02 ஆகஸ்ட் 2020

சொற்களே பூக்களாய்


 

     கணவன் பொருள் தேட, வெளியூர் கிளம்புகிறான்

     மனைவியோ, விடை தர மறுக்கிறாள்

     உள்ளே குமைகிறாள்.

கணவனைப் பிரிந்து எப்படி உயிர் வாழ்வேன்? என்று குமுறுகிறாள்

     பயணத்தைக் கைவிட முடியாதா? என மன்றாடுகிறாள்

     கணவனோ, பொருள் தேடப் போய்த்தான் ஆகவேண்டும். விடை பெறட்டுமா? சென்று வரட்டுமா? என அவள் கண்களையேப் பார்க்கிறான்

     கண்கள் நீராடுகின்றன.

     சொற்கள், உடைகின்றன.

     ஒரு சொல் சொல்கிறாள்.

     பொருள் தேடிப் பிரியமாட்டேன். நான் பிரியவில்லை. இங்குதான் இருக்கப் போகிறேன் என்று சொல்வதானால், என்னிடம் சொல். இல்லை, நான் பொருள் தேடிச் சென்றே ஆகவேண்டும், உன்னைப் பிரிந்தே ஆகவேண்டும் என்று, விடை கூறுவதாக இருந்தால், யார் உயிரோடு இருப்பார்களோ, அவர்களிடம் சொல்லிவிட்டுப் போங்கள்

     நீ பிரிந்தால், நான் இறப்பேன் என்று சொல்லியிருக்கலாம். ஆனாலும், இறப்பு, மரணம், சாவு என்ற சொற்களைத் தவிர்க்கிறாள்.

     இதைத்தான் வள்ளுவரும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார்.

செல்லாமை உண்டேன் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை

     இதுதான் தாம்பத்திய நாகரிகம்.

---

     உச்சி வெயில்.

     கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு மரம் கூட இல்லை.

     ஒதுங்க இடமில்லை.

     எனவே நிழலில்லை.

     இரு மான்கள்.

     ஓர் ஆண் மான்.

     ஒரு பெண் மான்.

     இரண்டுமே களைத்துப் போய் இருக்கின்றன.

     தன் இணை, தன் துணை,  வெயிலில் வாடுகிறாளே, நிழலை எப்படி உருவாக்குவது என சிந்தனை செய்கிறது ஆண் மான்.

     சற்றுக் குனிகிறது.

     தனது நிழலைப் பார்க்கிறது.

     என் நிழலில் படு என்கிறது.

     ஆண் மானின் நிழலில், பெண் மான் ஓய்வெடுக்கத் தொடங்குகிறது.

இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத்

தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை.

     பிணை என்றால் பெண் மான், கலை என்றால் ஆண் மான்.

     விலங்கில் இருந்து, மனிதனுக்கு நாகரிகத்தைக் கடத்துகிறது, இந்தக் கலித் தொகைப் பாடல்.

---

      அவள் ஓர் அழகி.

     அவளின் அழகை, அவள் உடல் உறுப்புகளைச் சொல்லாமல், அழகாய் வர்ணிக்கிறது ஒரு பாடல்.

     நீர் நிலைக்குச் சென்று தண்ணீர் கொண்டு வரும், அந்த அழகியப் பெண்ணைக் கண்டு, எதிரில் வந்தோர் மயக்கம் கொள்கின்றனர்.

     கவிஞர் கூறுகிறார்,

     பெண்ணே இது உன் தவறல்ல.

     உன் பெற்றோரின் தவறும் அல்ல.

     மன்னனின் தவறு என்கிறார்.

     மன்னனின் தவறா?

     எப்படி?

    மதம் கொண்ட யானை, நீர் அருந்தச் செல்லும் பொழுது, பறை அறைந்து, எச்சரிக்கை செய்து, பொது மக்களைக் காக்கும் அரசன், அழகி வருகிறாள் என்று எச்சரிக்காமல் விட்டு விட்டாரல்லவா. எனவே இது மன்னனின் குற்றம்தான் என்று உரைக்கிறார்.

நீயும் தவறிலை, நின்னைப் புறங் கடைப்

போதர விட்ட நுமரும் தவறு இலர்

நிறைஅழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்

பறைஅறைந் தல்லாது செல்லற்க என்னா

இறையே தவறுடை யான்.

     இப்படிப்பட்ட நாகரிகத்தில் அல்லவா, நம் முன்னைச் சமூகம் இயங்கி இருக்கிறது.

     நயத்தக்க நாகரிகத்தை அல்லவா, நம் முன்னோர் நமக்குக் கொடுத்திருக்கின்றனர்.

---

     இரண்டு கிழவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

     சடையாண்டிக் கிழவன் சீக்கு வந்து கிடந்தானே, அவனை, அடுத்த மாதம் சென்று பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

     யே, பொன்னையா, நீ போன மாதம் வந்திருந்தால், சடையாண்டியைப் பார்த்திருக்கலாம்.

     இந்த இரண்டு கிழடுகளின் உரையாடலில் அல்லவா, நம் நாகரிகம் மறைந்து கிடக்கிறது.

---

     அப்பூதி அடிகள் வரலாற்றை நாம் அறிவோம்.

     இந்த வரலாற்றிற்குள் ஒளிந்திருக்கும் நாகரிகத்தை, உன்னதச் சொல்லாடலை, எத்துணை பேர் அறிவர்.

     அப்பூதி அடிகளின் இல்லத்தில், அப்பருக்கு விருந்து தயாராகிறது.

     அப்பூதி அடிகளின் மனைவி சமைக்கிறார்.

     மகனோ, வாழை இலை அறுக்க, கொல்லைப் புறம் செல்கிறான்.

     சென்ற இடத்தில், அரவம் தீண்டி இறக்கிறான்.

     மகன் மாய்ந்ததை மறைத்து, விருந்திற்கு ஏற்பாடு செய்கிறார், அப்பூதி அடிகள்.

     உணவு உண்ண அமர்ந்த அப்பரோ, பையனைக் கூப்பிடுங்கள். அவனும் என்னோடு சாப்பிடட்டும் என்கிறார்.

     முதலில் நீங்கள் சாப்பிடுங்கள் என்கிறார் அப்பூதி அடிகள்.

     இல்லை, இல்லை, அவனும் என்னோடு சாப்பிடட்டும் என்று வற்புறுத்துகிறார் அப்பர்.

     வேறு வழியில்லாத அப்பூதி அடிகள் பதில் உரைக்கிறார்.

     இந்தப் பதிலில் இருக்கிறது, நாகரிகம்.

    அவன் இப்போது இங்கு உதவான்.

     இப்படியெல்லாம்தான், நம் இலக்கியம் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

     இதனை ஏன் நாம் வாழ்க்கைப் படுத்தக் கூடாது?

---

     மகாகவி காளிதாசனும், மன்னன் போஜராஜனும் நெருங்கிய நண்பர்கள்.

     இவர்களது நட்பு, பலரை வருத்தியது.

     எவ்வளவோ சதி செய்து பார்த்தனர்.

     பழி சுமத்திப் பார்த்தனர்.

     பிரிக்க இயலவில்லை.

     பழி சொல்பவர்களும், சதி செய்பவர்களும் இறுதியாய் எடுக்கும் ஆயுதம் ஒன்றே ஒன்றுதான்.

     பெண்.

     போஜராஜன் மனைவிக்கும், கவி காளிதாசனுக்கும் தொடர்பு இருக்கிறது, உறவு இருக்கிறது.

     வதந்தியை விதைத்தனர்.

     காற்றில் வளர்த்தனர்.

     இதற்கு காளிதாசன் சொன்ன பதில் முக்கியமானது.

     காளிதாசனைப் போன்றே, மகாகவி பாரதியாரையும், பாண்டிச்சேரியில் சிலருக்குப் பிடிக்கவில்லை.

     பாரதியை வீழ்த்த முடியாதவர்கள், அவரது பெருமிதத்தைச் சகிக்க முடியாதவர்கள், அவரது சொற்களின் சூடு பொறுக்க முடியாதவர்கள், இறுதியாய் ஒரு வதந்தியைக் கட்டவிழ்த்து விட்டனர்.

     மூன்று நாட்களாகப் பாரதியைக் காணவில்லையே என இவர்களே கேள்வி கேட்டு, விலை மகளின் வீட்டில் படுத்திருப்பார் பாருங்கள் என்று இவர்களே பொய்யையும் பரப்பினார்கள்.

     இதற்கு பாரதியார் சொன்ன பதில் மிக முக்கியமானது.

     பாரதியைத் தொட்டவர்கள், பாரதிதாசனையும் விட்டு வைக்கவில்லை.

     பாரதிதாசனுக்கும், வேறொரு குடும்பப் பெண்ணுக்கும் தொடர்பு என்றுக் கொளுத்திப் போட்டார்கள்.

     இதற்கு பாரதிதாசன் சொன்ன பதிலும் மிக முக்கியமானது.

     காளிதாசன் சொன்ன பதிலைத்தான் பாரதி சொன்னார்.

     பாரதி சொன்ன பதிலைத்தான் பாரதிதாசனும் சொன்னார்.

     மூவரும் ஒரே பதிலைத்தான் சொன்னார்கள்.

     உலகத்தின் நாகரிகமானப் பதிலைச் சொன்னார்கள்.

     அந்த பதில்,

     எல்லா மொழிகளையும் கடந்த பதில்.

     எல்லா தர்க்கங்களையும் கடந்த  பதில்

     எல்லா பழிகளையும் கடந்த பதில்.

     எல்லா அவதூறுகளையும் கடந்த பதில்.

     மவுனம்.

     ஆம்

     மவுனம்.

     மவுனம்தான் கவிஞர்களின் பெரிய ஆயுதம்.

     இதனை இந்தச் சமூகம் புரிந்து கொள்ள  வேண்டும்.

     நாகரிகம் என்பது மற்றோர் உயிரை மதிப்பது, நேசிப்பது மட்டுமல்ல.

     மற்றோர் உயிரைக் காயப்படுத்தாமல் இருப்பதும், இன்னொரு உயிரை செழுமை செய்வதும், மகிழ்ச்சியாக வைத்திருப்பதும்தான்.

     மொழியின் நாகரிகம் இலக்கியம்.

     ஒலியின் நாகரிகம் இசை.

     கல்லின் நாகரிகம் சிற்பம்.

     வண்ணங்களின் நாகரிகம் ஓவியம்.

     எண்ணங்களின் நாகரிகம் சொல்.

     சொல்.

     சொற்கள்.

     சொற்களின் நாகரிகத்தைக் கையாளும் பொழுதுதான் ஒருவன் மனிதனாகிறான்.

     சொற்களால்தான் நாம் உறவாடுகிறோம்.

     சொற்களால்தான் நம் மதிப்பு வெளிப்படுகிறது.

     சொற்களால்தான் நம் அன்பு வெளிப்படுகிறது.

    இத்தகு சொற்களை நாகரிகமாகக் கையாளுவதுதான் வாழ்க்கை.

     கெட்ட சொற்கள் தீமையை நோக்கி அழைத்துச் செல்லும்.

     நல்ல சொற்கள், நன்மையை நோக்கி அழைத்துச்  செல்லும்.

     எனவே, சொற்களில் எல்லை மீற வேண்டாம்.

     தடம் மாற வேண்டாம்.

    வன் சொற்கள் வேண்டாம்.

    இழி சொற்கள் வேண்டாம்.

     சொற்களை, நம் வாழ்வின் மேம்பாட்டுக் கருவியாய் போற்றுவோம்.

     சொற்களைப் பூக்களாய் பயன்படுத்துவோம்.

---

மக்கள் சிந்தனைப் பேரவை

வழங்கிய

சிந்தனை அரங்கின்

இவ்வாண்டிற்கான

முதல் பொழிவு. 

கடந்த 31.7.2020 வெள்ளிக் கிழமை மாலை

இணைய  வழி

விண்ணில் இருந்து இறங்கி,

ஒவ்வொரு இல்லத்திற்குள்ளும்,

ஒவ்வொருவர் உள்ளத்திற்குள்ளும்

தேனாய், நற்கரும்பின் சாறாய்

பொழிந்தது. 


கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்,

இலக்கியத்தில் நாகரிகம்

என்னும் தலைப்பிலான செந்தமிழ்ப் பொழிவு. 

வெற்றுக் கண்களால் பார்க்கக்கூட இயலாத

சிறு நுண் கிருமிக்கு

உலகே அடங்கினாலும்,

எங்கள் தமிழடங்காது,

என முழங்கும்,

மக்கள் சிந்தனைப் பேரவையின்

தலைவர்

தமிழ்த்திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின்

பெருமுயற்சியால்,

ஒன்றல்ல, இரண்டல்ல

முழுதாய் பன்னிரெண்டு நாட்களுக்கு

சீரியச் சொற்பொழிவுகள்

இணைய வழி எழுந்து,

காற்றில் தவழ்ந்து

உலகை வலம் வர இருக்கின்றன. 

இணைய வழி இணைந்து,

கண்ணாரக் கண்டு, செவி குளிரக் கேட்டு

தமிழ்ப் பெருமழையில்

நனைந்திடுவோம் வாருங்கள்.


 



குரல் வழிப் பதிவு



நண்பர்களே, வணக்கம்.

      அமேசான் தளத்தில், மேலும் எனது இரு நூல்கள் இணைந்திருக்கின்றன.

     இவ்விரு நூல்களையும்  3.8.2020 திங்கட்கிழமை பிற்பகல் முதல் 5.8.2020 புதன் கிழமை வரை, கட்டணம் ஏதுமின்றித் தரவிறக்கம் செய்து, படித்து மகிழலாம்.



     படித்துப் பாருங்களேன்.

     வலைச் சித்தருக்கு ஜெ.