இன்று
22.12.2012
கணிதமேதை சீனிவாச இராமானுஜனின்
125 வது பிறந்த நாளாகும்.
.
இராமானுஜனின் குறுகிய கால வாழ்வும், மரணமும்
இந்தியாவின் நிலையினைத் தொளிவாகக் காட்டுகிறது. கோடிக் கணக்கான இந்தியர்களுள்
சிலருக்கே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. வறுமையின் பிடியில் சிக்கி, உண்ண
உணவின்றி, பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு உண்ண உணவும், கற்க கல்வி வசதியும்
ஏற்படுத்தப் படுமேயானால், இந்தியாவில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள்,
மருத்துவர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில் நுட்ப
வல்லுநர்கள் இலட்சக் கணக்கில் தோன்றி புதிய பாரதத்தைப் படைப்பார்கள் என்பது உறுதி.
Discovery of India எனும் தன் நூலில் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித
ஜவகர்லால் நேரு
----------------.-------------------------
கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச்
செய்து, வரலாற்றில் குறிப்பிடத் தக்க ஒரு இடத்தைப் பெற்ற பிறவி கணித மேதை
இராமானுஜன்.
-இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி.
--------------------------
கணித நூல் வரலாற்றிலேயே மிகப் பெரிய கணித மேதைகளுள்
ஒருவராக இராமானுஜன் பெயர் திகழும்.
- பேராசிரியர்
நெவில்
-----------------------------------
இராமானுஜன் ஒரு சுயம்பு
-
பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி
----------------------------------------------------
இராமானுஜனின் நினைவினைப் போற்றும்
வகையில்
டிசம்பர் 22 ஆம் நாளினை
கணித நாளாக அறிவிக்கின்றேன்.
மேலும் 2012 ஆம் ஆண்டினை
கணித ஆண்டாக அறிவிக்கின்றேன்.
-மாண்புமிகு பாரதப் பிரதமர் டாக்டர்
மன்மோகன் சிங்
------------------------------------------------------------
இந்நன் நாளில்
கணிதமேதை சீனிவாச இராமானுஜனின்
நினைவினைப் போற்றுவோம்
--------------------------------------------
காலை 10 மணியளவில் இராமானுஜனை, அட்வகேட்
ஜெனரல் சீனிவாச அய்யங்கார் அவர்கள் அரசு மரியாதையுடன் வழியனுப்பினார். பேராசிரியர்
மிடில் மாஸ்ட், சர் பிரான்சிஸ் ஸ்பிரிங், முன்னோடி நீதிபதிகள், இந்து
பத்திரிக்கையின் பதிப்பாளர் கஸ்தூரி ரங்கன் அய்யங்கார் போன்றோர் வழியனுப்ப
வருகை தந்திருந்தனர். இவர்களுடன் கலங்கிய கண்களுடன் நாராயண அய்யரும்
நின்றிருந்தார். தானும் இராமானுஜனும் இணைந்து, பல மாதங்கள் தொடர்ந்து,
சிலேட்டுகளில் கணித ஆராய்ச்சி செய்ததன் நினைவாக, இப் பயணத்திற்கு முதல் நாள்,
இராமானுஜனை அணுகி, இராமானுஜன் இவ்வளவு காலம் பயன்படுத்திய சிலேட்டை நினைவுப்
பரிசாகப் பெற்றுக் கொண்டு, தனது சிலேட்டை இராமானுஜனுக்குக் கொடுத்திருந்தார்.
--------------------------------------------
அத்தியாயம் 11
----------------------------.----------------------------------------------------------------------
இராமானுஜனின் முக்கியக் கவலை,
இலண்டனில் சைவ உணவுகள் கிடைக்குமா என்பதும், தன் விரதத்திற்குப் பங்கம் வராமல்
இருக்க வேண்டுமே என்பதும்தான்.
----------------------------------------------------------------
சென்னைத் துறைமுகக் கழகத் தலைவர் சர்
பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்கள், சென்னை மாகாணக் கவர்னர் லார்ட் பெணட்
அவர்களின் தனிச் செயலாளர் சி.பி. காட்டெரல் அவர்களுக்கு ஒரு கடிதம்
எழுதினார். அக்கடிதத்தில், இன்னும் ஒருசில நாட்களில், மாண்பமை கவர்னர்
அவர்களின் ஒப்புதலுக்காக, வைக்கப்பெற இருக்கின்ற கருத்துருக்கள் பற்றிய என்
ஆர்வத்தினையும், வேணடுகோளினையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர
விரும்புகின்றேன். எனது அலுவலகத்தில், எழுத்தராகப் பணியாற்றும், கணிதப் புலமை
மிக்க எஸ். இராமானுஜன் பற்றி தங்களிடம் முன்னரே கூறிய தகவல்கள் தங்களுக்கு
நினைவிருக்கும் என நம்புகிறேன்.
இராமானுஜன் இலண்டன் சென்று கணித
ஆராய்ச்சியில் ஈடுபட, சென்னைப் பல்கலைக் கழகமானது, இரண்டு ஆண்டுகளுக்கு 600
பவுண்ட் தொகையினை வழங்கிட முன் வந்துள்ளது. இம்முடிவு செயலாக்கம் பெறுவதற்குத் தாங்கள்
உதவிட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன். என்று
எழுதினார்.
சில நாட்களிலேயே சர் பிரான்சிஸ்
அவர்களுக்கு, சென்னை மாகாணக் கவர்னரின் தனிச் செயலாளரிடமிருந்து பதில் கடிதம்
வந்தது.
மாண்பமை கவர்னர்
அவர்கள் தங்களின் விருப்பத்தினைக் கருனையோடு பரிசீலித்து, இராமானுஜனுக்கு வேண்டிய
உதவிகளை மகிழ்வுடன் செய்திட ஒப்புதல் வழங்கியுள்ளார் என்ற செய்தியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இராமானுஜன் கல்வி உதவித் தொகையினைப்
பெறுவதில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கின.
கடற் பயணம்
1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் நாள்
இராமானுஜன், தனது இரண்டாம் வகுப்புப் பயணச் சிட்டினைப் பெற்றார்.
மார்ச் 11 ஆம் நாள் சர் பிரான்சிஸ் அவர்கள்,
கப்பலின் முகவர்களுக்குக் கடிதம் எழுதி, பயணம் முழுமையும் இராமானுஜனுக்கு சைவ உணவு
வழங்க ஏற்பாடு செய்யுமாறு வற்புறுத்தினார்.
இராமானுஜன் இலண்டனுக்குப் புறப்படும் முன்
தனது தாயாரையும், மனைவியையும், மார்ச் 14 ஆம் நாள் ரயில் மூலம் கும்பகோணத்திற்கு
அனுப்பி வைத்தார். தான் பயணம் தொடங்கும் முன்னரே அவர்களை அனுப்பி வைக்க ஒரு
முக்கியமான காரணம் இருந்தது. இதுநாள் வரை தலையில் குடுமியுடன், வேட்டி,
சட்டையில் வலம் வந்த இராமானுஜன், இலண்டன் பயணத்தை முன்னிட்டு, குடுமியை அகற்றி
கிராப் தலைக்கும், வேட்டி, சட்டையிலிருந்து, பேண்ட், கோட்டிற்கும் மாற வேண்டி
இருந்தது.
இலண்டன் பயணம் மேற்கொள்வதற்கு சில
நாட்களுக்கு முன்னாள், கோமளத்தம்மாள் கோவிலுக்குச் சென்றிருந்த நேரத்தில், ஜானகி
இராமானுஜனிடம், இலண்டனுக்குத் தன்னையும் உடன் அழைத்துச் செல்லுமாறு வேண்டினார்.
ஆனால் ஜானகி வயது மிகக் குறைந்தவராக இருப்பதையும், இலண்டனுக்கு அழைத்துச்
சென்றால், தன்னால் முழுமையாக கணிதத்தில் கவனம் செலுத்த இயலாது என்றும் கூறி
மறுத்தார்.
தனது குடும்பத்தை கும்பகோணத்திற்கு அனுப்பிய
பின், தனது குடுமியை நீக்கி, மேற்கத்திய கிராப் வைத்துக் கொண்டார். சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில்,
இராமானுஜனுக்கு உதவித் தொகை வழங்குவதை எதிர்த்து., பின்னர் இராமானுஜனின்
திறமைகளைக் கண்டு வியந்து, இராமானுஜன்
இலண்டன் செல்வதற்கு நிதி வழங்குமாறு, பல்கலைக் கழகப் பதிவாளரை
வற்புறுத்திய, லிட்டில் ஹெயில்ஸ் அவர்களே, தனது இரு சக்கர மோட்டார்
சைக்கிளில், வண்டியுடன் இணைந்திருந் பெட்டியில், இராமானுஜனை உட்கார வைத்து துணிக்
கடைகளுக்கு அழைத்துச் சென்று, தேவையான உடைகளை வாங்கிக் கொடுத்தார்.
சில நாட்கள் இராமச்சந்திர ராவ் அவர்களின்
மேற்கத்திய நண்பர் வீட்டில் தங்கி, கரண்டிகளைப் பயன்படுத்தி, உணவு உண்ணுவது
எவ்வாறு என்று பழகிக் கொண்டார். இராமானுஜனின் முக்கியக் கவலை, இலண்டனில் சைவ
உணவுகள் கிடைக்குமா என்பதும், தன் விரதத்திற்குப் பங்கம் வராமல் இருக்க வேண்டுமே
என்பதும்தான்.
1914 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி,
சென்னைத் துறைமுகத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது எஸ்.எஸ். நேவேஸா கப்பல்.
நேவேஸா கப்பல் |
Director of Public Instruction ஜெ.எச்.
ஸ்டோன் வந்திருந்து இராமானுஜனை வாழ்த்தினார். இலண்டனில் உள்ள தன்
நண்பர்களுக்கு, இராமானுஜன் வருகை குறித்துக் கடிதம் எழுதியுள்ளதாகவும், அவர்கள்
வேண்டிய உதவிகளைச் செய்வார்கள் என்றும் உறுதியளித்தார்.
இராமானுஜனின் பயணம் குறித்த ஹிந்து நாளிதழ் செய்தி |
கப்பலில் இராமானஜன் சந்தித்தவர்களுள்
முக்கியமானவர் மருத்துவர் முத்து என்பவராவார். இவர் காசநோய் சிறப்பு
மருத்துவர்.
அனைவரும் உற்சாகத்துடன், சாதனைகள் பல
நிகழ்த்தச் செல்லும் இராமானுஜனுக்கு ஆரவாரமாக விடை கொடுத்தனர். இராமானுஜன் மட்டும்
கலங்கிய கண்களுடன் கப்பலில் ஏறினார்.
கப்பலின் கேப்டனைச் சந்தித்தார் இராமானுஜன்.
தன்னுடன் கணிதம் பற்றி விவாதிக்காதவரை, இராமானுஜனுக்கு வேண்டிய சகல உதவிகளையும்
செய்யத் தயாராக இருப்பதாக நகைச்சுவையுடன் கூறினார்.
1914 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் காலை
10 மணியளவில், இராமானுஜனைத் தாங்கியபடி, நேவேஸா என்னும் கப்பல் சென்னைத்
துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
சென்னையில் இருந்து புறப்பட்ட கப்பல் தனது
பயணத்தின் முதல் பகுதியாகக் கொழும்புவைச் சென்றடைந்தது. மார்ச் 19 ஆம் நாள்
கொழும்புவிலிருந்து புறப்பட்ட கப்பல், அரபிக் கடல் வழியாகத் தன் பயணத்தைத்
தொடர்ந்தது.
கடல் பயணத்தின் போது இராமானுஜனின் உடல் நிலை
பாதிக்கப் பட்டாலும், இரண்டு நாளில் உடல் நலம் பெற்று பயணத்தை ரசிக்கத்
தொடங்கினார். கப்பல் சூயஸ் கால்வாயைச் சென்றடைந்தவுடன், இந்தியாவுக்கு நான்கு
கடிதங்கள் எழுதினார். ஒரு கடிதத்தை விஸ்வநாத சாஸ்திரிக்கும், ஒரு கடிதத்தை இராமச்சந்திர
ராவின் மைத்துனர் கிருட்டின ராவிற்கும், ஒரு கடிதத்தை தனது தாயாருக்கும், ஒரு
கடிதத்தை நாராயண அய்யருக்கும் எழுதினார்.
சென்னையிலிருந்து புறப்பட்ட நேவேஸா
கப்பல் 27 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, ஏப்ரல் 14 ஆம் நாள் இலண்டனைச்
சென்றடைந்தது.
.... வருகைக்கு நன்றி நண்பர்களே.
மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.
--------------------------------
கணிதமேதை சீனிவாச இராமானுஜன்
அவர்களைப்
பற்றிய
Letters from an Indian Clerk
Letters from an Indian Clerk
குறும்
படத்தினைக் காண,
கீழே உள்ள
இணைப்பை செலக்ட் செய்து, ரைட் கிளிக் செய்யுங்கள். இராமானுஜன் பற்றி,அவரது மனைவி
திருமதி ஜானகி
அம்மையார்
கூறுவதைக்
கேளுங்கள்.
இணைப்பு
http://mathtrail.heymath.com
http://mathtrail.heymath.com
வாழ்க இராமானுஜன்
வளர்க இராமானுஜன் புகழ்