19 செப்டம்பர் 2020

எனது நூலகம்

 


     திருவையாறு.

     சின்னஞ்சிறு வயதில், திருவையாறுதான் எனக்குக் கோடைக்கால கொடைக் கானலாய் இருந்தது.

    காரணம், என் சித்தப்பா.

     நல்லாசிரியர் திரு சி.திருவேங்கடனார்.

     மாலை வேளையில், என் சிறு விரல் பற்றி அழைத்துச் சென்று, காவிரி ஆற்று மணலையும், திருவையாற்று அரசு நூலகத்தையும், எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர், என் சித்தப்பா.

     காவிரி ஆற்று மணலில் ஓடி விளையாடிய நினைவுகள் என்னுள் பசுமையாய் பதிந்து கிடக்கின்றன.

   

  ஒரு நாள் திருவையாற்று நூலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

     வரிசை வரிசையாய், அடுக்குகளில் அணிவகுத்து நின்ற நூல்களைக் கண்டு வியந்து போனேன்.

     அதுநாள் வரை, பாட நூல்களைத் தவிர, வேறு நூல்களைக் கண்டு அறியாத நான், மலை, மலையாய் உயர்ந்து நின்ற நூல்களைக் கண்டு மலைத்துத்தான் போனேன்.

     இன்றும் நன்றாக நினைவிருக்கிறது, புத்தக அடுக்குகளை, என் சிறிய விரல்களால் தடவிப் பார்த்த நினைவுகளும், புத்தக வாசனை, என் நாசிக்குள் நுழைந்து, மெல்லத் தூண்டிவிட்ட உள்ளக் கிளர்ச்சியும், இன்றும் என் நினைவடுக்குகளில் உறைந்து போய் கிடக்கிறது.

     முதன் முதலில் வாசிக்கத் தொடங்கியது சித்திரக் கதைகளைத்தான்.

     முத்து காமிக்ஸ்.

     இரும்புக் கை மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ், டேவிட் என ஒவ்வொரு சாகச வீரராகப் பார்த்துப் பார்த்துப், படித்துப் படித்து மகிழ்ந்திருக்கிறேன்.

     அப்பொழுதெல்லாம், ஒரு புத்தகத்தின் விலை ரூபாய் ஒன்றுதான்.

     ஆனால், விலை கொடுத்து வாங்க, கையில் காசிருக்காது.

     கரந்தையில், கடைத் தெருவில், ஒரு காய்கறிக் கடையில், இந்த சித்திர நூல்களை வாடகைக்குக் கொடுத்தார்கள்.

     பத்து பைசா வாடகை.

     ஒரு நாள் முழுவதும், நாம் விரும்பும் புத்தகத்தை, நாமே வைத்துக் கொள்ளலாம்.

     மறுநாள் கொடுத்துவிட வேண்டும்.

     பத்து, பத்து பைசாவாகக் கொடுத்துப் படித்திருக்கிறேன்.

     பின்னர் சற்று வளர்ந்ததும், தமிழ்வாணன், சுஜாதா, சாண்டில்யன், பட்டுக் கோட்டை பிரபாகரன், எனத் தேடித் தேடி வாசித்திருக்கிறேன்.

     வார இதழ்களை வாங்குவது, தொடர் கதைகளை, ஒவ்வொரு வாரமும், வாசித்து, கிழித்து, சேமித்து, தைத்து, தனியொரு நூலாக்குவது என தொடர்ந்திருக்கிறேன்.

     பின்னர் பழைய புத்தகக் கடைகளை நோக்கிப் படையெடுத்திருக்கிறேன்.

     அட்டைகூடக் கசங்காத நூல், ஒரு ரூபாய்க்குக் கிடைக்கும்.

     வாங்கி சேர்க்கத் தொடங்கினேன்.

     கல்லூரி காலத்தில் நடராசன் என்றொரு நண்பர்.

     ஆங்கிலக் கதைப் புத்தகங்களை கல்லூரிக்குக் கொண்டு வந்து வாசிப்பார்.

     கேட்போர் வியக்கும் வகையில், படித்ததை கதையாகவும் கூறுவார்.

     அவரிடமிருக்கும் நூலை வாங்கிப் புரட்டிப் பார்ப்பேன்.

     ஒன்றுமே புரியாது.

     ஆனாலும் ஆசை விடவில்லை.

     ஒவ்வொரு சொல்லிற்கும் பொருள் புரியவேண்டும் என்று நினைக்காதே, படி தொடர்ந்து படி, பொருள் தானே விளங்கும் என்றார் நண்பர் நடராசன்.

     எழுத்துக் கூட்டிப் படிக்கத் தொடங்கினேன்.

     பக்கம் பக்கமாய், படிக்கப் படிக்கக் கதை புரியத் தொடங்கியது.

     Alistair Maclean. Sidney Sheldon, Robert Ludlum, Irwing Wallace எனப் படிக்கத் தொடங்கினேன்.

     கடந்த நாற்பது ஆண்டுகளாய் சிறுகச் சிறுக, நூல்களைச் சேர்த்து வருகிறேன்.

     ஐநூறு ஆங்கிலக் கதை புத்தகங்கள் இருக்கின்றன.

     ஒரு கட்டத்தில், கதை புத்தகங்கள் மீதான விருப்பம் குறைந்தது.

     வாழ்க்கை வரலாற்று நூல்கள், வரலாற்று நிகழ்வுகள் குறித்த நூல்கள் என வாங்கி, வாசித்து, சேர்க்கத் தொடங்கினேன்.

     வீட்டு மாடியில் ஒரு சிறு அறை.

     இன்று நூலகமாய் மாறியிருக்கிறது.

     நூல்களின் எண்ணிக்கை குறைவுதான்.

     3,237 நூல்கள்.

     எனது நாற்பது ஆண்டுகாலச் சேமிப்பு.

     நூலகத்திற்கு ஒரு பெயரும் வைத்தேன்.

     கரந்தை நூலகம்.

     நான் பிறந்த, தவழ்ந்த, வளர்ந்த, படித்த, பணியாற்றுகின்ற மண்ணின் பெயரில் ஒரு நூலகம்.

     நான்தான் நூலகர்.

     நான்தான் வாசகர்.

     கரந்தை நூலகம்.




     தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக, மேனாள் உதவிப் பதிவாளர், பௌத்த ஆய்வாளர், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின், அறிவுறுத்தலுக்கு இணங்க, நூல்களுக்கானப் பதிவேட்டினை, கணினியில் உருவாக்கி இருக்கிறேன்.

     நூல்கள், எனக்கு மகிழ்வினை மட்டுமல்ல, ஆறுதலையும் தருகின்றன.

     அவ்வப்போது மனம், வாழ்வின் பல்வேறு காரணிகளால், காயப்பட்டு, துன்புறும் பொழுதெல்லாம், இந்த நூலக அறையே எனக்கு அடைக்கலம்.

      அமைதியாய் அமர்ந்திருப்பேன்.

      ஒரு நேசக் கரம், ஒரு பாசக் கரம், ஆரத் தழுவி, முதுகில் தட்டி, கலங்காதே, இதுவும் கடந்து போகும், என ஆற்றுப் படுத்துவதைப் போன்ற ஓர் உணர்வு, உள்ளத்துள் எழும்.

      மனம் புத்துணர்வு பெறும்.

     புது நம்பிக்கை பிறக்கும்.

தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்

     சையோகம் புரிந்ததொரு வேளை தன்னில்

இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்

     இசைகேட்டேன், மணம்மோந்தேன், சுவைகள் உண்டேன்

மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்

     மகாசோதி யிற்கலந்த தெனது நெஞ்சும்

சனித்ததங்கே புத்துணர்வு, புத்த கங்கள்

     தருமுதவி பெரிது, மிகப் பெரிது காண்பீர்.

-          பாவேந்தர் பாரதிதாசன்

(பாரதி புத்தகாலயத்தின் நம்ம வீட்டுப் புத்தக அலமாரி போட்டிக்காக

எழுதப்பெற்றப் பதிவு)

 


குரல் வழிப் பதிவு






நண்பர்களே, வணக்கம்.

     எனது நூல்கள், மேலும் இரண்டு அமேசான் தளத்தில் இணைந்துள்ளன.



      இவ்விரு நூல்களையும் ஞாயிற்றுக் கிழமை (20.9.2020) பிற்பகல் முதல் செவ்வாய்க் கிழமை (22.9.2020) பிற்பகல் வரை கட்டணம் ஏதுமின்றி தரவிறக்கம் செய்து படித்து மகிழலாம்.

      படித்துப் பாருங்கள் நண்பர்களே.

வலைச் சித்தர்

திருக்குறளார்

திண்டுக்கல் தனபாலனாருக்கு

ஜெ