25 ஜனவரி 2016

உயிர் பெற்ற ஓவியம்


  

நாமக்கல். சிம்சன், ஆங்கிலேயப் பொறியாளர் பல நாட்களாக நாமக்கல்லில் முகாமிட்டுள்ளார்.

   ஒரு நாள் மாலை நேரத்தில், நாமக்கல்லின் நகர மண்டபத்திற்குள் நுழைந்தார். மெதுவாக, மிகவும் பொறுமையாக, நகர மண்டபத்தைச் சுற்றிப் பார்த்தார்.

    சுவற்றில் பல ஓவியங்கள் வரிசையாய், மண்டபத்திற்கே மெருகூட்டிக் கொண்டிருந்தன. ஓவியங்களை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்தவாறு நகர்ந்தவர், ஓர் ஓவியத்த்தின் அருகில் வந்தவுடன், அசையாமல் நின்றுவிட்டார்.

      ஓவியத்தின் கருனை மிகுந்த கண்களும், அறிவுச் சுடர் வீசும் முகமும் அவரை அசையாமல் நிறுத்திவிட்டது.


     நீண்ட நேரம் ஓவியத்தையே உற்றுப் பார்த்த வண்ணம் நிற்கிறார். அருகில் நின்று கொண்டிருக்கும் பணியாளர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

      பணியாளர்கள் குழப்பத்தோடு ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்தவாறு நிற்கிறார்கள். ஆங்கிலேய அதிகாரியோ, ஏதோ ஆழ்ந்த சிந்தனையுடன் படத்தைப் பார்த்தவாறே நிற்கிறார்.

     நீண்ட நேரம் கடந்த பின், மெதுவாக திரும்பிய ஆங்கிலேய அதிகாரி, மெல்ல கேட்டார்.

படத்தில் இருப்பது யார்?

ஐயா, படத்தில் இருப்பது ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர். பெயர் லட்சுமண அய்யர்.

அப்படியா, படத்தை வரைந்தது யார்?

லட்சுமண அய்யர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற போது, அவரது முன்னாள் மாணவர் ஒருவர், தானே வரைந்து, பரிசளித்த ஓவியம் அய்யா.

யார் அவர்?

ஐயா, அவர் ஒரு கவிஞர்

கவிஞரா, நான் இந்த ஓவியத்தை வரைந்தது யார் எனக் கேட்டேன்?

இப்படத்தை வரைந்தவர் ஓவியர் மட்டுமல்ல, ஐயா, சிறந்த கவிஞரும் ஆவார்.

அப்படியா

     மீண்டும் சிறிது நேரம் படத்தையே உற்றுப் பார்த்த ஆங்கிலேய அதிகாரி, ஒரு முடிவிற்கு வந்தவராய்,

அவரை நான் பார்க்க வேண்டுமே என்றார்

     அடுத்த நாள் காலை, பொறியாளர் சிம்சனின் அலுவலகத்திற்கு, அந்த கவிஞரை, கவிஞரான அந்த ஓவியரை அழைத்து வந்தனர்.

      இருக்கையில் அமர்ந்தபடியே, சிரித்த முகத்துடன், ஓவியரை வரவேற்ற ஆங்கிலேய அதிகாரி, தனது மேசையில் இருந்து, ஒரு சிறிய புகைப் படத்தினை எடுத்து ஓவியரிடம் கொடுத்தார்.

    நான்கே வயதான ஒரு சிறுமியின் படம் அது.

     சிரிக்க மறந்து, கண்களை மூடி, ஒரு நாற்காலியில் அமர்ந்த நிலையில் எடுக்கப் பட்டப் படம் அது.

     ஆம், அப் படம், அச்சிறு குழந்தை இறந்த பின்னர் எடுக்கப்பட்ட படம்.

     ஆங்கிலேய அதிகாரியின் கண்களில் மெல்ல, மெல்ல நீர்த் திவலைகள் ததும்பத் தொடங்கியிருந்தன. மெதுவாய் நா தழு தழுக்கப் பேசினார்.

     இது என் ஒரே குழந்தையின் படம். ஒன்பது மாதத்திற்கு முன்னர்தான், தாயும் மகளுமாய் இந்தியாவிற்கு வந்தனர். ஐந்தே ஐந்து மாதங்கள்தான், சிரித்து சிரித்து, என்னை மகிழ்ச்சிக் கடலில் மிதக்க விட்டவள், என்ன நோயோ தெரியவில்லை, திடீரென்று கண்மூடி, எங்களை கண்ணீர் கடலில் தவிக்க விட்டு விட்டுப் பறந்து போய் விட்டாள்.

     என் மகள் இறந்த பின் எடுக்கப் பட்ட படம் இது. உயிருடன் இருந்த பொழுது எடுக்கப் பெற்றப் படங்கள் எல்லாம் எப்படியோ தொலைந்து போய்விட்டன. மீதமிருக்கும் இந்த ஒரே ஒரு படத்தைக் கொண்டு, என் அன்பு மகளை மீண்டும் காண விரும்புகின்றேன்.

    தாங்கள்தான் உதவ வேண்டும். என் மகளை கண் திறந்த நிலையில், இதழ் மலர்ந்த நிலையில், தாங்கள்தான் வரைந்து தர வேண்டும்.

    தங்களின் பணிக்குச் சன்மானமாய் ரூபாய் ஐம்பது தருகிறேன் என்றார்.

    குழந்தையின் படத்தினைப் பெற்றுக் கொண்ட ஓவியர் வீடு திரும்பினார்.

    ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் பத்து நாட்கள் செலவிட்டார். குழந்தையின் படத்தைப் பார்த்துப் பார்த்து, சிரித்த முகத்தை மனக் கண்ணில் பார்த்துப் பார்த்து, மெதுவாய் உரு கொடுத்தார். படம் மெல்ல மெல்ல உயிர் பெற்றது.

    பதினோராம் நாள் ஆங்கிலேய அதிகாரியின் அலுவலகத்திற்குச் சென்றார். படத்தை பத்திரமாய் ஒப்படைத்தார்.

    படத்தை மூடியிருந்த காகிதங்களைப் பிரித்து, படத்தை மேசையில், குவிந்திருந்த கோப்புகளின் மேல், சாய்த்தவாறு நிற்க வைத்தார்.

     ஆங்கிலேய அதிகாரி தன் குழந்தையைப் பார்த்தார். கண்களை அகலத் திறந்தபடி, வியப்புடன் விழிகளை விரியவிட்ட நிலையில், தன் பிஞ்சு இதழ்கள், தாமரை போல் மலர்ந்து, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சிரிப்புடன் தன் மகளைக் கண்டார்.

       நேரே நின்று பார்த்தார். சிறிது வலப் புறம் நகர்ந்து சென்று மீண்டும் பார்த்தார். பின் இடது புறம் நகர்ந்து சென்று பார்த்தார்.

        எத்தனை எத்தனை கோணங்களில் பார்க்க முடியுமோ, அத்துனை அத்துனை கோணங்களிலும் தன் மகளைப் பார்த்தார்.

        நேரம் நொடி நொடியாய் கரைந்து கொண்டே இருந்தது. நொடிகள் நிமிடங்களாயின. ஆங்கிலேய அதிகாரியோ, படத்தை விட்டுக் கண்களை விலக்காமல், இமையினைக் கூட இமைக்காமல், அங்கும் இங்குமாய் மாறி மாறி நகர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தார்.

      பின் மெல்ல தலை நிமிர்ந்தார். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

      பீறிக் கொண்டு வெளிக் கிளம்பத் துடிக்கும், அழுகையினை அடக்கிய படி, இரு கரம் நீட்டி, முன்னே வந்து, ஓவியரை அணைத்துக் கொண்டார்.

       என் மகளைக் கண்டேன், என் மகளைக் கண்டேன். மீண்டும் சிரித்த முகத்துடன், அச்சு அசலாய் என் மகளை மீண்டும் கண்டேன். இதழ்களில் சற்றே கோணலாய், என் மகள் சிரிக்கும் சிரிப்பை மீண்டும் கண்டேன். இது வெறும் ஓவியமல்ல, என் மகள், மீளா உறக்கத்தில் இருந்து மீண்டு எழுந்த என் மகள். இதோ என் மகள்.

       தன் சட்டைப் பைக்குள் கை விட்டவர், பைக்குள் இருந்த மொத்தப் பணத்தையும் எடுத்து ஓவியரின் கைகளில் திணித்தார்.

       அடுத்த நொடி, கண்கள் மீண்டும் படத்தின் பக்கம் திரும்பின.

       ஓவியர் ரூபாய் நோட்டுக்களை ஒவ்வொன்றாய் எண்ணினார். மொத்தம் அறு நூற்று எழுபத்து ஐந்து ரூபாய் இருந்தது.

        ஓவியர் மொத்தப் பணத்தையும், அருகில் இருந்த நாற்காலியின் மீது வைத்து விட்டு, அமைதியாய் நின்றார்.

        நீண்ட நேரம் கழித்து, தன் மகளின் படத்தில் இருந்து கண்களை அகற்றிய ஆங்கிலேயே அதிகாரி, ஓவியரையும், நாற்காலியில் பணத்தையும் கண்டார்.

என்ன ஓவியரே, பணம் போதவில்லையா? இன்னும் எவ்வளவு வேண்டும் கேளுங்கள், உடனே தருகிறேன்.

அளவுக்கு அதிகமாய் கொடுத்து விட்டீர்கள். எனக்கு ஐம்பது ரூபாய் போதும்

இல்லை ஓவியரே, என் மகளை, என் செல்ல மகளை எனக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறீர்கள், உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் என் மனம் மகிழும் என்று கூறி, பணத்தைத் திரும்பப் பெற மறுத்து விட்டார்.

      நண்பர்களே, இந்த ஓவியர் யார் தெரியுமா?

நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும், நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம் என மகாகவி பாரதியாரால் பாராட்டப் பெற்றவர்.

     ஓவியர் மட்டுமல்ல, சீரியக் கவிஞர். பின்னாளில் தன் பாடல்களால், தமிழகத்து இளைஞர்களின் நாடி நரம்புகளில் எல்லாம், சுதந்திர உணர்வைச செலுத்தி முறுக்கேற்றியவர்.

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

எனப் பாடியவர்

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு

என முழுங்கியவர்

கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது

என முரசறைந்து அறிவித்தவர்.

இவர்தான்,


நாமக்கல் கவிஞர்

வெ. இராமலிங்கம் பிள்ளை.