14 செப்டம்பர் 2020

உலகெலாம்

  


     தாய், தந்தை.

     மகள், மகன்.

     அளவான குடும்பம்.

     மகிழ்ந்து நகர்ந்த வாழ்வில், தந்தை இறக்கிறார்.

     தாய் உடன் கட்டை ஏறுகிறாள்.

     மகளுக்கு நிச்சயிக்கப் பட்டிருந்த மணவாளனோ, போரில் மடிகிறான்.

    

தன் வருங்கால மணாளன் இல்லா வாழ்வு, தனக்கெதற்கு என்று மகளும் உயிர் துறக்க முனைகிறாள்.

     தம்பியோ தடுக்கிறான்.

     தான் இல்லாவிட்டால், தன் இளவலை யார் காப்பாற்றுவார்? என்று எண்ணித், தன் துயரைப் புறந்தள்ளி, தன் தம்பியைத் தமிழோடு சேர்த்து வளர்க்கிறாள்.

     இவர்தான் திலகவதியார்.

     இவர் வளர்த்தெடுத்த இவர் தம்பி

     திருநாவுக்கரசர்.

     திருநாவுக்கரசர் ஒரு நாள், திங்களூர் வருகிறார்.

     திரும்பிய திசையெங்கும் தன் பெயர் கண்டு மகிழ்கிறார்.

     நாவுக்கரசர் பாடசாலை.

     நாவுக்கரசர் தண்ணீர் பந்தல்

     நாவுக்கரசர் கிணறு

     தன் பெயரில் நற்காரியங்களைச் செய்வது யார்?

     விசாரிக்கிறார்.

     அப்பூதியடிகளைக் கை காட்டுகின்றனர்.

     அப்பூதியடிகளின் இல்லம் செல்கிறார்.

     அப்பூதியடிகளின் இல்லம் மகிழ்கிறது.

     நாவுக்கரசருக்கு விருந்து தயாராகிறது.

     வாழை இலை பறிக்கச் சென்ற, அப்பூதியடிகளின் அருமை மைந்தன், அரவம் தீண்டி மாய்கிறான்.

    குடும்பமோ, தன் குழந்தையின் மறைவை மறைத்து, நாவுக்கரசரை விருந்துண்ண அழைக்கிறது.

     சிறுவனும் என்னோடு விருந்துண்ணட்டும் என நாவுக்கரசர் வலியுறுத்தவே, உண்மை  வெளிவருகிறது.

     திகைத்த நாவுக்கரசர், இறைவனை வேண்ட, மரித்தவன் மீண்டெழுகிறான்.

     நாம் அறிந்த செய்திதான்.

     இச்செய்தியினுள் மறைந்திருப்பது, நம் முன்னோரின் விருந்தோம்பல் என்னும் உயரியப் பண்பு, உன்னதப் பண்பு.

      இதனைத்தான் போற்றி வலியுறுத்துகிறது பெரிய புராணம்.

---

மாநிலங் காவலன் ஆவான்

     மன்னுயிர் காக்கங் காலைத்

தான தனக்கு இடையூறு

     தன்னால் தன் பரிசனத்தால்

ஊன மிகுபகைத் திறத்தால்

     கள்வரால் உயிர் தம்மால்

ஆன பயம்ஐந்தும் தீர்த்து

     அறம் காப்பான் அல்லனோ.

     ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும்?

     மன்னன் மக்களின் காவலனாக இருக்க வேண்டும்.

     மக்களுடைய துயர் துடைப்பவனாக இருக்க வேண்டும்.

     தன்னால், தன் சுற்றத்தால், பகைவர்களால், கள்வர்களால், பிற உயிரினங்களால் என ஐந்து வகையினராலும் துன்பம் நேராதபடி, மக்களைப் பார்த்துக் கொள்பவனாக இருக்க வேண்டும்.

     அடித்தட்டு மக்களாக இருப்பினும், தன் மகனாகவே இருப்பினும், நீதி ஒன்றே என்பதை, மனுநீதிச் சோழன் போல் உணர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது பெரிய புராணம்.

---

இயலா விடைச்சென்ற மாதவர்க்கின்னமு தாவிதைத்த

வயலார் முளைவித்து வாரி மனையலக் கால்வறுத்துச்

செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க்

கயலா ரிளையான் குடியுடை மாறனெங் கற்பகமே.

     இளையான்குடி மாற நாயனார்.

     ஒரு காலத்தில் செல்வச் செழிப்பில் திளைத்தவர்.

     தன் இல்லம் தேடி வந்தவர்களுக்கு எல்லாம், இல்லையெனாது, உணவிட்டு பசியாற்றிய வள்ளல்.

     வாரி, வாரி வழங்கியே ஏழ்மை நிலையுற்றார்.

     ஏழ்மையிலும் தன் பசி மறந்து, நாடி வருவோரின் பசிப்பிணி போக்கும் உத்தமர்.

     ஒரு நாள் இரவு நேரம்.

     பெரு மழை இறங்கி வந்து, பூமியை குளிரச் செய்து கொண்டிருந்த நேரத்தில், ஒரு அடியார், இவரின் இல்லம் தேடி வருகிறார்.

     அடியாரை வணங்கி வரவேற்று, அமர வைத்த நாயனார், தன் மனைவியைப் பார்க்கிறார்.

     இல்லாள் புரிந்து கொள்கிறார்.

     நாயனாரை அருகில் அழைத்து, வீட்டில் அரிசி துளியும் இல்லை, எனவே வயலில், இன்று பகலில் தெளித்த, விதை நெல்லை எடுத்து வாருங்கள் என்கிறார்.

     அம்மழையிலும் நாயனார், தன் வயலுக்கு ஓடுகிறார்.

     விதை நெல்லை அகழ்ந்து எடுத்து, இல்லம் திரும்புகிறார்.

     நெல் முளையை வறுத்து, குத்தி, அரிசியாக்கி, பதமாகச் சோறாக்கி, தோட்டத்துக் கீரையினைப் பறித்து கறியமுது செய்து, அடியாருக்குப் படைத்து மகிழ்ந்தனர்.

     இதுதான் விருந்தோம்பல்.

     இந்த விருந்தோம்புதலை, கணவன் மனைவியின் ஒன்றிணைந்த மன நிலையினை, ஒற்றுமையைப் பாங்காய் எடுத்துரைப்பதுதான் பெரிய புராணம்.

     பெரிய புராணம்.

     பெரியவர்களின் புராணம்.

     பெரியப் பெரியச் செயல்களைச் செய்தவர்களின் வரலாற்றைக் கூறும் புராணம்.

     ஆறு நூற்றாண்டு காலத் தமிழர் வாழ்வியலை, பண்பாட்டை, பக்குவமாய் எடுத்துரைக்கும் புராணம்.

     4,281 பாடல்கள்.

     உலகெலாம் எனத் தொடங்கி, தொடங்கிய, அதே வார்த்தையாலேயே, உலகெலாம் என முடியும் புராணம்.

     உயர்வு, தாழ்வு அற்ற வாழ்வியல் நெறியை, சாதிப் பிரிவுகளைத் துறந்து, தூய நெறியாளரைப் போற்றும் புராணம்.

     நல்ல எண்ணம்.

     நல்ல செயல்.

     நல்ல நடத்தை.

     இதனைத்தான் வலியுறுத்துகிறது பெரியபுராணம்.

---

கடந்த 13.9.2020

ஞாயிற்றுக் கிழமை மாலை,

ஏடகம் அமைப்பின்,

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவு.

தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

தமிழ்த் துறைத் தலைவர்


முனைவர் சு.சத்தியா

அவர்களின்,

பெரிய புராணம் காட்டும் வாழ்வியல்

என்னும் தலைப்பிலானப் பொழிவு

இணையம் வழி

வீடு தேடி வந்து,

செவி வழி நுழைந்து

உள்ளத்தைக் குளிர்வித்தது.

 

திங்கள்தோறும்

திகட்டாதப் பொழிவுகளைத்

தரமாய் - பதிவேற்றம் செய்து

தமிழ் நலம் காக்கும்

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.

 


 

குரல் வழிப் பதிவு




நண்பர்களே, வணக்கம்.

     அலைபேசி வழி அழைத்து, திண்டுக்கல்லார் சொன்ன ஒரு சொல்லால், எனது 25 நூல்கள் அமேசான் தளத்தில் இணைந்திருக்கின்றன.



அடுத்தடுத்த ஆண்டுகளில், எங்களை விட்டுப் பிரிந்து, இவ்வுலக வாழ்வு துறந்த, சித்தப்பா மற்றும் எந்தை பற்றிய உறவுகளின், நட்புகளின் நினைவலைகளைச் சுமந்த நினைவு மலர்.

     இவ்விரு நூல்களையும், நாளை 15.9.2020 செவ்வாய்க் கிழமை பிற்பகல் முதல் 17.9.2020 வியாழக் கிழமை பிற்பகல் வரை, கட்டணம் ஏதுமின்றித் தரவிறக்கம் செய்து படித்து மகிழலாம்.

     படித்துத்தான் பாருங்களேன்.

வலைச் சித்தருக்கு

திண்டுக்கல்லாருக்கு

திருக்குறளாருக்கு

நன்றி,  நன்றி,  நன்றி

என்றென்றும் பேரன்புடன்,

கரந்தை ஜெயக்குமார்.