03 ஜூலை 2014

விண்ணில் கரைந்தவர்

     

ஆண்டு 2003. சனவரி 16. கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, கொலம்பியா விண்கலம் விண்ணில் சீறிப் பாய்ந்தது. விண்கலத்தின் வேகம் மணிக்கு 17,000 மைல். வெறும் 90 நிமிடங்களில் பூமியை ஒரு சுற்று சுற்றி வந்துவிடலாம்.

     அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, பிரேஸில், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, ஹாலந்து, டென்மார்க் முதலிய பதினாறு நாடுகள், கரம் கோர்த்து, 2500 கோடி ரூபாய் செலவில், 1998 இல் வானில் அமைத்த தொங்கும் தோட்டம்தான், சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்.

     மூன்று ரஷ்ய வீரர்கள், சோயூஸ் என்ற விண்கலத்தில் இருந்தபடியே, விண்ணில் இருக்கும் சர்வதேச விஞ்ஞான மையத்தில் இன்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

     இம்மையத்தில் ஆய்வு மேற்கொள்ளத்தான் கொலம்பியா விண்வெளி ஓடம், விண்ணில் சீறிப் பாய்ந்து செல்கிறது.


     ஏழு விண்வெளி வீரர்கள், பதினாறு நாட்கள் விண்ணில் தங்கி, தங்கள் பணி முடித்தனர். இவர்கள் விண்ணில் பறந்த நேரம் 760 மணி நேரம். விண்ணில் பறந்த தூரம் 104 இலட்சம் கிலோ மீட்டர்கள். பூமியை மட்டும் 252 தடவை சுற்றி வந்துள்ளனர்.

     இதோ, சோயூஸ் விண்கலத்தில் இருந்த மூன்று ரஷ்ய வீரர்களும், வாழ்த்துச் சொல்லி வழியனுப்ப, விண்கலம் பூமியை நோக்கி விரைகிறது.

     2003 பிப்ரவரி 1 ஆம் நாள். சனிக்கிழமை. காலை எட்டு மணி. இரண்டு இலட்சம் அடி உயரத்தில் கொலம்பியா விண்கலம். மணிக்கு 20,000 கி.மீ வேகத்தில் பூமியை முத்தமிட இதோ, இதழ் குவித்து விரைந்து வருகின்றது.


கென்னடி விண்வெளி மையத்தில் தரை இறங்க இன்னும் இருபது நிமிடங்களே உள்ளன. 19 நிமிடம் ............... 18 நிமிடம் ................... ராக்கெட்டின் பின் பகுதியில், இறக்கை போன்ற பகுதியில் உள்ள, ரசாயனக் கலவைப் பூசப்பட்ட தடுப்புத் தகடு ஒன்று திடீரென்று பெயர்ந்து, விண்ணில் பறந்தது. 17 நிமிடம் ............ தகடு பெயர்ந்ததால், வெப்ப தடுப்புச் சக்தி குறையவே, ராக்கெட்டின் உட்புற வெப்பம் திகுதிகுவென அதிகரிக்கத் தொடங்கியது. 16 நிமிடம் ................. இருபதாயிரம் கி.மீ வேகத்தில் வந்த கொலம்பியா விண்கலம், புவி ஈர்ப்பு சக்தி எல்லைக்குள் வந்த பொழுது, மூவாயிரம் டிகிரி வெப்பத்தைத் தாங்க இயலாமல், டெக்ஸாஸ் மாநிலத்தின் மேல், தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது.




       விண்கலத்தில் இருந்த ஏழு விண்வெளி வீரர்களும், அதீத வெப்பத்தில், ஒரே நொடியில் சாம்பலாகி, காற்றோடு காற்றாய் கலந்தனர். ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள்.
--


     1961 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் நாள். இந்தியாவின் அரியானா மாநிலத்தில் கர்னால் என்னும் ஊரில், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, இந்தியா வந்து குடியேறிய குடும்பம் அது. அக்குடும்பத்தின் நான்காவது குழந்தையாய், அந்த அழகிய பெண் குழந்தை பிறந்தது.

     மூன்று வயதில் அவளையொத்த குழந்தைகள் எல்லாம், பல்வேறு பொம்மைகளை வைத்து விளையாட, இச்சிறுமியோ விமான பொம்மையை மட்டுமே வைத்துக் கொண்டு ரசித்து ரசித்து விளையாடினார்.

     மழைக் காலத்தில் குழந்தைகள் அனைவரும் காகிதத்தில் கப்பல் செய்து மிதக்க விட்டபோது, இச்சிறுமி மட்டும், காகிதத்தில் விமானம் செய்து தண்ணீரில் மிதக்க விட்டு மகிழ்ந்தாள்.
    
 கர்னாலில் உள்ள தாகூர் பாலநிகேதன் பள்ளியில், கடைசி பெஞ்சில் அமர்ந்து, சன்னல் வழியே, வானத்தையும், மேகத்தையும் கண்டு மகிழ்வாள். தோழிகள் கேட்டால், என்னவோ தெரியவில்லை, அந்த வானத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.



     கர்னாலில் ஒரு ஃபிளையிங் கிளப் இருந்தது. அச்சிறுமியின் தந்தை, அதில் ஒரு உறுப்பினர். அப்பா, எனக்கு ஏரோப்ளேன்ல பறக்கனும்னு ஆசையா இருக்கு, ஒரு வாட்டி கூட்டிக்கிட்டுப் போங்களேன், ப்ளீஸ்.

     மகளின் தொந்தரவு தாங்க முடியாத தந்தை, ஒரு நாள், மகளை ஃபிளையிங் கிளப்பிற்கு அழைத்துச் சென்றார்.

     அந்தக் குட்டி விமான நிலையத்திற்குள் நுழையும்போதே, அச்சிறுமியின் உள்ளம் ஆனந்தக் கூத்தாடத் தொடங்கியது. அங்கொன்று, இங்கொன்று என எங்கு பார்த்தாலும் உலோகப் பறவைகள்.

     புஷ்பக் என்னும் பெயருடைய அச்சிறிய விமானம், அச்சிறுமியுடன் ஓடுதளத்தில் நகரத் தொடங்கியது. சில வினாடிகளில், ஜிவ்வென்று வானில் ஏறியது.

     சுற்றிலும் எங்கு பார்த்தாலும், எத்திசையிலும் மேகங்கள், மேகங்கள். சின்னச் சின்ன தீப்பெட்டிபோல் கட்டிடங்கள். பென்சிலால் கோடு போட்டதுபோல் சாலைகள்.

      அச்சிறுமியின் மனது விமானத்திற்கும் மேலே, பறக்கத் தொடங்கியது. எல்லையில்லா பிரபஞ்சப் பெரு வெளியில் நீந்தத் தொடங்கியது. கண்களைத் திறந்து கொண்டே ஒரு கனவு கண்டாள்.

     இனி நான் பயிலப் போவது, இந்த உலோகப் பறவைகளைப் பற்றித்தான். உலோகப் பறவையில் ஏறி, உலகை வலம் வர வேண்டும். இந்த பிரபஞ்சத்தை அளக்க வேண்டும் என்று கனவு கண்டாள்.

      நண்பர்களே, அச்சிறுமியின் பெயர் கல்பனா சாவ்லா. கல்பனா என்றால் கனவு என்று பொருள்.
    

கல்பனா படிப்பில் வெகு கெட்டி. கராத்தே கற்றார். பரத நாட்டியமும் கற்றுத் தேர்ந்தார்.

      1978 ஆம் ஆண்டில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். விமானப் பொறியியல் துறையில் கல்பனா மட்டுமே பெண். அசராமல் படித்தார். கல்லூரி நூலகத்தையேக் கரைத்துக் குடித்தார். பல்கலைக் கழகத்திலேயே முதலிடத்தில் தேர்ச்சியும் பெற்றார்.

       பொறியியல் பயின்ற, பஞ்சாப் பொறியியல் கல்லூரியிலேயே, ஆசிரியர் பணி அழைத்தது. நெஞ்சமெல்லாம் மேற்படிப்பில் லயித்திருக்க, கனவெல்லாம் விண்ணைப் பற்றியே நிறைந்திருக்க, தந்தை வெளிநாடு சென்றிருந்த வேலையில், தாயிடம் மட்டும் தெரிவித்துவிட்டு, ஆசிரியராய் பணியில் சேர்ந்தார்.

        கல்பனாவின் தந்தைக்கோ, தன் மகளுக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும், தன் தொழிலையே, தன் மகளும் தொடர வேண்டும் என்றத் தணியாத தாகம். வெளிநாடு சென்றிருந்த கல்பனாவின் தந்தை, பனார்சிதாஸ், வீடு திரும்பிய சில நொடிகளில், தன் மகள் ஆசிரியராய் பணியாற்றுகிறார் என்பதை அறிந்தார். தாங்க முடியாத கோபம். கல்பனா வீடு திரும்பும் வரை கூட, பொறுக்க முடியாமல், கல்லூரிக்கே சென்றார்.
    
கல்பனாவின் தந்தை திரு பனார்சிதாஸ்
பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் முதல்வரைச் சந்தித்த போதுதான், பனார்சிதாஸின் அகக் கண்னே திறந்தது. கல்லூரி முதல்வர், கல்பனா பற்றிப் பேசினார், பேசினார், பேசிக் கொண்டே இருந்தார். விண்ணில் பறக்கப் பிறந்தவரை மண்ணிலேயே முடக்குவதா? திருமணம் என்னும் சிறைச்சாலையில் தள்ளுவதா? கல்பனாவை மேற்படிப்பிற்காக, அமெரிக்காவிற்கு அனுப்புங்கள், கல்பனா விரையில விண்ணில் வலம் வருவார். கல்பனாவால், தங்களும், தங்கள் குடும்பமும், இந்தக் கல்லூரியும், ஏன் இந்தப் பாரதத் திருநாடும் பெருமையடையப் போகிறது.

       கல்லூரி முதல்வர் பேசப் பேச, பனார்சிதாஸின் உள்ளத்தில், இதுவரை இல்லாத ஒரு மாறுதல், தன் மகளைக் குறித்த ஓர் பெருமிதம், நெஞ்சம் எங்கும் நிறையக் கண்டார்.

     கல்லூரி முதல்வர், பனார்சிதாஸை, கல்பனா பாடம் நடத்தும், வகுப்பறைக்கே அழைத்துச் சென்றார்.

      கல்பனா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பனார்சிதாஸ், வைத்த கண் வாங்காமல், கண் இமையினைக் கூட இமைக்க மறந்து, தன் மகளையே பார்த்துக் கொண்டு நின்றார். உள்ளத்தில் ஓர் ஆயிரம் உணர்ச்சி அலைகள் பொங்கி அர்ப்பரித்தன. என் மகளை இதுநாள் வரை குழந்தையாகவே அல்லவா நினைத்துக் கொண்டிருந்துவிட்டேன்.

      பாடம் நடத்திக் கொண்டிருந்த கல்பனா, திரும்பிப் பார்க்க, எதிரில் தந்தை.

      ஓடி வந்து தந்தையைக் கட்டிக் கொண்டார். கண்களில் கண்ணீர் மழை.

     கல்பனா, கண்ணீரைத் துடை. இதுநாள் வரை உன்னை அறியாமலேயே இருந்ததற்காக வருந்துகின்றேன். இப்பொழுதுதான், உன் கல்லூரி முதல்வர் என் கண்களைத் திறந்தார். மேற்படிப்புப் படிக்க, இப்பொழுதே கிளம்பு அமெரிக்காவிற்கு. உடனே ஆசிரியர் பணியை ராஜினாமா செய்.

     அப்பா, இன்று ஆகஸ்ட் 26. அமெரிக்காவில் இருக்கும், ஆர்லிங்டன் பல்கலைக் கழகத்தில், இவ்வாண்டிற்கான சேர்க்கைக்குக் கடைசி நாள் ஆகஸ்ட் 31. இன்னும் ஐந்து நாட்கள்தான் மீதம் இருக்கின்றன. இந்த ஐந்து நாட்களில் என்ன செய்ய இயலும்?

       பனார்சிதாஸ், கல்பனாவின் கண்ணீரைத் துடைத்தார். நான் பார்த்துக் கொள்கிறேன், கிளம்பு இப்பொழுதே.

      கல்பனாவிடம் பாஸ்போர்ட் கிடையாது. விசா கிடையாது. விமான பயணச் சீட்டுக் கிடைக்குமா என்பது கூட தெரியாது.

      பனார்சிதாஸ் சுற்றிச் சுழன்றார். தன் செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தினார். இரண்டே நாட்களில் பாஸ்போர்ட், விசா, விமானப் பயணச் சீட்டு என அனைத்தையும் கல்பனாவிடம் கொடுத்துவிட்டுத்தான் தூங்கவே சென்றார்.

      ஆகஸ்ட் 28 இல் கல்பனா அமெரிக்கா பறந்தார். ஆர்லிங்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஏரோ நாட்டிகல் பிரிவில் எம்.எஸ்., படிப்புப் படித்தார். வென்றார். 1988 ஆம் ஆண்டு கொலோராடா பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார். 1992 இல் நாசாவில் சேர்ந்தார்.
    

1997 நவம்பர் 19 அன்று, விண்ணில் ஏவப்பட்ட கொலம்பியா விண்கலத்தில், பறந்தவர்களுள் கல்பனாவும் ஒருவர். கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம்.

     
புதுதில்லியில், அன்றைய பாரதப் பிரதமர் மாண்புமிகு ஐ.கே.குஜ்ரால் அவர்களின், மேசையில் இருந்த தொலைபேசி சிணுங்கியது. பிரதமர் தொலைபேசியை எடுத்தார்.

விண்ணில் சுற்றும் கொலம்பியா விண்கலத்தில் இருந்து, கல்பனா பேசுகிறேன்.

     அமெரிக்கக் குடியுரிமை பெற்ற போதும், பிறந்த பொன் நாட்டை, தன் தாய்த் திருநாட்டை மறக்காத, விண்வெளி மங்கை கல்பனா.

      நண்பர்களே, 2003 ஆம் ஆண்டு சனவரி 16 இல் இரண்டாம் விண்வெளிப் பயணம். இப்பயணத்தின் போது, கல்பனா எடுத்துச் சென்ற முக்கியமானப் பொருள் என்ன தெரியுமா? பட்டுத் துணியால் ஆன இந்தியத் தேசியக் கொடி.



விண்ணில் பறந்து கொண்டிருந்த போதே, ஏனோ கல்பனாவிற்குத் தான் பயின்ற பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் நினைவு வந்தது. உடனே விண்ணில் இருந்தே, அக்கல்லூரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.

     கனவுகளில் இருந்து வெற்றிகளைச் சென்றடையும் பாதைகள், எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றன. அப் பாதையினை உணர்வதற்கான தைரியமும், அப் பாதையில் பயணிப்பதற்கானப் பொறுமையும் உங்களுக்கு உண்டாகட்டும்.

     இதுவே, கல்பனா அனுப்பிய இறுதி மின்னஞ்சல்.

     2003 சனவரி 31, பஞ்பாப் பொறியியல் கல்லூரியில் இருந்து, கல்பனாவின் ஆசிரியர் வாசுதேவ் சிங் மல்ஹோத்ரா, கல்பனாவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.

மிகுந்த மகிழ்ச்சி...... பத்திரமாய் தரையிறங்க வாழ்த்துகிறேன்.

     கடைசிவரை கல்பனா, தரையிறங்கவேயில்லை.

     எப்பொழுதும் புன்னகை தவழும் இதழ்கள், சாதிக்கத் துடிக்கும் விழிகள், தோளைத் தொடும் கரும் கூந்தல், பிறந்த நாட்டினை, தன் சுவாசமாய் நேசித்த நல் உள்ளம் ....... அனைத்தும்   ..... அனைத்தும்.... ஒரே நொடியில்..... தீயில் கருகி, காற்றோடு காற்றாய், சாம்பலாய் கலந்தது.

     நான் இறப்பதாக இருந்தால், விண்ணிலேயே உயிர் பிரிய வேண்டும் என்பதுதான் என் ஆசை எனக் கூறிய கல்பனாவின் ஆசை, இறுதியில், ஆனால் விரையில், நிறைவேறியே விட்டது.

விண்ணில் பறந்த முதல் இந்தியப் பெண்
கல்பனா சாவ்லா
விண்ணிலேயே கரைந்தார்.

    
---------------------------------------------------------
கல்பனா சாவ்லாவின்
54 வது பிறந்த நாள்
ஜுலை 1
---------------------------------------------------
கல்பனா சாவ்லாவின்
நினைவினைப் போற்றுவோம்