15 ஜூலை 2014

படிக்காத மேதை





தங்கமே, தண்பொதிகைச் சாரலே, தண்ணிலவே
சிங்கமே என்றழைத்துச் சீராட்டும் தாய் தவிர
சொந்தமென்று ஏதுமில்லை, துணையிருக்க மங்கையில்லை
தூயமணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை
ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே
                                          - கண்ணதாசன்

     மகன் தன் தாய்க்கு மாதந்தோறும் ரூ.120 அனுப்பினார். மகன் அனுப்பும் பணம் போதுமானதாக இல்லை. எனவே தாய், தயங்கித் தயங்கி, தன் சொந்த மகனுக்கே, தூது விட்டார்.

     மகனே, நீ முதல் அமைச்சரானதும், என்னைப் பார்க்க, ஒவ்வொரு நாளும், யார் யாரோ வருகின்றனர். வீடு தேடி வருபவர்களுக்கு சோடாவோ, கலரோ வழங்காமல் அனுப்ப முடியவில்லை. அதனால் செலவு கொஞ்சம் கூடுகிறது. எனவே இனிமேல் மாதம் ரூ.150 அனுப்பினால் நல்லது.


     அம்மா, உன்னைத் தேடி வருபவர்களுக்கு, நீ சக்திக்கு மீறிச் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சோடா, கலர் தருவதை இனிமேல் நிறுத்து. நான் அனுப்பும் 120 ரூபாயில் வாழ்க்கையை சிக்கனமாக நடத்து.

நண்பர்களே, இவர்தான் காமராசர், நம் கர்மவீரர் காமராசர்.

     தன்னைப் பெற்றெடுத்த அன்னைக்கு 30 ரூபாய் கூடுதலாகத் தரமறுத்த முதல்வரும், 30 ரூபாய்க்காகத் தயங்கித், தயங்கித் தன் மகனுக்கே தூது விட்டத் தாயும், இம் மண்ணில் நரம்பும், இரத்தமும், சதையுமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போதே நெஞ்சம் சிலிர்க்கிறதல்லவா.

தீயன நாடார், என்றும்
    சிறுமைகள் நாடார், வாழ்வில்
மாயங்கள் நாடார், வெற்று
     மந்திரம் நாடார், நீண்ட
வாய்கொண்டு மேடை சாய்க்கும்
     வரட்டு வார்த்தைகள் நாடார்
                     - கண்ணதாசன்

    

கர்மவீரர் காமராசரின் அன்னை சிவகாமி அம்மையார், உடல் நலமின்றிப் படுத்தப் படுக்கையாக இருக்கிறார். தன் தாயைக் காண காமராசர் வருகிறார்.

     காமராசரின் சகோதரி நாகம்மாள், கண்மூடிப் படுத்திருக்கும் தன் தாயின் காதருகே குனிந்து, அம்மா, அண்ணன் வந்து விட்டார்.

      அடுத்த நொடி திடுக்கிட்டுக் கண் விழிக்கிறார் சிவகாமி அம்மையார். முகத்தில் ஓர் மகிழ்ச்சி, கண்களில் ஓர் புதிய ஒளி பரவுகிறது.

       தனது அருமைப் புதல்வனைத் தான் பார்ப்பது, இதுவே இறுதி முறை என்பது அந்தத் தாய்க்குப் புரிகிறது.

     அந்தத் தாயின் வாயில் இருந்து, குழறிக் குழறிச் சில வார்த்தைகள் வெளி வருகின்றன.

ஒரு வாய் சாப்பிட்டு விட்டுப் போ.

வேண்டாம், நான் மதுரைக்குப் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்ற காமராசர், அப்பொழுதுதான் கவனிக்கிறார், தன் தாயின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிவதை.

சரி, எடுத்து வை.

      மறுபடியும், தாய் குழறியவாரே பேசுகிறார்.

அடுக்களையில் போய் சாப்பிடப்பா.

    அடுக்களையில் நுழைகிறார். சகோதரி உணவு பரிமாற, பேருக்கு சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறார்.

அப்போ, நான் வரட்டுமா

     கடைசி முறையாகத் தன் மகனைப் பார்க்கிறார் தாய். தன் மகன், தன் வீட்டில் சாப்பிட்டிருக்கிறான் என்னும் மகிழ்ச்சி முகமெங்கும் பரவ,

மகராசனாய் போய் வா.

     ஏதேதோ நினைவுகளில் மூழ்கியவாரே, காரில் ஏறிப் பயணிக்கிறார் காமரசர். அருகில் அமர்ந்திருந்த பழ.நெடுமாறன் அவர்கள், மெதுவாக ஒரு விதத் தயக்கத்துடன் கேட்கிறார்.

ஐயா, நீங்கள் வீட்டில் சாப்பிட்டு, எவ்வளவு காலம் ஆகியிருக்கும்.

என்ன, ஒரு 25 அல்லது 30 வருடமாகியிருக்கும்.

இவர்தான் காமராசர்.
சமுதாய நலனுக்காக, சகலத்தையும் துறந்த துறவி.

     காமராஜ் கல்லூரியில் படித்தாரா? கல்லூரிக்குள் மழைக்காவது ஒதுங்கினாரா? என்று கேட்கிறார்கள். நான் கல்லூரியில் படிச்சேன்னோ, கல்லூரிக்குள் கால் வச்சேன்னோ எப்போது சொன்னேன்? நான்தான் படிக்காத பாமரன்னு உலகத்திற்கே தெரியுமே. நான் படிச்சதில்லைன்னு பச்சையாச் சொல்றேன். அதுக்கப்புறமும் காமராஜ் கல்லூரியில் படிச்சாரான்று நீ ஏன் வீணாக் கேக்கிற?

     நான் கல்லூரியில் படிக்கல. கல்லூரி வாசல்ல கால் வைக்கல. வாஸ்தவம். அதனாலதான், நான் படிக்காத கல்லூரியில், நம்ம பிள்ளைகள் எல்லாம் படிக்கட்டும்னு பாடுபட்டேன். எனக்குக் கிடைக்காத கல்வி, எல்லாருக்கும் கிடைக்கனும்னுதான் ஊர் ஊரா பள்ளிக் கூடம் கட்டினேன்.

நண்பர்களே, இவர்தான் காமராசர்.

முந்நூறு மக்களைக் கொண்ட சிற்றூர் தோறும்
தொடக்கப் பள்ளி.

இரண்டாயிரம் மக்களைக் கொண்ட பேரூரெங்கும்.
நடு நிலைப் பள்ளி,

ஐயாயிரம் மக்களுக்கு
ஓர் உயர்நிலைப் பள்ளி.

அனைவருக்கும் மதிய உணவு
இலவசச் சீருடை.

சாதித்துக் காட்டியவர் அல்லவா காமராசர்.
நம்மைப் படிக்க வைத்து ஆளாக்கிக் காட்டியவர் அல்லவா காமராசர்.

முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி
பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன்
பொன்னில்லான், பொருளில்லான், புகழன்றி வசையில்லான்
இல்லாளும் இல்லான், இல்லையெனும் ஏக்கமிலான்
அரசியலைக் காதலுக்கே அர்பணித்தார் மத்தியிலே
காதலையே அரசியலுக்கு கரைத்துவிட்ட கங்கையவன்.
                                  - கண்ணதாசன்

125 ரூபாய் ரொக்கப் பணம்
கதர் வேட்டி – 4
கதர் சட்டை – 4
கதர் துண்டு – 4
செறுப்பு – 1 சோடி
கண்ணாடி – 1
பேனா – 1
சமையலுக்குச் சில பாத்திரங்கள்

இவைதான் காமராசர் விட்டுச் சென்ற சொத்துக்கள்.
இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறார்.

கர்மவீரர் காமராசர்
மறைந்தவுடன், இவர் வசித்த
வாடகை வீட்டை
வீட்டின் சொந்தக் காரர் எடுத்துக் கொண்டார்.

இவர் பயன்படுத்திய
காரை
காங்கிரஸ் கட்சி எடுத்துக் கொண்டது.

இவர்
உடலை
அக்னி எடுத்துக் கொண்டது.

இவருடைய
பெயரை
மட்டும்
வரலாறு
எடுத்துக் கொண்டது.

---------
ஜுலை 15
காமராசர் பிறந்த நாள்
கல்வி வளர்ச்சி நாள்
நம் வாழ்நாளில், ஒரே ஒரு முறையேனும், ஒரே ஒரு ஏழை மாணவனுக்குக்
கல்விக் கட்டணம் செலுத்துவோம்.

இதுவே
கர்மவீர்ர் காமராசருக்கு
நாம் செலுத்தும்
உண்மை அஞ்சலியாகும்

---------
நான் ஆசிரியராகப் பணியாற்றும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின்
கட்டிடத்தை , திறந்து வைத்த கர்மவீரர் காமராசர்
-------

எனது வகுப்பில்
      கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு, என் வகுப்பு மாணவிகளுக்கு, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தினேன். 
மலர் தூவி அஞ்சலி செலுத்தும் பள்ளித் தலைமையாசிரியர்
திரு வெ.சரவணன் அவர்கள்





என் வகுப்பு மாணவிகளிடையே
பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள்உரையாற்றுகிறார்
உதவித் தலைமையாசிரியர் திரு அ.சதாசிவம் உரையாற்றுகிறார்
தலைமையாசிரியர் பரிசு வழங்குகிறார்
உதவித் தலைமையாசிரியர்
திரு அ.சதாசிவம் பரிசு வழங்குகிறார்
உடற்கல்வி ஆசிரியர் திரு துரை.நடராசன் அவர்கள் பரிசு வழங்குகிறார்
ஓவிய ஆசிரியர் திரு எஸ்.கோவிந்தராஜ் அவர்கள் பரிகு வழங்குகிறார்