12 ஜனவரி 2016

பயணங்கள்



நணபர்களே, வணக்கம். நலம்தானே,

    பயணம் பற்றிய தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார், புதுகைச் சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள். புதுகையின் ஆணையினைப் புறந் தள்ள இயலாது அல்லவா?

  

 பயணம்.

    பலருடைய துணிச்சலான பயணம்தான், உலகின் புதிய புதிய கண்டங்களை, அறியாப் பகுதிகளை, அறியாத மக்களைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது.


    டார்வினின் கப்பல் பயணம்தானே, புரிய பரிணாமக் கொள்கையினை உலகிற்கு அறிவித்தது.

   மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை. மாசே துங்கின் நெடும் பயணம். உலக வரலாற்றை மாற்றிக் காட்டிய பயணங்கள் அல்லவா.

     மேலும் வாழ்வு என்பதே ஒரு பயணம்தானே. வாழ்வு என்னும் பெரும் பயணத்தில்தான் எத்தனை எத்தனை கிளைப் பயணங்கள்.

     

நினைத்துப் பார்க்கிறேன் எனது முதல் ரயில் பயணத்தை. நினைவிற்கு வர மறுக்கிறது. ஆனாலும், அழுது அடம் பிடித்து சன்னல் ஓரத்து இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தது நினைவிருக்கிறது.

      வேடிக்கை பார்த்தவாறே பயணிக்கையில், ரயில் புகையில் கலந்து வந்த, சிறு கரித்துண்டு, கண்ணில் விழுந்து, அன்று முழுவதும், ஒரு கண்ணைத் திறக்காமலேயே துன்பப் பட்டது மட்டும் நினைவில் உள்ளது.

      அதற்கும் முந்தைய பயணம் ஒன்று இன்றும் நினைவில் நிற்கிறது. மாட்டு வண்டிப் பயணம். நான்கு அல்லது ஐந்து வயதுச் சிறுவனாக இருந்த பொழுது, திருவையாற்றில் இருந்துப் புறப்பட்டு, கவித்தலத்தின் அருகில் ஓடும் கொள்ளிடம் ஆற்றின், நடுத் திட்டில் இருக்கும், எங்களின் குல தெய்வம் கோயிலுக்கு, மாட்டு வண்டியில் பயணித்தது இன்றும் பசுமையாய் நினைவில் நிலைத்திருக்கிறது.

      நடு இரவில் புறப்பட்டோம். உற்றார் உறவினர்களோடு, இரண்டு அல்லது மூன்று மாட்டு வண்டிகளில் புறப்பட்டோம். கூண்டு வண்டி. நடு இரவில், திருவையாற்றினை அடுத்து இருக்கும், வயல் வெளிகளில் ஊடே பயணம் தொடர்ந்தது. கும்மிருட்டு. வயல் வெளிகளில் ஆங்காங்கே வளர்ந்து நின்ற மரங்கள் ஒவ்வொன்றும், இருட்டின் காரணமாக யாணை போலவும், உயர்ந்த உருவத்தினை உடைய அரக்கர்கள் போலவும் காட்சி அளித்ததால், கண்களைத் திறக்கவும் பயந்து., தூங்குவதற்கும் வழியின்றி, கண் திறந்து பார்க்கவும் மனமின்றி தவித்துப் பயணித்தது இன்றும் நினைவில் கல்வெட்டாய் பதிந்திருக்கிறது.

     

சிறுவன் என்ற நிலையினைக் கடந்து, இப்புவியில் பிறந்து, அரை நூற்றாண்டினைக் கடந்து விட்டேன்.

         மறக்க முடியாத பயணமாய், எனது முதல் வானூர்திப் பயணம் முன் வந்து நிற்கிறது.

        2010 ஆம் ஆண்டில் இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்த அனுபவமே மறக்க இயலாப் பயணமாய் இனிக்கிறது.

         வானூர்திப் பயணம் அதுவும், கை காசினைச் செலவு செய்யாமல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செலவில் மேற்கொண்ட பயணம். இனிக்கத்தானே செய்யும்.

          கரும்புத் திண்ண கூலியும் கிடைத்தப் பயணம் அல்லவா.

விழுதுகளைத் தேடி, வேர்களின் பயணம்
எனது பயண அனுபவங்கள், தமிழ்ப் பொழில் இதழில் தனியொரு தொடராய், பின்னர் தனியொரு நூலாய் வெளிப்பட்ட பயணம் அல்லவா.

     இலங்கையில் தொப்புள் கொடி உறவுகளைச் சந்தித்ததையும், உறையாடி மகிழ்ந்ததையும், சிங்கப்பூர் மற்றும் மலேசிய வீதிகளில், தஞ்சையைப் போலவே, எங்கும் தமிழிலேயே பேசித் திரிந்ததையும் எப்படி மறக்க இயலும்.

     எனவே இப் பயணம் என் வாழ்வின் மறக்க இயலா பயணம்.

    மெல்லிசைப் பாடல்களைக் கேட்டவாறே அதிகாலையில் பயணிப்பதில் உள்ள சுகமே தனிதான். எனவே அதிகாலைப் பயணமே என் விருப்பமானப் பயணமாகும்.
      

கடந்த பல ஆண்டுகளாகவே, நண்பர்களோடும், நண்பர்களின் குடும்பங்களோடும் இணைந்து, நானும் என் குடும்பத்தினரும், கோடை காலங்களில், எங்கேனும் ஒரு பகுதிக்கு சுற்றுலா சென்று வருவதை, தொடர் கதையாய் பின் பற்றி வருகிறோம்.

       கன்னியாகுமரி, பெங்களூர், மைசூர், மூணாறு என ஒவ்வோர் ஆண்டும் எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உறவும் நட்புமாய் இணைந்த இப்பயணங்கள், மனதிற்கு நல் இதமானப் பயணமாய் அமைகின்றன.

    கல்லூரிக் காலங்களிலும் அதன் பின்னர் மருந்து விற்பனைப் பிரதிநிதியாய், ஊர் ஊராக சுற்றி அலைந்த போதும், கையில் எப்போதும் ஓர் கதைப் புத்தகம் தயாராக இருக்கும்.

     சுஜாதா, சாண்டில்யன், கல்கி, கோவி.மணிசேகரன், பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழ்வாணன் எனத் தொடங்கிய என் வாசிப்பு பின், Aliastar Mclean, Irwin Wallace, Clive Cussler, Robert Ludlum,  Fredric Forsyth  என்று நீண்டது.

      ஆனால் இன்று பயணங்களின் போது படிக்க இயலுவதில்லை. கழுத்து ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறது, கண்களோ தலைவலியைப் பரிசாய் தரக் காத்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மனமும் சன்னல் வழியே, வேகமாய் நகரும் வெளி உலகைக் காணவே விரும்புகிறது.
      

அரை நூற்றாண்டைக் கடந்து விட்ட போதும், இரவு நேரங்களில், இரு சக்கர வாகனத்தில், ஆள் அரவமற்ற சாலைகளில், அமைதியான சூழ்நிலையில், ஒரு பயணம், நெடும் பயணம் மேற்கொள்ள மனம் துடிக்கிறது, ஆயினும் குடும்பச் சூழல் தடுக்கிறது.

        ஒவ்வொரு நாளும், புதுப் புது முகங்கள், புதுப் புது பிரச்சனைகள், புதுப் புது நம்பிக்கைகள், புதுப் புது துரோகங்கள், புதுப் புது மகிழ்ச்சிகள், புதுப் புது நெகிழ்ச்சிகள், என மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையினைப் போல, வாழ்க்கைப் பயணமும், பல்வேறு மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி பயணித்துக் கொண்டே இருக்கிறது.

       பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


       பயணிப்போம்.