23 ஆகஸ்ட் 2020

மிகினும் குறையினும்

 


       பூமி.

     இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற ஒரே இடம், இந்த பூமி மட்டும்தான்.

     காடுகள், மலைகள், நதிகள் இவைகளெல்லாம் பூமியின் அங்கங்கள், உறுப்புகள்.

     நாம், பிறப்பு முதல் இறப்பு வரை, இயற்கையைச் சார்ந்துதான் வாழ்கிறோம்.

    

இயற்கையைத்தான் உண்ணுகிறோம்

   இயற்கையில் இருந்து கிடைப்பதைத்தான் உண்டு, உடல் வளர்க்கிறோம், உயிர் வாழ்கிறோம்.

     இயற்கையைத்தான் அருந்துகிறோம்.

     இயற்கை தருவதைத்தான் சுவாசிக்கிறோம்.

     இயற்கையால்தான் வாழ்கிறோம்.

     இயற்கையால்தான் உயிர் விடுகிறோம்.

     மனிதன் பூமியில் புதைக்கப்பட்ட பிறகு, இந்த பூமியின் ஒரு பகுதியாகிறான்.

     எரிக்கப்பட்டால் சாம்பலாகி இணைகிறான்.

     இயற்கையும், காடுகளும், மலைகளும் இல்லையேல், மழை இல்லை.

     மழை இல்லையேல் நதிகளும் இல்லை.

     மழையும், நதிகளும் இல்லையெனில் மனிதன் இல்லை.

ஆழி மழைக்கண்ணா, ஒன்று நீ கைகரவேல்

     ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து

     பாழியந் தோளுடையப் பற்பநா பன்கையில்

என்று பாடுவார் ஆண்டாள். அதாவது, கடலில் இருந்து வெப்பமாகி, ஆவியாகி, மேலெழுந்து, மேகமாகி, மலைகளின் மீது மழையாய் பொழிகின்ற போது, அம் மழையினைத் தாங்கும் மலைகள் பாறைகள் அல்ல, பஞ்சுப் பொதிகள் என்கிறார்.

     அதாவது, மலைகள், மழையை முழுமையாய் உள்வாங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் கசியவிட்டு, ஓடையாக்கி, அருவியாக்கி, நதியாக்குகிறது என்கிறார்.

வானின் றுலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று

     வானில் இருந்து இறங்கி வருவதால், நீரானது அமிழ்தத்திற்கு ஒப்பானது என்கிறார் வள்ளுவர்.

     தான் உற்பத்தி செய்த, எந்தப் பொருளை வேண்டுமானாலும், மனிதன் விற்கலாம்.

     ஆனால், தான் உற்பத்தி செய்யாத எந்தப் பொருளையும் விற்கும் உரிமை மனிதனுக்குக் கிடையவே கிடையாது.

     வானில் இருந்து இறங்கி வரும் அமிழ்தம், விற்பனைப் பொருள் அன்று.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்.

     அரசாங்கம் என்பது மன்னரோ, அமைச்சர்களோ, அரண்மனையோ, மாடமாளிகைகளோ அல்ல.

     நீரும், மண்ணும், மலையும், காடும் உள்ளதுதான் அரண், அரசாங்கம் என்கிறார் வள்ளுவர்.

     இன்று, இவ்வுலகில் வாழும், மூன்றில் ஒருவருக்குக் குடிக்க நீர் கிடையாது.

     இன்று இந்தியாவில் பரவும் 21 சதவிகிதத் தொற்று நோய்களுக்குக் காரணம், சுகாதாரமற்ற குடிநீர்.

     இவ்வுலகில், ஒரு நிமிடத்திற்கு ஒரு குழந்தை இறந்துபோய்க் கொண்டே இருக்கிறது.

     காரணம், வயிற்றுப் போக்கு.

     வயிற்றுப் போக்கிற்குக் காரணம், சுகாதாரமற்ற குடி நீர்.

     இத்தகு தண்ணீரின் தன்மையை, அருமையை, நன்கு அறிந்தவர்கள் நம் முன்னோர்.

     சோறும், நீறும் விற்பனைக்கல்ல என்று சொன்னவர்கள் தமிழர்கள்.

     தண்ணீர் குறைந்தாலும் தீமை, அதிகரித்தாலும் தீமை என்பதை அன்றே உணர்ந்தவர்கள்தான் தமிழர்கள்.

மிகினும் குறையினும் நோய் செய்யும் – நூலோர்

வளி முதலா எண்ணிய மூன்று.

     காற்று, நீர், உணவு இம்மூன்றும் குறைந்தாலும் நோய் வரும், அளவிற்கு மிகுந்தாலும் நோய் வரும் என்று அன்றே சொன்னவர்தான் வள்ளுவர்.

     தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி என்று பாடுவார் ஆண்டாள்.

     தண்ணீர் என்பது தாகம் தீர்க்கும் ஒரு பொருள் மட்டுமல்ல.

     குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தப்படும் பொருள் மட்டுமல்ல.

     தண்ணீர்.

     தண்ணீர், இந்தப் பூமித்தாய் தரும், தாய்ப் பால்.

     கருவாக்கி, உருவாக்கி, உயிராக்கி நம்மைப் பெற்று, தாய் தரும், தாய்ப் பால் போல, இந்த உலக உயிர்களுக்கு எல்லாம் பூமித்தாய் தரும் தாய்ப் பால்தான் தண்ணீர்.

     தண்ணீர் விற்பனைக்கு உரியது அல்ல.

     அடுத்த தலைமுறை, காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலையை உருவாக்கி விடாதீர்கள்.

     காற்று.

     நான் சுவாசிக்கப் பயன்படும், காற்றை, ஆக்ஸிஜனை, உலகில் எந்தவொரு, தொழில் அதிபராலும், எத்துணை கோடிகளைக் கொட்டிச் செலவிட்டாலும், தொழிற்சாலையில், உருவாக்க இயலாது, உற்பத்தி செய்ய முடியாது.

     மரங்கள்தான், மரங்களால் மட்டும்தான், நமக்கானக் காற்றை உற்பத்தி செய்து தர இயலும்.

     நம்மைச் சுவாசிக்க வைக்கும், சுவாசித்து வாழ வைக்கும், காடுகளை அழித்து, இயற்கைக்குப் புறம்பான வாழ்க்கையை வாழ, மனிதன் நினைக்கக் கூடாது.

     காடுகளிலேயே வசிக்கிறார்கள் அல்லவா, மலைவாழ் மக்கள், அவர்கள் கூட, தங்கள் வீடுகளுக்காக, மரங்களை ஒருபோதும் வெட்டுவதே இல்லை.

     வெட்ட, வெட்ட வளரும், மூங்கிலைத்தான் தேடித் தேடிப் போவார்களே தவிர, ஒரு மரக்கிளையைக் கூட வெட்ட மாட்டார்கள்.

     ஆனால் நாம், தந்தங்களுக்காக, தாது பொருட்களுக்காக காடுகளை அழிக்கிறோம்.

     மரங்களை வெட்டிக் காகிதங்களாக்கி, அந்தக் காகிதங்களில், மரம் காப்போம், காடுகளைக் காப்போம் என எழுதி மகிழ்கிறோம்.

     விளை நிலங்களை அழித்து, குடியிருப்புப் பகுதிகளாக்கிவிட்டு, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய, அம்மானிதனின் பெயரினை வைத்து, வள்ளலார் நகர் எனப் போற்றுகிறோம்.

     சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம் என எழுதுகிறோம், முழங்குகிறோம்.

     ஆனால் சுற்றுச் சூழல்தான், உண்மையில் நம்மை பாதுகாக்கிறது.

     பூகம்பம் வந்தால், திறந்த வெளியில் சென்று நில்லுங்கள் பிழைத்துக் கொள்ளலாம் என்பர்.

     ஓர் அறிஞன் சொன்னான், பூகம்பத்தால் மனிதர்கள் சாவதில்லை, அவர்கள் கட்டிய வீடுகளால்தான் சாகிறார்கள் என்றான்.

     இயற்கைதான் நம்மைப் பாதுகாக்கிறது.

     இன்று நாம் காணும் பெரியப் பெரிய ஆலமரங்களும், அரச மரங்களும், நாம் நட்டு வளர்த்தவை அல்ல.

     அவை காகத்தின் எச்சத்தால் வளர்ந்த உச்சங்கள்.

     பூக்களுக்கு வலி தெரியாமல், தேன் எடுக்கிறது தேனீ.

     தனக்குத் தேன் தந்தமைக்கு நன்றிக் கடனாய், மகரந்தங்களைக் கொண்டு சென்று, மற்றப் பூக்களுக்கும் கொடுத்து, இன விருத்திக்கு வழி வகுக்கிறது.

     முப்பது நாட்களில், நம்மால் ஒரு பாலம் கட்ட முடியும்.

     முப்பது நாட்களில், நம்மால் ஒரு சாலை அமைக்க முடியும்.

     முப்பது நாட்களில், நம்மால் ஒரு தொழிற்சாலையைக் கூட எழுப்ப முடியும்.

    ஆனால், முப்பது என்ன, முன்னூறு ஆண்டுகள் ஆனாலும், ஒரு மரம், ஒரே ஒரு மரம், நமக்குக் கொடுக்கும், சுவாசக் காற்றை, நம் தொழிற்சாலைகளால் உருவாக்க இயலவே, இயலாது.

     நாம், நம் முன்னோரிடம் இருந்து, கடனாகப் பெற்று வாழ்ந்து கொண்டிக்கும், இந்த பூமியை, நம் பிள்ளைகளுக்கு, வாழத் தகுதியான பூமியாகக் கொடுத்துவிட்டுப் போக வேண்டியது நம் கடமை, நம் சமூகத்தின் கடமை.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்

காவலன் காவான் எனின்.

     அறச்சீற்றம் கொண்ட, ஒரு புலவனின் சாபம் போலவே ஒலிக்கிறது இந்தக் குறள்.

     இயற்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள், இயற்கையைக் காப்பாற்றாவிடில், எல்லா நன்மைகளும் குறைந்து போகும்.

      மாசு பெருகும்.

     காடு அழியும்.

     மழை குறையும்.

     தொழில் செய்கிறவர்கள், தங்கள் தொழிலுக்கான அறங்களை, நியதிகளை மறப்பர். தர்மங்களை மீறுவர் என்கிறார்.

     இயற்கை காப்பாற்றப்பட வேண்டும்.

     அதே சமயம், தொழிற்சாலைகளும் வேண்டும்.

     சாலைகளும் வேண்டும்.

     வளர்ச்சியும் வேண்டும்.

     இயற்கையை அழிக்காத வளர்ச்சி வேண்டும்.

     இயற்கையோடு இயைந்த வளர்ச்சி வேண்டும்.

மரங்கள் - மண்

விண்ணோக்கி வரைந்த

ஓவியங்கள்

அவைகளை அழித்து, காகிதங்கள் செய்து, நம் பெருமையைப் பதிவுசெய்கிறோம் என்பார் கலில் ஜீப்ரான்.

செறுப்புக்குத் தோல் வேண்டி

செல்லக் குழந்தையைக்

கொல்வோமோ என்று பதறுவான் பாரதி.

     இயற்கையோடு இயைந்த வளர்ச்சி வேண்டும்.

கார் பெரிதா?

தேர் பெரிதா?

எங்கள் ஏர் பெரிதா?

என்று கேட்டால், எங்கள் ஏர்தான் என்றும் பெரிது.

     முதலில் வயிற்றிற்குச் சோறு.

     பிறகு கல்வி.

     இவை இரண்டும்தான் மிக முக்கியமானவை.

விளக்குத் தொடர்ந்து எரிய

விளக்கைத் தூண்டுவது போல்,

விளக்கு அனைந்துவிடாமல்,

திரியைத் தூண்டுவது போல்

அறிவைத் தூண்ட வேண்டும்.

தூண்டினால் மட்டும் போதாது

நல்ல திசையில் நடத்தவும் வேண்டும்.

     இதனைத்தான் அறிவைத் தூண்டி நடத்துக என்றார் பாரதியார்.

அறிவைத் தூண்டுவோம்

நல் வழியில் நடத்துவோம்

இயற்கையோடு இணைந்து

வாழ்வோம், வளர்வோம்.

---

மக்கள் சிந்தனைப் பேரவை

வழங்கிய

சிந்தனை அரங்கம்.

மக்கள் சிந்தனைப் பேரவையின்

தலைவர்


தமிழ்த்திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின்

பெருமுயற்சியால்,

கடந்த 1.8.2020 சனிக்கிழமை மாலை,

இணைய வெளியில்


திரு பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின்,

அறிவினைத் தூண்டி நடத்துக

என்னும் தலைப்பிலான

அற்புதப் பொழிவு

வீடுதேடி வந்து

அலைபேசி வழி இறங்கி

உள்ளத்தை நனைத்தது.





குரல் வழிப் பதிவு கேட்டுத்தான் பாருங்களேன் 

 

 

நண்பர்களே, வணக்கம்

     எனது ஐந்து நூல்கள், அமேசான் தளத்தில் இணைந்துள்ளன என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றேன்.






இதுவரை எனது இருபது நூல்கள் அமேசான் தளத்தில் இணைந்திருப்பதற்குத் தாங்கள்தான் காரணம், தங்களின் ஆதரவுதான் காரணம், வலைச் சித்தர் காட்டிய வழிதான் காரணம்.

     ஐந்து நூல்களையும், நாளை 24.8.2020 திங்கட்கிழமை பிற்பகல் முதல் 26.8.2020 புதன் கிழமை பிற்பகல் வரை, கட்டணம் ஏதுமின்றித் தரவிறக்கம் செய்து வாசித்து மகிழலாம்

     வாசித்துத்தான் பாருங்களேன்.

     வலைச் சித்தருக்கு ஜெ !