20 ஜூன் 2014

ஒரு வருத்தம், ஒரு மகிழ்ச்சி, ஒரு நெகிழ்ச்சி, ஒரு சந்தேகம்


நண்பர்களே, வணக்கம். நலம்தானே. கடந்த ஆறு நாட்களாக வலைப் பக்கமே வர இயலாத நிலை. பள்ளிக்குச் சென்றும் ஐந்து நாட்களாகி விட்டது. காரணம் மனைவியின் உடல் நலக் குறைவு. சிறுநீரகக் கல்லால், பெரும் வேதனையினை என் மனைவி சந்தித்திருக்கிறார்.

     நண்பர்களே, என் மனைவியின் துயர் குறித்து பகிர்வதற்காக இப்பதிவினை எழுதவில்லை. இவ்வாரத்தில், என்னால் ஒரு பதிவருக்கு ஏற்பட்ட வருத்தம், வருத்தம் மறைந்தமையால் ஏற்பட்ட மகிழ்ச்சி, மற்றொரு மூத்த பதிவர், இந்த எளியேன் மேல் காட்டிய அன்பால் ஏற்பட்ட நெகிழ்ச்சி, மருத்துவச் சோதனைகள் குறித்த ஓர் சந்தேகம், இவற்றைப் பரிமாறிக் கொள்ளவே இப்பதிவு.


     கடந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் (15.6.2014) என் மனைவிக்கு, இடுப்புப் பகுதியில் வலி சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கியது. முந்தைய கால, அனுபவத்தால், சிறுநீரகக் கல்லால் ஏற்பட்ட வலிதான் என்பதை உணர்ந்தோம்.

     அன்று மதியம் முதல் இரவு 10.00 மணிவரை மருத்துவமனையில் இருந்தோம். பல்வேறு ஊசிகள், பல பாட்டில் மருந்துகள் நரம்பின் வழியாக உடலுக்குள் செலுத்தப் பட்டன.

       நண்பர்களே, நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, வலைப் பூவில் எழுதி வருவது தங்களுக்குத் தெரிந்ததுதான். வாழ்வு என்றாலே, பல்வேறு ஏற்ற இறக்கங்களும், சோதனைகளும், வருத்தங்களும் நிரம்பியதுதானே?. வாழ்வின் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, அல்லது தற்காலிகமாக மறக்க, பலரும் பல்வேறு வழிகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.

     சிலர் புகையிலையின்  பாதையில் பயணிப்பார்கள், பலர் மதுவின் போதையில் தள்ளாடுவார்கள். நான் தேர்ந்தெடுத்த வழியோ, வலைப் பூ என்னும் அன்பும், உறவும் கலந்து வழிந்தோடும் ஒரு மலர்ப் பாதை. எனது துயரங்களை, வருத்தங்களை, வேதனைகளை, வலைப் பூ என்னும் இக் கணினிக் கங்கையில் மூழ்கித்தான் போக்குகின்றேன்.
    

எனக்கு ஒரு பேராசை. எனது பதிவினை அதிக நண்பர்கள் படிக்க வேண்டும் என்று. அதற்காக, எனக்குக் கிடைக்கும் அன்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளை எல்லாம், சேமித்து வைத்து, ஒவ்வொரு பதிவின் போதும், மின்னஞ்சல்களை அனுப்புவது வழக்கம். உங்களுக்குக் கூட எனது மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கிறதல்லவா?


     என்னைப் போலவே, வலைப் பூவில் எழுதும் நண்பர்கள் பலரும், எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்புகிறார்கள். அவ்வாறு நண்பர்களிடம் இருந்து பெறப்படும் மின்னஞ்சல்களில், அவர்கள் வேறு யார் யாருக்கெல்லாம், மின்னஞ்சல்கள் அனுப்பியிருக்கிறார்கள் என்று பார்த்து, அம் மின்னஞ்சல் முகவரிகளையும் சேகரித்து, சேமித்து, அவர்களுக்கும் எனது பதிவுகள் குறித்து மின்னஞ்சல்களை அனுப்புவேன்.

       இது ஒரு சரியான வழிதானா என்று எனக்குத் தெரியவில்லை. நமக்கு அறிமுகமில்லாதவர்களுக்கு, நம்மைப் பற்றித் தெரியாதவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறோமே, அதை அவர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று, இதுவரை ஏனோ நினைத்ததில்லை. முன்பே சொன்னது போல், எனது பேராசை என்னைச் சிந்திக்க விடவில்லை.

       இதுவரை யாரும், எனது மின்னஞ்சல்களுக்கு மறுப்புத் தெரிவித்ததும் இல்லை, வருந்தியதும் இல்லை.

       நண்பர்களே, கடந்த ஞாயிரன்று இரவு, நானும் மனைவியும், மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பி, களைத்துப் போய், படுக்கையில் விழுந்து, கண் விழித்து எழுந்த போது, மறுநாள் காலை 5.00 மணி. அலைபேசியில் எனக்காக ஒரு குறுஞ்செய்தி காத்திருந்தது.

Urgent, contact me or see my email message – T. Thamizh Elango

        குறுஞ்செய்தி வந்த நேரத்தினைப் பார்த்தேன். இரவு மணி 11.41. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.

       அதிகாலை 5.00 மணிக்கு, அலைபேசியில் அழைத்து அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனவே கணினிக்கு உயிரூட்டி, மின்னஞ்சலைப் பார்த்தேன்.

      எனது மின்னஞ்சல் அனுப்பும் முறைக்கு, ஒரு பதிவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவலை அறிந்தேன். அப்பொழுதுதான் கவனித்தேன், அப்பதிவரிடம் இருந்தும், எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருப்பதை.

      உடனே அப்பதிவருக்கு வருத்தம் தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். என் பதிவுகள் பற்றிய மின்னஞ்சல் தங்களுக்கு, இடையூறாக இருந்திருக்குமாயின், வருந்துகிறேன். இனி எனது மின்னஞ்சல், தங்கள் கணினி நாடி வாராது. தொந்தரவிற்கு வருந்துகிறேன்.


காலை 6.00 மணிக்கு மேல், மூத்த பதிவர் பாசமிகு திரு தி.தமிழ்  இளங்கோ அவர்களைத் தொடர்பு கொண்டு, வருத்தம் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியதைத் தெரிவித்தேன். மேலும் ஐயா அவர்களுக்கு நன்றியும் கூறினேன்.

     என் மனைவியின் வலியோ குறைந்தபாடில்லை. எனவே எனது மனைவியை, திங்கட்கிழமை, தஞ்சையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சேர்த்தேன். வியாழன் அன்று இரவுதான் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பினோம். இதனால்  வலைப் பூ என்னும் வாசம் மிகு நந்தவனத்தில் உலாவ முடியாத நிலை.

      18.6.2014 புதன் கிழமை பிற்பகல், மருத்துவ மனையில் இருந்தவாறு, அலைபேசியில், அன்று வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்த்தேன். மீண்டும் திரு தி. தமிழ்  இளங்கோ அவர்களிடம் இருந்து ஒரு மின்னஞ்சல்.

      எனது மின்னஞ்சல் தொடர்பாக, வருத்தம் தெரிவித்திருந்தப் பதிவர், மனம் மாறி, தான் எழுதிய பதிவு குறித்து வருத்தம் தெரிவித்து, ஒரு பதிவு எழுதியிருப்பதாக மின்னஞ்சல் கூறியது.

      கடந்த மூன்று நாட்களாக மனதில் இருந்த வருத்தம், அப்பொழுதுதான் அகன்றது. ஒரு பதிவராய் இருந்து கொண்டு, மற்றொரு பதிவரை, வருத்தமடையச் செய்துவிட்டோமே, என்று நெஞ்சை நெருடிக் கொண்டே இருந்த கவலை, காற்றோடு காற்றாய் கரைந்து போனது.

       அன்று மாலை, சிறிது நேரம் வீட்டிற்கு வந்த நான், கணினியில், அப்பதிவரின் வலையில், மகிழ்ச்சி தெரிவித்துக் கருத்துரை இட்டேன். கடந்த ஐந்து நாட்களில், நான் படித்த, கருத்துரையிட்ட பதிவு, இப்பதிவு மட்டும்தான்.

கண்களும் ஒளியும் போலக்
     கவின்மலர் வாசம் போலப்
பெண்களும் ஆண்கள் தாமும்
      பெருந்தமிழ் நாடு தன்னில்
தண்கடன்  நிகர்த்த அன்பால்
      சமானத்தார் ஆனார் என்ற
பண்வந்து காதிற் பாயப்
      பருகுநாள் எந்த நாளோ?

என்றுப் பாடுவார் பாவேந்தர். என்னைப் பொறுத்தவரை அந்நாள், இந்நாள்தான். வருத்தம் மறைந்து சகோதரத்துவம் மலர்ந்த நாள் அல்லவா.

தூய உள்ளம் அன்புள்ளம்  பெரிய உள்ளம்
   தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்
தாயுள்ளம்  தனிலன்றோ இனபம், ஆங்கே
     சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த் தாலே

என மேலும் பாடுவார் பாரதிதாசன். அத்தகைய தூய உள்ளத்திற்கு, அன்பு உள்ளத்திற்கு, தாயுள்ளத்திற்குச் சொந்தக்காரரான, மூத்த பதிவர் திருச்சி, திருமிகு தி. தமிழ் இளங்கோ அவர்கள், என்பால் காட்டிய அக்கறை கண்டு, அன்பு கண்டு நெகிழ்ந்து போனேன் நண்பர்களே, நெகிழ்ந்து போனேன்.

என்றும் வேண்டும் இந்த அன்பு.


நண்பர்களே, இன்னும் ஒரே ஒரு செய்தியுள்ளது. என் மனைவியின் சிறுநீரகக் கல்லின் அளவினை அறிய, அக்கல் இருக்கும் இடத்தினை அறிய, ஸ்கேன் செய்ய வேண்டியிருந்தது. ஸ்கேன் செய்து அறிக்கையினைப் பெற்றேன். அவ்வறிக்கையின் நிறைவில் இரண்டே, இரண்டு வரிகள்.




Disclaimer: Kindly correlate the diagnosis with your clinical findings. Since ultra sound may not be sensitive in certain occasions. This report is not valid for medico litigation.

           சில வேளைகளில் ஸ்கேன் பரிசோதனையின் முடிவு துல்லியமானதாக இல்லாமலும் இருக்கலாம். இந்த அறிக்கை மருத்துவம் தொடர்பான சட்ட வழக்குகளுக்கு உரியது அல்ல.
     

இரத்தப் பரிசோதனை ஆய்வகத்திற்குச் சென்று, என் மனைவிக்கு இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. செய்தோம். அறிக்கையினைப் பெற்றேன். அவ்வறிக்கையின் இறுதியிலும் மூன்று வரிகள்.



Note: The values will vary from one laboratory to another. Results may vary from laboratory to laboratory and also in parameters from time to time for the same patient. This report is not valid for medico legal purpose.

     மதிப்பீடுகளும், முடிவுகளும் ஆய்வகத்திற்கு ஆய்வகம் மாறுபடலாமாம். இதுவும் சட்ட ரீதியிலான அறிக்கை கிடையாதாம்.

     நண்பர்களே, ஆய்வகங்கள் தருகின்ற அறிக்கைகளின் அடிப்படையில்தானே, மருத்துவர்கள், மருத்துவம் பார்க்கிறார்கள்.

      ஆய்வகத்திற்கு ஆய்வகம் முடிவு மாறுபடலாம் என்றால், நாம் எதை நம்பி மருத்துவம் பார்த்துக் கொள்வது.

      நமது உடலுக்கும், உயிருக்கும் ஏதாகினும் மதிப்பு இருக்கிறதா? இல்லையா? அல்லது நாம் என்ன சோதனைச் சாலை எலிகளா?

வாழ்க மருத்துவம்

பாவம் மக்கள்.