10 ஜூலை 2014

அடுத்த பக்கத்தில் .....

     

ஒன்று, இரண்டு, மூன்று, ......... பத்தொன்பது, இருபது. பொறுமையாக எண்ணினான். மொத்தம் இருபது மாத்திரைகள். இருபதும் தூக்க மாத்திரைகள். இருபதையும் விழுங்கி விட்டால். தூக்கம்தான், நிரந்தரத் தூக்கம்தான். அருகிலேயே ஒரு விஸ்கி பாட்டில்.


      அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. தான் பிறந்ததே வேதனைப் படுவதற்கு மட்டும்தானோ என்ற சந்தேகம், அவன் மனதில் தோன்றி வெகுநாட்களாகி விட்டது.

     பிறந்தது முதல் அவன் சந்தித்தது துன்பங்களை மட்டும்தான், தோல்விகளை மட்டும்தான். தந்தையின் வருமானம் சாப்பாட்டிற்கே போதுமானதாக இல்லை. நல்ல உணவிற்கு வழியில்லை. கசங்காத உடை உடுத்த வாய்ப்பே இல்லை. கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை நெஞ்சம் முழுதும் நிரம்பி வழிந்தும் பலன்தானில்லை. சாப்பாட்டிற்கே வழியில்லாத போது, கல்லூரிக் கட்டணத்தை எப்படிக் கட்டுவது.

     பதினேழு வயதில், இதோ மருத்து கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். இன்னும் எவ்வளவு நாளைக்கு, இதே வாழ்க்கையை வாழ்வது. அவன் மனதில் திடீரென்று ஓர் எண்ணம். வாழ்ந்தது போதும்.

     அன்று கடையில் இருந்து வீடு திரும்பும்போது, இருபது தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டான். வீட்டிற்குச் செல்லும் வழியில், விஸ்கி ஒரு பாட்டிலும் வாங்கிக் கொண்டான்.

     அவனுக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு, விஸ்கி சாப்பிட்டால் நல்லது என்று யாரோ, எப்பொழுதோ கூறியது அவன் நினைவில் இருந்தது. அதற்காகத்தான் விஸ்கி.

     வீட்டில் தன் அறையில் அமர்ந்து, மாத்திரைகளை, அதன் உறையில் இருந்து பிரித்து மேசையில் வைத்தான். ஒரு கோப்பையில் மதுவை ஊற்றித் தயார் நிலையில் வைத்தான்.

     முதல் தவணையாக ஏழெட்டு மாத்திரைகளை வாயில் போட்டு, அதனை விழுங்குவதற்காக, மதுக் கோப்பையினைக் கையில் எடுத்த போது, பின்னால் இருந்து ஒரு குரல்.

சிட்னி, என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

     திடுக்கிட்டுத் திரும்பினான். எதிரில் அவன் தந்தை.

     கையில் மதுக் கோப்பையுடன், மகனைக் கண்ட அதிர்ச்சி தந்தைக்கு.

என்னவாயிற்று உனக்கு? அதென்ன மாத்திரை?

      வாய் நிறைய மாத்திரைகள். மாத்திரைகளை வாயில் வைத்துக் கொண்டு பேச முடியவில்லை. தந்தைக்கு எதிரிலேயே, விஸ்கியைக் குடித்து மாத்திரைகளை முழுங்கவும் மனமில்லை. மாத்திரைகளைத் துப்பினான். பிறகு பேசினான்.

தூக்க மாத்திரைகள் அப்பா.

     தூக்க மாத்திரை, மது. ஒரு நொடியில் தந்தைக்குப் புரிந்துவிட்டது.

தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு உனக்கு என்ன பிரச்சனை மகனே?

வாழ்க்கையே எனக்குப் பிரச்சனைதான் அப்பா. தயவு செய்து என்னைத் தடுக்காதீர்கள்.

       தந்தை, ஒரு நிமிடம் தன் மகனையே உற்றுப் பார்த்தார். எதையோ புரிந்து கொண்டதைப் போல், தலையை ஆட்டினார்.

சரி. உன் விருப்பம் போல் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் அதற்குமுன் சில நிமிடம், நான் உன்னுடன் பேச விரும்புகிறேன்.

உங்களால் என் மனதை மாற்ற முடியாதப்பா? இன்றைக்கு இல்லாவிட்டாலும், நாளை நிச்சயம் தற்கொலை செய்து கொள்வேன்.

        சரி, சரி என்றவர், மகனை இழுத்து அணைத்து, ஆதரவாக முதுகில் தட்டிக் கொடுத்தார்.

     சட்டையை அணிந்து கொள். சிறிது நேரம் பேசிக் கொண்டே நடப்போம் வா.

     அந்தக் குளிர் இரவில், தந்தையும் மகனும் தெருவில் நடந்தார்கள்.

நீ கடைசியாக என்ன கதை எழுதினாய்?

     கதை என்றதும் சிட்னியின் முகத்தில் ஓர் மாற்றம். இந்த நேரத்தில், அதுவும் இந்த சூழ்நிலையில், அப்பா ஏன் என்னுடைய கதையைப் பற்றி விசாரிக்கிறார். குழம்பித்தான் போனான்.

      மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை. விரும்பிய படிப்பையும் படிக்க முடியவில்லை. எனவே கவலையை மறக்க, கதை எழுத ஆரம்பித்தான். ஒவ்வொரு கதையாக எழுதி, ஒவ்வொரு பிரபல பத்திரிக்கைக்கும் அனுப்பிக்கொண்டே இருந்தான்.

     கதையை அஞ்சலில் சேர்த்துவிட்டுக் கடையில் அமர்ந்து கனவு காணுவான். பத்திரிக்கைகளில் தனது கதை அச்சாகி வருவது போலவும், மக்கள் விரும்பிப் படிக்கும், எழுத்தாளராக மாறி, புகழ் ஏணியின் உச்சியில் அமர்ந்திருப்பது போலவும் கனவு காணுவான். ஆனால், கனவு கலைவதற்குள், கதை திரும்பி வந்துவிடும்.

     எத்தனை எத்தனை கதைகள் எழுதியிருப்பான். ஒன்றினைக் கூட இந்த பதிப்புலகம் ஏற்றுக் கொள்ளவில்லையே. அத்தனையுமல்லவா திரும்பி வந்துவிட்டது.

தங்கள் கதையினை வெளியிட இயலாமைக்கு வருந்துகிறோம்

உங்களுக்கு வெறும் வருத்தம் மட்டும்தான். ஆனால் எனக்கோ இது வாழ்க்கை.

     இனியும் இவ்வாழ்வு தேவைதானா? போதும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைப் போதும். துன்பப் பட்டது போதும், துயரப் பட்டது போதும்.

     தனது மகனின் தோளில் கை போட்டவாறே, நடந்து கொண்டே, சிட்னியின் தந்தை பேசினார்.

     சிட்னி, இந்த வாழ்க்கை இருக்கிறதே, அதுவும் ஒரு விறுவிறுப்பான கதை மாதிரிதான். அடுத்த பக்கத்தில் என்ன இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. அந்த எதிர்பார்ப்பு, அந்த சஸ்பென்ஸ் இருக்கிறதே, அதுதான் இந்த வாழ்வையே நகர்த்திச் செல்கிறது. அதுதான் இந்த வாழ்வின் மிகப் பெரிய சுவாரசியம்.

இருக்கலாம் அப்பா. ஆனால் என் கதை இந்தப் பக்கத்தோடு முடியப் போகிறதப்பா.

     அவனது தந்தை சிரித்தார்.

அதை நீயே முடிவு செய்யக் கூடாது மகனே. உன் வாழ்க்கை என்கிற கதையில், அடுத்தடுத்து வரப் போகிற பக்கங்களில் என்னென்ன திருப்பங்கள், என்னென்ன ஆச்சரியங்கள், என்னென்ன முன்னேற்றங்கள் இருக்கிறது என்பதை, ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தால்தானே தெரியும். திடீரென்று புத்தகத்தையே மூடி வைத்துவிட்டால் எப்படி?

சிட்னி யோசிக்க ஆரம்பித்தான்.

தந்தை, தன் மகனின் தோளைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினார்.

சிட்னி, இதுவரை உன் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது முக்கியமல்ல. இனி எப்படி இருக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். இனி உன் கதையின் அடுத்தடுத்தப் பக்கங்களை எழுதுப் போவது, தீர்மானிக்கப் போவது நீதான். நல்லவிதமாக எழுது. எழுதி எழுதி உன் வாழ்க்கைப் பாதையில் முன்னேறுவது உன் கையில்தான் இருக்கிறது.

     சிட்னி அன்று இரவே, தூக்க மாத்திரைகளை அள்ளிக் குப்பைத் தொட்டியில் வீசினான். ஓர் புதிய வேகம், ஓர் புதிய தன்னம்பிக்கை. வாழ்க்கையை எதிர் கொண்டு சமாளிக்க, சாதிக்கத் தயாரானான்.

     சிட்னியின் அடுத்தடுத்தப் பக்கங்கள் சுவாரசியமானவை, ஆச்சரியங்கள் நிரம்பியவை, விறுவிறுப்பானவை.

The Naked Face
இவரின் முதல் நாவல் 1970 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
17 வயதில் எழுதத் தொடங்கியவர், 
தனது முதல் புத்தகம் வருவதற்கு 36 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 
முதல் புத்தகம் அச்சில் வெளிவந்தபொழுது சிட்னியின் வயது 53.




நண்பர்களே, இவர்தான்
சிட்னி ஷெல்டன்.
உலகிலேயே அதிக அளவு விற்பனையாகும் புத்தகங்களுக்குச் சொந்தக்காரர்.

     விறு விறு நாவல்கள், நாடகங்கள், ஹாலிவுட் திரைக் கதைகள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கானப் படைப்புகள் என சிட்னி எழுதியதெல்லாம் வெற்றி, வெற்றி, வெற்றி