேண, நித்திய கர்ம விதிகளை
வகுத்துக் கொடுத்தவர் வள்ளலார்.
அதிகாலை எழு
பற்களைச் சுத்தம் செய்
தண்ணீர் குடி.
அதிகாலை எழுந்து, ஆலம் விழுதும், வேலங்குச்சியும்
கொண்டு பல் துலக்கு.
நன்கு சூடு செய்தத் தண்ணீரை, வெது வெதுப்பானச்
சூட்டில் குடி..
பார்த்தீர்களா, நம் முன்னோர், நம் அறவோர், நாம்
எப்பொழுது எழ வேண்டும், எப்படிப் பல் துலக்க வேண்டும், தண்ணீரை எப்படிக் குடிக்க வேண்டும்
என்பதைக் கூட அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்கள், என்பதை சொற்பொழிவாளர் விளக்க விளக்க,
அரங்கே அமைதியில் உறைந்துதான் போனது.
---
வள்ளுவரும் வள்ளலாரும்
பொழிவைப், பெரும் மழையாய்ப் பொழிந்தவர்
ஒரு மருத்துவர்
பல் மருத்துவர்.
மருத்துவர்
டி.சம்பத் அவர்கள்
மகாத்மா காந்தி பல் மருத்துவ ஆலோசனை சிகிச்சை மையம், தஞ்சாவூர்
கடந்த 8.12.2019 ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற
ஏடகம்
ஞாயிறு முற்றம்
சொற்பொழிவில்தான்,
இந்தப் பல் மருத்துவரின்
பொன்னான உரையைக் காதாரக் கேட்டு, மனதார மகிழ்ந்தேன்.
தமிழ்நாடு அரசு தணிக்கைத் துறையின்
ஓய்வுபெற்ற உதவி இயக்குநர்
திரு தஞ்சாவூர்க் கவிராயர் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற.
இப்பொழிவிற்கு வந்திருந்தோரை
தஞ்சை நகர மனவளக் கலை மன்ற,
மனவளக் கலைப் பேராசிரியர், பொறுப்பாசிரியர்
அருள்நிதி ஜெ.சங்கள் அவர்கள்
வரவேற்றார்.
ஏடகப் பொறுப்பாளர்
திரு பி.கணேசன் அவர்கள்
நன்றி கூற, விழா இனிது நிறைவுற்றது.
சுவடியியல் மாணவி மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்
திருமதி க.வெண்ணிலா அவர்கள்
நிகழ்வுகளைத் திறம்படத் தொகுத்து வழங்கினார்.
மனித வாழ்வியலை
மேம்படுத்த
வழி நடத்த
நம் முனனோர்
பெருமை உணர்த்த
திங்கள் தோறும்
திகட்டாதப்
பொழிவுகளைப்
பாங்குற வழங்கிவரும்
ஏடகத் தலைவர், நிறுவுநர்
முனைவர் மணி.மாறன் அவர்களின்
பணி போற்றுதலுக்கு உரியது
போற்றுவோம், வாழ்த்துவோம்.