12 ஜூன் 2014

மால்குடி


     
இலண்டன். ஆண்டு 1934. நன்றாக மழை பெய்து கொண்டருக்கிறது. வீட்டிற்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார் அவர். எழுத வேண்டிய வேலை நிரம்ப இருக்கிறது. ஆனாலும் காலையில் இருந்தே அவர் மனம், ஏனோ வெறுமையாய் இருந்தது.

     நடந்து, நடந்து அலுத்தவர் நாற்காலியில் அமர்கிறார். மேசையில் புத்தகங்கள், மூலையில் ஒரு பழைய காகிதக் கட்டு. இது என்ன? யோசித்தவாரே, அந்தக் காகிதக் கட்டினைக் கையில் எடுத்துப் புரட்டுகிறார். மணி மணியான எழுத்துக்கள், பக்கத்துக்குப் பக்கம்.


     யாருடைய கதை இது? ஓ, நமது நண்பர் கிட்டு பூர்ணா கொடுத்ததல்லவா இது? அவருடைய நண்பர் எழுதிய கதை என்று சொன்னாரே? வாங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. படித்துத்தான் பார்ப்போமே.

     முதல் பக்கத்தைப் படித்தார், இரண்டாம் பக்கத்தைப் படித்தார், பின்னர் மூன்றாவது, நான்காவது ....அதன் பிறகு, அவரால், அந்தப் பழையக் காகிதக் கட்டினை கீழே வைக்கவே முடியவில்லை.

     கொஞ்சம், கொஞ்சமாய் அந்தக் கட்டு அவரை இறுகப் பற்றிக் கொண்டது. படிக்கப் படிக்கப் பரவசம், பிரமிப்பாய் மாறுகிறது. என்ன ஒரு மொழி நடை? ஆங்கிலத்தில் இத்துனை எளிமையாக, புத்துணர்ச்சிப் பொங்கும் எழுத்தைப் பார்த்து எத்தனை ஆண்டுகளாகிவிட்டது. கதை முழுவதையும் படித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைத்தார்.

ஹென்றி கிரஹாம் கிரீன்
நண்பர்களே, படித்துப் பரவச நிலையில் அமர்ந்திருப்பவர், சாதாரண மனிதரல்ல. ஹென்றி கிரஹாம் கிரீன். உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர், நாடக ஆசிரியர், இலக்கிய விமர்சகர்.

     மால்குடி சென்றால் அடுத்து, நான் யாரைச் சந்திப்பேன்? கதையின் கடைசி பக்கத்தை படித்து முடித்தவுடன், என் மனதில் தேன்றிய எண்ணம் இதுதான். அடுத்த கதைக்காக, நான் காத்திருக்க விரும்பவில்லை. இப்பொழுதே என் வீட்டின் கதவைத் திறந்து கொண்டு, வெளியே சென்று, புழுதி படிந்த, மால்குடித் தெருக்களில் நடக்க விரும்புகிறேன். வங்கி, திரையரங்கு, முடி வெட்டும் சலூன் கடை என கடந்து, நடந்து, எதிரே வரும் அறிமுகமில்லாத மனிதரின் எதிர்பாராத வரவேற்பு வார்த்தைகளில், மயங்கி ஒரு புதிய உலகைக் காண விரும்புகிறேன்.
    
கிட்டூ பூர்ணா
கிரஹாம் கிரீன் உடனடியாகத் தனது நண்பர் கிட்டு பூர்ணாவை அழைத்தார். யாருடைய கதை இது? இத்தனை நாளாக இவர் எங்கே இருக்கிறார்? இதுவரை எத்தனை கதைகள் எழுதியிருக்கிறார்? இவர் கதையில் வருகிறதே, ஒரு கிராமம், மால்குடி, அக் கிராமம் உண்மையிலேயே இருக்கிறதா? கேள்விகளை மூச்சுவிடாமல் அடுக்கிக் கொண்டே போகிறார்.

      இந்தியாவில், மைசூருக்கு அருகில் இருக்கும், எனது நண்பர் எழுதிய கதைதான் இது. ஆனால் இவர் எழுதிய அனைத்தையும், பதிப்பகங்கள், இன்று வரை திருப்பி அனுப்பிக் கொண்ட இருக்கின்றன.

     கவலைப் படாதே பூர்ணா, இந்த அற்புத எழுத்துக்கள் அச்சு ஏறவேண்டியவை. உலகை வலம் வர வேண்டியவை. நான் பார்த்துக் கொள்கிறேன். எனக்குத் தெரிந்த பதிப்பாளரிடம் சொல்லி, புத்தகமாக வெளிவர உடனே ஏற்பாடு செய்கிறேன்.

      பூர்ணா மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

முக்கியமான கேள்வியை கேட்க மறந்துவிட்டேனே? இக் கதையை எழுதியவரின் பெயர் என்ன?

நாராயண சுவாமி

வாசகர்களின் மனதில் பெயர் பதிய வேண்டும் அல்லவா? கொஞ்சம் பெயரை மாற்றலாமா?

தாராளமாக.

இவரது ஊர் பெயர் என்ன?

ராசி புரம்

தந்தையின் பெயர்

கிருஷ்ண சுவாமி அய்யர்

ராசிபுரம் என்பதற்காக R. கிருஷ்ண சுவாமிக்காக K, நாராயண சுவாமியை நாராயண் எனச் சுருக்குவோம்.

R.K. Narayan

     நண்பர்களே, இப்பொழுது புரிகிறதா இவர் யாரென்று?


ஆர்.கே.நாராயண் சென்னையில் பிறந்தவர். சென்னையில் பயின்றவர். இவரது தந்தை ஒரு தலைமையாசிரியர்.

     இவரது தந்தை மைசூர் மகாராஜா உயர் நிலைப் பள்ளிக்கு மாறுதல் செய்யப் பட்டபோது, நாராயண் வசிப்பிடமும், மைசூராக மாறியது.

     நண்பர்களே, ஆர்.கே.நாராயண் அவர்களும் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றியவர்தான். ஒரு முறை பள்ளித் தலைமை ஆசிரியர் இவரை அழைத்து, உடற் கல்வி ஆசிரியர் சில நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளார், அவர் வரும் வரை, நீங்கள் உடற்கல்வி ஆசிரியரின் பணியினையும் செய்ய வேண்டும் என ஆணையிட்டார்.

     உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்ற என்னால் முடியாதய்யா? என எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கு ஒரு பெரிய வணக்கம் போட்டுவிட்டுக் கிளம்பியவர்தான், மீண்டும் பள்ளியின் பக்கமே செல்லவில்லை.

நாராயண் வீடு
எனக்குப் பிடித்த பணி எழுதுவதே. இனி முழு நேரமும் எழுதப் போகிறேன். வேலைக்குச் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே எழுதப் போகிறேன் என முடிவெடுத்து எழுதத் தொடங்கினார்.

     இவர் ஆங்கிலத்தில் கதைகள் எழுதிப் பதிப்பகங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார். பதிப்பகங்கள் திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தன.

      நாராயணனின் நெருங்கிய நண்பர் கிட்டு பூர்ணா. பதிப்பகங்கள் திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்ததால், விரக்தி அடைந்த நாராயண், ஒரு நாள் கிட்டுவை அழைத்து, கிட்டு, இந்த நாவலால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை. பேசாமல் இதில் ஒரு கல்லைக் கட்டி, ஆற்றில் தூக்கிப் போடு என்றார்.

     கிட்டு அந்த நாவலைத் தூக்கிக் கொண்டு போனார். ஆனால் ஆற்றில் போடவில்லை. கிரஹாம் கிரீன் மேசையில் போட்டார். கிட்டு ஏற்கனவே கிரஹாம் கிரீனுக்கு அறிமுகமானவர். நாராயண சுவாமியின் எழுத்துக்கள் அவருக்கு நிச்சயம் பிடிக்கும் என்று தோன்றியது. எனவே கதையை கிராகாமிடம் கொடுத்தார்.

     இதோ பலன் கிடைத்து விட்டது.

சுவாமியும் நண்பர்களும் ( Swami and Friends )
ஆர்.கே.நாராயணின் முதல் நாவல், 1935 ஆம் ஆண்டு வெளிவந்தது.

    

மால்குடி என்னும் கற்பனை ஊரை மையமாய் வைத்து எழுதப் பட்ட கதை. இக்கதை மட்டுமல்ல, அடுத்து வந்த நாராயணின் படைப்புகளும், மால்குடியையும், அங்கு வாழும் கற்பனை மனிதர்களையும், ரத்தமும் சதையுமாய் உலகிற்கு அறிமுகப் படுத்தியது.

       ஆர்.கே.நாராயணின் எளிய மொழி. அதில் தெரியும் இந்தியாவின் அழகு முகம். அதுநாள் வரை யாருமே காட்சிப் படுத்தாத, அற்புத எழிலோவியம் அது.

      பிரிட்டீஸ் வாசகர்கள், ஆர்.கே நாராயணின் எழுத்தில் மயங்கித்தான் போனார்கள். அதுவரை எழுத்தாளர்கள், இந்தியாவைப் பற்றித் தீட்டியிருந்த, மாய ஓவியங்களை எல்லாம் அழித்து, மாற்றி, இந்தியா பற்றிய ஒரு யதார்த்தப் பார்வையை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் ஆர்.கே.நாராயன்.

     இந்திய அரசின் பத்ம விபூஷன், சாகித்திய அகாடமி விருது, இலண்டன் ராயல் சொஸைட்டியின் ஏ.சி.பென்சன் மெடல் முதலிய விருதுகளைப் பெற்ற நாராயண், தனது 94 ஆம் வயதில், தன் கற்பனையூரான மால்குடியைத் தேடிப் பறந்து சென்றார்.

ஆர்.கே.நாராயண் அவர்களின்

நினைவினைப் போற்றுவோம்