01 ஜனவரி 2012

முல்லை பெரியாறு - தமிழ் மானுடம் வெல்லும்


பென்னி குக்
             பென்னி குக், முல்லைப் பெரியாறு அணையின் நாயகன். ஆங்கிலேயரான இவர் 1841 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் நாள், தமிழர்களின் திருநாளான பொங்கல் தினத்தன்று மராட்டிய மாநிலத்தின் புனே நகரில் பிறந்தவர். இவரது தந்தை பிரிகேடியர் ஜெனரல் ஜான் பென்னி குக் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்த காலத்தில் இந்தியாவில் பிறந்தவர்தான் பென்னி குக். இலண்டனில் பொறியியல் படித்து முடித்தவுடன் 1858 இல் இந்தியாவில் கால் பதித்தார்.  மூன்றாண்டுகளுக்குப் பிறகு உயர் கல்வி கற்பதற்காகத் தாயகம் திரும்பினார். 1862 இல் மீண்டும் இந்தியா திரும்பி மாவட்ட உயர் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.
     அபிசீனியாவில் போர் மூளவே, ஆங்கிலேய இராணுவத்தில் இணைந்து போர்முனைக்குச் சென்றவர், மீண்டும் 1867 இல் இந்தியா திரும்பினார். ஆங்கிலேயராக இருந்த போதிலும் இந்தியா இவரை வா, வா என்று அழைத்துக் கொண்டேயிருந்தது, இந்தியாவின் மீதும், குறிப்பாகத் தமிழர்களின் மீதும் மாறா பாசம் கொண்டவர் பென்னி குக். இந்தியா திரும்பிய பென்னி குக் அவர்களிடம், அன்றைய ஆங்கிலேய அரசால், பெரியாறு அணை சர்வே திட்ட அலுவலர் பொறுப்பு வழங்கப் பெற்றது.
முல்லை பெரியாறு பருந்துப் பார்வை
பெரியாறு அணையினை எங்கே கட்டினால் சரியாக இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய பெரும் பணியினை மகிழ்வுடன் ஏற்றார். காடு மேடு என மெய்வருத்தம் பாராமல் அலைந்து, பெரியாறு அனணக்கான இடத்தினைத் தேர்வு செய்து, அணையின் உயரம், தேங்கும் தண்ணீரின் அளவு, அணையின் வரைபடம், திட்ட மதிப்பீடு முதலான பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்நிலையில் 1869 இல் மீண்டும் இலண்டனிலிருந்து அழைப்பு வரவே இலண்டன் பயணமானார்.
     மீண்டும் 1872 இல் இந்தியா திரும்பினார். இம்முறை தென் ஆற்காடு மாவட்ட பொறியாளர் பொறுப்பு இவருக்காகக் காத்திருந்தது. மேலும் இரண்டாண்டுகளில் முல்லைப் பெரியாறு பொறுப்பும் வந்து சேர்ந்தது.
     அணையின் கட்டுமானப் பணிக்கான அனைத்துக் கோப்புகளுக்கும் அனுமதி வழங்கப் பட்ட நிலையில்,1876 மற்றும் 1877 ஆம் ஆண்டுகளில் இந்தியவே மாபெரும், கொடிய கோரப் பஞ்சத்தின் பிடிகளில் சிக்கித் தினறிப் போனது. பஞ்சத்தினைப் போக்க அதிக அளவில் பணம் செலவிடப்பட்டதால் அணை கட்டும் பணி தள்ளிப் போடப் பட்டது. இதனால் ஆறு ஆண்டுகள் அணை கட்டும் பணியாணது எழுத்து வடிவத்தில், தாட்களிலேயே முடங்கிப் போனது.
     1882 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் முல்லைப் பெரியாறு தொடர்பான கோப்புகள் மீண்டும் பென்னி குக்கிடம் ஒப்படைக்கப் பட்டன.
     1886 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் , திருவாங்கூர் மகாராசாவுடன் 999 ஆண்டுகாலக் குத்தகைக்கு ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. 1887 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் பணியினைத் துவக்க அனுமதி அளிக்கவே பென்னி குக், தனது கனவுத் திட்டத்திற்கு உருவம் கொடுக்கும் செயலில் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கினார்.அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
     1889 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் நாள் பெய்த மழையினை, சாதாரணமாக மழை என்று கூறக் கூடாது, பேய் மழை என்றே கூறலாம். ஒரு விநாடி கூட இடைவெளி விடாமல், நான்கு மணிநேரம் மழை ஆடிய கோரத் தாண்டவத்தின் விளைவாக வேரோடு அடித்துச் செல்லப் பட்ட பல மரங்களுடன் சேர்ந்து,  அனணயின் இரண்டு நீர் போக்கிகளும் அடித்துச் செல்லப் பட்டன.சற்றும் மனம் தளராத பென்னி குக், எப்பாடு பட்டாகினும் அணையினைக் கட்டியேத் தீர்வது என்னும் உறுதியான நிலைப் பாட்டில். பணியினை மீண்டும் தொடங்கினார்.
    1894 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அணைக் கட்டுப் பகுதியில் பரவிய காலரா நோயானது, ஆங்கிலேயப் பொறியாளர்கள் உட்பட, சுமார் 45 பணியாளர்களைப் பலிவாங்கியது. கட்டுமானப் பணியின் போது இறந்தவர்களின் கல்லறைகள் இன்றும் அங்கே, தியாகச் சின்னங்களாய் நிலைத்து நிற்கின்றன.
     1890 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் பேய் மழையானது தனது கோரத் தாண்டவத்தை மீண்டும் ஒரு முறை அரங்கேற்றியது. இதன் விளைவாக தடுப்புக்காக வைக்கப்பெற்றிருந்த மணல் மூட்டைகள் அத்தனையும் சிதறியதோடு, அணையின் தரைத் தளமுமம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியது.
     பென்னி குக் பல ஆண்டுகள் உயிரைப் பணயம் வைத்து உழைத்த உழைப்பு ஒரே நாளில் வீணானது.
     முல்லைப் பெரியாறு என்பது பென்னி குக்கைப் பொறுத்தவரையில், கட்டிடமல்ல, தண்ணீரைச் சேமித்து வைக்கும் சேமிப்புக் கிடங்குமல்லை,அது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம். பல ஆயிரம் ஏக்கர் வறண்ட நிலங்களில், தென்றலாய் தவழ்ந்து, பயிராய் எழுந்து, உணவாய் உருப்பெற்று, இலட்சக் கணக்கான மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கக் கூடிய அட்சய பாத்திரம். பென்னிக் குக் வாய்விட்டுக் கதறினார். அனலிடைப் புழுவாய்த் தவித்தார். இயற்கையே ஏன் இவ்வாறு செய்தாய்? நல்ல நோக்கத்திற்காகச் செய்யும் செயலுக்கு இவ்வளவு தடைகளை ஏன் உருவாக்குகிறாய்? எனக் கொதித்தார்.

            
ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்ட பென்னிக் குக், அணையின் கட்டுமானப் பணியினை மீண்டும்  தொடங்குவதற்காக ஆங்கிலேயே அரசுக்கு கடிதம் எழுதி, பண உதவி கோரினார். ஆனால் ஆங்கிலேயே அரசாங்கமோ எதிர்பார்த்ததைவிட செலவு அதிகமாகிக் கொண்டே போவதை உணர்ந்து இனியும் செலவு செய்ய தயாராக இல்லை என இரு கைகளையும் விரித்து விட்டது.
                    தேடிச் சோறுநிதந்  தின்று - பல
                          சின்னஞ்  சிறுகதைகள் பேசி மனம்
                     வாடித்  துன்பமிக  வுழன்று - பிறர்
                         வாடப்  பல செயல்கள்  செய்து - நரை
                    கூடிக்  கிழப்பருவ  மெய்தி  - கொடுங்
                         கூற்றுக்  கிரையெனப்  பின்மாயும் - பல
                    வேடிக்கை  மனிதரைப்  போலே - நான்
                        வீழ்வே  னென்றுநினைத்  தாயோ?
நான் வீழ மாட்டேன், சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்ப்பெற்று எழும் பீனிக்ஸ் பறவை போல, மீண்டு எழுவேன், தொடங்கிய செயலினை முடிக்காமல் கண் துஞ்ச மாட்டேன் என்று வீறு கொண்டு எழுந்தார் பென்னி குக்.
      தொடங்கிய வேலையினை முடிக்காமல் இங்கிருந்து நகரக்கூடாது, எத்துனையோ தடைகளைத் தகர்த்தெறிந்துத விட்டோம், இத் தடையையும் கடக்க வேண்டும், நிச்சயம் இதுவும் கடந்து போகும். ஏனெனில் காலத்தைக் கடந்து நிற்கப் போகும் அணை இது, கேவலம் பணம் இல்லை என்பதால் இத்திட்டத்தைக் கைவிடுவதா? பணத்தினை அரசு தராவிட்டால் என்ன? மக்கள் இருக்கிறார்கள், மக்களோடு இணைந்து இத்திட்டத்தினை நிறைவேற்றியே தீருவது என்று தீர்க்கமாய் முடிவு செய்து களத்தில் இறங்கினார்.
      செல்வந்தர்கள் பலரை அணுகி நிதியுதவி செய்யுமாறு வேண்டினார்.சுருளியாறும், கொட்டக்குடி ஆறும் சந்திக்கும் தேனி என்னும் கூட்டுரோடு பகுதிக்கு அருகே வசித்து வந்த பழனிச் செட்டி என்னும் ஒரு தமிழர் முதல் உதவிக் கரத்தை நீட்டினார். ஏலச் சாகுபடி செய்து வந்த பழனிச் செட்டி அவர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, இரண்டாயிரம் வெள்ளி நாணயங்களை தனது அன்பளிப்பாக பென்னி குக்கிடம் வழங்கினார். மெய் சிலிர்த்துப் போனார் பென்னி குக். பின்னாளில் பழனிச் செட்டிப் பட்டி என்னும் ஊருக்கு தடுப்பு அணை ஒன்றினை கட்டி, அதற்கு காலவாய் ஏற்படுத்தி, அந்தக் காலவாய் மூலம், பழனிச் செட்டி வசித்த இடத்தைச் சுற்றியுள்ள நிலங்கள் பாசனம் பெற எற்பாடு செய்தார். தடுப்பு அணையினைப் பராமரிக்கும் உரிமையினை பழநியப்பச் செட்டிக்கே வழங்கினார். இன்றும் கூட பழனியப்ப பாசன பரிபாலன சபை என்னும் பெயரில் வளர்ந்து நிற்கின்றது அந்த அணை.
       நிதியுதவி கிடைக்கக் கிடைக்க முல்லைப் பெரியாறு அணையும் உயர்ந்தது. நிதி கிடைக்காதபோது பணி நிறுத்திவைக்கப் பட்டது. நிதி கிடைத்தால் பணி செய்வதும், மற்ற நேரங்களில்  நிதி திரட்ட அலைவதுமாக பென்னி குக்கின் நேரம் கழிந்தது.ஒரு நாள் பென்னி குக்கின் மனதில், மின்னலாய் ஒரு எண்ணம் பளிச்சென உதயமாயிற்று. இப்படி ஓடி, ஓடி நிதி திரட்டினால் அணையின் கட்டுமானப் பணியானது தனது ஆயுட்காலத்தில் நிறைவேறாது என்பது புரிந்தது. உடனே இலண்டன் சென்றார். தனது அத்தனைச் சொத்துக்ளையும் விற்று, பணம் திரட்டிக் கொண்டு வந்து, அணையின் கட்டுமானப் பணியினைத் தொடர்ந்தார்.
பாலார் பட்டியில் பென்னி குக் பொங்கல்(நன்றி- குமுதம்)
     அரசாங்கம் செய்திட வேண்டியப் பணியினைத் தனியொரு ஆளாக, தன் தோளில் சுமந்து, தனது சொந்த நிதியினைக் கொண்டு அணையினைக் கட்டி முடித்தார்.
      இன்று தலை நிமிர்ந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் முல்லைப் பெரியாறு அணை, பென்னி குக்கின் உதிரத்தாலும், வேர்வையாலும் கட்டப் பெற்ற அணையாகும்.அப்பகுதி மக்களின் வேர்வையும், உழைப்பும், செல்வமும், உயிரும் முல்லைப் பெரியாறு அணையின் ஒவ்வொரு கல்லிலும், ஒவ்வொரு மணல் துகளிலும் கலந்திருக்கின்றது.
 ( நன்றி குமுதம் , 11,1,2012)
     
    தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற பெயர் பென்னி குக். இன்றும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பென்னி குக் என்று பெயரிடுகின்றனர். முல்லைப் பெரியாறு அணையினால், தங்களின் வாழ்வாதாரம் உயர்ந்ததை எண்ணி, இன்றும், பாலார் பட்டி மற்றும் ஏனைய கிராம மக்கள் பென்னி குக் பிறந்த
நாளான, சனவரி 15 ஆம் தேதியினை, பொங்கல் விழாவிற்குப் பதிலாக, பென்னி குக் விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். பொங்கல் வைத்து படையலிட்டு மகிழ்கின்றார்கள். கேட்டால் இதுதான் தமிழர் திருநாள் என்கிறார்கள்.
(நன்றி -குமுதம் 11.1.2012)
       ஆம் ஒரு ஆங்கிலேயர், தமிழராக போற்றப் படும், தெய்வமாக வணங்கப்படும்  மாபெரும் வரலாற்று நிகழ்வு என்றே இதனைக் கூறலாம்.
     விவசாயிகரளுக்காகக் கட்டப்பெற்ற அணை முல்லைப் பெரியாறு. எந்தவொரு  அரசாங்கத்திற்காகவும் அது கட்டப் படவில்லை. மக்கள் நீர் வளம் பெற்று வாழ வேண்டும் என்பதே பென்னி குக்கின் கனவு. அக் கனவை நிறைவேற்றத்தான் தன் சொத்துக்களை விற்று அணையை உருவாக்கினார்.
                        
                        இப்புவியில்
                        நான் வந்த செல்வது
                        ஒரு முறைதான்
                        எனவே
                        நான் இங்கே
                        ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும்
                        இதனை
                        தள்ளி வைப்பதற்கோ
                        அல்லது
                        தவிர்ப்பதற்கோ இடமில்லை
                        ஏனெனில்
                        மீண்டும் ஒரு முறை
                        நான்
                        இப்புவியில் வரப் போவதில்லை
பென்னி குக்கின் இக் கவிதை வரிகளைப் பாருங்கள், உதடுகளால் உச்சரித்துப் பாருங்கள்,முல்லைப் பெரியாறு அணையின் நீர்போல மனதில் தேக்கிப் பாருங்கள், ஒரு நற்செயலை தள்ளி வைப்பதற்கோ, தவிர்ப்பதற்கோ இடமில்லை என்று எண்ணி, பென்னி குக் செயலில் சாதித்துக் காட்டிய அணையினைப் பாருங்கள்.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லணை
       கேரளாவில் 44 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றுள் பாம்பார்,பவானி, கபினி ஆகிய மூன்று ஆறுகள் மட்டுமே கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. மீதமுள்ள 41 ஆறுகளும் மேற்கு நோக்கிப் பயணித்து அரபிக் கடலிலோ அல்லது ஏரிகளிலோ தங்கள் பயணத்தை முடிக்கின்றன.
     தமிழகத்தின் சிவகிரி மலையில், கடல் மட்டத்திலிருந்து 1830 மீட்டர் உயரத்தில் தோற்றம் பெறுவது பெரியாறு நதியாகும். பெரியாறு நதி பயணிக்கும் மொத்த தொலைவு சுமார் 300  கி.மீ., ஆகும். தமிழகத்தில் 56 கி.மீ, தொலைவிற்கும், கேரளாவில் 244 கி.மீ., தொலைவிற்கும் பயணிக்கும் பெரியாறு, இரண்டாகப் பிரிந்து அரபிக் கடலிலும், கொச்சியின் வேம்பநாடு ஏரியிலும் கலக்கின்றது.
     44 ஆறுகள் பாயும் கேரளாவில் 18 அணைகள் உள்ளன. இவற்றுள் மழம்புழா அனணயானது, நமது தமிழக அரசால் கட்டப்பெற்ற அணை என்பது பலருக்கு வியப்பைத் தரலாம் அல்லது விந்தையாகத் தோன்றலாம். ஆனால் மறுக்க முடியாத உண்மை.
      கேரளாவின் நெற்களஞ்சியம் என்று பாலக்காடு போற்றப் படுகிறது. இதற்குக் காரணம் மழம்புழா அணையாகும். இந்த அணையானது இன்று கேரளாவின் மாபெரும் சுற்றுலாத் தலமாகவும், சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிற்கு பாசனத்திற்கும் உதவி நெற்களஞ்சியம் என்னும் பெயரினை பாலக்காட்டிற்குப் பெற்றுத் தந்திருக்கின்றது.
    அன்றைய சென்னை அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே பாலக்காடு விளங்கியது. 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம், சென்னை அரசாங்கத்தின் பொதுப் பணித்துறை அமைச்சரும், பின்னாளைய தமிழக முதல்வருமாகிய கே.பக்தவசலம் அவர்களால் மழம்புழா அணைக்கு அடிக்கல் நாட்டப் பட்டது. ஆறே ஆண்டுகளில் அணையின் கட்டுமாணப் பணி நிறைவுற்றது. 1955 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள் மழம்புழா அணையின் திறப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது. இந்த அணையினைத் திறந்து வைத்தவர் யார் தெரியுமா? அவர் வேறுயாருமல்ல, அன்றைய தமிழக முதல்வர் கர்ம வீரர் காமராசர் அவர்கள்தான்.
      தமிழகத்தின் இத்தகுப் பெருந்தன்மைக்கு கேரளம் காட்டும் நன்றியுணர்வைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். 44 ஆறுகள் ஓடியும், 18 அணைகள் இருந்தும், இத்தண்ணீரின் வெறும் 8 சதவீ நீரைத்தான் கேரளம் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றது. இது மறுக்க முடியாத உண்மை. மீதமுள்ள 92 சதவீத நீரும் அரபிக் கடலுக்குள் தஞ்சம் புகுகின்றது.
     கேரளத்தவர் தாங்கள் உண்ணும் சோற்றுக்கும் குழம்புக்கும், காய்கறிகளுக்கும், தின்னும் பழங்களுக்கும், பூஜைக்குப் பூவிற்கும், சமையலுக்கு கறிவேப்பிலைக்கும் கூட தமிழகத்தை நம்பித்தான் இருக்கின்றார்கள். எனவே கேரளத்தவர்கள் தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது, தேவையில்லாத இந்த முல்லை பெரியாறு அணை பிரச்சினையினைக் கைவிடல் வேண்டும்.
                     யாதும் ஊரே யாவரும் கேளிர்

                  தீதும் நன்றும் பிறர் தர வாரா
போன்ற அமுத மொழிகளை உலகிற்கு வழங்கிய தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற, தமிழின் சேய் மொழி மலையாளம். அவ்வகையில் கேரளத்தவர்கள் யாவரையும், நம் உடன் சகோதரர்களாய் இதுவரை நாம் போற்றி வந்திருக்கின்றோம். அதுபோல் அவர்களும் நம்மை அவர்களது சகோதரர்களாய் போற்றாவிடினும், அன்னியர்போல் கருதாமலாவது இருத்தல் இருவருக்கும் நலம் பயக்கும்.
      தஞ்சைப் பெரிய கோயில் கட்டப் பெற்று ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இருந்தும் தனது மெருகு குலையாமல் கம்பீரமாய் காட்சியளிப்பதைப் பாருங்கள். கரிகாலச் சோழனால் கட்டப் பெற்ற கல்லணையின் வயது ஆண்டுகள் இரண்டாயிரத்தைக் கடந்து விட்டது, இருந்தும் கல்லணை என்ன தண்ணீரில் கரைந்தா போய்விட்டது?.
       தமிழனுக்காகக் கட்டப் பெற்ற அணை முல்லைப் பெரியாறு. பல நூறு தமிழர்கள் தம் இன்னுயிரை இழந்து, தங்களின் சமாதிகளின் மேல், தங்களின் சந்ததியினருக்காக, நமக்காகக் கட்டிய அணை முல்லைப் பெரியாறு. ஒரு ஆங்கிலேயரின் முயற்சியினால், உதிரத்தால், பல நூறு தமிழர்களின் வியர்வையை, உதிரத்தை, சுண்ணாம்புக் கலவையோடு கலவையாய் சேர்த்து கலந்து உருவாக்கிய அணை முல்லைப் பெரியாறு.இக்காலத் தமிழர்களான நம்மால் ஒரு அணையினைக் கட்டத்தான் முடியவில்லை, ஒரு ஆங்கிலேயன் நமக்காகக் கட்டிய அணையினைப் பாதுகாக்கக் கூடவா நம்மால் முடியாது?
கல்லணை
      நாம் நமது சாதி, மத, இன, அரசியல், பொருளாதார பிரிவினைகளைக் கடந்து தமிழன் என்ற ஒரே உணர்வுடன், வீறு கொண்டு எழுந்து, நமது ஒன்றுமையினை, நமது ஒற்றுமையின் வலிமையினை, இவ்வுலகிற்குப் பறைசாற்ற வேண்டிய கால கட்டம் இது.
1000 ஆண்டுகளைக் கடந்த தஞ்சைப் பெரிய கோயில்
     அகிம்சையினை உலகிற்கே போதித்த காந்திய தேசம் இது. ஒத்துழையாமையே, அணுகுண்டினைவிட மிகப் பெரிய ஆயுதம் என்று உலகிற்குக் உணர்த்திய தேசம் இது வன்முறைத் தவிர்ப்போம், காந்திய வழியில் கரம் கோர்த்து ஒன்றிணைவோம். நாங்கள் ஒன்றிணைந்து விட்டோம் என்பதை உணர்த்தினாலே போதும், முல்லைப் பெரியாறு பிரச்சனை ஒரு நொடியில் தீரும். நாம் நமது ஒற்றுமையினை, ஒற்றுமையின் வல்லன்மையினை கேரளாவிற்கு மட்டுமல்ல் உலகிற்கே உணர்த்துவோம். ஓரணியில் திரள்வோம்.
                       வீழ்ச்சியுறு  தமிழகத்தில்  எழுச்சி  வேண்டும்
                              விசைஒடிந்த  தேகத்தில்  வன்மை  வேண்டும்
                       சூழ்ச்சிதனை  வஞ்சகத்தைப்  பொறாமை  தன்னைத்
                             தொகையாக  எதிர்நிறுத்தித்  தூள்தூ   ளாக்கும்
                       காழ்சிந்தை,  மறச்செயல்கள் மிகவும்  வேண்டும்
                                                            - பாரதிதாசன

பென்னி  குக் மணிமண்டபம்
முல்லைப் பெரியாறு அணையின் லோயர் கேம்ப் பகுதியில், பென்னி குக் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்டப்பெறும் என்றும், அம் மணிமண்டபத்தில் பென்னி குக் சிலையினை அமைத்து, பென்னி குக் பெயரனால் அந்த நினைவு மண்டபம் திறப்பு விழா நடைபெறும் என அறிவித்த தமிழக முதல்வரின் அறிவிப்பினை வாழ்த்தி வரவேற்போம்.


--------------------------------------------------------------------------------
சிந்தனை செய் மனமே ...
(படித்ததில் பிடித்தது)

    நம்முடைய பள்ளிக் கூடங்களிலே கணக்குச் சொல்லிக் கொடுக்கிறபோது, கடன் வாங்கிக் கழித்தல் என்று ஒரு கணக்கு இருக்கிறது. இந்த எண்ணிலே இதைக் கழிக்க முடியாது, என்ன செய்யலாம்.... பக்கத்திலே இருக்கிற எண்ணிலே கடன் வாங்குங்கள்....கடன் வாங்குவதற்கு அங்கேயே நாம் கற்பிக்கப் படுகிறோம். வாங்கிய கடனை இந்த எண் அந்த எண்ணுக்கு எப்போதாவது திருப்பிக் கொடுத்ததா என்றால் இல்லை. ஆனால் இதே கணக்கு சீனத்திலே எப்படிச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்பதைச் சீனாவிற்குப் போய் வந்த பேரா.நாகநாதன் போன்றவர்கள் சொல்கிறார்கள். அங்கே அந்தக் கணக்குக்கு கடன் வாங்கிக் கழித்தல் என்ற பெயர் இல்லை. இங்கே குறைவாக இருக்கிறது, அங்கே தேவைக்கும்மேல் கூடுதலாக இருக்கிறது, எனவே அங்கே இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்கிறார். இந்த இரண்டு பாடமும் ஒன்றுதான். ஆனால் இரண்டையும் பயிற்றுவிக்கிற முறைகளிலே இரண்டு பிள்ளைகளுக்குள்ளேயும் இடையிலே ஏற்படுகிற விளைவுகள் வேறு வேறாக இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. எனவே ஏற்றுக் கொள்ளப் பட்ட செய்திகளைக் கூட மறு ஆய்வுக்கு உள்ளாக்குவது என்பது இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கிற படிப்பு முறையாக இருக்கிறது. 
நன்றி
ஒன்றே சொல் நன்றே சொல் (தொகுதி 3),பக்கம் 98 - பேரா.சுபவீ



    
    


01 டிசம்பர் 2011

பசிப்பிணி மருத்துவர்


  
தென்னங்குடி நாட்டார்
  தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் வழியில் அமைந்துள்ள அழகிய கிராமம் தென்னங்குடி ஆகும். தமிழகத்தின் தென்னாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்க்குத் தென்னவன், மாறன், செழியன் முதலான சிறப்புப் பெயர்கள் உண்டு. தென்னன்குடி, தென்னன்பட்டி, தென்னவ நல்லூர், தென்னவ நாடு முதலிய ஊர்கள் பாண்டிய மன்னர் தென்னவனோடு தொடர்புடைய பெயர்களாகும். தென்னன் குடி என்பது காலப் போக்கில் மருவி தென்னங்குடி என அழைக்கப்படலாயிற்று.

     இத்தகு வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னங்குடி கிராமத்தில் வாழ்ந்து வந்த பெருநிலக்கிழார் நாராயணசாமி நாட்டார், துளசியம்மாள் தம்பதியினரின் ஒரே மகனாய், அருந்தவப் புதல்வராய் சுந்தரராச நாட்டார் தோன்றினார்.
     தனது தந்தையாரைப் போலவே, விவசாயப் பணியினை மேற்கொண்டு அயராது உழைத்து, தனது விளை நிலங்களின் எல்லையை விரிவு படுத்தினார்.
     இளமை முதலே தமிழின் சுவையறிந்து, தாய்மொழியாம் தமிழ் மீது தீராக் காதல் கொண்டவர் சுந்தரராச நாட்டார். சுந்தரராச நாட்டாருக்கு சிட்டியம்மாள், மங்கை நல்லாள் என மனைவியர் இருவர். எனினும் குழ்ந்தைகள் இல்லை.
                       ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
                       ஊதியம் இல்லை உயிர்க்கு
என்னும் குறளிள் மூலம் ஈதலின் பெருமையினை விளக்குவார் திருவள்ளுவர்.
     இயற்கையாகவே ஈகை குணமுடைய சுந்தரராச நாட்டார் அவர்கள், பொருள் இல்லாமையால், கல்வி கற்க இயலாது தவிக்கும் சிறார்களை எல்லாம், தனது மக்களாகவே கருதினார். திக்கற்ற மற்றும்  ஏழை மாணவர்களுக்கு உதவுதலையே தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டார்.
     ஏழை மாணவர்களுக்கு எவ்வகையில் உதவிடலாம் என எண்ணி சிந்தனையில் ஆழ்ந்த சுந்தரராச நாட்டாரின் மனக் கண்ணில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் முன் வந்து நின்றது.
கரந்தைத் தமிழ்ச் சங்கம்
     தமிழ் நாட்டின் தெருக்களில் தமிழ்தானில்லை என்ற அவல நிலையினைப் போக்கிடவும், தமிழின் பெருமைகளை மீட்டெடுக்கவும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னுமோர் உன்னத நிலையினை உருவாக்கிடவும், வீறு கொண்டு தோன்றிய அமைப்பு கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
நாட்டார் அறநிலையக் கட்டிடம
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் அமர்ந்து முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றியவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களாவார்.
     தமிழ் மொழியினை வளர்க்க தனித் தமிழ் கலாசாலைகள் ஏற்படுத்துவதால் மட்டுமே பெரிதும் பயன் விளையப் போவதில்லை என்று எண்ணிய உமாமகேசுவரனார், தமிழோடு கைத் தொழிலகளையும் கற்றுக் கொடுக்கும்படியான காலசாலை ஒன்றினை எற்படுத்தத் தீர்மானித்தார்.
     உமாமகேசுவரனாரின் அயரா முயற்சியின் பயனாக 1916 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்க செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரி தொடங்கப் பெற்றது.இக்கல்லூரியில் தமிழோடு நெசவுத் தொழில், நூல் நூற்றல், பாய் நெசவுத் தொழில்,மர வேலைகள், நூற் கட்டு முதலியனவும் கற்பிக்கப் பட்டன.
திக்கற்ற மாணவர் இல்லம்
     கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரியின் சார்பில் 1930 ஆம் ஆண்டு திக்கற்ற மாணவர் இல்லம் ஒன்றும் தொடங்கப் பெற்றது. தாயை இழந்தோ.தந்தையை இழந்தோ,இருவரையும் இழந்தோ, பாதுகாவலர் ஒருவருமின்றி வாடும் ஆறு வயது முதல் பதிமூன்று வயது வரையுள்ள மாணவர்கள் இத்திக்கற்ற மாணவலிரில்லத்தில் சேர்க்கப் பெற்றனர். இவ்வில்லத்தில் சேர்ந்த நாள் முதல் இவர்கள் தம் துன்பம் நீங்கி, இன்பமெய்தி, எழில் தரு முகத்தோடு உடல் நலம் பெறு கல்வி பயிலத் தொடங்கினர்.
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு என்று நிலையான வருவாய் ஏதுமில்லாத காரணத்தால் பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து சந்தித்து வந்தபோதும், மாணவர்களிடமிருந்து கட்டணம் பெற்றிடாமல் இலவசமாகவே கல்வி பயிற்றுவிக்கப்பெற்றது.திக்கற்ற மாணவரில்லத்திலும் மாணவர்கள் இலவசமாகவே சேர்க்கப்பெற்றனர்.

     அன்பர்காள், இவ்வரிய காரியங்களை எல்லாம், என்றும் இடையறாது நடைபெற்றுவருதல் வேண்டாமா? இந்நகர மக்கள் தத்தம் வீடுகளில் பிடியரிசிக் கலயம் வைத்து, ஒரு கையளித்து உதவிவருதல் வேண்டும். இந்நகர வணிகர்கள், கடைகட்கு மாலையில் வந்து நிற்கும் சங்க அலுவலர்க்கு ஒரு காசேனும் அளித்து உதவிவருதல் வேண்டும். வெளியூர் அன்பர்கள் அறுவடைக் காலங்களில் இயன்ற அளவு நெல் உதவிகளைச் செய்து வருதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் இன்னனைய செலவுகள் எத்துனையோ செய்து வரும் நம் தமிழ் மக்க்ள் மேற்கூறிய வருவாய்களால் ஆயிரக் கணக்கான எழைச் சிறுவர்கள் கல்வி பயிற்சியுறுதலை உள்ளத்தில் கொள்ளுதில் வேண்டும். தமிழ்த் தாயின் திருமக்காள் உள்ளங்கனிமின், ஏழைச்சிறார்கட்கு இரங்குமின், புகுழும் பேரும் போற்றுமின், போற்றுமின்.
         நிதி மிகுந்தேர்ர் பொற்குவை தாரீர் நிதிகுறைந்தோர் காசுகள் தாரீர் 
         அதுவுமற்றோர் இன்சொல அருளுவீர்
என பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, கல்வி பயிற்றுவித்தலையும், திக்கற்ற மாணவரில்லத்தையும் தொடர்ந்து இலவசமாகவே நடத்திட, தஞ்சைப் பகுதி மக்களுக்கு உமாமகேசுவரனார் அவர்கள் உருக்கமான வேண்டுகோளினை விடுத்ததோடு, தானும் தனது சொந்த வருவாயில் இருந்து ஒரு தொகையினை மாதா மாதம் வழங்கி வந்தார்.

திறப்பு விழாக் கட்வெட்டு
   அக்காலத்தில் கரந்தை,கூடலூர், குளமங்கலம், அரசூர், அம்மன் பேட்டை, பள்ளியக்கிரகாரம்,சுங்கான் திடல், ஆலங்குடி,ஆத்தூர் போன்ற இடங்களில் பல,சிறு சிறு அரிசி அரைக்கும் ஆலைகள் இயங்கி வந்தன.அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், தத்தமது தேவைக்கேற்ப நெல் மணிகளைக் கொண்டு வந்து, அரைத்து அரிசியாக்கிக் கொண்டு செல்வார்கள் இவ்வகை அரிசி ஆலைகள் அனைத்திலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்று பெயர் எழுதப்பட்ட சாக்குப் பைகள் வைக்கப் பட்டிருக்கும். நெல் மணிகளை அரிசியாக்கிக் கொண்டு செல்லும் பொதுமக்கள்,அங்கு வைக்கப்பெற்றிருக்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சாக்குப் பைகளில், தங்களது அசிரியின் ஒரு பகுதியை அன்பளிப்பாக செலுத்திவிட்டுச்  செல்வார்கள்.
     கரந்தைத் தமிழ்ச் சங்கத் திக்கற்ற மாணவரில்லத்தின் ஈடு இணையற்ற, அப்பகுக்கற்ற சேவைக்கு, தஞ்சைப் பகுதி மக்கள் நேசப் பார்வையோடு, ஆதரவுக் கரம் நீட்டி, தங்களால் இயன்ற சிறு சிறு உதவிகளைச் செய்வதைப் பெருமையாய் கருதினர்.
சுந்தரராச நாட்டார் தமிழ்க் கல்வி அபிவிருத்தி தர்மம்
     சிறு வயது முதலே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வளர்ச்சிப் பணிகளையும், திக்கற்ற மாணவரில்லத்தின் சீரிய தொண்டினையும் நேரில் கண்டு மகிழ்ந்திருந்த சுந்தரராச நாட்டார் அவர்கள், தனது செல்வமும், சேவையும் சென்றடைய வேண்டிய இடம் கரந்தைத் தமிழ்ச் சங்கமே என்று முடிவு செய்தார்.
     1959 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் நாள், சுந்தரராச நாட்டார் தமிழ்க் கல்வி அபிவிருத்தி தருமம் எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவினார். தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும் புலவர் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்கட்கு இலவச உணவு அளிப்பதே இவ்வறக்கட்டளையின் நோக்கமாகும்.

      சுந்தரராச நாட்டார் அவர்கள், தாமே இந்த அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்து செயல்படுவது என்று முடிவு செய்தார். 22 ஏக்கர் 50 செண்ட் பரப்பளவு கொண்ட விளை நிலங்களை, அறக்கட்டளைக்காக எழுதி வைத்தார். இன்றைய தேதியில் இந்த சொத்துக்களின் மதிப்பு ரூபாய் நாற்பது இலட்சத்தினையும் தாண்டும். சுந்தரராச நாட்டார் அவர்களுக்கு எத்துனை பரந்து பட்ட மனமும், ஈகை குணமும், சேவை மனப்பான்மையும் இருந்திருக்கும் என்பதை ஒரு கணம் எண்ணினால் வியப்பே மிஞ்சும்.
     9.4.1961 முதல் பல்லாண்டுகள் கரந்தைத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினராக்வும் சுந்தரராச நாட்டார் அவர்கள் திறம்படப் பணியாற்றினார்.
     1970 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 21 ஆம் நாள் மேலும் 92 செண்ட் நிலத்தினை தனது அறக்கட்டளையில் சேர்த்து, கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும் திக்கற்ற மாணவர் இல்லத்தில் பயிலும் மாணவர்களுக்கு இலவச உணவு அளிப்பதற்காக வழங்கினார்.
    காட்சிக்கு எளியராய், பழகுதற்கு இனியராய் விளங்கிய சுந்தரராச நாட்டார் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு மேலும் ஏதாகினும் செய்திட வேண்டும் என்று எண்ணினார். கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும் திக்கற்ற மாணவர் இல்லத்திற்கு, நல்லதொரு கட்டிடத்தினைத் தனது வருவாயிலிருந்து, தானே முன்னின்று கட்டித் தருவது என்று தீர்மாணித்து செயலில் இறங்கினார்.
     கரந்தைத் தமிழ்ச் சங்க நுழைவு வாயிலின் இடது புறம்,ஏ.கே.வேலன் அவர்கள் தனது முதல் வருவாயிலிருந்து கட்டி அன்பளிப்பாக வழங்கிய அருணாசல நிலையக்கட்டிடத்திற்கும்,சங்க அலுவலகத்திற்கும் இடையே உள்ள இடத்தினைத் திக்கற்ற மாணவரில்லத்திற்காகத் தேர்வு செய்து, கட்டிடப் பணியினைத் துவக்கினார்.
     கட்டிடப் பணிக்குத் தக்க, கட்டுமானப் பணியாளர்களை நியமித்து, தானே மேற்பார்வைப் பணியினை மேற்கொண்டு, திக்கற்ற மாணவர்களுக்காக ஒரு புதிய கட்டிடத்தினைக் கட்டினார். சுட்டெரிக்கும் வெயிலினைப் பொருட்படுத்தாமல், இடையில் வேட்டியுடனும், தோளில் துண்டுடனும், மேற்சட்டையின்றி, கட்டிடப் பணியாளராகவே மாறி,கட்டிடத்தினை அங்கலம், அங்குலமாக பார்த்துப் பார்த்து உருவாக்கினார். ஓய்வு நேரங்களில், தமிழ்ப் பெரு மன்றத்தில், தலைக்கு இரு செங்கல் கற்களையேத் தலையணையாக்கி ஓய்வெடுப்பார்.
     எளிமை, எளிமை பழகுவதில் இனிமை,  இனிமை இவைகளையே தனது குணநலன்களாகப் பெற்றிருந்த சுந்தரராச நாட்டார் அவர்களால் ரூபாய் நாற்பது ஆயிரம் பொருட் செலவில் கட்டி முடிக்கப் பெற்ற கட்டிடத்திற்கு.
தென்னங்குடி நா.சுந்தரராச நாட்டார் அறநிலையக் கட்டிடம்
திக்கற்ற மாணவர் இல்லம்
எனப் பெயர் சூட்டப்பெற்றது.
அறநிலையக் கட்டிடத் திறப்பு விழாவில் நாவலர்
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மணி விழாவானது, 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பெரு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. விழாவின் இரண்டாம் நாளான 14.4.1973 சனிக்கிழமை மாலை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் தலைமையில், அன்றைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் மாண்புமிகு டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தென்னங்குடி நா.சுந்தரராச நாட்டார் அறநிலையக் கட்டிடத்தினைத் திறந்து வைத்து, தமிழ்ப் பெரு மன்ற மேடையேற, விழா தொடங்கிற்று.
     அன்றைய கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.தனக்கோடி பிள்ளை அவர்கள், விழாத் தலைவரையும், மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களையும், சொற்பொழிவாளர்களையும் வரவேற்றுப் பேசினார்.
     சங்கத் தலைவரின் உதடுகள், வரவேற்பிற்குரிய வார்த்தைகளை உதிர்த்தாலும், அவரது கண்ணும், மனமும் தமிழ்ப் பெருமன்ற  வாயிலையே நோட்டமிட்ட வண்ணம் இருந்தன. கரந்தைத் தமிழ்ச் சங்க மாணவர்களுக்காக தனது நிலங்களை அறக்கட்டளையாக எழுதிவைத்தவரும்,பெரும் பொருட்செலவில் திக்கற்ற மாணவரில்லத்திற்கானக் கட்டிடத்தினைத் தானே முன்னின்று கட்டி வழங்கியவரும், அன்றைய விழாவின் நாயகருமான சுந்தரராச நாட்டார் அவர்கள், அந்நேரம் வரை விழா அரங்கிற்கு வராததே காணரம் ஆகும். விழா முடியும் வரை சுந்தரராச நாட்டார் அவர்கள் வரவேயில்லை.
     எனது செல்வமும், எனது உழைப்பும் தமிழ் கற்கும் திக்கற்ற மாணவர்களின் வாழ்வை வளமாக்கப் பயன்படவேண்டும் என்பதே, எனது பிறப்பின் நோக்கமும், எனது கடமையுமாகும். கடமையைச் செயததற்காக, மேடையேறி பொன்னாடைபோர்த்திக் கொள்வதும், அதன் மூலம் விளம்பரம் தேடுவதும் எனக்குப் பிடிக்காதவை ஆகும். வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக்கூடாது என்று எண்ணுபவன் நான். எனக்கு ஏன் இந்தப் பாராட்டு? என்று கூறி கேள்வி கேட்டவரை வியப்பில் ஆழ்த்தினார்.
    
    உலக வரலாற்றிலேயே பாராட்டப் படுபவர் இல்லாமல் நடைபெற்ற பாராட்டு விழா இதுவாகத்தான் இருக்கும்.
      சுந்தரராச நாட்டார் அவர்கள் தனது அறக்கட்டளையின் அறங்காவலராக 24 ஆண்டுகள் பணியாற்றினார். முதுமை காரணமாக உடல் நிலை தளர்வுற்ற வேளையில், 1982 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் நாள், எனக்கு வயதாகிவிட்ட படியாலும், எனக்குப் பிறகு இந்த தர்ம சொத்துக்களைப் பராமரித்து வர டிரஸ்டிகளை நியமிக்க முடிவு செய்திருக்கிறேன் என தனது உயில் சாசனத்தில் பதிவு செய்து,
  1. வழக்கறிஞர் ஆர். கண்ணுசாமி ராசாளியார்
  2. திரு தி. கண்ணப்ப நாட்டார்
  3. திரு க.சண்முகசுந்தர நாட்டார்
  4. திரு மு. சாமிநாத புண்ணாக்கர்
  5. திரு தி. சரவணவேல் நாட்டார்
ஆகிய ஐவரையும் அறங்காலவர்களாக நியமித்தார். மேலும் மாணவர்களுக்குக் கட்டிடம் கட்டவும், புத்தக நிலையங்களை அபிவிருத்தி செய்யவும், மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கவும், ஆண்டு விழாக்களுக்கு நன்கொடை வழங்கவும், பள்ளிக்கு விஞ்ஞான அபிவிருத்திக்கு சாமான்கள் வாங்க உதவித் தொகை கொடுக்கவும் அறக்கட்டளை நிதியினைப் பயன்படுத்தலாம் என நெறிமுறைகளை வகுத்து வழிகாட்டினார்.

                மெய்வருத்தம்  பாரார்  பசி நோக்கார்  கண்துஞ்சார்
                எவ்வெவர்  தீமையும்  மேற்கொள்ளார் செவ்வி
                அருமையும்  பாரார்  அவமதிப்பும்  கொள்ளார்
                கருமமே  கண்ணாயி  னார்

எனும் பாடல் வரிகளுக்கேற்ப களைப்பு, அயர்ச்சி, தளர்ச்சி என எதனையும் பொருட்படுத்தாமல் ஓயாது, உறங்காது உழைத்தவர் தென்னங்குடி சுந்தரராச நாட்டார் அவர்களாவார்.

     ஏழை எளியவர்க்கு உணவிடும் உன்னதத் தொண்டினைச் செய்து வந்த பண்ணன் என்னும் குறுநில மன்னனை,

            பசிப்பிணி  மருத்துவன் இல்லம்
            அணித்தோ  சேய்த்தோ  கூறுமின் எனக்கே

என மூவேந்தருள் ஒருவனான கிள்ளிவளவன், பசிப்பிணி மருத்துவன் என்றழைத்துப் புகழ்ந்து பாடுவான். இந்தப் பண்ணனைப் போலவே, வாழ் நாளெல்லாம் ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும், திக்கற்ற மாணவர்களுக்கும், உணவு வழங்கிடும் உயர் சேவையினை இனிதே செய்து வந்த பெருவள்ளல் தென்னங்குடி நா. சுந்தரராச நாட்டார் அவர்கள், தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து, 1983 ஆம் வருடம் ஆகஸ்ட்டு மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக் கிழமை பொன்னுடம்பு துறந்து புகழுடம்பு பெற்றுத் தமிழோடு கலந்தார்.
                                                                  
                                                                                    என் வாழ்வும் 
                            என்  வளமும்
                            மங்காத  தமிழே  
                            என்றுரைத்து,
                            தமிழ்  தேடி  
                            கரந்தை  நாடிவரும்
                            திக்கற்ற மாணவர்க்கு 
                            பசிப்பிணி மருத்துவராய் 
                            வயிறார அன்னமிட்டு 
                            உயிர்காத்து
                            தமிழ் வளர்த்த 
                            வள்ளால் சுந்தரராச
                            வாழி நின்புகழ்
                            வாழிய  வாழியவே



தென்னங்குடி நா. சுந்தரராச நாட்டார்

புகழ் ஓங்குக...

 ---------------------------------------------------------


நன்றி  
திரு க.சண்முகசுந்தர நாட்டார்,   
              அறங்காவலர்,
சுந்தரராச நாட்டார் தமிழ்க் கல்வி அபிவிருத்தி தர்மம்




01 நவம்பர் 2011

இராமானுஜனை உயர்த்திய ஆங்கிலேயர்கள்


இராமானுஜன்
     இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கணித மேதையான சீனிவாச இராமானுஜன், தனது புதியத் தேற்றங்களை, தனது புதிய கண்டுபிடிப்புகளை, இவ்வுலகம் இனங்கண்டு தன்னை ஏற்காதா? அங்கீகரிக்காதா? பாராட்டாதா? என்று எண்ணி எண்ணி, ஏங்கி ஏங்கி ஆண்டுகள் பலவற்றைக் கழித்தவர் என்ற செய்தி பலருக்கு வியப்பைத் தரலாம்.

     தனது கணித நோட்டுக்களை எடுத்துக் கொண்டு, சென்னையில் இருந்த பல கணிதப் பேராசிரியர்களைச் சந்தித்தார். தனது கணித ஆர்வத்தினை, தனது புதிய கண்டுபிடிப்புகளை விளக்கினார். ஆனாலும் இவர்கள் இராமானுஜனின் ஆராய்ச்சியின் பெருமையினையும்,  திறமையின் அருமையினையும் உணராதவர்களாயிருந்தனர்.

நாராயண அய்யர்
    குடும்பத்திற்ககாகவும், தனது வயிற்றிற்காகவும் சென்னைத் துறைமுகக் கழகத்தில் சாதாரண எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். மாத ஊதியம் ரூபாய் முப்பது. சென்னைத் துறைமுகக் கழகத்தின் தலைவராக இருந்தவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் என்பவராவார். துறைமுகக் கழகத்தில் தலைமைக் கணக்கராகவும், ஸ்பிரிங் அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றவருமாகப் பணியாற்றி வந்தவர் எஸ். நாராயண அய்யர் என்பவராவார்.

     நாராயண அய்யர் இராமானுஜனுக்கு மேலதிகாரி மட்டுமல்ல. இந்தியக் கணிதவியல் கழகம் என்ற கணித அமைப்பின் பொருளாளராகவும் பணியாற்றி வருபவர். கணிதவியல் ஆர்வலர்.இராமானுஜனின் கணிதத் திறமையைக் கண்டு வியந்த நாராயண அய்யர் சிறிது காலத்திலேயே, இராமானுஜனின் மேலதிகாரி, உடன் பணியாற்றுபவர் என்ற நிலையிலிருந்து மாறி, இராமானுஜனின் நண்பராகவும் ஆலோசகராகவும் மாறிப்போனார். துறை முகக் கழகத் தலைவரான சர் பிரான்சிஸ் ஸ்பிரிங்கிடம் இராமானுஜன் பற்றியும் அவரது கணிதத் திறமைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.பிரான்சிஸ் அவர்களும் இராமானுஜனை சென்னையில் உள்ள அறிஞர்கள் சிலரிடம் அனுப்பி , இராமானுஜனின் கணிதத் திறமைகள் குறித்து கருத்துக்களைக் கேட்டார். ஆனால் இவர்களால் இராமானுஜன் திறமையானவனா? இல்லையா? என்ற முடிவிற்கு வரமுடியவில்லை.
நடுவில் அமர்ந்திருப்பவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங்
     சென்னையில் இருப்பவர்களால் இராமானுஜன் பற்றியோ அவரது திறமைகள் பற்றியோ கருத்துக்களைத் தெளிவாக கூற இயலாததால், சர் பிரான்சிஸ் ஸ்பிரிங், நாராயண அய்யர் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும், உதவியுடனும், இராமானுஜன் 1912 ஆம் ஆண்டின் இறுதியிலும் 1913 ஆம் ஆண்டின் துவக்கத்திலும், இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகக் கணித மேதைகளுக்கு  தனது கணிதக் குறிப்புகள் அடங்கிய கடிததை அனுப்பினார்.
     ஹென்றி ஃபிரட்ரிக் பேக்கர் என்பவருக்கு தனது முதல் கடிதத்தை அனுப்பினார். இ.டபிள்யூ.ஹப்சன் என்பவருக்கு  தனது இரண்டாவது கடிதத்தை  அனுப்பினார். இருவரிடமிருந்தும் பதிலில்லை. எனவே தனது மூன்றாவது கடிதத்தை ஜி.எச்.ஹார்டி என்பாருக்கு அனுப்பினார்.

      இராமானுஜனின் கடிதத்தைப் படித்த ஹார்டி தன் பல்வேறு அலுவல்களால் அக்கடிதத்தை மறந்து போனார். ஆனால் அக்கடிதத்தில் கண்ட கணக்குகள் அவ்வப்போது ஹார்டியின் மனக்கன் முன்னே வந்து சென்றது. எனவே இராமானுஜனின் கடிதத்தை மீண்டும் படித்த ஹார்டி, தனது நண்பரும் கணிதப் பேராசிரியருமான ஜான் ஏடன்சர் லிட்டில் வுட் என்பவரைச் சந்தித்தார். இருவரும் இராமானுஜனின் கணிதக் குறிப்புகளை ஆராய்ந்தனர்.மூன்று மணி நேரத்திற்குமேல் பரிசீலித்த இருவரும், தாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு கணித மேதையின் குறிப்புகள் தான் என்ற முடிவிற்கு வந்தனர்.

இ.எச்.நெவில்
          பிப்ரவரி மாதம் 8 ஆம் நாள் இராமானுஜனுக்குப் பதில் கடிதம் எழுதிய ஹார்டி,இராமானுஜன் உடனடியாக இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமாய் அழைப்பு விடுத்தார்.

           அய்யங்கார் வகுப்பைச் சார்ந்தவரான இராமானுஜன், தங்கள் சமூக விதிகளின் படி, கடல் கடந்து செல்லக் கூடாது என்பதால்,தான் இலண்டனுக்கு வர இயலாத நிலையில் இருப்பதை தெரிவித்தவர் ஒரு வேண்டுகோளினையும் முன்வைத்தார்.நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக முன்வைப்பதெல்லாம் ஒன்றுதான். நான் உண்ண  உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க, எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும், தாங்கள் கருணையோடு எழுதும் கடிதம் எனக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்தோ அல்லது  அரசாங்கத்திடம் இருந்தோ , கல்வி உதவித் தொகையினைப் பெற்றுத் தருமாயின், அதுவே தாங்கள் எனக்குச் செய்யும் பேருதவியாக அமையும் என்று எழுதினார்.

ஜி.எச்.ஹார்டி
     இதற்கிடையில் ஸ்பிரிங் அவர்களால் இராமானுஜனின் கணிதக் குறிப்புகள் கில்பர்ட் வாக்கர் என்பவரிடம் காட்டப்பெற்றன. கில்பர்ட் வாக்கர் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சிம்லாவில் இந்திய மெட்ரோலாஜிகல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருபவர். அலுவல் தொடர்பாக சென்னை வந்த கில்பர்ட் வாக்கரைத் தொடர்பு கொண்ட சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் இராமானுஜன் தொடர்பான செய்திகளைக் கூறி கணிதக் குறிப்புகளைக் காட்டினார்.அடுத்த நாளே கில்பர்ட் வாக்கர் சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளருக்குக் கடிதம் எழுதி, கணித ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இராமானுஜன், பொருளாதார தட்டுப்பாடின்றி ஆய்வினைத் தொடருவதற்கு உதவித் தொகை வழங்கி உதவிட வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தார்.

     கில்பர்ட் அவர்களின் வேண்டுகோளின்படி, சென்னைப் பல்கலைக் கழகம், கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.75 வழங்கத் தொடங்கியது.சென்னைத் துறைமுகக் கழகத் தலைவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்களும், இராமானுஜனுக்கு ஊதியத்துடன் கூடிய நீண்ட விடுமுறையை வழங்கினார்.

    இந்நிலையில் டிசம்பர் மாத இறுதியில் ஹார்டி மீண்டும் இராமானுஜனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கேம்ப்பிரிட்ஜ்  பல்கலைக்  கழகத்தைச் சார்ந்த கணிதப் பேராசிரியர் இ.எச்.நெவில் என்பவர் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னை வருவதாகவும், அவரை இராமானுஜன் அவசியம் சந்திக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதே சமயம் ஹார்டி நெவிலிடம் ஒரு முக்கியப் பணியை ஒப்படைத்திருந்தார். இராமானுஜனை சந்தித்து அவரை இலண்டன் வருவதற்கு எப்படியாவது சம்மதிக்க வைக்க  வேண்டும் என்ற பொறுப்பை அளித்திருந்தார்.

லிட்டில் வுட்
     நெவிலும் இராமானுஜனும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சந்தித்தனர்.அப்பொழுது நெவில் தாங்கள் தொடர்ந்து சென்னையிலேயே இருப்பீர்களேயானால், இலண்டனில் இருக்கும் என்னாலோ, தங்களின் அபாரதத் திறமையை நன்கு உணர்ந்து வைத்திருக்கும் ஹார்டியாலோ, தங்களுக்குப் பெரிய அளவில் உதவி செய்ய இயலாது. தாங்கள் இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வர இசைவு தெரிவிப்பீர்களேயானால், ஹார்டி உடனிருந்து உதவவும், தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை கணித இதழ்களில் வெளியிட்டு, தங்கள் திறமையை வெளி உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டவும் தயாராக உள்ளார். ஆகவே தாங்கள் எங்களது அழைப்பை ஏற்று இலண்டனுக்கு வர ஒப்புதல் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

     முதல் முறை அழைப்பு விடுத்த போது மறுத்த இராமானுஜன் இம்முறை இலண்டனுக்கு வருவதற்கு தன்னுடைய சம்மதத்தினைச் தெரிவித்தார்.

     இதனைத் தொடர்ந்து 1914 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 28 ஆம் நாள் பேராசிரியர் நெவில் அவர்கள், சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பிரான்சிஸ் டௌபரி என்பாருக்கு ஒரு கடிதம் எழுதினார்.அக்கடிதத்தில்,
கில்பர்ட் வாக்கர் 
இராமானுஜன் என்னும் கணித மாமேதை சென்னையில் இருக்கிறார் என்பதை கண்டு பிடித்த நிகழ்வானது, கணித உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய செய்தியாகும்.உலக வரலாற்றில் இராமானுஜன் பெயர் உன்னத இடத்தைப் பெறும் அதே நேரத்தில், இராமானுஜன் இலண்டன் சென்றுவர அவருக்கு உதவிய வகையில் சென்னையும், சென்னைப் பல்கலைக் கழகமும் பெருமைப் படலாம் என்று எழுதி நிதி உதவி கோரினார்.

     சென்னைப் பல்கலைக் கழகமும் இராமானுஜன் இலண்டன் சென்று ஆராய்ச்சியில் ஈடுபட ஆண்டுக்கு 300 பவுண்ட உதவித் தொகையினை வழங்கியது.

இராமானுஜனின் கடிதம்
    
     1914 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் இலண்டனில் இராமானுஜன் கால்பதித்தார். ஐந்தாண்டுகள் இலண்டனில் தங்கி, இதுவரை எந்த இந்தியரும் தொடாத சிகரத்தைத் தாண்டியவர் என்ற சாதனையுடன் இராமானுஜன் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் நாள் இலண்டனிலிருந்து புறப்பட்டு கப்பலில் தாயகம் திரும்பினார்.

     ஆங்கிலேயர்களின் ஆர்வமும் உதவியுமே,  இராமானுஜன் என்ற மிகப் பெரிய கணித மாமேதையினை இவ்வுலகிற்கு  வெளிச்சமிட்டுக் காட்டியது.

வாழ்க இராமானுஜன் புகழ்
.......................................

கணித மேதை சீனிவாசஇராமானுஜன் பற்றி ஹாலிவுட் திரைப்படம் 

 ரோஜர் ஸ்பாட்டிஸ் வூட்
           ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட திரைப்படமான Tomorrow Never Dies  எனும் திரைப்படத்தினை இயக்கியவர் ரோஜர் ஸ்பாட்டிஸ் வூட் என்பவராவார். இவர் தற்சமயம் சீனிவாச இராமானுஜன் பற்றிய திரைப்படம் ஒன்றினை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படத்தின் பெயர் The First Class Man என்பதாகும். இத்திரைப்படம் இராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமல்ல.
       இராமானுஜனின் திறமைகளை முதன் முதலில் கண்டடுபிடித்து, பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து, இராமானுஜனை இலண்டனுக்கு வரவழைத்த பெருமைக்குரியவர் பேராசிரியர் ஜி.ச்.ஹார்டி அவர்களாவார். ஐந்து ஆண்டுகள் இராமானுஜனின் உடனிருந்து, இராமானுஜனின் ஆய்வுத் தாட்களை, கண்டுபிடிப்புகளை உலகின் பார்வைக்குக் கொண்டு சென்று, இராமானுஜன் உலகப் புகழ் பெறக் காரணமாக விளங்கியவர் ஜி.எச்.ஹார்டி. இராமானுஜன் மற்றும் ஹார்டி இருவரின் நட்பை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.
     கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகதில் நடைபெற்ற விழா ஒன்றில், இராமானுஜனை அறிமுகப்படுத்தும் பொழுது ஹார்டி உச்சரித்த வார்த்தைகளே The First Class Man என்பதாகும். இதே தலைப்பில் திரைப்படம் தயாராகவிருக்கின்றது.
                                                                                                                                                                                                                                    .................நன்றி The Hindu 16.10.2011
 


                                                                                                                                           .......நன்றி  The Hindu, Sunday,6.11.2011