திருதவத்துறை.
இன்றைய லால்குடி.
சுதந்திரப் போராட்டத்திற்காக நிதி திரட்ட வருகிறார் ஒருவர்.
மக்கள் தங்களால் இயன்ற பொருளைத் தருகின்றனர்.
அவரை நோக்கி ஓர் உருவம் வருகிறது.
உடைகள் எல்லாம் கிழிந்த நிலையில், கலைந்து நீண்டு, ஒன்றோடு ஒன்று ஒட்டிப்போன முடியுடன், பார்ப்பதற்கே அருவருப்பைத் தூண்டுகின்ற ஓர் உருவம்.
தன் மானத்தைக்கூட மறைக்க இயலாத, மறைக்க வேண்டும் என்பதை அறியாத மன நிலை பிறழ்ந்தவர்.
இந்தா எனக் கையை நீட்டுகிறார்.
கையில் ஓர் இரண்டு ரூபாய் நாணயம்.
இது எதற்கு?
நிதி திரட்ட வந்தவர் கேட்கிறார்.
தலையை சொறிந்து கொண்டே, அந்த மனநிலைப் பிறழ்ந்த மனிதர் கூறுகிறார்.
எல்லோரும் சொல்றாங்க, நீ நாட்டுக்கு ஏதோ நல்லது பண்ணுவியாம். அதனால இதை வச்சுக்கோ, ஏதாவது நல்லது பண்ணு.
---
அன்று மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம்.
நிதி திரட்டியவர் பேசுகிறார்.
இந்த இரண்டு ரூபாய் நாணயத்தை மட்டும், நானே பத்திரமாக வைத்துக் கொள்ளப் போகிறேன்.
ஏனென்றால், இந்த நாட்டினுடைய, ஒரு மனநிலை பாதிக்கப் பட்டவர் கூட, நான் இந்த தேசத்தின் மானத்தைக் காப்பாற்றுவேன், விடுதலை பெற்றுத் தருவேன் என்று நம்புகிறார்.
அதற்காக இந்த தேசத்தின் விடுதலைக்காக, நான் எனது உயிரைக் கொடுத்தாலும் தவறில்லை.
இந்த நாட்டிற்காகப் போராடியவர், இறுதியில் சுட்டுக் கொல்லப் பட்டபோது, அவரது உடலைச் சுத்தப்படுத்த, இடுப்பு வேட்டியை அவிழ்த்த போது, வேட்டியின் மடிப்பில் ஒரு முடிச்சு.
அந்த முடிச்சினுள் ஓர் இரண்டு ரூபாய் நாணயம்.
இதுதான் தேச உணர்வு.
எளிமை, உன்னதம், அறம், ஆளுமை.
நான் இந்த உலகத்திற்குப் புதிதாக எதையும் கற்றுத்தர விரும்பவில்லை. உண்மையும், அஹிம்சையுமே மலைகளைவிட உறுதியான அறங்களாகும் என்று உரைத்தவர்.
தேசத் தந்தை மகாத்மா காந்தி.
---
மகாத்மா காந்தி, தன் வழிகாட்டியாய் ஏற்றுக் கொண்டது யாரைத் தெரியுமா?
இவர் ஒரு பெரிய எழுத்தாளர்.
இவர் வீட்டை விட்டு வெளியே சென்றால், இவரது வீட்டின் கதவுகள் திறந்தே கிடக்கும்.
இவர் வீட்டிற்குள் வந்துவிட்டால், கதவுகள் பூட்டப்படும்.
பலருக்கும் காரணம் புரியவில்லை.
மெல்லக் கேட்டனர்.
இந்த உலகத்தில் விலை மதிக்க முடியாத சொத்தாக, நான் கருதுவது, என்னைத்தான்.
நான் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு, வீட்டில் பாதுகாக்க என்ன இருக்கிறது?
மறுபடியும் உள்ளே வந்தால், என்னைப் பாதுகாத்துக் கொள்ளப் பூட்டுகிறேன்.
இவர்தான் மகாத்மா காந்தியின் வழிகாட்டி.
லியோ டால்ஸ்டாய்.
மகாத்மா காந்தி, தனது தென்னாப்பிரிக்க இல்லத்திற்கு இவரது பெயரைத்தான் வைத்திருந்தார்.
டால்ஸ்டாய்
இல்லம்.
நகமுரா.
இந்திய உணவு வகைகளுக்கு, ஜப்பானியர்கள் வைத்த பெயர்.
நகமுரா.
இந்திய உணவு வகைகளை, நம் நாட்டின் எல்லை தாண்டி, சுவையோடு, கொண்டு சேர்த்தவர் யார் தெரியுமா?
ராஸ் பிஹாரி போஸ்.
சுதந்திரப் போராட்டத்தின்போது, ஓர் ஆங்கிலேய அதிகாரியைச் சுட்டுக் கொன்றார்.
சுட்டுவிட்டுக் கப்பலேறி, ஜப்பானில் இறங்கினார்.
ஓர் உணவு விடுதில் வேலைக்குச் சேர்ந்தார்.
இந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி, ஜப்பானியர்களின் நாவில் நீர் ஊறச் செய்தார்.
உணவு சமைப்பதோடு தன் பணியை நிறுத்திக் கொள்ளவில்லை.
உணவின் சுவைதேடி விடுதிக்கு வந்த, இந்தியர்களை எல்லாம் ஒன்றிணைத்தார், ஒருமுகப் படுத்தினார்.
ஒரு படையை உருவாக்கினார்.
இந்திய தேசிய இராணுவம்.
ராஸ் பிஹாரி போஸ்.
இவர்தான் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர்.
தலைமையேற்று நடத்தியவர் சுபாஸ் சந்திர போஸ்.
---
ராஸ் பிஹாரி போசுக்கு முன்னே, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக, இராணுவத்தைக் கட்டமைத்தவர் ஒருவருண்டு.
திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.
இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் அறிவியல் பயின்று, டாக்டர் பட்டமும் பெற்றவர்.
பர்மா, சீனா, தாய்லாந்து, துருக்கி, எகிப்து, ஜெர்மனி, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா என, பல நாடுகளுக்கும் சென்று, எழுச்சி மிக்க இளைஞர்களை ஒன்று திரட்டியவர்.
ராஜா மகேந்திர பிரதாப் சிங் தலைமையில், மௌலானா பர்ப்பத்துல்லாவைப் பிரதமராகக் கொண்டு, இந்தியாவிற்கும் வெளியே, ஆப்கானிஸ்தானில், தற்காலிய இந்திய அரசாங்கத்தை நிறுவியவர்.
இவரே, இவ்வரசின் வெளியுறவுத் துறை அமைச்சர்.
இவர் தனது இராணுவத்திற்காக வடிவமைத்தப் போர் கப்பல்தான் எம்டன்.
வியப்பாக இருக்கிறதல்லவா?
அந்நாளைய ஆங்கில அரசின், கடும் கட்டுக் காவலையும் மீறி, சென்னை உயர் நீதி மன்றக் கட்டடத்தின் மீது வெடிகுண்டு போட்டதல்லவா, ஒரு கப்பல், எம்டன் கப்பல், அது இந்தக் கப்பல்தான்.
சுதந்திர இந்தியாவில்தான் கால் பதிப்பேன் என்று இறுதி மூச்சு உள்ளவரை உறுதியாய் இருந்தவர்.
இவரது இறுதி நாட்கள் ஜெர்மனியில்தான் கழிந்தன.
இவர் மறைந்தது 1934 ஆம் ஆண்டில்.
இவருக்கு ஓர் ஆசை.
தனது அஸ்தி, சுதந்திர இந்தியாவில், நாஞ்சில் நாட்டு மண்ணில் தூவப்பட வேண்டும் என்பது இவரது இறுதி ஆசை.
32 ஆண்டுகள் அஸ்தி காத்திருந்தது.
1956 ஆம் ஆண்டுதான் இந்திய மண்ணில், நாஞ்சில் நாட்டு மண்ணில் கலந்தது.
ஜெய்ஹிந்த்.
இந்திய இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த, இந்த ஒற்றைச் சொல்லை உருவாக்கியவர் இவர்தான்.
டாக்டர்
செண்பகராமன் பிள்ளை.
மும்பையில் இருந்து மூன்று நாள் தொடர் வண்டிப் பயணம்.
பை நிறையப் பணம்.
வயிறு நிறையப் பசி.
சுதந்திரப் போராட்ட நிதி.
செக்கிழுத்தச் செம்மல் அவர்களின் இல்லத்திற்குள் நுழைகிறார்.
முதலில், மன்னிக்கிட்டச் சொல்லிச் சாப்பாடு போடச் சொல்லுங்கள். பசி தாங்கவிலலை.
கையில்தான் காசிருக்கிறதே, சாப்பிட்டிருக்கலாமே என்றார் வ.உ.சி.,
இது மக்கள் பணம்.
இவர்தான் சுப்பிரமணிய சிவா.
---
தன் தள்ளாத வயதிலும், தன் மூத்திரப் பையைத் தூக்கிக்கொண்டு, ஊர் ஊராக அலைந்தார்.
பாடுபட்டார்.
விழிப்புணர்வு ஊட்டினார்.
அடுப்பூதியப் பெண்கள் வெளியே வந்தனர்.
ஏட்டுச் சுரைக்காயை எட்டிப் பிடித்தனர்.
தந்தைப் பெரியார்
---
ஒரே வேட்டி, ஒரே சட்டை.
வாழ்வில் வறுமை.
இருப்பினும், நாட்டையே தன் சொத்தாக நினைத்தார்.
இவரது மனைவியோ படித்தவர்.
அன்றைய தமிழக முதலமைச்சருக்கு, இவர் குடும்ப வறுமையைப் போக்கியாக வேண்டுமே என்ற கவலை.
மனைவிக்கு வேலை தருகிறேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
என்ன செய்வது?
யோசித்தார்.
அவரது ஊர் மனிதர்கள் சிலரை அழைத்து, அரசு தானாகவே வேலை தருகிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார். எனவே அவர் மனைவியை, அவராக எழுதுவதுபோல், ஒரு மணு எழுதி அனுப்பச் சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
மணு போட்டார்.
ஆசிரியர் பணி கிடைத்தது.
தோழர் ஜீவாவின் வாழ்வில் வறுமை அகன்றது.
அன்றைய முதல்வர்,
கர்ம வீரர் காமராசர்.
நாட்டிற்காகத் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர்.
நாட்டின் நீர் வளம், அவர் அமைத்துக் கொடுத்தது.
நாட்டின் நில வளம், அவர் அமைத்துக் கொடுத்தது.
மேடெல்லாம் அணைகள், ஊர் முழுக்கத் தொழிற்சாலைகள், ஊருக்கு ஊர் பள்ளிக் கூடங்கள்.
அன்று அவரது உழைப்பு.
இன்றைய நமது வாழ்வு.
இதுபோன்ற தியாகிகளைத்தான், இன்று நம் நாடு தேடிக்
கொண்டிருக்கிறது.
---
ஏடகம்
ஞாயிறு முற்றப் பொழிவு.
கடந்த 8.8.2020 ஞாயிற்றுக் கிழமை,
இணைய வழி எழுந்த பொழிவு.
திருச்சி, பிஷப் ஹீபர்
கல்லூரி
தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர்
தேசம் தேடும் தியாகிகள்
என்னும் தலைப்பில் ஆற்றிய
அற்புத உரை கேட்டு மகிழ்ந்தேன்.
நுண் கிருமியின் தொற்றால்
உலகே உறைந்தாலும்
தமிழ் எழுந்து
இணையவானில் படர்ந்து
நற்கீதமாய் ஓங்கி
ஒலிக்க
முழுமுயற்சி எடுத்துவரும்
ஏடக நிறுவுநர், தலைவர்
பணி போற்றுதலுக்கு
உரியது.
போற்றுவோம், வாழ்த்துவோம்.