மடி வேண்டும் – ஒரு
மடி வேண்டும்.
மனச்சுமையை இறக்கிவைத்து
மாளாத கண்ணீரைக்
கொட்டி மனம் கழுவுவதற்கே
மடி வேண்டும் – ஒரு
மடி வேண்டும்
சற்றேறக்குறைய இன்று அனைவருக்குமே ஒரு மடி தேவைப்படுகிறது. கோடிகளில் செல்வம் கொட்டிக் கிடப்பவர்களுக்கும், பொருளே இன்றி ஒவ்வொரு நாளும் போராடிப் போராடி வாழ்க்கையை நகர்த்து பவர்களுக்கும், இன்று ஒரு மடி அவசியம் தேவைப்படுகிறது.
ஒரு காலத்தில் மறுபதிப்புக்கு
நூல்களைத் தேடினார்கள்
அவற்றின் அருமையை உணர்ந்து
மறுபதிப்பும் செய்தார்கள்.
படிக்கும் பழக்கம் குறைந்ததால்
பழைய புத்தகங்களுக்கத் தேவை குறைந்தது.
வீட்டிலும் வைக்க இடமில்லாமல்
அவை தெருவிற்கு வந்துவிட்டன.
உ.வே.சா., மீண்டும் பிறக்க வேண்டும்.
தெருவோரங்களில் இருக்கும் பழைய புத்தகக் கடைகளில்
சிறிதுநேரம் நின்று, நிதானமாகக் கவனித்துப் பார்த்தால் புரியும். கிடைத்தற்கு அரிய
புத்தகங்கள் பல, அனாதைகளாய், ஆதரிப்பார் யாருமின்றி, திக்கற்று திகைத்து, புலம்புவதற்குக்கூட
வழியின்றி. புத்தக நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறிக் கொண்டிருப்பது தெரியும்.
வீட்டிற்கு ஒரு நூலகம் தேவை என்பர் சான்றோர்.
பார்த்துப் பார்த்து, படித்துப் படித்து, மகிழ்ந்த, நெகிழ்ந்த புத்தகங்கள் எல்லாம்,
சேகரித்தவர்கள் காலத்திற்குப் பிறகு, அடுத்துவரும் தலைமுறைகளால், அனாதைகளாய் தெருக்கடைகளில்
வீசியெறியப்படும் நிலை கண்டு, மனம் நொந்து கூறுகிறார், மீண்டும் உ.வே.சா., பிறக்க வேண்டும்.
இன்று குலத்தொழில் ஒழிக்கப்பட்டது.
எல்லோரும் படித்து உயர்ந்துவிட்டனர்.
இப்போது டாக்டர் மகன் டாக்டர்
பொறியாளர் மகன் பொறியாளர்
வழக்கறிஞர் மகன் வழக்கறிஞர்.
உண்மைதானே, குலத்தொழில் ஒழிந்து, குடும்பத் தொழில்
செழித்து வளரும் காலத்தில்தானே நாம் வாழ்ந்து வருகிறோம்.
தமிழ்மொழி பொருள் வளத்தால், கருத்துச் செறிவால்,
சுருங்கக்கூறி பெரிதாய் விளங்க வைக்கும் தன்மையால், சிறந்து விளங்கிய தொன்மை வாய்ந்த
உயர்தனிச் செம்மொழியாகும்.
ஆனால், அன்றையத் தமிழன், பெருமையோடு உரைத்த சொற்கள்
பல, இன்று அதன் உண்மைப் பொருள் துறந்து, எதிர்மறை பொருள் விளங்கப் பயன்படுத்தப்படுவதுதான்
வேதனை.
சோறு என்ற தனித்தமிழ் பெருமை மிகுசொல், இன்று
மற்றவரை வசைபாட, தண்டச்சோறு ஆகிவிட்டது.
மாடு என்றால் செல்வம் என்று பொருள். இன்று அதுவும்
ஒரு வசைச் சொல்லாகவே மாறிவிட்டது. இதனைத்தான், தனது கவிதையால் வேதனையோடு முன்வைக்கிறார்,
இக்கவி நூல் ஆசிரியர்.
அணிலும் பிள்ளைதான்
கீரியும் பிள்ளைதான்
கிளியும் பிள்ளைதான்
தென்னையும் பிள்ளைதான்
இயற்கை தந்ததை எல்லாம்
பிள்ளைகளாக்கினான் தமிழன்.
பெற்ற பிள்ளை தவறுசெய்தால்
எருமை மாடாக்கினான்
அருமை தெரியாமல்.
உடன் பிறப்பை எண்ணி
எருமை மகிழ்கிறது.
படிக்கப் படிக்க, ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு
சுவையில், மகிழ்வை, ஆறுதலை, துயரை, இனம்புரியா வேதனையை என அனைத்து உள்ளத்து உணர்வுகளையும்
தொட்டுத் தொட்டுத் தூண்டியபடியே செல்கிறது.
நூலின்
பெயர் மூங்கில்.
மூங்கிலின்
எண்ணற்ற துளைகள் வழி.
வெளிவரும்
ஓசைகள் ஒவ்வான்றும் ஒருவகை.
சில பல்கலைக் கழகங்களின், இன்றைய நிலைகண்டு,
வேதனையால் வாடி, ஒரு கவிதைப் படைத்திருக்கிறார்.
தலைப்பு
என்ன தெரியுமா?
பல்கலைக்
கழகங்கள் அல்ல.
பல்களைக் கழகங்கள்.
மாணவர் திறனை சோதித்துப் பார்த்து
மதிப்பெண் தருவர் தேர்வாளர்கள்.
பதராய்ப் போன பாவி மனிதர்கள்
களைகளாய் நுழைந்து பாவம் செய்தனர்
பலிகடா ஆயினர் நன்மாணாக்கர்
பல்கலை பயிற்றிடத் தோன்றிய கழகம்
பல்களை ஆனது பாவிகள் நுழைவால்.
இவர் யார் தெரியுமா?
இவர் ஒரு பல்கலைக் கழகத்தில், முதுநிலை துணைப்
பதிவாளராகப் பணியாற்றி, பணி நிறைவு செய்தவர்.
தமிழ் படித்தவரல்ல.
நிதி மேலாண்மை படித்தவர்.
சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், கவிஞர், மொழி
பெயர்ப்பாளர், ஆராய்ச்சியாளர் என பன்முகத் தன்மை உடையவர்.
சுத்தமான மனிதர்.
நேர்மையாளர்.
நேர்மையாளர்கள் பலரும் கடுமையாக இருப்பார்கள்.
இவர் அப்படியல்ல.
மனிதாபிமானி.
இவரது, மேலாண்மை அன்றும், இன்றும் எனும் நூல் 2014 ஆம் ஆண்டிற்கான, தமிழக அரசின்
பரிசினைப் பெற்ற நூலாகும்.
74 நூல்களின் ஆசிரியர்.
பணி ஓய்விற்குப் பிறகு, இதுவரை 38 நூல்களை எழுதி வெளியிட்டி ருக்கிறார்.
75 ஆவது வயதில், இவர் எழுதிய நூலின் பெயர்.
இளமை
என்னும் பூங்காற்று.
79 ஆவது வயதில் இவர் எழுதிய நூலின் பெயர்
காதல் மொழிகள் 200.
பல்வேறு துணைவேந்தவர்களிடம் பணியாற்றியவர்.
தான் பணியாற்றிய துணைவேந்தர்களை எல்லாம் எழுத்தாய்
வடித்து, நூலாய் வெளியிட்டவர்.
இவர்தான்,
திருமிகு இரா.சுப்பராயலு
மேனாள்
முதுநிலைத் துணைப் பதிவாளர்
தமிழ்ப்
பல்கலைக் கழகம்
இவரது எண்பதாவது அகவைத் திருநாள் விழா, கடந்த
8.1.2025 அன்று தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில்,
தஞ்சை மன்னன் பதிப்பக வெள்ளிவிழா
எழுத்தாளர் இரா.சுப்பராயலு அமுத விழா
நூல் வெளியீட்டு விழா
ஆகிய
முப்பெரு விழாவாக
தஞ்சாவூர்,
பாரதி சங்கம்
திருவையாறு,
பாரதி இயக்கம்
சார்பில்
பேராசிரியர் வீ.சு.ரா.செம்பியன் அவர்களின்
முயற்சியால்
நடத்தப்பெற்றது.
பேராசிரியர் பழநி.அரங்கசாமி அவர்கள்
தலைமையில்
நடைபெற்ற
இவ்விழாவின்போது,
பேராசிரியர் கு.வெ.பாலசுப்ரமணியம் அவர்கள்
மூங்கில்
நூலினை
வெளியிட
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
அவர்கள்
நூலின்
முதற்படியினைப் பெற்றுக் கொண்டார்.
பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் ஐயா
திரு யோகம் இரா.செழியன்
திரு பாரத் இரவீந்திரன்
திரு அதம்பை வை.இராமமூர்த்தி
ஆகியோர்
வாழ்த்துரை
வழங்கினர்.
விழாவின்
நிறைவில்
அமுதவிழா
நாயகர்
எழுத்தாளர் இரா.சுப்பராயலு அவர்கள்
நன்றி
கூறினார்.
நூலின் ஆசிரியர்
நீண்டு, நெடிது வாழவும்
வாழும் காலமெல்லாம்
எழுதி, எழுதி
தமிழுக்கு அணி சேர்க்கவும்
வாழ்த்துவோம், வணங்குவோம்.
மூங்கில்
மாமன்னன் பதிப்பகம்,
124,
நட்சத்திர நகர்,
தஞ்சாவூர்
5
ரூ.150