நண்பர்களே,
நான் ஒரு கணித ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கணித மேதை சீனிவாச
இராமானுஜன் மீது, என்னையும் அறியாமல் ஒரு ஈடுபாடு எனக்கு உண்டு. எனது எம்.ஃ.பில்.,
படிப்பிற்காக, நான் எடுத்துக் கொண்ட தலைப்பு கணிதமேதை சீனிவாச இராமானுஜன்
என்பதாகும்.
எம்.ஃ.பில்., படிப்பிற்காக, இராமானுஜன்
பற்றிய செய்திகளைத் திரட்டத் தொடங்கியபோதுதான், உண்மையிலேயே இராமானுஜன் யார்
என்பது புரிந்தது. அதன்பின், இராமானுஜன் மீதிருந்த ஈடுபாடானது, காதலாகவே மாறியது.
இப்படியும் ஒரு மனிதரா? கணிதத்தை இப்படியும் ஒரு மனிதரால் நேசிக்க முடியுமா?
உண்ண உணவிற்கே வழியின்றி, வறுமையை மட்டுமே சந்தித்தபோதும், கணிதத்தை மட்டுமே
சிந்தித்து, கணிதத்தை மட்டுமே சுவாசித்து, சாதித்துக் காட்டிய மாமனிதரல்லவா
சீனிவாச இராமானுஜன்.
நான் போற்றும் மனிதர்களுள் முதன்மையாளராக
ஆகிப்போனார் இராமானுஜன்.
நண்பர்களே, நேற்று நானும் என் மனைவியும்,
இராமானுஜன் திரைப்படத்திற்குச் சென்றோம். திரையரங்கினுள் நுழைந்தபோது, அங்கு
எனக்கும் முன்பாக வந்திருந்த, எனது கணித ஆசிரியர் திரு எஸ்.வரதராசன்
அவர்களைக் கண்டேன். நான் கணிதத்தையே, முதன்மைப் பாடமாகக் கொண்டு, கல்லூரியில்
படித்ததற்கு இவரும் ஓர் காரணம். வணக்கம் கூறினேன். வாஞ்சையுடன் கரங்களைப் பற்றிக்
கொண்டார்.
என் அலைபேசி அழைத்தது. மறுமுனையில், நான்
ஆசிரியராய் பணியாற்றும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியரும்,
நண்பருமான திரு வெ.சரவணன் அவர்கள். இன்று மதியம், நான் என் குடும்பத்துடன்,
இராமானுஜன் படம் பார்த்தேன், அருமை, அவசியம் பாருங்கள் என்றார்.
இராமானுஜன் படத்தினைப் பார்ப்பதற்காக, என்
மனைவியுடன் திரையரங்கில் இருக்கிறேன் என்றேன். நண்பரின் மகிழ்ச்சி
இரட்டிப்பாகியது.
திரையரங்கினுள் நான் எதிர் பார்த்ததைவிட
கூட்டம் அதிகமகவே இருந்தது. இராமானுஜன் என்னும் மிகப் பெரிய சக்தி, ஆளுமை,
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும், திரையரங்கிற்கு அழைத்து வந்திருக்கிறது.
படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற
உணர்வே இன்றி, முழுமையாக திரைக்குள் இழுத்து, இராமானுஜனின் வாழ்க்கை சுழலுக்குள் மூழ்கி,
மூச்சுத் திணறி, நம்மையும் திக்குமுக்காடச் செய்கிறது படம்.
படம் நிறைவு பெற்று, திரையரங்கினுள்
விளக்குகள் பளிச்சிட்டதும்தான், சுய நினைவிற்கே வந்தேன். நான் இருப்பது
கும்பகோணத்தில அல்ல, தஞ்சையில், திரையரங்கில் என்பது புரிந்தது.
மகத்தான ஒரு மாபெரும் கணித மேதையின் வாழ்வு
முப்பத்தி இரண்டே ஆண்டுகளில் முடிவடைந்ததுதான் சோகம். அதைவிட பெரிய சோகம், அக்கணித
சாம்ராஜ்ஜியத்தின் இறுதிச் சடங்கினை, அவரது சொந்த சமூகமே புறக்கணித்ததுதான்.
புரட்சிக் கவி பாரதியைப் பற்றிக் கூறும்
பொழுது சொல்வார்கள், பாரதியின் இறுதிச் சடங்கின்போது, அவன் உடலில் மொய்த்த
ஈக்களின் எண்ணிக்கையைவிட, இறுதிச் சடங்கில், கலந்து கொண்ட மனிதர்களின் எண்ணிக்கை
குறைவு என்று.
கணித மாமேதை இராமானுஜனுக்கும் அதே கதிதான்.
மகத்தான அறிஞர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே போற்றப்பட வேண்டும் என்னும் பொன்னான
வாசகம், இன்றும் கானல் நீராகத்தான் இருக்கிறது.
நண்பர்களே, கணித மேதை இராமானுஜன் இன்று
இல்லை. ஆனால் அவர் வழங்கிய கணிதத்தை, கண்டுபிடிப்பை, நம்மை அறியாமலேயே, நாம்
தினம், தினம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். அதற்காகவாவது, அக் கணித
மேதைக்கு நாம், ஒரு நன்றி சொல்ல வேண்டாமா?
குடும்பத்துடன் இராமானுஜன் திரைப்படத்தினைப்
பாருங்கள். படம் முடிவதற்குள், ஒரு சொட்டு, ஒரே ஒரு சொட்டுக் கண்ணீர், உங்கள்
விழிகளில் இருந்து, எட்டிப் பார்க்குமானால், அதுவே அம்மாமேதைக்கு நீங்கள்
செலுத்தும் உண்மை அஞ்சலியாகும்.