இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரப்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு
மன்றோ
யானெ தற்கும் அஞ்சுகிலேன், மானுடரே
நீவீர்
என்மதத்தைக் கைக்கொண்மின், பாடுபடல்
வேண்டா
ஊணுடலை வருத்தாதீர், உணவியற்கை கொடுக்கும்
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல்
கண்டீர்.
வனம்.
வனம் என்பது அனைவருக்குமானது.
அனைவரின் பாதுகாப்பிற்கும் முதன்மையானது.
1945 ஆம் ஆண்டில், இந்தியாவின் வனப் பரப்பு
41 சதவிகிதம் முதல் 46 சதவிகிதம் வரையாகும்.
இதுவே 1970 ஆம் ஆண்டில் 30 சதவிகிதமாகும்.
இன்று வனப் பரப்பு வெறும் 21 சதவிகிதம்தான்.
வனம்.
வனம் என்பது தாவரங்களும், விலங்குகளும் இருக்கும்
இடமாகும், வாழும் இடமாகும்.
தாவரம் என்றால் பாசி, தரையுடன் படர்ந்திருக்கும்
தாவரத்தில் தொடங்கி, சிறு செடிகள், செடிகள், குத்துச் செடிகள், புதர்ச் செடிகள், மரங்கள்,
பெருமரங்கள், கொடிகள் என அனைத்துத் தாவர வகைகளும், தழைத்துக் கிளைத்துப் படர்ந்து ஒருங்கே
வளருமானால், அதனைச் சார்ந்து, அதனுடன் இணைந்து, வாழக்கூடிய விலங்கினங்கள், கண்ணிற்குப்
புலப்படாத நுண்ணுயிரில் தொடங்கி, பேருயிர்களும், மனிதர்களும் இணைந்து வாழ்வதுதான்,
சார்பு வாழ்க்கை வாழ்வதுதான் வனமாகும்.
வனம் குறையக் குறைய, அழிய, அழிய, நாமும் அழிந்து
கொண்டிருக்கிறோம்.
வனம் நமக்கு என்ன செய்கிறது?
சூழலைப் பாதுகாக்கிறது.
அனைத்து உயிர்களையும் காக்கிறது.
இன்று நாம் வாழும் உலகில் 84 இலட்சம் உயிரின
வகைகள் உயிர் வாழ்கின்றன.
இந்த 84 இலட்சம் உயிரின வகைகளுக்கும், வனமானது,
உணவைத் தருகிறது.
உடையைத் தருகிறது.
உறைவிடத்தைத் தருகிறது.
மருந்தைத் தருகிறது.
ஒப்பனைப் பொருட்களைத் தருகிறது.
நமக்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும், உபகரணங்களையும்
தருகிறது.
ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதும்
வனம்தான்.
தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களைத்
தருவதும் வனம்தான்.
வனத்தில் இருந்து கிடைக்கின்ற, தாவரப் பொருட்கள்
இரண்டு வகைகளில் மனிதன் உயிர் வாழப் பயன்படுகிறது.
ஒன்று உணவாக.
மற்றொன்று மருந்தாக.
உணவாக இருக்கின்ற தாவரமும், மருந்தாக எடுத்துக்
கொள்ள வேண்டிய தாவரமும் சேர்ந்ததுதான் வனம்.
நெல்லும் சேர்ந்ததுதான் வனம்.
வனத்தில் ஒரு காலத்தில் முப்பது ஆயிரம் பயிர்கள்
உண்ணும் தரத்தில் இருந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.
இன்று, உலக அளவில், உண்ணும் தரத்தில், எத்தனைப்
பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன, பயிரிடப்படுகின்றன தெரியுமா?
வெறும்
170 பயிர்கள் மட்டும்தான்.
உலக அளவில் இருக்கட்டும், இந்தியாவில், நாம்
வாழும் இந்தியாவில் எத்தனைப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன தெரியுமா?
கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்.
இந்திய அளவில், வெறும், வெறும், வெறும் மூன்றே
மூன்றுதான்.
அரிசி, கோதுமை, சோளம்.
---
இன்றைய அனைத்து வியாதிகளுக்கும் அடிப்படைக் காரணம்.
ஊட்டச் சத்துக் குறைபாடு.
நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு.
இன்று நம் உணவில், அரிசியின் பங்களிப்பு 80 சதவிகிதம்.
அரிசி என்ன வினை புரியும் என்று தெரியாமல் இருக்கிறோம்.
எனவே 80 சதவிகித தவறு செய்துவிட்டு, தூதுவளையையும்,
துளசியையும் சாப்பிடுவதால் பலன் இல்லை.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
என்பார்
வள்ளுவர்.
உண்ட உணவு செறித்து, செறித்தபின் சத்து உறிஞ்சப்பட்டு,
கழிவு வெளியே வந்தவுடன், இந்த உடலில் ஒன்று தோன்றும்.
அதன் பெயர் பசி.
இதனால்தான் வள்ளுவர் பசியைப் பிணி என்றார்.
உடலுக்கு வந்தால் பிணி
மனதிற்கு வந்தால் நோய்
என்பார்
தொல்காப்பியர்.
நோயைத் தீர்க்க முடியாது.
பசியைப் போக்கலாம்.
ஆனால் இன்று, மருந்து எதற்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நோய்க்கு.
பிணிக்கு மருந்து தரவில்லை.
பிணிக்கான மருந்தை வனம் கொடுக்கும்.
நோய்க்கு மருந்தை யாராலும் தரமுடியாது.
வனம் என்பது உணவையும் கொடுக்கும், உணவுக்குள்
வைத்து மருந்தையும் கொடுக்கும்.
இதனால்தான்,
உணவே மருந்து
மருந்தே உணவு
என்றார்
திருமூலர்.
ஆனால் இன்றைய நம் உணவில், அரிசியில் மருந்து
இல்லை.
சத்து நீக்கப்பட்டு, சத்து உறிஞ்சப்பட்ட உணவை
உண்கிறோம்.
ஒரு உணவை, இரண்டு வழிகளில் சாப்பிடுவதற்கு உரியதான
உகந்ததாக மாற்றலாம்.
ஒன்று Process.
மற்றொன்று Refine.
பிராசஸ் என்பது செயல்முறை.
வனத்தில் இருந்து வந்தப் பொருளைக் கழுவி, அதன்
தோலை உரித்து, நறுக்கி, பிழிந்து, நசுக்கிச் செய்வதெல்லாம் செயல்முறை.
நாம் இப்பொழுது மருந்தைப் போட்டு, இராசாயனத்தில்
கழுவி உணவு, உணவு என்கிறோம், உண்ணுகிறோம்.
நமக்கென்று ஒரு புரிதல், ஒரு உள்ளுணர்வு இல்லாமல்
இருக்கிறோம்.
நம்மைத் தவிர, ஈ, எறும்பு, கொசுவிற்குக் கூட,
இந்தத் தேடுதல், இந்த உள்ளுணர்வு இருக்கிறது.
நமக்கு மங்கிவிட்டது.
மழுங்கிப் போய்விட்டோம்.
உலகில் வாழும் 84 இலட்சம் உயிர் வகைகளில், அத்துமீறிச்
செயல்படும் ஒரே விலங்கினம் நாம்தான், மனிதன்தான்.
தாவரங்கள் செழித்து வளர, 16 வகை ஊட்டச் சத்துக்கள்
தேவை.
மனிதனுக்கோ 60 வகை ஊட்டச் சத்துக்கள் தேவை.
அறுபதும் கிடைத்தால்தான், மனிதனால் நல்வாழ்வு
வாழ முடியும்.
நாம் நல்வாழ்வு வாழ வேண்டுமானால், இதுநாள் வரை,
நாம் தொலைத்ததை எல்லாம் மீட்டாக வேண்டும்.
அழிவும் தருவாயில் இருப்பதை எல்லாம் காப்பாற்றியாக
வேண்டும்.
வனமும் வேளாண்மையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
நம் முன்னோர்களிடம் இருந்து, நாம் தொடர்ந்து,
தலைமுறை தலைமுறையாகப் பெற்று வந்த, நம் மரபு அறிவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.
மரபு அறிவை மீட்டாக வேண்டும், போற்றிக் காக்க
வேண்டும்.
---
விதையை எப்படி பாதுகாப்பது?
எந்த விதையை எப்பொழுது எடுக்க வேண்டும்?.
பூச்சி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
நோய் வந்தால என்ன செய்ய வேண்டும்?
இதற்கான
வழிமுறைகள், நம் மரவு அறிவில் இருக்கிறது.
பயிரில் பூச்சி வந்தால், உயிர் சூழல் சிதைவடைந்திருக்கிறது
என்று பொருள்.
பயிர் நன்றாக இருக்கிறது என்று பொருள்.
மண் வளமாக இருக்கிறது என்று பொருள்.
நோய் வந்தால், மண் நோயுற்றிருக்கிறது என்று உணர
வேண்டும்.
இதற்கு மண்ணை வளப்படுத்தினால் போதும்.
இதுதான் தொழில் நுட்பம்.
விதை.
விதை என்பது பொறுக்கு விதை.
நம் முன்னோர், விதை பொறுக்கு விழா என்று ஒரு
விழாவே நடத்துவார்கள்.
அறுவடைக்கு இன்னும் நான்கு அல்லது ஐந்து நாள்கள்
இருக்கும்பொழுது, ஊரில் இருக்கும் வயதானப் பெண்கள், இளம் பெண்களை அழைத்துக் கொண்டு,
பொட்டுக் கூடைகளை எடுத்துக் கொண்டு, வயலைச் சுற்றி சுற்றி வருவார்கள்.
நன்றாக இருக்கும் வயலில் விதை எடுக்க மாட்டார்கள்.
எங்கு நோய்வாய்ப் பட்டிருக்கிறது, எங்கு பூச்சி
தாக்கியிருக்கிறது என்று பார்த்து, அப்பகுதியில், வயலில் இறங்கி, அவ்விடத்தில், பூச்சித்
தாக்காதப் பயிர்களும் இருக்கும் அல்லவா?, அந்தப் பூச்சித் தாக்காதப் பயிர்களாகப் பார்த்துப்
பார்த்து விதைகளைப் பறித்து வருவார்கள்.
இதன் பெயர்தான் விதைத் தேர்வு.
பாதிக்கப்பட்டப் பகுதியில் இருக்கும், பாதிக்கப்படாதா
தானியக் கதிர்களை விதையாக எடுப்பார்கள்.
இக்கதிர்கள் நோய் எதிர்ப்புப் தன்மை மிக்கவை.
இவர்கள்தான் நம் முன்னோர்.
நம் முன்னோர் காலத்தில், வனத்தில் இருந்து வந்தது
எல்லாம், கிடைத்தது எல்லாம் எப்படி இருந்தது தெரியுமா?
நமது கலாச்சாரமாக இருந்தது.
சமையலுக்கு உணவாக இருந்தது.
அதுவே நல்ல மருந்தாகவும் இருந்தது.
வனம்.
வனம் அழிந்தால்,
மனிதம் அழியும்.
வனம் காப்போம்.
மனித இனம் காப்போம்.
---
ஏடகம்.
ஞாயிறு முற்றம்.
கடந்த
9.2.2025 ஞாயிற்றுக் கிழமை மாலை,
தஞ்சாவூர்,
லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளித்
துணை
முதல்வர்
தலைமையில்
தஞ்சாவூர்,
இயற்கை மருத்துவர், வேளாண் அறிஞர்
வனமும் வாழ்வும்
எனும்
தலைப்பில் சீரிய உரையாற்றியதோடு,
அஞ்சல்
மற்றும் தந்தி துறையில் இயக்குநராக, ஆய்வாளராக, அலுவலராகப் பல்வேறு நிலைகளில் பணியாற்றி,
தொலைத் தொடர்புக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி, பணி ஓய்விற்குப் பிறகு,
தன் ஓய்வுக் காலத்தை, நட்சத்திர மரங்களை, தலவிருட்சங்களை, அரிய வகை மரங்களை, மறைந்துபோன
மரங்களை, மறைந்து போகும் நிலையில் உள்ள மரங்களைக் காப்பதற்காகவும், மீட்பதற்காகவும்,
தன் வாழ்வை ஈந்து, மரங்களுக்காகவே வாழ்ந்து வரும்.
மரம் பி.தாமஸ் அவர்களின்
நூலினை
வெளியிட,
திருச்சி,
திருப்பட்டூர், அறநிலையத் துறை, செயல் அலுவலரும், திருப்பட்டூர் கோயில் குளக்கரையைச்
சுற்றிலும் மரங்களை வளர்த்து சோலை வனமாய் மாற்றிய
திரு பெ.ஜெய்கிஷன் அவர்கள்
நூலின்
முதற்படியைப் பெற்றுச் சிறப்பித்தார்.
பொழிவின்
நிறைவில்
நன்றி
கூற,
விழா
இனிது நிறைவுற்றது.
முன்னதாக,
விழாவிற்கு வந்திருந்தோரை
தஞ்சாவூர்,
ஸ்கை அச்சக
வரவேற்றார்.
புனல்குளம்,
குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
தமிழ்த்துறை,
உதவிப் பேராசிரியர்
விழா
நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
ஏடு காக்கத் தோன்றிய
ஏடக அரங்கில் – நம்
பாரம்பரிய விதைகளை, பயிர்களை
வனங்களைக் காக்க, மீட்க
மீட்டெடுத்துப் போற்ற – சித்தர் குரலை
ஓங்கி ஒலிக்கச் செய்த
ஏடக நிறுவனர், தலைவர்
போற்றுவோம், வாழ்த்துவோம்.